Subscribe:

Pages

Thursday, November 17, 2011

காதல் தேசத்தை தேடி......

     வண்ணக்கலவையில் உருவாகும் ஓவியத்தை விட கருப்பு வெள்ளை  ஓவியம்தான் பெரும்பாலானவர்களை கவர்கிறது. எனது பள்ளி நாட்களில் இருந்தே எனக்கும் பென்சில் ஸ்கெட்சில் மிகுந்த ஆர்வம் உண்டு. சமீப நாட்களாக இவற்றை பற்றி நிறைய தெரிந்துக்கொள்வதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் அதிகமாகிக்கொண்டு வருகிறது. இதோ மீண்டும் என் கைவண்ணத்தில் மலர்ந்த அரும்புகள்....  


சிறந்த ரசனையோடு ஆழமான பார்வை கொண்டவர்களால் ஓவியங்கள் உயிர்பெறுகிறது என்பது என் எண்ணம். இதோ உங்கள் ரசனையைக்கொண்டு இதற்கு கவிதை படைத்திடுங்கள். உங்களின் கவிதைகளால் உயிர் பெறட்டும் எனது ஓவியம்!


யாருமற்ற தனிமையில்
யாதுமற்ற‌ நிலையினில்
காதல் மட்டுமே துணையாய்
நீ என்னிலும்
நான் உன்னிலும்
சொல்லாத வார்த்தைகளும்
பொல்லாத காதலும்.....

விரல்களின் இறுக்கத்தில் கசிந்திட‌
காதல் தேசத்தை தேடி
நடைபயில்வோம் வா!

Monday, November 7, 2011

மலர்ந்திடும் அரும்புகள்.....!

                ஓவியம் வரைவதற்கான தூண்டுதல் எல்லா மனிதர்களிடமும் சிறுவயதில் இருந்தே உண்டு... அந்த இயற்கையான குணத்திற்குட்பட்டு நாமும் வரைந்து பார்க்க தொடங்கிவிடுவோம். கோடு போட கையில் எது கிடைத்தாலும் அதைக்கொண்டு மனதில் மலரும் கற்பனைக்கேற்றபடி வரைந்து அதை பார்த்து மகிழ்ச்சியடைவோம். இதில் சிறுவர்களுக்கு பெரும் பங்குண்டு. இவர்களுக்கும் ஓவியங்களுக்குமான நெருக்கம் மிக பெரியது. தோன்றும் கற்பனைகளையும் கனவுகளையும் காட்சிகளையும் ஓவியமாக தர இயல்பாக இவர்களால் முடிகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த சிறுவர்களின் ஓவியங்களை போல சிறுவர்களையே ஓவியமாய் பார்க்கும் எத்தனையோ திறமை மிக்க ஓவியர்களும் உண்டு. குழந்தைகளை ஓவியமாக வரைபவர்களை பார்க்கும் போது பிரமிப்பாக‌ தோன்றும். இணையத்தில் குழந்தைகளின் ஓவியங்களோ அல்லது அவர்களின் புகைப்படங்களோ எதுவாக இருந்தாலும் பார்க்க தவறுவது இல்லை. வரைவதை போல நான் நேசிக்கும் இன்னொன்று புகைப்படம்... ஒரு நொடி உணர்ச்சியையும் படமாக்கி கொடுக்கும் கலை அது. அதிலும் சிறுவர்களை படம்பிடிப்பது என்பது அழகான ஒன்று. இதுவே தூண்டுதலாக அமைய பார்த்த முதல் முறையே மனதில் ஒட்டி கொண்ட.... என்னை மிகவும் கவர்ந்தஒரு புகைப்படத்தை பார்த்து நான் வரைய ஆரம்பித்தேன்.

இம்முறை வழக்கமாக பயன்ப்படுத்தும் HB பென்சிலை தவிர்த்து Graphite pencil 2B-6B உபயோகப்படுத்தினேன். இதனால் எதிர்பார்த்த கருமை நிறம் கிடைத்தது.






