Subscribe:

Pages

Wednesday, October 13, 2010

நீங்காத அவளின் நினைவுகள்....

                 புதிய நாடு, புதிய மனிதர்கள், புதிய உணவு வகைகள், புதிய பழக்கவழக்கங்கள் என எல்லாமே புதியதாக, இனிமையான தருணங்களையும் சந்தோஷமான நிமிடங்களையும் பெற்று தந்தது கடந்த வார ஸ்பெயின் பயணம். 400 கிமீ தொலைவில் இருக்கும் நண்பர் வீட்டிற்கு சென்று பின் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து சென்றுவந்த பயணம் கொடுத்த உற்சாகத்தில் மீண்டும் எனது ப்ரியமான பதிவுலக நண்பர்களை சந்திக்க வந்துள்ளேன்.



பிரான்ஸின் எல்லையை தாண்டிய அடுத்தடுத்த நிமிடங்களில் என்னற்ற மாற்றங்களை தந்து பிரமிக்க வைத்தது ஸ்பெயின். பிரான்ஸை ஒப்பிடுகையில் பொருட்கள் எல்லாம் விலை மலிவாக கிடைக்கிறது. வயிற்றிர்க்கு உணவளிக்கும் உணவகங்களில் செவிக்கும் விருந்தாக இசைக்கச்சேரிகள் நடைப்பெறுகிறது. பிரான்ஸை போல் அல்லாமல் இந்த நாடு தனது சட்டத்திட்டங்களில் சிலவற்றை தளர்த்தி இருப்பதை பார்க்க முடிந்தது.

(அங்கு அதிகமாக விற்கப்படும் dried Sausage!)

ஆனால் இந்த பயணத்தையும் விடுமுறை நாட்களையும் அர்த்தமுள்ளதாக்கியள்..... கமி.


எனக்கும் குழந்தைகளுக்குமான உறவு எப்பொழுதும் ஆழமுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருப்பதாகவே தோன்றும். இம்முறையும் என்னை அப்படி நினைக்கவைத்தவள் நண்பரின் நான்கு வயது மகள். அழகான குட்டி தேவதை. பொம்மை போன்றதொரு தோற்றம். இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்ததை நியாபகத்தில் வைத்துக்கொண்டு தன் பெற்றோர் மூலம் எங்களின் வரவை தெரிந்துக்கொண்டவள் எங்களை கண்டவுடன் முந்திய‌ நாளே வரைந்து வைத்திருந்த படத்தை எங்கள் இருவருக்கும் பரிசளித்தாள்.


பின் அவள் அறைக்கு அழைத்து சென்று தன் குட்டி உலகத்தை பார்வையிட செய்தாள். அறை முழுவதும் கொட்டி கிடந்த விளையாட்டு பொருட்களின் நடுவில் அமர்ந்துக்கொண்டிருந்தவள் என்னையும் அழைக்க மீண்டும் குழந்தையாய் மாறிவிட்ட உணர்வில் அவளோடு கழிந்த நிமிடங்கள் இனிமையானது. Snow White, Cindrella, Beauty and the Beast, etc. கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உருவ பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடுவது இவளுக்கு பிடித்தது என்றால், அதைவிட அதிகம் பிடித்தது வரைவதுதான்!

என்னை பற்றி தன் அம்மாவின் மூலம் தெரிந்துக்கொண்டவள், தனது டிராயிங் நோட்டு புத்தகங்களை கொடுத்து பார்க்க சொன்னவள், பின் அவளுடன் சேர்ந்து என்னையும் வரைய வைத்தாள். நேரம் போவதே தெரியாமல் நிறைய வரைந்தோம். அவளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன் என்பதைவிட அவளிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

என் நெற்றியில் வைத்திருந்த பொட்டை பார்த்து கேட்ட கேள்வியில் ஆரம்பித்து இடைவிடாமல் நிறைய கேள்விகள் என எப்பொழுதும் பேசிக்கொண்டே இருந்தாள். பள்ளியில் மற்ற மாணவிகளை பார்த்துவிட்டு தனக்கும் அதுப்போல French braid போட்டு விட சொல்லி தன் அம்மாவிடம் நீண்ட நாளாக கேட்டு இருக்கிறாள். அவளின் அம்மா 'எனக்கு தெரியாது உனக்கு தெரிந்தால் போட்டுவிடு' என்றார் என்னிடம். கடந்த‌ சனிக்கிழமை அன்று அவள் விரும்பியபடி நான் போட்டு விட்டதும்தான் அவள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி!


காரில் செல்லும்போது என் பக்கத்தில் அமர்ந்துக்கொள் என என்னை அழைத்து அவள் பக்கத்தில் அமர்த்திக்கொள்வதாகட்டும், ரெஸ்டாரண்டில் அவள் பக்கதில் என்னை அமர்த்திகொண்டு, நான் ஆர்டர் செய்த உணவு வர தாமதமாக, அவளுக்கான உணவு சீக்கிரம் வந்துவிட‌ சாப்பிட்டு கொண்டிருந்தவள் , பசிக்குதா வேணும்னா என் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடு' என்பதாகட்டும், அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் கூட‌ கொஞ்ச நேரம் என் கூட  விளையாடிவிட்டு போ என்றவளின் ஆசையை நிறைவேற்றிய போதுமாகட்டும்... மீண்டும் குழந்தையாய் மாறிவிடமாட்டோமா என ஏங்க வைத்த இனிமையான தருணங்கள் அது!
மொத்தத்தில் இந்த பயன‌த்தை இனிமையாக்கியது குழந்தைக்கான இவளின் அடையாளங்கள்தான். இன்று என்னைவிட்டு பயனகளைப்பு நீங்கிவிட்டாலும் நீங்காமல் இருக்கிறது அவளின் நினைவுகள்.