Subscribe:

Pages

Thursday, December 24, 2009

ஸ்பெஷ‌ல் கேக்!!!

                ல்லோருமே ஃபெஸ்டிவிட்டி மூட்ல இருப்பீங்கன்னு நினைகிறேன். இதோ நாளை கிறிஸ்துமஸ், தொடர்ந்து ஒரு வாரத்தில் புதுவருடம் என்று ஜாலிதான்! இவற்றை கொண்டாடிட உலகெங்கு பலவிதமான ஏற்பாடுகள்....  சந்தோஷத்துடன் புத்தாடைகள் வாங்குவதில் ஆரம்பித்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கிப்ட்ஸ் வாங்குவதும், ஸ்டார், சீரியல் லைட்ஸ்...எல்லாம் கொண்டு வீட்டை அலங்கரிப்பதும், last but not least... என்பதை போல கடைசியில் விதவிதமான சாப்பாட்டு வகைகளோடு இனிதே முடிவுக்கு வருகிறது.... இந்த இனிய விழாக்கள்!!!

நானும் என் ப‌ங்குக்கு எல்லாம் முடித்து, இறுதியாக‌ இன்று கிறிஸ்தும‌ஸ் ஸ்பெஷ‌லாக‌ ர‌வை கேக்கும் செய்தாகிவிட்ட‌து. சுல‌ப‌மான‌ அந்த‌ குறிப்பை கீழே கொடுத்துள்ளேன், ட்ரை பண்ணிபாருங்க‌!


தேவை :

ரவை - 500g
சர்க்கரை - 500g
வெண்ணெய் - 250g
முட்டை  - 8 
வெண்ணிலா(பவுடராக) - 8g
 பேக்கிங் சோடா - 10g
முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய்               
ரம் - 15cl



செய்முறை :

  • முந்திரி திராட்சை வெண்ணிலா சேர்த்து ரம்மில் ஒரு ஐந்து நாட்கள் முன்பே ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

  • முதலில் ரவையை உருக்கிய வெண்ணையில் ஐந்து அல்லது ஆறு மணி நேரம் முன்பே ஊற வைத்துவிட‌வும்.


  • முட்டைகளை மஞ்சள் தனியாகவும் வெள்ளை தனியாகவும் பிரித்துக்கொண்டு, வெள்ளையை மட்டும் நன்றாக நுரைத்துவரும் வரை அடித்துக்கொள்ளவும்.
  • மஞ்சள் முட்டையை நன்றாக அடித்துக்கொண்டு, அவற்றுடன் சர்க்கரை, வெண்ணெய், ஊறவைத்த முந்திரி திராட்சை ரம், மற்றும் வெண்ணிலா,  பேக்கிங் சோடா, தட்டிய ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
  • இவற்றுடன் ரவை கொஞ்சம் வெள்ளை முட்டை கொஞ்சம், என்று இரண்டையும் மாற்றி மாற்றி சேர்த்து கலக்கவும்.
  • இந்த கலவையை ஓவனில் சரியாக 45 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து bake செய்து எடுத்தால் சூப்பரா ஒரு ரவை கேக் ரெடி!(நிச்சயமா இந்த கேக்கில் ரம் வாசனை வராது)!!!



கிறிஸ்துமஸ் கொண்டாடும் அணைவருக்கும்
என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!!

Saturday, December 19, 2009

மின்னும் மின்மினிகளாய்........

ன்னதான் இயற்கையே (நிலவொளியும் நட்சத்திரங்களுமாய்) சந்தோஷங்களை வாரி வழங்கினாலும், செயற்கையாக சந்தோஷங்களை தேடிக் கொள்வதுதானே நம்மோட பழக்கம்....  அதிலும் நாமே தேடி போய் அனுபவிக்கறது ...ம்ம் இன்னும் சந்தோஷம்!

அப்படிதான் போன வாரம் முழுதும் பயங்கர குளிரிலும் கேமராவோட அலைச்சு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க.... ஊரெங்கும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மின்சார விளக்குகளை ஏதோ கொஞ்ச  கஷ்டப்பட்டு போட்டோஸ் எடுத்தாச்சு....

எங்க ஊர் அழகினை நீங்களும் பார்க்க வேண்டாமா?













Friday, December 18, 2009

மிஸ் ப்ளாக்கர் !!!




ஊரெங்கும் மிஸ் வேர்ல்டு, மிஸ் பிரான்ஸ் அழகிபோட்டி நடந்துவரும் வேளையில், எனக்கு கிடைத்திருக்கு இந்த விருது என்னையும் ஒரு மிஸ் ப்ளாக்கர் ( இது கொஞ்சம் ஓவர்தான்...) மாதிரி நினைக்க தோனுது!

இந்த விருதினை வழங்கிய குறும்ப‌ன் அவர்களுக்கு மிக்க நன்றி.






எனக்கு கிடைத்த இந்த சந்தோஷத்தை(விருதை)இவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன்!

