Subscribe:

Pages

Thursday, July 15, 2010

சுதந்திர தினக் கொண்டாட்டம் -1 !!!

                நேற்று காலையிலேயே கிளம்பி எங்கேயாவது வெளியே சென்று சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தோம். காரணம் நேற்று பிரான்ஸின் சுதந்திர தினவிழா. ஆனால் கடைசி நேரத்தில் என்னவருக்கு அழைப்பு வந்துவிட  வேலைக்கு சென்றுவிட்டார். நல்ல வேளை காலையில் மட்டும்தான். அதனால் மாலையில் கடற்கரைக்கு செல்வது என்று முடிவு செய்தோம். மாலை ஏழுமணிக்கு மேல்தான் வீட்டில் இருந்து கிளம்பினோம். எனக்கு மிகவும் பிடித்த இடம் Fréjus பீச்சுதான்!!..... இங்கு வந்த புதிதில் முதல்முறை என்னவர் என்னை அழைத்து சென்ற போது, பேச வார்த்தைகளற்று அதன் அழகில் மயங்கி போனேன். பிரான்ஸின் மற்ற பகுதியில் இருந்து எங்கள் வீட்டுற்கு வரும் உறவினர்கள், நண்பர்களை நாங்கள் தவறாமல் இந்த பீச்சுக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம்... பார்த்த எல்லோருக்குமே பிடித்த இடமாகி போனதுதான் இதன் ஸ்பெஷல்.



தலைநகரம் பாரிஸில் நேற்று காலையில் இருந்து பயங்கர மழையாக இருந்திருக்கிறது. ஆனால் கோடை காலம் என்பதை நிருப்பிக்க எங்கள் ஊரில் மட்டும் வெயிலாக இருந்தது. இரவு எட்டு மணியாகியும் வெயில் அதிகமாகவே இருந்தது. பள்ளி ஆண்டு விடுமுறை (ஜூலை‍ - ஆகஸ்ட்) தொடங்கி விட்டதால் பீச்சில் அவ்வளவு மக்கள் கூட்டம். நிறைய வெளி நாட்டு சுற்றுலாவினரை பார்க்க முடிந்தது. நான் ஒரு ஸ்டாரை பார்த்தேன். அவரை சுற்றி பெரிய கூட்டம். அவரைப்பற்றி தனியாக அடுத்த பதிவில்  எழுதுகிறேன்...படங்களுடன்!

கடற்கரை சாலையிலே ஓவிய கலைஞர்கள் பலர் மாடல்களை முன் அமர்த்தி வரைந்து கொண்டிருந்தார்கள். நாமும் மாடலாக இருந்து வரைந்த படத்தை பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். நிறைய பேர் தங்களது குழந்தைகளை வரையச் சொல்லி வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது.

கோடைக்கால கொண்டாட்ட‌த்தின் ஒரு பகுதியாக இந்த கடற்கரை சாலையில் இரவு ஏழு மணியிலிருந்து நள்ளிரவு தாண்டியும் இரண்டு மணிவரை வீதியோர கடைகள் இருக்கும். நீச்சல் உடைகளில் ஆரம்பித்து கைவினை பொருட்கள் என்று பல வகையான பொருட்கள் கிடைக்கும். நாங்களும் ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு சாப்பிடலாம் என்று நினைத்து ரெஸ்டாரண்டை தேடி போனால்…. அங்கே ஒவ்வொரு ரெஸ்டாரண்டிலும் வாசலை தாண்டி ஒரு பெரிய வரிசை காத்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி இருந்த சைனிஸ் ரெஸ்டாரண்டிற்கு செல்லலாம் என்றால் அங்கேயும் ஒரு க்யூ. பசி எடுக்க ஆரம்பிக்க வேறு வழியில்லாமல் வரிசையில் நின்று உள்ளே நுழைந்தோம். ‘இவ்வளவு கூட்டமா இருக்கே விரும்பிய ஐயிட்டம் சாப்பிட கிடைக்குமா..’ என்ற கவலை என்னவருக்கு. ஒருவழியாக ஆசைப்பட்டதை சாப்பிட்டு முடித்து வெளியே வந்தால் மீண்டும் ஜனநெரிசல். பத்து மணிக்குமேல் கூட்டம் இன்னும் அதிகமாகிப்போனது.

இத்தனை கூட்டமும் எதற்காக தெரியுமா...? சுதந்திர தின விழாவினை கொண்டாடி மகிழ இரவில் நடத்தப்படும் வானவேடிக்கையை காண்பதற்காக! அதிலும் கடலில் இருந்து நடத்தப்ப‌டும் என்பதால் கூடுதல் அழகு! இதை மிக அருகில் காண்பதற்காகவே சில மக்கள் முன்பே சென்று கரையில் இடம் பிடித்து அமர்ந்து விட்டனர். பத்து மணிக்கு ஆரம்பித்த வானவேடிக்கை பத்தரை மணி வரை தொடர்ந்தது. இந்த அரைமணி நேரமும் அத்தனை பெரிய மக்கள் கூட்டத்தை... வானமே வண்ணமயமாக மாறி கலர்கலரான நெருப்பு முத்துக்களால் தன் வசப்படுத்தி இருந்தது.

