Subscribe:

Pages

Monday, May 24, 2010

என்னுள்ளே என்னுள்ளே.... மீண்டும் கலையுணர்வு!

            கொஞ்சம் தூசி படிந்து போயிருந்த என்னுடைய தூரிகைகளை நீண்ட இடைவெளிக்கு பின்பு இப்பொழுதுதான் எடுத்தேன். வெகு நாட்கள் கழித்து வண்ணங்களை கண்ட மகிழ்ச்சியோ என்னவோ தூரிகைகள் சற்று வேகமெடுத்தது.

 முதலில் பென்சில் டிராயிங்க்கு ஒரு அரை மணி நேரம் தேவைப்பட்டது. அதை வரைந்து முடித்து என்னவரிம் காட்டி 'எப்படி இருக்கு' என்று கேட்ட போது, 'என்ன இது கழுதையா? ' என்றார். சிரித்துக்கொண்டே 'கழுதை மாதிரி' என்று அவரிடம் சொல்லி விட்டு மீண்டும் ஒரு முப்பது நிமிடம் ரப்பர் தேய அழித்து, பின்பு ஓரளவு குதிரைகள்(மாதிரி) உருவம் பெற்றது. அடுத்த பத்து நிமிடங்களில் நான்காவது படத்தில் உள்ளபடி உருவானது. ஐந்தாவது படத்தில் இருப்பது அடுத்த முப்பது நிமிடங்களில் என்று முடிப்பதற்கு தொடர்ந்து இரண்டு மணி ஆனது. ஃபைனல் டச் எல்லாம் கொடுத்து முடிக்க மொத்தம் ஐந்து மணி நேரம் ஆகியது.








இதுவரை நான் ஏற்கனவே வரைந்த வைத்திருந்த‌ ஓவியங்களை மட்டுமே பதிவு செய்து வந்த நிலையில்...... இப்பொழுதுதான், அதிலும் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் என்னுள் கலையுணர்வு தோன்ற..... புதியதாக வரைந்து பதிவு செய்வதில் மனம் மகிழ்ச்சியாக உள்ளது.


Thursday, May 20, 2010

கலைஞர்களுக்கு என்று ஓர் ஊர்... St.Remy!



தோ மீண்டும் ஒரு விருது! இந்த விருதை எனக்களித்த Jaleela அவர்களுக்கு எனது அன்பான நன்றிகள். ஒவ்வொரு முறையும் விருது வழங்கப்படும் பொழுது முதல்முறை வாங்குவதை போன்றே ஓர் உணர்வு.... அவ்வளவு சந்தோஷம். அந்த சந்தோஷத்துடனே சென்ற பதிவின் தொடர்ச்சியாக என் பயணம் தொடர்கிறது.


            ஒக்ளிஸில்(Vaucluse) இருந்து 30 கிமீ தொலைவில் இருக்கும் ஊர்தான் St. Remy de Provence.



யற்கை வளம் நிறைந்த‌ நிலப்பகுதி என்பதால் சாலை இருபுறமும் Peech மற்றும் Cherry மரங்கள்  என்று பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.





ரம்பத்திலேயே தென்பட்ட மிக பெரிய ஏரியில் சிறிது நேரம் சுற்றி கொண்டு இருந்தோம். அங்கும் இங்குமாக ஓடி விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்களின் நடுவில் சில பெரியவர்கள் அமைதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். லேசாக தூர ஆரம்பித்தும் அதை யாரும் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. குளிர ஆரம்பித்ததால் என்னால் அதற்கு மேல் அங்கு இருக்க முடியவில்லை. அதனால் அங்கிருந்து ஊருக்குள் செல்ல...... நுழையும் போதே ஏதோ ஒரு கலை உணர்வு ஏற்படத் தொடங்கியது.





மே தினம் என்பதால் அந்த ஊர்மக்கள் சில கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர் . பிரான்ஸின் ஒவ்வொரு ஊரின் பாரம்பறிய உடை அனிந்து, ஊரின் மையப்பகுதியில் உள்ள வீதிகளில் அனிவகுப்பு நடத்தினர்.