வரைய ஆரம்பித்த மூன்று மணி நேரங்களுக்கு பின் கிடைத்ததுதான் கீழே காணும் அரும்புகளின் அணைப்பு.... புகைப்படத்தில் தெரிந்த அன்பின் வெளிப்பாடு நான் வரைந்ததில் தெளிவாக தெரிகிறதா என்பது தெரியவில்லை...! ஆனாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு என் ப்ரியமான பதிவுலக நண்பர்களை மீண்டும் சந்தித்ததிலும் வரைந்ததை பகிர்ந்துக்கொண்டதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.

Thursday, July 28, 2011

காதல் மொழி பேசும்.... கற்கள்!

                வரைவதில் குறையாத ஆர்வம்... தொடர்கையில் புது புது முயற்சிகளில் ஈடுபட மனம் முயல்கிறது. கொஞ்ச நாட்களாகவே கல்லில் வரைவது பிடித்திருக்கிற‌து. மிக குறைந்த நேரத்தில் வரைய முடிகிறது. இதற்காக கடற்கரை செல்லும் பொழுதுகளில் கல்லை தேடி தேடி எடுக்கிறேன். நான் மட்டுமல்ல எனக்காக என்னவரும் கண்களை நிலத்தில் தவழ விட்டபடி கற்களை தேடி அலைந்ததை பார்க்கும்போது கொஞ்ச‌ம் சிரிப்பு வந்தாலும் நெஞ்சம் மகிழத்தான் செய்கிறது. அவரின் ஊக்கம் மிக பெரிய பலம் எனக்கு!

வரைய நினைக்கும் காட்சிகளை கண்முன் நிறுத்தி கற்பனை கொண்டு வண்ணம் தீட்ட, குவிந்திருக்கும் கற்களில் எதை எடுத்தாலும் அழகாகவே தெரிந்தது.


அழகாய் தெரிந்த கற்களை இன்னும் அழகாக்க ஏதோ சிறு முயற்சி செய்ததுதான் கீழ்காணும் படங்களில் உள்ளவை. இதற்கான பெயிண்ட் இல்லாத நிலையில் என்னிடம் இருக்கும் ஆயில் பெயிண்டையே உபயோகித்து சென்ற‌ வாரம் வரைந்தேன். நன்றாக காய்ந்தபின் கொஞ்சம் வார்னிஷ் அடித்துவிட... கல் கண்ணாடி போல் ஆனது!


முதலில் ஒரு ஜோடியை நீல நிறத்தின் பின்னனியில் வரைய ஆரம்பித்தேன். பின் அதுவே சுவாரஸியமாக தெரிய அப்படியே தொடர்ந்தேன்... வெவ்வேறு வண்ணங்களில். இதோ.... காதல்  மொழி பேச தனித்திருக்கும் இரு உள்ளங்கள்!






Sunday, July 10, 2011

தீராத பார்வைகள்...!


சங்காத பார்வை
என் உரிமை நீ
என சொல்லாமல்
சொல்லும் பார்வை!

இந்த பெண்ணிற்கென்ற
கனவு உலகில் நுழையும்
அதிகாரம் பெற்று
என் கனவுகளையும்
காட்சிகளாக்கும்!

ஒரு நிமிடப்பார்வை
 உயிர்வரை இனிக்கும்
மறு நிமிடப் பார்வையோ
யுக யுகமாய் நீடிக்கும்!

வார்த்தைகளற்ற பொழுதுகளில்
மனதில் வழியும் நேசம்
க‌ண்க‌ளில் மின்ன
புன்னகைத்து பேசிச் செல்லும்!

உன் விழி தீண்ட‌லில்
என் பெண்மை விழித்துக்கொள்ள‌
வெட்கை போர்வைகொண்டு
உன் முகம் பார்க்க
முடியாமல் தவிக்க வைக்கும்!

அணைக்க மறந்து
விரல் கூட தீண்டிடாமலே
பார்வை ஸ்ப‌ரிச‌ங்க‌ளாகி
உள்ளம் தொட்டு
உயிரில் தங்கும்!

தீராத உன் பார்வைகள்
தித்திக்கும்
நித்தம் என்னை அழகாக்கும்!

காணும் நொடிகளில்
எனக்குள் உன்னை தேடி
கண்டெடுக்க முடியாமல்
என்னுயுரிலே கலந்து
உணர்வுகளின் உச்சத்தை
தாங்கி நிற்கும்!