ஜெனோவா

மலர்விழி

Thursday, December 10, 2009

வண்ணங்களில் மலர்ந்திடும்.... பூக்கள்!

             ந்த மனநிலையில் இருந்தாலும் என்னை உடனடியாக மாற்றும் சக்தி கொண்டவைகள் இரண்டு.... ஒன்று பூக்கள், மற்றொன்று குழந்தைகள். இந்த இரண்டையும் பார்க்கும் போதுமட்டும் ஏனோ இதயம் முழுவதும் சந்தோஷம் பொங்கி வழிகிறது. நிச்சயம் இவ்விரண்டையும் நேசிக்காதவர்கள் இருக்க முடியுமா?


வாழ்க்கையை மலர்விக்கும் மலர்கள்... குழந்தைகள்!
வாழ்வில் நம்மோடு கொஞ்சி விளையாடும் குழந்தையாய்... பூக்கள்!




இப்படி வாழ்க்கை தொடங்கும் இடத்திலிருந்து இறுதிவரை நம்மோடு உறவாடும் பூக்களை எனக்கு போட்டோ எடுப்பதும் பிடிக்கும், வரைவதும் பிடிக்கும்!

 என் வண்ணங்களில் மலர்ந்துள்ள பூக்கள்.......


முதல் படம் மட்டும் ஆயில் பெயின்டிங், மற்றவை வாட்டர் கலரிங்....
                               


Monday, December 7, 2009

இதமாக...ஒரு பயணம்!

          சாதாரனமாகவே என்னைச் சுற்றி இருக்கும் அனைத்திலும் அழகு என்ற ஒன்றை தேடுபவள்… அதை கண்டு ரசித்து மகிழ்பவள். அதிலும் தானாகவே இயற்கையை கண்டுகளிக்க ஒரு வாய்ப்பு வந்தால்... அப்படி ஒரு நாள், எனக்கு நேற்று கிடைத்தது. அதுவும் ஆல்ப்ஸ் மலைகளை காண்பதற்கு.


மிக உயரமான மலைத்தொடர்கள்…ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக… சறுக்கலான பாறைகள்… பயங்கரமான பள்ளத்தாக்குகள்… அதன், ஒரு பக்கமாகவே தொடர்ந்த வந்த (பச்சையும் நீல நிறமுமாக) அழகிய ஏரி… குறுகிய சாலைகள், நடுங்க வைத்த குளிர் என்று நேற்றிய பயணம் மனதிற்கு இதமாக இருந்தது.


ஒவ்வொரு மலைகளையும் கடக்கும்போது இடையிடையே சின்ன சின்ன கிராமங்களைப் பார்க்க முடிந்தது. அவற்றிர்க்கென்று இருக்கின்ற தனித்தன்மையை இன்னும் இழக்காமல் இருப்பதை பார்க்க சந்தோஷமாக இருந்தது.


மலையடிவாரத்தில் இருந்து ஆரம்பிக்கும் சாலை வளைந்து வளைந்து, மலைகளைச் சுற்றியபடி உயரத்தில் செல்ல, சொல்ல முடியாத ஒரு பயம் மனதிற்குள் வந்து சென்றது. அதிலும் ஒவ்வொரு மலையாக கடக்கும்போதும் கீழிருந்து மேலே, மேலிருந்து கீழேவென்று சென்ற சாலையில் பயணிக்கும்போது ஏற்பட்ட உணர்வை என்னவென்று சொல்வது...அப்படி ஒரு த்ரில்.




மலைகளின் உச்சுக்கு சென்றபோது கண்ணுக்கு எட்டியவரை மனித நடமாட்டமே இன்றி, சுற்றிலும் மலைகள்... மலைகள்… மலைகளை தவிர எதுவுமில்லை. என்னவோ இந்த உலகத்தில் யாருமே(என்னையும், என்னவரையும் தவிர) இல்லாததை போன்ற ஒரு த்ரில்லான அனுபவமாக இருந்தது.






இன்னும் சில நாட்களில் குளிர்க்காலம் ஆரம்பமென்பதால் ஆங்காங்கே மலைகளின் மேல் பனிக் கொட்டிக் கிடந்தது.



சாலைகளின் ஓரத்திலிருந்த மரங்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். தற்பொழுது இலையுதிர் காலம் என்பதால் உதிரும் தருவாயில் இருந்த இலைகளின் அழகினை சொல்வதற்கு வார்த்தைகள் போதாது. பூக்களின்றி இருக்கும் மரங்கள் கூட இத்தனை அழகா…. இருக்கும் என்பதை அங்கே தெரிந்துக்கொண்டேன். பச்சை, ஊதா , மஞ்சள், ஆரஞ்சு, சிகப்பு, சாக்லெட்கலர்…. என ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தது. சாலையின் ஓரத்தில் காரை நிறுத்த முடியாமல் போனதால், அந்த மரங்களை எல்லாம் புகைப்படம் எடுக்க வேண்டுமென்ற என் ஆசை நிறைவேறவில்லை. அப்படி இருந்தும் ஓடும் காரில் இருந்தப்படியே ஒன்றே ஒன்று…


என் மனது மட்டுமல்ல சந்தோஷத்துடன் எனது கேமரவும் அந்த அழகியக்காட்சிகளை பதிவு செய்துக்கொண்டது.