ந்த ஊருக்கு ஒரு சிற‌ப்பு அம்சம் இருக்கின்றது என்று சொல்லி இருந்தேனே........ அது இந்த ஊருக்கு கிடைத்து இருக்கும் பெயர்தான். அதற்கு காரணமாக இருந்தவர் உலக புகழ் பெற்ற ஓவியர் Vincent Van Gogh அவர்கள்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர் பிறந்ததென்னவோ நெதர்லேன்டில்.... ஆனால் தன் இறுதி காலங்களில் அவர் பிரான்ஸில்தான் இருந்து இருக்கிறார். அதிலும் அவர் வரைவதற்காகவே இந்த ஊருக்கு வந்தவராம். அமைதியான ரம்மியமான இயற்கை காட்சிகளை ரசித்தபடியே வரைய இந்த இடத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார். இங்குதான் அவர் 150 பெயின்டிங்ஸும் 100 டிராயிங்ஸும் வரைந்திருக்கிறார். இவரை தொடர்ந்து இந்த ஊரில் நிறைய ஆர்டிஸ்ட்டுகள் உருவாக தொடங்கி உள்ளனர். தெருவுக்கு தெரு பார்க்கும் இடமெங்கும் ஆர்ட் கேலரிகள். ஒவ்வொரு பெயின்டிங்கும் 1000, 2000 யூரோக்கள் என்று விற்கப்படுகிறது. (நம்மூர் மதிப்புக்கு 60ஆயிரம், லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்.....) பெயின்டிங்ஸை தொடர்ந்து கண்ணாடியில் வரைவது, பீங்கான் பொருட்களில் வரைவது.... என்று பலத்தரப்பட்ட கலைஞர்கள் இருப்பதால் The village of Artists என்ற சிறப்பு பெயர் பெற்று விட்டது…. இந்த ஊர் !

பல புகழ்பெற்ற‌ கலைஞர்களையும் அவர்கள் படைப்புகளையும் பார்த்து விட்ட வந்த சந்தோஷத்தில் (நீண்ட நாட்களாக வரையாமல் இருந்த எனக்கு) மீண்டும் வரையும் ஆர்வம் வந்துவிட்டது. விரைவில் புதியதாக வரைந்த படத்துடன் வருகிறேன்.

Friday, May 14, 2010

ஜில்லுன்னு ஒரு பயணம்!

      தொடர்ந்து வந்த இரண்டு நாள் விடுமுறையை இருவருமாக ரசித்து கழிக்க இம்முறை நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் Fontaine de Vaucluse..... பசுமையும் குளிர்ச்சியும் நிறைந்த அழகான இடம்.

மே மாதம் தொடங்கிய நிலையிலும் சரியான சூரிய வெப்பம் இல்லாமல் அந்த இடமே குளிர்ச்சியாக இருந்தது. சுற்றிலும் பசுமை என்று நம் தென் இந்தியாவின் கேரளாவை நியாபகப்ப‌டுத்தியது, தென் பிரான்ஸின் இந்த ஒக்ளிஸ்(Vaucluse).

அரசு விடுமுறை நாள்(1st May) என்பதால் சிறுவர்கள் பெரியவர்கள் என்று ஓரே கூட்டம்தான். வயதான சில பெரியவர்கள் கூட‌ பயமோ தயக்கமோ இன்றி மலைப் பாறைகளை தட்டு தடுமாறி ஏறினார்கள். அவர்களை தொடர்ந்து நாங்களும் பாறைகளை கடந்த போது அங்கு எந்த ஒரு சலனமும் இன்றி அமைதியாக இருந்தது  நீரோடையின் ஊற்று.

நீரோடையுடனே... Crystal Gallery, Painting Gallery மற்றும் மிடில் ஏஜ் பீரியட்டில் தாள்கள் செய்ய உருவாக்கப் ப‌ட்ட தொழிற்சாலை என்று இந்த இடம் மேலும் சில சிறப்பு அம்சங்களை கொண்டிருந்தது.

அங்கு இருந்து ஒவ்வொரு மணி துளியும் ஜில்லுன்னு சுகமான‌ ஒர் உணர்வு. கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டு இருந்த தண்ணீரை போலவே மனதும் கட்டுபாடுகள் அற்ற குழந்தையாய் துள்ளி திரிந்தது.

இதற்குமேல் அதன் அழகினை நான் சொல்வதை விட, வாருங்கள் என்னுடன்….... அதன் பசுமையையும் குளிர்ச்சியையும் ஒன்றாக சேர்ந்து ரசித்திடலாம்.



கார்  பார்க்கிங் பக்கத்திலே அமைதியாக சென்ற நீரோடை...


ஹைட்ரோ பவர் டெவலெப்மென்டுக்காக பயன்படுத்தப்பட்டு இருக்கும்  வாட்டர் வீல்


ஓடையின் மேல் அமைந்துள்ள உண‌வு விடுதிகளுக்கு செல்ல அமைக்கப்பட்டிருந்த சிறிய பாலம்!


பாலத்தை கடந்ததும் அழகான பச்சை நிறத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர்.........


தண்ணீரில் சாகசம் புரிந்துக்கொண்டு இருப்பவர்கள்........




என்ன ஒரு நிறம்.... ?!


 கரையை ஒட்டி இருந்த பேப்பர் தொழிற்சாலை.


பேப்பர் செய்ய பயன்படுத்தப்ப‌ட்ட அக்காலத்து மர கருவிகள். அம்முறைப்படியே இங்கு இன்னும் தாள்கள் செய்கின்றார்க‌ள். இதன் பக்கத்திலேயே பல விதமான பேப்பர்களை கொண்டு மிக பெரிய ஹாலில் எக்ஸிபிஷன் நடந்தது. ஃபோட்டோ எடுக்க தடைச் செய்யப‌ட்ட இடம் என்பதால் அதை படம் எடுக்க முடியவில்லை.