பார்வையின் வேகம்
வ‌தைத்தாலும்
செதுக்குகிறது என்னை!

உன் விழித்தீண்ட‌
யாசிக்கும்
என் கவிதைகளானாலும்
கவிதையான
உன் பார்வைகளே
நான் பெற்ற பாக்கியமடா...!

காதல் பூத்திருக்கும்
உன் பார்வையால்
கவிதை எழுதுகிறது
என் கண்கள்!

Friday, July 1, 2011

அதிசயத்துடன் கூடிய சித்திரமவள்... பெண்!

ழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்...என்ற தலைப்பில் நான் வரைந்த ஒரு சில பெண் ஓவியங்களை பகிர்ந்துக்கொண்டதின் தொடர்ச்சியாக இங்கே இன்னும் மூன்று ஓவியங்களை தந்திருக்கிறேன். கருப்பு வெள்ளை படங்களில் எனக்கு எப்பொழுதும் ஆர்வம் அதிகம் எனபதால் வாரப்பத்திரிக்கைகளில் வண்ண ஓவியங்களாக இருந்ததை வெறும் பென்சில் மட்டுமே உபயோகித்து சிறு சிறு மாற்றங்களுடன் எனக்கு பிடித்தமாதிரி வரைந்துக்கொண்டேன்.

நகரத்து நவநாகரிக நங்கையாக......



ஆச்சாரம் சிதறாத பதுமையாக‌.....



அம்சமான செல்வ சீமாட்டியாக......



Wednesday, June 8, 2011

சிலைகளாகவும் சித்திரங்களாகவும்.... ஒரு கலைக்கூடம்!

          பாரிஸில் உள்ள அருங்காட்சியகங்களில் முக்கியமான ஒன்று லூவர் அருங்காட்சியகம் (Louvre Museum). உலகிலேயே அதிகமான பார்வையாளர்களை கொண்ட வரலாற்று சிற‌ப்புமிக்க இடம் இது. அற்புதமான கலைப்படைப்புகள் கொண்ட இவ்விடம் பாரிஸில் இருப்பது பெருமைகுரியதே! ஐரோப்பிய நாடுகளின் பண்பாடு, கலாச்சாரம், மாவீரன் நெப்போலியன் ஆட்சி பற்றிய குறிப்புகள் கொண்ட இம்மியூசியம் மேலும் பல நாட்டு கலைப்பொருட்களுடன் நம்மை பல நூற்றாண்டுகள் முன்னே அழைத்து செல்கிறது. உலகையே தன்னை பற்றி பேச வைத்த மோனலிசா ஓவியம் (ஒரிஜினல்) இங்குதான் உள்ளது. பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த மோனலிசாவை நேரில் பார்க்க வேண்டும் என்ற‌ பல நாள் ஆசையே என்னை அங்கு அழைத்து சென்றது.

 










அரசர்களின் அரண்மனையாக இருந்த இவ்விடம் கலைப்பொருட்களை பாதுகாத்து வைக்கும் இடமாகவும் இருந்திருக்கிறது. உள்ளே நுழைகையிலே பிரமாண்டமான கட்டிடங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அரண்மனையின் நடுவிலே இருபது வருடங்கள் முன்னே கட்டப்பட்ட கண்ணாடியிலான‌ பிரமிட் சூரியனின் ஒளி பட்டு வர்ண‌ ஜால‌ம் காட்டுகிறது. இதுவே மியூசியத்தின் உள்ளே செல்லும் நுழைவு வாயிலாக இருக்கிறது.


நுழைவு கட்டணம் பெற்று உள்ளே சென்றவுடன் முதலில் எதை பார்ப்பது என்ற பிரமிப்பு ஏற்பட்டது.




மொத்தம் எட்டு வகையான கலெக்ஷன்ஸ் என ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு ஹாலில் தனித்தனியாக இருந்தது. முதலில் மோனலிசா ஓவியத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இத்தாலிய ஓவியங்கள் உள்ள இடத்திற்கு சென்றேன். சிலைகளும் சித்திரங்களும் ஏன் கூடத்தின் மேற் கூரைகளும் கூட கவிதை பேசுகிறது.

