Subscribe:

Pages

Showing posts with label Stone art. Show all posts
Showing posts with label Stone art. Show all posts

Thursday, July 28, 2011

காதல் மொழி பேசும்.... கற்கள்!

                வரைவதில் குறையாத ஆர்வம்... தொடர்கையில் புது புது முயற்சிகளில் ஈடுபட மனம் முயல்கிறது. கொஞ்ச நாட்களாகவே கல்லில் வரைவது பிடித்திருக்கிற‌து. மிக குறைந்த நேரத்தில் வரைய முடிகிறது. இதற்காக கடற்கரை செல்லும் பொழுதுகளில் கல்லை தேடி தேடி எடுக்கிறேன். நான் மட்டுமல்ல எனக்காக என்னவரும் கண்களை நிலத்தில் தவழ விட்டபடி கற்களை தேடி அலைந்ததை பார்க்கும்போது கொஞ்ச‌ம் சிரிப்பு வந்தாலும் நெஞ்சம் மகிழத்தான் செய்கிறது. அவரின் ஊக்கம் மிக பெரிய பலம் எனக்கு!

வரைய நினைக்கும் காட்சிகளை கண்முன் நிறுத்தி கற்பனை கொண்டு வண்ணம் தீட்ட, குவிந்திருக்கும் கற்களில் எதை எடுத்தாலும் அழகாகவே தெரிந்தது.


அழகாய் தெரிந்த கற்களை இன்னும் அழகாக்க ஏதோ சிறு முயற்சி செய்ததுதான் கீழ்காணும் படங்களில் உள்ளவை. இதற்கான பெயிண்ட் இல்லாத நிலையில் என்னிடம் இருக்கும் ஆயில் பெயிண்டையே உபயோகித்து சென்ற‌ வாரம் வரைந்தேன். நன்றாக காய்ந்தபின் கொஞ்சம் வார்னிஷ் அடித்துவிட... கல் கண்ணாடி போல் ஆனது!


முதலில் ஒரு ஜோடியை நீல நிறத்தின் பின்னனியில் வரைய ஆரம்பித்தேன். பின் அதுவே சுவாரஸியமாக தெரிய அப்படியே தொடர்ந்தேன்... வெவ்வேறு வண்ணங்களில். இதோ.... காதல்  மொழி பேச தனித்திருக்கும் இரு உள்ளங்கள்!






Friday, December 10, 2010

கல்லிலே கலைவண்ணம் தேடிய கண்கள்!

            கடற்கரைக்கு செல்வது என்பதே பிடித்தமான ஒன்றுதான். அதிலும் கடல் அலைகளை ரசிப்பதிலே தனிசுகம் இருக்கத்தான் செய்கிறது. இதற்காகவே கோடையில் மட்டுமல்லாமல் குளிர் காலத்திலும் சென்று வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி செல்கிறபோது வெறும் கடல் அலைகளை மட்டும் ரசிப்பதோடு நிறுத்தி விடாமல் கடற்கரையில் பரவி கிடக்கும் பாறைகள், கற்கள் என அனைத்தையும் ரசிப்பதுண்டு. இயற்கையாகவே சில கற்கள் பல‌விதமான வடிவங்களில் இருந்தாலும்.... சில நேரங்களில் ஆச்சிரியப்பட வைக்கும் அளவிற்கு செதுக்கியது போல் இருக்கும். இப்படி கற்களில் கலையை தேடிக்கொண்டு இருந்த எனக்கு  பாறை உடைந்து சிதறியதை போல் ஒரு கல் கண்ணில்பட்டது. அட, பார்ப்பதற்கு ஃபிரான்ஸ் மேப் மாதிரியே இருக்கே என்று நினைத்து கையில் எடுத்த எனக்கு ஆச்சிரியமாக இருந்தது! வேறு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் நிறுத்தி வைக்கலாம். காரணம், இயற்கையாகவே சமமாக அமைந்த அதன் அடிபாகம்தான். அதனால் இதில ஏதாவது செய்யலாமே என்றெண்ணி வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டேன். சென்ற சனிக்கிழமை கையிலெடுத்த கல்... வண்ணங்களின் கலவையில் ஒரு மணி நேரத்திற்கு பின் புதுவடிவம் பெற்றது.

இதோ எனது கண்கள் கண்டெடுத்த கல்லும் எனது விரல்கள் படைத்த ஓவியமும்!