 
அங்கிருந்து வெளியே வரும் நம்மை மீண்டும் வரவேற்று கொள்கிறது பசுமை!



அப்படியே தன்ணீரில் விழுந்து கும்மாள‌ம் போட மனசு துடிக்கிறது இல்லையா... ஆனால் தண்ணீரில் காலைக்கூட வைக்க முடியாத அளவில் குளிர்!


 இதன் அழகில் மயங்கிவிட‌... இதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை!





ஓடையின் அழகை ரசித்துக்கொண்டே  பாறைகளையும் கடந்து இப்போது நாம் வந்து சேர்ந்து இருக்கும் இடம்... ஓங்கி உயர்ந்து நின்ற மலையடிவாரத்தில் இருக்கும் ஊற்று. பார்ப்பதற்கு கண்ணாடி போல் இருக்கின்றது இல்லையா!


நடந்து நடந்து சற்று களைத்துவிட, பசியும் எடுத்துவிட்டது அல்லவா.... சாப்பிட இடம் தேட... இதோ கிடைத்து விட்டது ஓடையின் பக்கத்திலேயே!


ஜில்லுன்னு இருந்தாலும் அதுவே சுகமாக இருக்க ஓடையின் ஓரமாக அமர்ந்து சாப்பிட நமக்கு துணையாக வந்து சேர்ந்துக்கொண்டது இந்த‌ வாத்துக்கள்.


கடைசியாக பூக்களுடன் விடைபெற்று கொள்வோம்.



ஜில்லுன்னு ஒரு பயணம்.... எப்படி இருந்தது? தண்ணீரிலே இருந்திட மனசு ஏங்குகிறதா? எனக்கும் கூட அன்று அந்த இடத்தை விட்டுவர‌ மனமே இல்லாமல்தான் கிளம்பினேன்.

அங்கிருந்து மீண்டும் பக்கத்தில் இருக்கும் St. Remy என்னும் இன்னொரு ஊருக்கு பயன‌மானோம். அந்த ஊருக்கு என்று ஒரு சிற‌ப்பு அம்சம் இருக்கிறது. அது என்ன என்பதும், அங்கு எடுத்த படங்களுடனும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

Sunday, May 9, 2010

சிற்பியாய் இருந்து என்னை செதுக்கியவள்…….. அம்மா!

       துவரை என்னை யாரும் திட்டியது இல்லை. மனது வலிக்கும் படி பேசியது இல்லை. ஆனால் அன்றுதான் முதல் முறை மனசு வலிக்க அழுதேன். எப்போது வீட்டுக்கு செல்வோம்… அம்மாவின் மடியில் விழுந்து அழுவோம் என்று இருந்தது. பள்ளி விடும்வரை சோகத்தோடு காத்திருந்தேன். ஆம், நான் பள்ளியில் பணி புரிந்த சமயம் அது.

மேற்படிப்பை(M.A.) கரஸில் படித்துக்கொண்டே B.A.,B.Ed.முடித்து அனுபவத்திற்காகவே ஆசிரியர் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.
ஒரு தனியார் பள்ளியில் இருந்து கல்லூரியின் மூலமாகவே வாய்ப்பு வர வேலைக்கும் சேர்ந்து விட்டேன். ஐந்தாவது வகுப்பு முதல் பத்தாவது வகுப்பு வரை ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்தேன். நிறைய புது அனுபவங்கள் என்று அழகாக ஆரம்பித்தது. எனக்கும் மாணவர்களுக்கு அதிக வயது வித்தியாசம் இல்லை என்பதால் ரொம்பவே ஃபிரெண்டிலியா பழகுவேன்(அப்போது என் வயது இருபது). வேலையில் சேர்ந்த ஒரு சில நட்களிலே மாணவர்களுக்கு பிடித்த ‘மிஸ்’ ஆகிப்போனேன்.


முதல் Mid-term test க்கு முன்னால் நடந்த சம்பவம் அது.
மாணவர்களின் அனைத்து பாட நோட்டு புத்தகங்களும் ஆசிரியர்களின் கரெக்ஷ்ன்ஸுக்கு பின்னால் பிரின்ஸ்பாலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரும் ஒவ்வொரு பாடத்தில் இருந்து ஏதாவது ஒரு சில நோட்டு புத்தகங்களை எடுத்து செக் பண்ணுவார். அப்படி அவர் செக் பன்ணிய ஒரு நோட்புக்கில் ஒரு சிறு தவறு அவர் கண்ணில் பட்டு விட்டது. அவர் கன்ணில் பட்டது நான் கரெக்ஷ்ன் செய்த ஒன்று.