மேற்கூரையில் வரையப்பட்டு இருக்கும் வரலாற்று சம்பவங்கள்....

ஒவ்வொன்றையும் ரசித்து பார்க்கவும் அதை புரிந்துக்கொள்ளவும் அதன் பக்கத்திலேயே வைக்கப்பட்டு இருக்கும் வரலாற்று குறிப்புகளை  படித்து தெரிந்துக்கொள்ள‌வும் சில மணி நேரங்கள் போதாது. பல நாட்கள் தேவை!


முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் சிற்பங்களாகவும்
சித்திரங்களாகவும் நம் கண்முண்ணே கொண்டு வந்துள்ள கலைஞர்களை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது!


இயேசு கிறிஸ்துவின் பாடுகளில் ஆரம்பித்து அவரின் கடைசி இராவிருந்து வரை ஒவ்வொரு நிகழ்வுகளும் பலகோணங்களில் வரையப்பட்டு இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் பாடுகளை விளக்கும் படங்கள்...




 The Last Supper படங்கள்...





அதேபோல் எகிப்தின் எழிலரசி கிளியோபாட்ரா மரணத்தை தழுவும் காட்சியும் பலவிதங்களில் வரையப்பட்டு இருக்கிறது. மிக தத்ருபமாக வரையப்பட்ட ஓவியங்களில் என்னை மிகவும் கவர்ந்தது கிளியோபாட்ராவின் இந்த ஓவியம்தான்.

Death of Cleopatra...


 

வரலாற்று சிற்பங்களை விட என்னை அதிகம் கவர்ந்தது குழந்தை சிலைகள்தான். ரசித்து பார்க்கவைத்தவைகளில் இதற்குதான் முதலிடம்!








அடுத்த ஆவலுடன் நான் தேடிச்சென்ற மோனலிசா... அங்குள்ள மற்ற ஓவியங்களை காட்டிலும் மிக சாதாரணமாகவே இருந்தது. எத்தனையோ அற்புதமான தத்துருபமான ஓவியங்கள் அங்கிருக்க இவை பெற்ற சிறப்பு மட்டும் ரகசியம்தான். சுற்றிலும் கண்ணாடி கதவுகளால் தனி அறையில் பாதுகாத்து வரப்படும் மோனலிசாவின் ஓவியம் மிக சிறிய அளவிலே இருந்தது. ஆனாலும் இந்த ஓவியத்தை சுற்றிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அருகில் நெருங்க முடியாவண்ணம் சுற்றிலும் பாதுகாப்பு கம்பிகட்டப்பட்டு இரு காவலர்களும் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.


இதை அடுத்து மக்கள் கூடிய இன்னொரு இடம் பண்டைய‌ கிரேக்க கலாச்சாரங்களை வெளிப்படுத்தி கொண்டிருந்த பகுதி. அதிலும் முக்கியமாக குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிறைய பேர் ஜோடியாக‌ நின்று படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்! ஆர்வத்துடன் எட்டி பார்க்க;  White Marble கொண்டு செய்யபட்ட  அற்புதமான சிலை இருந்தது. இவற்றின் பெயர்  Psyche Revived by Cupid's Kiss!  காதல் உணர்வினை அழகாக பிரதிபலிக்கும் இச்சிலையை பிண்ணனியாக கொண்டு எல்லோரும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள்! ம்ம் இப்பொழுது புரிகிறது 'தி லேண்ட் ஆஃப் ரொமான்ஸ்' என ஏன் செல்லமாக அழைக்கிறார்களென்று:-)!!!

Monday, May 30, 2011

தி லேண்ட் ஆஃப் ரொமான்ஸ்...!


           காஸ்ட்லியாக ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் என்றால் சரியான இடம் பாரிஸ்தான். செல்ல காரண‌மாய் இருந்தது உறவினரின் திருமணத்திற்காக என்றாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள முன் கூட்டியே விடுமுறை எடுத்துக்கொண்டோம். உறவினர்களின் அன்பு உபசரிப்பில் கொஞ்சம் வெயிட் போட்டும், வெயிலில் சுற்றியதால் கறுத்தும் சற்று இளைத்தும் பாரிஸில் பதினைந்து நாட்கள் நன்றாக சுற்றிவிட்டு திரும்பி இருக்கிறேன்.