இயந்திரத்தனமான வாழ்வில் இருந்து விடுப்பட்டு மாதம் ஒரு முறையாவது இப்படி சென்றுவர வேண்டும் என்ற முடிவுடன், என்னை புதிப்பித்துக் கொடுத்த இயற்கைக்கும்..... அழகாக கவனமாக கார் ஓட்டிச் சென்று, கார் நிறுத்தக்கூட வசதியில்லாத இடங்களிலும் எனக்காக காரை நிறுத்தி போட்டோ எடுக்க உதவிய என்னவருக்கும்......  நன்றி சொல்லிக்கொண்டே சுத்தமான காற்றை சுவாசித்து வந்த திருப்தியுடன் இரவு உறங்கச் சென்றேன்.

Friday, December 4, 2009

அடுத்த பிறவியில்.....


ம்பிக்கை இல்லை
அடுத்த பிறவியில்
உனக்கு.
ஆனால்
நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க.

மனதில் மட்டுமல்ல
உன்னையே முழுதும்
என்னுள் சுமக்க
உன் தாயாக !

காலை விடியலின்
முதல் உருவம் நானென்றாய் !
முதல் உறவாகவே…..
உன் தாயாக !

உன் விழியில் நானென்றாய் !
கண்ணுக்குள் வைத்துன்னை
பாதுகாப்பேன்…..
உன் தாயாக !

கவிதைகளின்
தொடக்கம் நானென்றாய் !
வாழ்க்கையே தொடங்கிவைப்பேன்
உன் தாயாக !

மடி சேர விரும்பினாய் !
என் மடியிலே சேர்த்துன்னை
தாலாட்டு பாடுவேன்
உன் தாயாக !

உடனிருந்தால் அனைத்தையும்
வெல்வேன் என்றாய் !
கற்றுக்கொடுத்து எல்லாவற்றிலும்
வெற்றி காணவைப்பேன்
உன் தாயாக !

உலகை
பரிசளிப்பேன் என்றாய் !
இந்த உலகையே உனக்கு
அறிமுகப்படுத்துவேன்
உன் தாயாக !

என்னை போலொரு
பெண்குழந்தை வேண்டுமென
ஆசை உனக்கு.
உன்னையே
என் சாயலில்
பெற்றெடுப்பேன்
உன் தாயாக !

நான் விரும்புகிறேன்
மறுபடியும் பிறக்க
உன் தாயாக !

Saturday, November 28, 2009

மருதாணி...எனும் கலை!

     சிறுமியாக இருந்த காலம்முதலே மருதாணியின் மீதி எனக்கு அப்படியொரு காதல். அப்பொழுதெல்லாம் அம்மாவிடம் இரண்டு கைகளையும் ஆசையோடுக் காட்டிக்கொண்டு, அவர்கள் எப்படியெல்லாம் வைக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வேன். நன்றாக சிவக்க வேண்டுமே என்று நினைத்துக்கொண்டு இரவு முழுதும் கலைந்து விடக்கூடாதே என்று கைகளை அதிக அசைவில்லாமல் வைத்துக்கொண்டு தூங்குவேன். விடிந்ததும் கைகளை கழுவிக்கொண்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டி மகிழ்ந்த நாட்கள்தான் எத்தனையோ !!!


பின் நானே வைத்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு இதுவும் ஒருவிதமான கலை என்பதனை உணர்ந்துக் கொண்டேன்.


இப்பொழுது கிடைப்பதுப்போல் அப்போ ரெடிமேட் கோன்கள் கிடைக்காது என்பதால் தெரிந்தவர்களிடமும் தோழிகளிடமும் பெற்றுவந்த மருதாணி இலைகளை நானே அம்மியில் அரைத்து(இதற்காகவாது நான் அம்மியினை தொடுவதாக அம்மாவின் கமென்ட் கிடைக்கும்) வைத்துக்கொள்வேன். கோன்களில் கிடைக்க ஆரம்பித்த பிறகு, கூடவே அதற்கான வடிவங்களில் விதவிதமாக அச்சுகள் கிடைத்தது. ஆனால் அதை தவிர்த்து எப்போதும் நானே வடிவங்களை உருவாக்கி வரைந்துக்கொள்வேன்.


எனக்கு பிடித்தமானவைகளில் நான் இன்னும் தொடர்ந்து கொண்டு வருவது இந்த மருதாணி வரைந்துக்கொள்வதைதான். எத்தனை நாட்கள்தான் தாள்களிலும் கேன்வஸ் போர்டுகளிலும் வரைந்துக்கொண்டிருப்பது, அதான் மாறுதலாக என் கைகளிலும் வரைந்துகொண்டவை.....மருதாணியாக!