வகுப்பில் இருந்த எனக்கு அழைப்பு வர ஆபிஸ் ரூமுக்கு சென்றேன். டீச்சிங் கூடவே ஸ்கூல் அசிஸ்டண்டாகவும் இருந்ததினால் நிறைய ஆபிஸ் வொர்க்கும் இருக்கும். அதனால், சார் அதற்காகத்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து சென்ற எனக்கு ஏமாற்றம். உள்ளே நுழைந்தவுடன் நான் திருத்திய நோட்டை காட்டி "மாணவர்கள் தவறு செய்தால் திருத்ததான் நாம் இருக்கிறோம். நாமே தவறு செய்தால் எப்படி ?" என்று கேட்டார். ஒன்று புரியாமல் நான் முழிக்க குறிப்ப‌ட்ட பக்கத்தை காட்டினார்.

பார்த்தவுடன் என் தவறு புரிந்துவிட்டது. ஐந்தாம் வ‌குப்பு நோட்டு அது. மாணவன் ஒருவன் ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்து இருக்கிறான். இதை கவனிக்காமல் நான் 'டிக்' பண்ணி இருக்கிறேன். என் தவறை உணர்ந்து அவரிடம் மன்னிப்பும் கேட்க, அவரோ அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் "இதை பார்த்து படிக்கும் மாணவன் தவறாகத்தானே அந்த வார்த்தையை கற்றுக்கொள்வான்" என்று சொல்லி "நாம் ஒன்றும் அரசாங்க பள்ளியில் வேலை செய்யவில்லை. சும்மா வந்து உட்கார்ந்துவிட்டு சம்பளம் வாங்கிச் செல்ல. இது தனியார் பள்ளி. பணம் செலவழித்து படிக்க வைக்கும் பெற்றோர்க்கு நாந்தான் பதில் சொல்லி ஆகவேண்டும்" என்று கொஞ்சம் சத்தமாகவே பேசி விட்டார். அதிலும் அங்கிருந்த இன்னொரு டீச்சர் முன்பாக. நிறைய அட்வைஸுக்கு பின் ஒருவழியாக " ஓகே நீங்க போகலாம்" என்றார். ஆபிஸ் ரூம் விட்டு வெளியே வந்ததும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை கட்டுக்கடங்காமல் வர வகுப்புக்கு செல்ல முடியாமல் ஸ்டாஃப் ரூமுக்கு போய் அழுதுக்கொண்டிந்தேன்.

உடன் இருந்து டீச்சர்ஸ் " இதெல்லாம் பெரிசா எடுத்துக்காதிங்க‌ அவர் எப்பவும் அப்படிதான்" என்றார்கள். என் தவறை சுட்டிக்காட்டியது எனக்கு வருத்தமில்லை. எதையுமே சற்று சாப்ட்டாக எடுத்து சொன்னால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் அதைவிட்டு, கோபமா பேசினால் என்னால் தாங்கி கொள்ள முடிவதில்லை. அதை விட சத்தமாக பேசி வேலையை சரியாக செய்யாமல் சும்மா வந்து சமபளம் வாங்குகிற மாதிரி பேசிவிட்டாரே என்று மனது வலிக்க அன்று முழுவதும் சோகமான நாளாகவே போனது.

வீட்டிற்கு சென்றவுடன் முதலில் இதை அம்மாவிடம் சொன்னால் தான் மனது அமைதி அடையும் என்று வீட்டிற்கு வரும் வழியெல்லாம் அம்மாவையே நினைத்துக்கொண்டு வந்தேன்.

வீட்டின் உள்ளே நுழைந்ததும் செருப்பு ஒரு பக்கமாக‌ என் கைப்பை ஒரு பக்கமாக தூக்கி எறிந்து விட்டு உட்கார்ந்திருந்த அம்மாவின் மடியில் விழுந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தேன். பயந்துப்போன என் அம்மா நடுக்கத்துடன் என்னாச்சி என்று கேட்டதுதான் தாமதம். இன்னும் அழுகை அதிகமாக நடந்தவையை சொல்லி முடித்தேன். "அவர் என்னை திட்டி விட்டார். என்னை இன்னொரு மிஸ் முன்னால இன்சல்ட் பண்னிட்டார். நான் நாளையில் இருந்து வேலைக்கு போக மாட்டேன்" என்று சொன்னேன்.

இதற்குதானா இந்த அழுகை என்பது போல் பயந்திருந்த முகம் மாறிப்போய் அமைதியாக சிரித்துக்கொண்டே என் அம்மா சொன்னார்கள்.

"நீ தப்பு செஞ்சதாலதானே அவரு உன்னை திட்டினார். அடுத்த தடவை கவனமா செய்யு. அதுவும் அவரு உனக்கு சம்பளம் கொடுப்பவர். அதிகாரம் அவர் கையில் இருக்கும்போது அப்ப‌டிதான் பேசுவார். இதுக்கு போயி வேலைக்கு எல்லாம் போக மாட்டேன்னு சொல்றீயே"

"இல்ல, என்னை யாரும் இதுவரை இப்படி பேசியது இல்லையே" என்று விடாமல் நான் புலம்பினேன்.