ஆர்ப்பரிக்கும் மக்கள் கடல், வளைந்து நீளும் ரோடுகள், வானுயர்ந்த‌ கட்டிடங்கள், செதுக்கிவைத்த சிலைகள் என இயற்கையும் செயற்கையுமாய் விரிந்த காட்சிகள் எதையும் என் வழிப்பயணத்தில் ரசிக்க தவறவில்லை. தொலைவில் உள்ள பாரிஸுக்கு காரில் செல்வது கஷ்டமாக தெரிந்தாலும் என்னவரின் அழகான டிரைவிங்கும் மனதை வருடும் இனிமையான‌ பாடல்களையும் ரசித்தபடி சென்றது 860 கீலோ மீட்டரையும் வெறும் அறுபது கீலோ மீட்டராக்கி பயணத்தை இனிமையாக்கியது.

முதல் ஐந்து நாட்கள் திருமண வேலைகள், கொண்டாட்டங்கள் என கடந்துவிட, மீதி நாட்களை சரியாக ஒவ்வொரு நாளும் ஒரு சில இடங்களை காண‌ வேண்டும் என முடிவு செய்து அதன்படியே கண்டு ரசித்துவிட்டு வந்து இருக்கிறேன்.

உலக நாடுகளால் தி லேண்ட் ஆஃப் ரொமான்ஸ் என அழைக்கப்படும் பாரிஸ் ஐரோப்பிய நாட்டு மக்களையும் தாண்டி பல நாட்டினரை வசீகரிப்பதாகவே இருக்கிறது. பழமையும், புதுமையும் கலந்து பேரழகையெல்லாம் தன்னுள் வைத்திருக்கும் ஒரு அற்புத நகரம் !



உலக அதிசயங்களில் ஒன்றான‌ ஈஃபில் டவர் இங்கிருப்பதால் ஒவ்வொரு நாளும் அங்கே மக்கள் குவிந்திருப்பதை காணலாம். உச்சி வரை செல்ல படிகளும், 'கேபிள்கார்' எனும் லிஃப்டுகளும் உண்டு. இதற்கு தனித்தனியாக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. மேலே ஏறியும் அல்லது கீழே தரையில் படுத்துக் கொண்டும் டவரை விதவிதமாக சுற்றுலாவினரின் புகைப்படங்கள் எடுக்கும் காட்சி அழகானதாக இருக்கிறது. முரட்டு கம்பிகளை கொண்டே மென்மையான பாரிஸின் அடையாளமாக திகழ்கிறது இந்த ஈஃபில் டவர்! நகரின் இடையே ஓடும் ஸீன் நதி டவருக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.
மேலும் படங்கள்.....



இதை அடுத்து மக்கள் சேரும் இன்னொரு இடம் L' Arc de Triomphe (Triumphal Arch). பிரெஞ்சு புரட்சி போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக மாவீரன் நெப்போலியன் மன்னரால் கட்டப்பட்ட இந்த இடம் பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற monument ஆக‌ போற்றப்படுகிறது. நகரத்தின் முக்கியமான அடையாளமாக‌ இதை காணப்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை அங்கு ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை பார்க்கும் போது. அந்த சாலைக்கே உரிய‌ அழகால் பல முக்கிய நிகழ்வுகளும் இங்கே நடத்தப்படுகிறது. எக்ஸ்பென்சிவ் அவின்யு என்றால் அது இந்த வளைவை சுற்றியிருக்கும் பகுதிகள்தான். மேலும் படங்கள்.....

ஓடும் காரிலிருந்தபடியே என்னவர் எடுத்த பட‌ம் இது... எப்பொழுதும் பிஸியாக இருக்கும் சாலை இந்த படம் எடுக்கும் நேரத்தில் மட்டும் பக்கா க்ளியராக இருந்தது!


