Subscribe:

Pages

Thursday, November 17, 2011

காதல் தேசத்தை தேடி......

     வண்ணக்கலவையில் உருவாகும் ஓவியத்தை விட கருப்பு வெள்ளை  ஓவியம்தான் பெரும்பாலானவர்களை கவர்கிறது. எனது பள்ளி நாட்களில் இருந்தே எனக்கும் பென்சில் ஸ்கெட்சில் மிகுந்த ஆர்வம் உண்டு. சமீப நாட்களாக இவற்றை பற்றி நிறைய தெரிந்துக்கொள்வதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் அதிகமாகிக்கொண்டு வருகிறது. இதோ மீண்டும் என் கைவண்ணத்தில் மலர்ந்த அரும்புகள்....  


சிறந்த ரசனையோடு ஆழமான பார்வை கொண்டவர்களால் ஓவியங்கள் உயிர்பெறுகிறது என்பது என் எண்ணம். இதோ உங்கள் ரசனையைக்கொண்டு இதற்கு கவிதை படைத்திடுங்கள். உங்களின் கவிதைகளால் உயிர் பெறட்டும் எனது ஓவியம்!


யாருமற்ற தனிமையில்
யாதுமற்ற‌ நிலையினில்
காதல் மட்டுமே துணையாய்
நீ என்னிலும்
நான் உன்னிலும்
சொல்லாத வார்த்தைகளும்
பொல்லாத காதலும்.....

விரல்களின் இறுக்கத்தில் கசிந்திட‌
காதல் தேசத்தை தேடி
நடைபயில்வோம் வா!

Monday, November 7, 2011

மலர்ந்திடும் அரும்புகள்.....!

                ஓவியம் வரைவதற்கான தூண்டுதல் எல்லா மனிதர்களிடமும் சிறுவயதில் இருந்தே உண்டு... அந்த இயற்கையான குணத்திற்குட்பட்டு நாமும் வரைந்து பார்க்க தொடங்கிவிடுவோம். கோடு போட கையில் எது கிடைத்தாலும் அதைக்கொண்டு மனதில் மலரும் கற்பனைக்கேற்றபடி வரைந்து அதை பார்த்து மகிழ்ச்சியடைவோம். இதில் சிறுவர்களுக்கு பெரும் பங்குண்டு. இவர்களுக்கும் ஓவியங்களுக்குமான நெருக்கம் மிக பெரியது. தோன்றும் கற்பனைகளையும் கனவுகளையும் காட்சிகளையும் ஓவியமாக தர இயல்பாக இவர்களால் முடிகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த சிறுவர்களின் ஓவியங்களை போல சிறுவர்களையே ஓவியமாய் பார்க்கும் எத்தனையோ திறமை மிக்க ஓவியர்களும் உண்டு. குழந்தைகளை ஓவியமாக வரைபவர்களை பார்க்கும் போது பிரமிப்பாக‌ தோன்றும். இணையத்தில் குழந்தைகளின் ஓவியங்களோ அல்லது அவர்களின் புகைப்படங்களோ எதுவாக இருந்தாலும் பார்க்க தவறுவது இல்லை. வரைவதை போல நான் நேசிக்கும் இன்னொன்று புகைப்படம்... ஒரு நொடி உணர்ச்சியையும் படமாக்கி கொடுக்கும் கலை அது. அதிலும் சிறுவர்களை படம்பிடிப்பது என்பது அழகான ஒன்று. இதுவே தூண்டுதலாக அமைய பார்த்த முதல் முறையே மனதில் ஒட்டி கொண்ட.... என்னை மிகவும் கவர்ந்தஒரு புகைப்படத்தை பார்த்து நான் வரைய ஆரம்பித்தேன்.

இம்முறை வழக்கமாக பயன்ப்படுத்தும் HB பென்சிலை தவிர்த்து Graphite pencil 2B-6B உபயோகப்படுத்தினேன். இதனால் எதிர்பார்த்த கருமை நிறம் கிடைத்தது.






வரைய ஆரம்பித்த மூன்று மணி நேரங்களுக்கு பின் கிடைத்ததுதான் கீழே காணும் அரும்புகளின் அணைப்பு.... புகைப்படத்தில் தெரிந்த அன்பின் வெளிப்பாடு நான் வரைந்ததில் தெளிவாக தெரிகிறதா என்பது தெரியவில்லை...! ஆனாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு என் ப்ரியமான பதிவுலக நண்பர்களை மீண்டும் சந்தித்ததிலும் வரைந்ததை பகிர்ந்துக்கொண்டதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.