"சரி, இந்த வேலையை விட்டுட்டு வேற இடத்தில வேலைக்கு போய் அங்கேயும் இப்படி ஏதாவது நடந்தா என்ன செய்வ? " என்றார்கள்.

ஆறுதலுக்காக அம்மாவை தேடிய மனது அவர்களின் இந்த வார்த்தைகளால் ஏமாற்றம் அடைந்தது. எனக்காக பேசாமல் சாருக்கு சப்போர்ட் பண்ணி பேசுகின்றார்களே என்று நினைத்த போது அம்மா எனக்கு எதிரி போல் தோன்றினார்கள். வேகமாக எழுந்த நான் மீண்டும் என் கண்ணீரை கரைக்க இம்முறை தேடியது தலையணையை. இரவு தூங்கும் போது சார் பேசியது, அம்மா பேசியது என்று எல்லாம் சேர்ந்து மனதை குழப்ப, குழப்பத்தோட தூங்கிப்போனேன்.

காலையில் எழுந்து எப்பொழுதும் போல் பள்ளிக்கு கிளம்ப அம்மா, "நேத்து வேலைக்கு போக மாட்டேன்ன?" என்று கேட்டார்கள். "இல்ல டெஸ்ட் வருது, போர்ஷன்ஸ் முடிக்கனும்" என்று சொல்லிய நான் மிக தெளிவான மனதோடு வேலைக்கு சென்று என் பணிகளை தொடர்ந்தேன். என் திருமணம் முன்புவரை இரண்டுவருடம் அதே பள்ளியில் வேலை செய்தேன்.

என்னால் மறக்க முடியாத நாள் அது. அன்று நடந்ததென்னவோ சாதாரனமான ஒன்றுதான். ஆனால் அன்று கற்றுக்கொண்டது நிறைய. நான் எதிர் பார்த்ததை போல் என் அம்மா நான் அழுவதைப் பார்த்து, எனக்கு சப்போர்டிவ்வாக உனக்கு பிடிக்கலைன்னா வேலைக்கு போகாத என்றும் மட்டும் சொல்லி இருந்தால் நான் நல்ல சில பண்புகளை இழந்து இருப்பேன். அடுத்து வேறு எங்கு வேலைக்கு சென்று இருந்தாலும் என் தப்பை சுட்டி காட்டி பேசினால், வேலையை விட்டு விட தோன்றி இருக்கும். பின்பு இதுவே என் தொடர்கதையாகி இருக்கும். அம்மாவின் அன்றைய பேச்சும் நடவடிக்கையும் அப்போது எனக்கு கோபத்தை வரவழைத்தாலும் அந்த இரவுக்கு பின் கிடைத்த தெளிவால் அம்மா சொன்னதுதான் சரி என்று தோன்றியது. எதிரிப்போல் தோன்றிய அம்மா மறு நாள் மிக நெருங்கிய தோழியாய் தோன்றினார்கள்.

வெறும் பாசம் அக்கறை மட்டும் காட்டும் அம்மாவாக இருந்தால் மட்டும் போதாது நமக்கு நல்லதொரு வழிக்காட்டியாகவும் இருந்திட வேண்டும் என்று, அன்று அந்த சம்பவத்தின் மூலமாக உணர்ந்துக்கொண்டேன்.

இன்று பல சந்தர்பங்களில், அன்று அம்மாவின் சரியான அனுகுமுறை எனக்கு பல நல்ல தெளிவான சிந்தனைகளை பெற்று தருகின்றது. அன்பு செலுத்துவதில் அன்னையாய்... நல்ல விஷயங்களை கற்றுக்கொடுப்பதில் ஆசானாய்... செய்யும் தவறுகளை சுட்டி காட்டி நல்வழிப் படுத்துவதில் என் வெல்விஷராய்... சகலத்தையும் பகிர்ந்துக்கொள்ள தோழியாய்... மொத்தத்தில் எல்லாமுமாக…

இப்படி சிற‌ந்த சிற்பியாக இருந்து என்னை செதுக்கிய என் அம்மாவிற்கு இப்பதிவு சமர்ப்பண‌ம்.


ஐ லவ் யு மா

 


 என் அம்மாவிற்கும், உலகெங்கும் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும், தாய்மை உணர்வுடன் இருக்கும் அனைவருக்கும் என் அன்பார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.




(உலகின் பல நாடுகளில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டாலும். பிரான்ஸில் மே முப்பதாம் தேதிதான் அன்னையர் தினம்)

Monday, May 3, 2010

பதின்ம வயது நினைவுகள்.....

          நினைத்தாலே இனிக்கும் இனிமையான நினைவுகளை கொண்டதுதான் இந்த பதின்ம காலங்கள்! என்றுமே மூச்சினில் கலந்து சுவாசத்தில் உயிர்த்திருக்கும் அழகான நினைவுகளை திரும்பி பார்க்க ஒரு வாய்ப்பாக இருந்தது நண்பர் ரகுவின் இந்த தொடர் பதிவு அழைப்பு.
நன்றி ரகு!

