Subscribe:

Pages

Wednesday, June 8, 2011

சிலைகளாகவும் சித்திரங்களாகவும்.... ஒரு கலைக்கூடம்!

          பாரிஸில் உள்ள அருங்காட்சியகங்களில் முக்கியமான ஒன்று லூவர் அருங்காட்சியகம் (Louvre Museum). உலகிலேயே அதிகமான பார்வையாளர்களை கொண்ட வரலாற்று சிற‌ப்புமிக்க இடம் இது. அற்புதமான கலைப்படைப்புகள் கொண்ட இவ்விடம் பாரிஸில் இருப்பது பெருமைகுரியதே! ஐரோப்பிய நாடுகளின் பண்பாடு, கலாச்சாரம், மாவீரன் நெப்போலியன் ஆட்சி பற்றிய குறிப்புகள் கொண்ட இம்மியூசியம் மேலும் பல நாட்டு கலைப்பொருட்களுடன் நம்மை பல நூற்றாண்டுகள் முன்னே அழைத்து செல்கிறது. உலகையே தன்னை பற்றி பேச வைத்த மோனலிசா ஓவியம் (ஒரிஜினல்) இங்குதான் உள்ளது. பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த மோனலிசாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற‌ பல நாள் ஆசையே என்னை அங்கு அழைத்து சென்றது.

 










அரசர்களின் அரண்மனையாக இருந்த இவ்விடம் கலைப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது. உள்ளே நுழைகையிலே பிரமாண்டமான கட்டிடங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அரண்மனையின் நடுவிலே இருபது வருடங்கள் முன்னே கட்டப்பட்ட கண்ணாடியிலான‌ பிரமிட் சூரியனின் ஒளி பட்டு வர்ண‌ ஜால‌ம் காட்டுகிறது. இதுவே மியூசியத்தின் உள்ளே செல்லும் நுழைவு வாயிலாக இருக்கிறது.


நுழைவு கட்டணம் பெற்று உள்ளே சென்றவுடன் முதலில் எதை பார்ப்பது என்ற பிரமிப்பு ஏற்பட்டது.




மொத்தம் எட்டு வகையான கலெக்ஷன்ஸ் என ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு ஹாலில் தனித்தனியாக இருந்தது. முதலில் மோனலிசா ஓவியத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இத்தாலிய ஓவியங்கள் உள்ள இடத்திற்கு சென்றேன். சிலைகளும் சித்திரங்களும் ஏன் கூடத்தின் மேற் கூரைகளும் கூட கவிதை பேசுகிறது.

மேற்கூரையில் வரையப்பட்டு இருக்கும் வரலாற்று சம்பவங்கள்....

ஒவ்வொன்றையும் ரசித்து பார்க்கவும் அதை புரிந்துக்கொள்ளவும் அதன் பக்கத்திலேயே வைக்கப்பட்டு இருக்கும் வரலாற்று குறிப்புகளை  படித்து தெரிந்துக்கொள்ள‌வும் சில மணி நேரங்கள் போதாது. பல நாட்கள் தேவை!


முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் சிற்பங்களாகவும்
சித்திரங்களாகவும் நம் கண்முண்ணே கொண்டு வந்துள்ள கலைஞர்களை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது!


இயேசு கிறிஸ்துவின் பாடுகளில் ஆரம்பித்து அவரின் கடைசி இராவிருந்து வரை ஒவ்வொரு நிகழ்வுகளும் பலகோணங்களில் வரையப்பட்டு இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் பாடுகளை விளக்கும் படங்கள்...




 The Last Supper படங்கள்...





அதேபோல் எகிப்தின் எழிலரசி கிளியோபாட்ரா மரணத்தை தழுவும் காட்சியும் பலவிதங்களில் வரையப்பட்டு இருக்கிறது. மிக தத்ருபமாக வரையப்பட்ட ஓவியங்களில் என்னை மிகவும் கவர்ந்தது கிளியோபாட்ராவின் இந்த ஓவியம்தான்.

Death of Cleopatra...


 

வரலாற்று சிற்பங்களை விட என்னை அதிகம் கவர்ந்தது குழந்தை சிலைகள்தான். ரசித்து பார்க்கவைத்தவைகளில் இதற்குதான் முதலிடம்!








அடுத்த ஆவலுடன் நான் தேடிச்சென்ற மோனலிசா... அங்குள்ள மற்ற ஓவியங்களை காட்டிலும் மிக சாதாரணமாகவே இருந்தது. எத்தனையோ அற்புதமான தத்துருபமான ஓவியங்கள் அங்கிருக்க இவை பெற்ற சிறப்பு மட்டும் ரகசியம்தான். சுற்றிலும் கண்ணாடி கதவுகளால் தனி அறையில் பாதுகாத்து வரப்படும் மோனலிசாவின் ஓவியம் மிக சிறிய அளவிலே இருந்தது. ஆனாலும் இந்த ஓவியத்தை சுற்றிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அருகில் நெருங்க முடியாவண்ணம் சுற்றிலும் பாதுகாப்பு கம்பிகட்டப்பட்டு இரு காவலர்களும் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.


இதை அடுத்து மக்கள் கூடிய இன்னொரு இடம் பண்டைய‌ கிரேக்க கலாச்சாரங்களை வெளிப்படுத்தி கொண்டிருந்த பகுதி. அதிலும் முக்கியமாக குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிறைய பேர் ஜோடியாக‌ நின்று படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்! ஆர்வத்துடன் எட்டி பார்க்க;  White Marble கொண்டு செய்யபட்ட  அற்புதமான சிலை இருந்தது. இவற்றின் பெயர்  Psyche Revived by Cupid's Kiss!  காதல் உணர்வினை அழகாக பிரதிபலிக்கும் இச்சிலையை பிண்ணனியாக கொண்டு எல்லோரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்! ம்ம் இப்பொழுது புரிகிறது 'தி லேண்ட் ஆஃப் ரொமான்ஸ்' என ஏன் செல்லமாக அழைக்கிறார்களென்று:-)!!!