எப்பொழுதும் சந்தோஷமான காட்சிகளை கொண்ட இப்பகுதியில் இளவரசி டயானா உயிர் விட்ட இடத்தை நெருங்கும் போது மட்டும் மனது என்னவோ போலாகிவிடுகிறது.


சுற்றுலாவினர் விரும்பி செல்லும் வரலாற்று சிற‌ப்புமிக்க மற்றுமொரு இடங்கள் கிறிஸ்துவ‌ பேராலயங்கள் : Cathedral - our lady of Paris & Basilica Sacred Heart of paris ! பேராலயங்களின் உட்புற வெளிபுறத்தில் தென்படும் அழகு, கலை நயமிக்கதாய் உள்ளது. நெப்போலிய மன்னர் பிரான்ஸ் நாட்டு சக்கரவர்த்தியாக முடிச்சூட்டிக்கொண்டது அவர் லேடி ஆஃப் பாரிஸ் பேராலயத்தில்தான்.ஆனால் சத்தமான‌ பேச்சுகளும் கேமிராக்களின் பிளாஷும் சத்தமும் மாதவின் பேராலயத்தை வெறும் சுற்றுலா இடம்போல காட்டியது.


இதற்காகவே Sacred heart ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. அதனாலே ஆலயத்தின் உள்ளே செல்லும் போதே மனதில் அமைதி குடிக்கொள்கிறது. மற்ற ஆலயங்களைபோல் அல்லாமல் இந்த ஆலயத்திற்குள் மட்டும் அமைதியையும் அதன் தனித்தன்மையையும் பாதுகாத்து வருவதால் வெளிபுறத்தில் உள்ள‌ பார்கில் பொழுதை கழிக்கும் மக்களை காணமுடிகிறது. உயரமான பகுதியில் இப்பேராலயம் இருப்பதால் எப்படி ஈஃபில் டவரின் மேலிருந்து பாரிஸின் மொத்த அழகை காண முடிகிறதோ அதே போல் ஆலயத்தின் நுழைவு வாயிலில் இருந்து நகரத்தின் அழகை ரசிக்க முடிகிறது.


இந்த பஸிலிக்கா இருக்கும் பகுதியில் இன்னொரு சிறப்பும் உண்டு. ஆலயத்தை ஒட்டிய சாலைகளில் தெருவோர ஓவிய கலைஞர்களை பார்க்கலாம். நம்மை அமர்த்தி நிமிடங்களில் போர்ட்ரெய்ட் வரைந்துக்கொடுக்கிறார்கள்.
மேலும் படங்கள்.....

அடுத்து எனக்கு பிடித்த... மிகவும் ரசித்த லூவர் அருங்காட்சியகத்தைப்பற்றி சொல்ல வேண்டும். உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றான‌ இதைப்பற்றிய விவரங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

பார்க்க வேண்டிய இன்னொரு இடம் The Palace of Versailles நகரத்தின் மையப்பகுதியில் இருந்து சுமார் இருபது கிமீ தொலைவில் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அரண்மனை. பல அடுக்குகளையும் அறைகளையும் கொண்டு பார்ப்பதற்கே மிக பிரமாண்டமாய் இருந்தது. அரச குடும்பத்தினருக்காக தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் உள்ளே அழகாக தெரிந்த ராயல் அலங்கரிப்புகள் அனைத்தும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. பார்ப்பவர்களை கவரும் முக்கியமான இடம் அங்குள்ள Hall of Mirrors... அத்தனை அழகாக ஜொலிக்கிறது! அரண்மனை உள்ளே செல்ல நுழைவுக்கட்டணம் என்றாலும் அதன் சுற்றிலும் அமைந்துள்ள மிக பெரிய பார்க்கிற்க்கு அனுமதி இலவசம் என்பதால் அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. பாதுக்காப்பாக பராமரிக்கப்பட்டு வரும் தோட்டங்களில் ஆங்காங்கே இருந்த சிலைகள் கூடுதல் அழகை சேர்க்கிறது.
படங்கள் உள்ளே.....