ண்களில் மின்னல் பார்வை
எப்போதும் சிரிப்பு
மனது முழுவதும் சந்தோஷம்
பொங்கி வழிந்த உற்சாகம்
நிறைய படிப்பு
சின்ன சின்னதாய் கலாட்டக்கள்

யாரையும் புண்படுத்தாக வகையில் சில குறும்புகள்
கலர் கலராய் சில கனவுகள்..........

இதுதான் என் பதின்ம வயதில் நிறைந்திருந்தது!




நிறைய மாற்றங்களை நான் கொண்டது இந்த வயதில்தான். வெறும் Frocks, skirts… போட்டு சுற்றிக்கொண்டிருந்த நான் முதல் முறையாக 16 வயதில் புடவை கட்டி கொண்டு சர்ச்சுக்கு சென்ற நாள் மறக்க முடியாதது. அடிக்கடி வீட்டில் புடவை கட்டி பார்த்ததுண்டு என்றாலும் வெளியில் சென்ற‌து அதுவே முதல்முறை. அதுவரை என்னை பார்த்தவர்களின் பார்வை இம்முறை வேறு மாதிரியாக இருந்தது. என்னையே நான் புதிதாக பார்த்துக்கொண்டதும் அப்போதுதான்!

அம்மா இரண்டு ஜடை பிண்ணி ரிப்பன் வைத்து மடித்து கட்டியது எல்லாம் மாறிப்போய் ஹேர்கட் செய்து கொண்டு பள்ளி நாட்களை தவிர மற்ற நேரங்களில் லூஸ் ஹேர் என்று மாறிப்போனது. அதற்கு முன்பு வரை அம்மா போட்டு விட்ட பவுடர், கண்மை என்று எதுவும் பிடிக்காமல் Fair & Lovely ட்ரை பண்ணியதில் ஆரம்பித்து ஐலைனர், மஸ்காரா என்று என் அலங்காரம் மாறிபோனது. இப்படி சின்ன சின்னதாய் எத்தனையோ மாற்ற‌ங்கள்.

டிவியிலோ வாரப் பத்திரிக்கைகளிலோ எந்த அழகு குறிப்பு வந்தாலும் தவறாமல் பார்த்தும் படித்தும் விடுவேன். வெறும் பார்ப்பதோடு நிறுத்தாமல் அதையே முயற்சி செய்தும் பார்ப்பேன். "இப்படி எதையாவது முகத்தில பூசிக்கொண்டிரு முப்பது வயதுக்குள்ளேயே என்னாக போகுதுன்னு பாரு".... என்ற தம்பியின் கிண்டலை கண்டு கொண்டதே இல்லை. Glowing skin என்பது இயற்கையாகவே அந்த வயதில் இருக்கும் என்பது தெரிந்தும் மேலும் மெருகேற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆசையால் விடுமுறை நாட்களானால் எப்போதும் என் முகத்தில் தக்காளி, கேரட், தயிர், தேன்.... இப்படி ஏதாவது ஒன்றினை கொண்டு ஒரு மாஸ்க் இருக்கும்!


ப்பொழுது எனக்கு இருந்த கெட்ட பழக்கமாக அம்மா சொல்வது இதைதான்.... சாப்பிடும்போது புத்தகம் படிப்பது! ஏதாவது ஒரு புத்தகம்…. அது பாடப் புத்தகமாகவோ கதை புத்தகமாகவோ ஏதோ ஒன்று சாப்பிடும் பொழுது என்னிடம் இருந்தாக‌ வேண்டும். அப்படி படித்துகொண்டே சாப்பிட்டால்தான் சாப்பிடுவதே உள்ளுக்குள் இறங்கும். நான் கவனிக்கின்றேனா என்று பார்ப்பதற்காகவே வேண்டுமென்றே என் தம்பி சில நேரங்களில் பேப்பர் துண்டுகளை என் தட்டில் போட்டு விடுவான். கண்டும் காணாததை போல புத்தகத்தில் இருந்து பார்வையை திருப்பாமலே தட்டில் இருக்கின்ற தாள்களை எடுத்து போட்டு விட்டு சாப்பிடுவேன். நானும் ஓரளவு உஷார்தான் !

இப்பொழுதும் தனியாக சாப்பிடும் சமயங்களில் இந்த (படிக்கும்) ப‌ழக்கம் தொடர்கிறது.


தூக்கம், டிவி, போன்.... இந்த மூன்றும்தான் எனக்கு அப்போது மிகவும் பிடித்தவைகளாக‌ இருந்தது. எதற்குமே கோபப்படாத நான் தூங்கும் போதுமட்டும் யாராவது எழுப்பினால் கையில் கிடைப்பதை தூக்கி எறிந்து எதிரில் உள்ளவர்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன். இதை வைத்தே எனக்கும் என் தம்பிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும்.