கேமராவுடன் ரெடியாக நின்றிருந்த நான்...........வானத்தில் விடப்பட்ட முதல் வானவேடிக்கையிலேயே மயங்கிப்போனேன். இதமாக வீசிய மெல்லிய க‌டற்கரைக்காற்று... என் பின்னால் இருந்து தன் கைகளால் என்னை அனைத்திருந்த என்னவரின் நெருக்கம்... பட் பட் என்ற வெடிச்சத்தம்… சத்ததால் மனதில் ஏற்பட்ட மெல்லிய அதிர்வு… பட படவென வானில் வெடித்து சிதறும் வண்ணங்கள்... அது தண்ணீரிலே பட்டு மின்னும் அழகு.... இப்படி என்னை சுற்றி கவிதையாக‌ நிமிடங்கள் நகர, போட்டோ எடுக்க மறந்துப்போனேன். அப்புறம் என்னவர்தான் சில போட்டாக்கள் எடுத்து கொடுத்தார்.

அது முடிந்ததும் இசை கச்சேரி ஆரம்பித்தது. ஒரு வருடம் ஆகிய நிலையில் மறக்க முடியாமல் இருக்கும் மைகேல் ஜேக்ஸன் ரசிகர்களுக்காவே அவரின் பாடல்கள்தான் பாடப்பட்டது. அதிலும் அவரைபோல டிரஸ் பண்ணிக்கொண்டு, அவரைபோலவே ஆடிக்கொன்டிருந்தனர். அதையும் சிறிது நேரம் பார்த்துவிட்டு ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்றால் அங்கேயும் கூட்டம். நீண்ட வரிசை…… வரிசையில் நின்று எனக்கு பிடித்த ஃப்லேவரில் ஐஸ்க்ரீம் வாங்கி வந்தார் என்னவர். கடற்கரை மணலில் அமர்ந்து ருசித்து சாப்பிட்ட அந்த நிமிடங்கள்தான் எத்தனை சுகமானவை! நேரமோ நள்ளிரவு...ஆனால் என்னவோ அப்பொழுதான் எழுந்தது போல எல்லோரது முகத்திலும் ஒரு மலர்ச்சி!

நள்ளிரவு தாண்டி வீடு வந்து சேர்ந்தோம். பாவம் என்னவர்தான், இன்று காலையிலேயே நான்கு மணிக்கு வேலைக்கு சென்று விட்டார். நான் ஒன்பது மணி வரை நன்றாக தூங்கி எழுந்து... மிகவும் சந்தோஷமுடன் இதை எழுதிக்கொன்டிருக்கிறேன்.

தொடரும்......

13 comments:

r.v.saravanan said...

இப்படி என்னை சுற்றி கவிதையாக‌ நிமிடங்கள் நகர

சந்தோச அனுபவம் தான் இது தொடருங்கள் பிரியா

ரிஷபன் said...

வான வேடிக்கை படங்கள் அடுத்த பதிவிலா?
உற்சாகமான சூழலில் இருந்தால் அது தொற்றிக் கொள்ளும்

Kousalya Raj said...

உங்கள் தளத்திற்கு இப்போதுதான் வந்தேன் , எல்லாம் படித்தேன், மனதை தொடும் இயல்பான வார்த்தை பிரயோகம்... வாழ்த்துகள் friend...

சீமான்கனி said...

கவிதையாய் கரைந்த மணித்துளிகளின் பகிர்த்துளி அழகு அந்த வான வேடிக்கையின் வர்ணங்களை இங்கே எதிர் பார்த்து ஏமாந்து போனேன்...முடிந்தால் (அந்த படங்களையும்) வர்ணம் சேர்க்கவும்...நன்றி..

'பரிவை' சே.குமார் said...

சந்தோச அனுபவம்.
வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

அனுபவம் சூப்பருங்கோ.. அந்த வாண வேடிக்கை போட்டோ போடலையா..!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. நல்ல அனுபவம் பிரியா..
நாங்களும் இங்கே, சுதந்திர தினமன்று.. வான வேடிக்கை சென்று பார்த்தோம்..
அந்த மகிழ்ச்சி சொல்லி முடியாது.. :D :D

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

Priya said...

நன்றி சரவணன்!

ஆமா ரிஷபன், படங்களை விரைவில் பதிவிடுகிறேன்!

வருகைக்கு மிக்க நன்றி கெளசல்யா!

ஏமாற்றம் வேண்டாம் கனி, படங்களை விரைவில் போடுகிறேன்!

நன்றி குமார்!

வ‌ரும் ப‌திவில் ப‌ட‌ங்க‌ள் வ‌ரும் ஜெய்லானி!

உண்மைதான் ஆன‌ந்தி, அதை ர‌சிக்கும் ச‌ந்தோஷ‌மே த‌னிதான்!
ஆ, அப்ப‌டியா, விருதா, வ‌ந்து வாங்கிக்கொள்கிறேன் தோழி! மிக்க‌ ந‌ன்றி!!!

சாருஸ்ரீராஜ் said...

very nice experience priya

கோவை குமரன் said...

nice..best wishes

soundr said...

//பாவம் என்னவர்தான், இன்று காலையிலேயே நான்கு மணிக்கு வேலைக்கு சென்று விட்டார். நான் ஒன்பது மணி வரை நன்றாக தூங்கி எழுந்து... மிகவும் சந்தோஷமுடன் இதை எழுதிக்கொன்டிருக்கிறேன்.//

:)

http://vaarththai.wordpress.com

ஜெயா said...

அழகான பொழுதுகள்......

Post a Comment