பாரிஸின் கட்டிடங்கள் தெருக்கள் எல்லாம் பழமையின் பெருமை பேசிக்கொண்டு புதுமையாக‌ ப‌ளிச்சிடுகிற‌து. க‌ட்டிட‌ங்க‌ளின் ப‌ழ‌மையை பாதுகாத்து உள்ளே ம‌ட்டும் புதுபித்த‌ பராம‌ரிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

பாரிஸின் சுற்றுலா தலங்களின் நுழைவுக்கட்டணங்களை விட அதிக பண‌ம் செலவாகும் இடம் என்றால் கார் பார்க்கிங்தான். அதே போல் இங்கு டிராபிக்கை கடந்து போக பொறுமை அவசியம். இதை சமாளிக்க முடியாமலே இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் வேலைக்கு சென்றுவர இருசக்கர‌ வாகனங்கள் அல்லது public transit பயன்படுத்துகிறார்கள்.

பாரிஸை சுற்றிப்பார்க்க சுற்றுலாவினர் விரும்பும் மாடி பஸ்!


அதேப்போல் ஈபில் டவரை சுற்றி உள்ள‌ பகுதியில் இருக்கும் ரெஸ்டாரண்டுகள் மிகவும் காஸ்ட்லியானது. விதவிதமாக ருசித்து சாப்பிடும் என்னவருடன் ஒரு நாள் அப்படி ஒரு பெரிய பிரெஞ்ச் ரெஸ்டாரண்டில் உணவருந்தினோம். இன்னொரு நாள் விலை மலிவாக உள்ள நம் தமிழ் ரெஸ்டாரண்டுக்கு சென்றோம். அங்கே தமிழ் நாட்டு உணவை ரசித்து சாப்பிடும் பிரெஞ்சுகாரர்கள் நிறைய பேரை பார்க்க முடிந்த‌து.

இந்தியர்களுக்காக ஒரு பகுதி... அங்கே தமிழ் பேசுபவர்களைதான் அதிகம் காணமுடிகிறது. காணும் இடங்களில் எல்லாம் 'சென்னை சில்க்ஸில்' தொடங்கி கடைகளின் பெயர்கள் எல்லாம் தமிழில்தான் இருக்கிறது. அங்குள்ள தமிழ் கிறிஸ்தவர்கள் சேர்ந்து தமிழிலேயே சிறப்பு ஆராதனைகள் ஆலய திருவிழாக்கள் என கொண்டாடி மகிழ்கிறார்கள். அதில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. சொந்தங்கள் தெரிந்தவர்கள் என அனைவரையும் கண்டு மகிழ்ந்தேன்.

பாரிஸிக்கு சென்று ஷாப்பிங் இல்லாமலா... நிறைய கடைகளை சுற்றி கைகளில் பைகளுடன் திரும்பினேன். பையில் யூரோ இருந்தா நிச்சயம் பாரிஸ் சொர்கம்தான்! நகரத்தின் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் எல்லாம் மிக எக்ஸ்பென்சிவாக இருக்கிறது. அதனாலே கடைகள் எல்லாம் ராயலாக காட்சியளிக்கிறது. அதே வீதிகளில் கார் பிரியர்களை மகிழ்விக்கும் வண்ணம் அடுத்தடுத்து சில கார் ஷோரூம்கள் உள்ளது. கார் பிரியரான என்னவர் ஒவ்வொரு காரினையும் ஆர்வமாக ஆசையாக பார்க்க‌, நானும் சேர்ந்து ரசித்தேன்.

கார் தயாரிப்பில் ஐரோப்பியாவின் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரெஞ்சு பிராண்ட் Peugeot! மற்ற கார்களை காட்டிலும் அனைவரையும் கவர்ந்ததாக இது இருந்தது.


அமைதியான சிறிய ஊரில் இருந்து சென்ற எனக்கு பாரிஸின் வேகம் சில சமயங்களில் சோர்வைக் கொடுத்தாலும் இரவு ப‌கல் பாராமல் தன் அழகால் அனைவரையும் மகிழ்விக்கும் நகரம் என்னையும் உற்சாகப்படுத்தி மகிழ்வித்தது.

ஓங்கி உயர்ந்த கட்டிடங்கள், சதா அங்குமிங்கும் அலைந்து திரியும் மக்கள் என தனக்கான காட்சியில் இருந்து சற்று மாறுப்பட்டுள்ள இந்த சாலையும் பாரிஸில்தான் உள்ளது...!!!