படிக்கும் நேரங்களில் படிப்பு… மற்ற நேரங்களில் எப்பொழுதும் டிவிதான். இதுதான் பிடிக்கும் என்றில்லாமல் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்ப்பேன். அம்மாவிடம் சில நேரம் திட்டு வாங்கினாலும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் நான் பாட்டுக்கு ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றி பர்த்துக்கொண்டு இருப்பேன்.

அடுத்து மிகவும் பிடித்த ஒன்று போன். ஏன் என்றே தெரியாது… போனில் பேசுவது விருப்பமான ஒன்றாகி போனது. வெறும் பத்து பதினைந்து நிமிடம் என்றில்லாமல் தோழிகளிடம் மணி கணக்கில் அரட்டை அடிப்பது பிடிக்கும். வீட்டில் போன் ரிங் ஆனாலே நான் தான் ஓடி போய் எடுப்பேன்… அந்த அளவுக்கு பிடிக்கும்.

சின்ன வயதில் இருந்தே sense of dressing அதிகம் எனக்கு. அதிலும் இந்த பதின்ம காலத்தில் விதவிதமாய் நிறைய டிரஸ் வாங்கிவது பிடித்திருந்தது. Interior decoration னில் ஆர்வம் என்பதால் வீட்டை ஓரளவு சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வேன். வீட்டில் வேறு எந்த வேலையும் முக்கியமாக சமையல் எதுவும் செய்யாமல் போனாலும் வீட்டையாவது அழகா வைத்துக்கொள்கிறேனே என்று என் அம்மாவிற்கு சந்தோஷம்.

முறைப்படி நடனம் கற்றுகொள்ளவில்லை என்றாலும் கொஞ்சம் நன்றாகவே ஆட வரும். இதனால் பள்ளி கல்லூரி காலங்களில் நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வேன். எட்டாவதும் படிக்கும் போது முதல் முறையாக நடன போட்டியில் பரிசும் பெற்றேன். பள்ளியில் எந்த கலை நிகழ்ச்சி என்றாலும் எனது டீச்சர்ஸ்கிட்டே இருந்து எனக்கு எப்போதும் அழைப்பு வரும். அப்படி கலந்து கொண்டவைகளின் நினைவாக எண்ணற்ற புகைப்படங்கள் இன்றும் என்னிடம்! ப‌ள்ளியில் ம‌ட்டுமில்லாம‌ல் வீட்டிலும் அடிக்க‌டி என் ந‌ட‌ன‌ அர‌ங்கேற்ற‌ம் ந‌ட‌ந்துகொண்டே இருக்கும்.


னதில் எப்போதும் உற்சாகம் நிரம்பிய‌ வயது என்பதால் நிறைய நல்ல விஷ‌யங்களை கற்றுக்கொள்ள ஆசை வந்தது. ஒன்பதாம் வகுப்பு படித்தபோது டூவீலர் ஓட்ட ஆசை வ‌ர‌, அதை கற்றுக்கொண்டது பெரிய கதை. அதைப்பற்றி எழுத வேண்டுமென்றால் தனியாக ஒரு சில பக்கங்கள் தேவை.

அறிவியல் பாடத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் +1 ல் ஃப்ர்ஸ்ட் குருப் (பயாலெஜி) எடுத்து படித்தேன். ஆனால் கல்லூரியில் படிக்குபோது கம்ப்யூட்டர் சயின்ஸ் ப‌டிக்க ஆசை வர டிப்ளமா கோர்ஸில் சேர்ந்து அதையும் கற்றுகொண்டேன். படிப்பது மிகவும் பிடித்த ஒன்றுதான் என்றாலும் அதற்காக செய்த தியாகங்கள் ஏராளம். ஆம், எத்தனையோ இரவுகள் மூன்று நான்கு மணிவரை கண்முழித்து படித்திருக்கிறேன். இதற்காக எத்தனையோ நாட்கள் டிவி பார்ப்பதையே தவிர்த்திருக்கிறேன்.

பள்ளி நாட்களில் படிப்பை போலவே Extracurricular activities ல் ஆர்வம் இருந்தது. இதனால் நிறைய போட்டிகளில் கலந்துக்கொள்வேன். சில பரிசுகளும் பெற்றுள்ளேன். இதில் எனக்கு பெரிய சவாலாக இருந்தது ஒன்பதாம் வகுப்பில் கலந்துகொண்ட பேச்சு போட்டிதான். போட்டியின் முடிவை தெரிவித்த நடுவர்கள் நானும் இன்னொரு மாணவியும் சமமாக மார்க் எடுத்துள்ளதாக சொல்லி மீண்டும் எங்கள் இருவரையும் பேச வைத்தார்கள். முதல் முறை பேசியபோது இருந்த துணிச்சல் போய் கொஞ்சம் பயம் வந்து விட எப்படியோ அதையும் மறைத்துக்கொண்டு பேசிமுடித்தேன். ரிசல்டும் வந்தது...ஆனால் நான் இரண்டாவது என்று! சற்று வருத்தமாக இருந்தாலும் முதல் பரிசு பெற்றவள் என் நெருங்கிய தோழி என்பதால் இருவரும் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டோம்.

NSS ல் இருந்ததினால் அடிக்கடி பாண்டிச்சேரியின் முக்கிய இடங்களுக்கு எங்களை அழைத்து செல்வார்கள். அப்படி ஒரு முறை, பள்ளி இறுதி ஆண்டின் போது Pondy Central Prison க்கும் ஒரு Slum Area வுக்கும் சென்று வந்தது மறக்க முடியாதது. அந்த இரண்டு இடங்களையும் பார்த்த போது அதுவரை சந்தோஷமாகவே நான் பார்த்த உலகம், முதல்முறையாக‌ இப்படியும் இருக்கிறது என்பதனை தெரிந்துக்கொண்டேன்.


திமூன்று வயதில் என் பின்னால் சுற்றி கொண்டிருந்தான் ஒருவன்.... ஸ்கூல் போகும்போது பஸ் பின்னால் சைக்களில் தொடர்ந்து வருவான். அதே போல் மாலை ஸ்கூலில் இருந்து பஸ் ஸ்டாப் வரை வந்து, திரும்ப வீடு வரை தொடந்து வருவான். பலமுறை என்னிடம் பேச முயன்று தோல்வி கண்டு இரண்டு வருடம் இப்படியே சுற்றுகொண்டு இருந்தவன், பின் என் வீட்டில் உள்ளவர்களின் கண்டிப்புக்கும் பிறகு நிறுத்தி விட்டான்.

இவனை தொடர்ந்து நிறைய கடிதங்கள், போன் கால்ஸ் என்று பதின்ம வயது முழுதும் காதல் என்னை துரத்தியது. நான்கு வரியில் தமிழில் கவிதையாக எழுதியவன் ஒருவன், எட்டு பக்கங்களில் ஆங்கிலத்தில் கதையாக எழுதியவன் இன்னொருவன் என்று பலவகையான காதல் க‌டிதங்கள் வ‌ந்தது. ச‌ற்று பயந்து பயந்து காதல் சொன்னவர்கள் சிலர் என்றால் மிக தைரியமாக கண்களை பார்த்து காதல் சொன்ன தைரியசாலிகளும் உண்டு.


வாழ்வின் வசந்த காலம் என்றால் அது இந்த கல்லூரி காலங்கள்தான். எதற்கென்றே தெரியாமல் எப்போதும் எதையாவது பேசி சிரித்துக்கொண்டே இருப்போம். பெண்கள் கல்லூரி என்பதால் நிறைய வசதி... அதிலும் காலேஜ் பஸ்ஸில் நாங்கள் அடித்த லூட்டிகளை இன்று நினைத்தாலும் இனிக்கிறது. வாட்ச்மேன் ஏமாந்த சமயம் பார்த்து நைஸாக க‌ல்லூரியை விட்டு வெளியேறி வெளியில் சுற்றி இருக்கிறோம்.

நான் ஓரளவு வரைவேன் என்று என் நெருங்கிய தோழிகள் மட்டுமே அறிந்திருந்த நிலையில், ஒரு தோழியின் மூலம் நான் வரைந்த ஓவியம் கல்லூரி ஆண்டு மலரில் வந்துவிட கொஞ்சம் கல்லூரியில் பிரபலம் ஆனேன். கவிதை என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்த வயதும் இதுதான்!

என் பதின்ம வயதின் நினைவு சின்னமாக இருப்பது பள்ளி... கல்லூரி காலங்களின் இறுதியில் கவிதையாய் கிறுக்கிகொண்ட ஆட்டோகிராப்ஸ்தான்!



தோழமை இல்லாத வாழ்வு நிச்சயம் இனிக்க முடியாது. எனக்கும் நிறைய நல்ல நட்புகள் இருந்தன‌. எதிர் வீட்டில் இருந்த சரியாக பேசவே தெரியாத இரண்டு வயது பைய‌னில் இருந்து, என்னையே கல்யாணம் செய்துக்கொள்ள‌ போவதாக சொன்ன என் பக்கத்து வீட்டு மூன்று வயது பையன் வரை எல்லோரும் எனக்கு பிரெண்ட்ஸ். தங்கைக்கு அவள் தோழிகளிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பில் கூட என் நட்பு பரவி இருந்தது. அவளிடம் பேசி முடித்தப்பின் அவள் தோழிகள் எப்பொழுதும் என்னிடமும் பேசுவார்கள். அதேப்போல் என் தம்பியை தேடி வரும் அவன் நண்பர்கள், தம்பி வீட்டில் இல்லாமல் போனால் கூட என்னிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு செல்வார்கள்.

இப்படி நல்ல நட்புகள் நிறைந்த….மனதில் எந்த கலக்கமும் இன்றி… எந்த ஒரு தேடலும் இன்றி… ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக கழிந்த நாட்கள் அது.