நான் பார்த்து இடங்களைப் பற்றிய சுற்றுலா அனுபவங்களை புகைப்படங்களுடன் உங்களுடன் பகிர்ந்துக் கொண்டதில் சந்தோஷம் என்றாலும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொள்ள முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம். பாரிஸில் உள்ளவர்கள் திரைப்பட விழாவிற்காக‌ இங்கு வர நானோ விழா நடைபெற்ற பதினைந்து நாட்களும் பாரிஸில் இருந்துவிட்டேன். இம்முறையும் கேன்ஸ் க்ளிக்ஸ் மிஸ்ஸாயிடுச்சி நண்பர்களே!

Tuesday, May 3, 2011

உல்லாச உலகம்...!


         சிவந்த‌ப் பாறைகள்... பசுமையான தாவரம்... நீலக்கடல்... பொன்னிற மணற்பரப்பு என மொத்த அழகினையும் தன்னுள் கொண்டு திகழும் இப்பகுதியின் பெயர் La Corniche de l'Estérel.

எங்கள் மாவட்டத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளின் பொழுதுப்போக்கு இடமாக திகழ்கிறது இந்த கடற்கரை. சனி ஞாயிறுகளில் பரப்பரப்பாக காணப்படும் இப்பகுதி விடுமுறை நாட்களானால் திருவிழா கோலம் கொள்கிறது. பள்ளி ஆண்டு விடுமுறை தொடங்க இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில் சென்ற மாதம் விடப்பட்ட இரண்டு வார‌ ஈஸ்டர் விடுமுறையின் போதே இங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஓங்கி உயர்ந்திருக்கும் சிவந்த‌ மலை பாறைகள்... Mediterranean கடல்; நடுவே பயணிக்கும் சாலை என இந்த littoral zone க்கு La corniche d'or(The Golden Cornice) என்னும் சிறப்பு பெயரும் உண்டு. வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி கடலினையும் கடல் சார்ந்த பகுதிகளையும் பார்வையிட வசதியாக ஆங்காங்கே கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதேப்போல் கடலில் குளிப்பவர்களுக்காக சில பகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான பாதுக்காப்பற்ற பகுதிகளெல்லாம்  ஹெலிக்காப்டரில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

சிவந்த பாறைகளில் மோதி சிதறித் தெறிக்கும் நீரின் அழகை காணும் பொழுது விழிக‌ள் இமைக்க மறுந்துபோய் விடுகிறது. இந்த அழகினை ரசிக்க ஆரம்பித்த பிறகு அதிலிருந்து பார்வையை திருப்ப‌ முடியாமல் மனம் அதிலே லயித்துவிடுகிறது; தங்கபோல் ஜொலிக்கும் மணல், வெண்பஞ்சு நுரைகளை அள்ளிவரும் அலைகள், பாறைகளை தொட்டு எழும்பும் நீரோசை, வட்டமிடும் பறவைகள், சிரிக்கும் பூக்கள், மிதமான வெயில், வருடும் காற்று, அனைத்தையும் மறந்து சந்தோஷத்துடன் குதுக்கலிக்கும் மக்கள், நிமிடத்திற்கு நிமிடம் மாறுகின்ற காட்சிகள் என ஒவ்வொன்றும் கவிதை சொல்கிறது...

கடலைகளின் தாலாட்டில் கரைந்துபோன
காலடி தடங்களை தேடி தேடி
தொலைந்துப்போனது
என் மனது!
கொட்டி கிடந்த ரம்மியங்களை
ஓடி ஓடி படம்பிடித்தது
என் ரசனை!

ரம்மியங்களை விவரித்து சொல்லும் கீழ் காணும் படங்கள் அனைத்தும் சென்ற ஞாயிறு அன்று என் கேமிராவில் க்ளிக்கியது.








காணும் காட்சியை ஓவியமாக்குபவர்...






 

 
வட்டமிடும் கடற்பறவை...






 








நிஜத்தில் மனம் கரைய..
கரையில் நிழல் கரைகிறது!
( படத்தில் நானும் என்னவரும்)