Subscribe:

Pages

Sunday, August 29, 2010

ஒரு பெண்ணின் பெண் ஓவியம்!

               ம் தமிழ் வார பத்திரிக்கைகளில் இடம் பெறும் கவிதைகளுடன் சில நேரம் குட்டி குட்டியாக‌ பொருத்தமான படங்கள் போடுவார்களே கவனித்து இருக்கிறீர்களா?  பல சமயம் மாடர்ன் ஆர்ட் போலவே இருக்கும். படிக்கும்போதே கூட இருக்கும் ஓவியங்களையும் நான் கவனித்து பார்ப்பதுண்டு. எதையும் பார்த்தவுடன் வரைந்து பார்க்கும் பழக்கம் உள்ளதால் புத்தகங்களில் வரும் படங்களை பார்த்ததும் வரைந்துவிடுவேன்.  அதிலும் கருப்பு வெள்ளையில் வரைவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் இது போல நிறைய‌ படங்களை நான் கல்லூரியில் படிக்கும் போது வரைந்திருக்கிறேன். அப்போது நான் வரைந்த படம்தான் இங்கு நீங்கள் கீழே காண்பது. வெறும் கறுப்பு பேனாவினை மட்டும் கொண்டு வரைந்தது.


இதை கலரில் வரைந்து பார்த்தால் என்ன என தோன்றியது. முதலில் இதே படத்தை கணினியில் ஏற்றி MS Photo Premium 10 உபயோகித்து கலர் கொடுத்தேன்.எப்போதும் என் விரல்களுக்கு வளைந்துக்கொடுக்கும் தூரிகைகளுக்கு பதிலாக இந்த முறை 'மவுஸ்' வளைந்துக்கொடுத்தது. அதனால் இந்த பெண்ணுக்கு விதவிதமாக சேலைகலரை மாற்றி ரசித்தேன்.  இதோ கணினியின் வண்ணங்கள்தான் நீங்கள் கீழே காண்பது....... ! ஆர்வம் உள்ளவர்கள் மேலே உள்ள படத்தை காப்பி பண்ணி இதே முறையில் கலர் கொடுத்து பாருங்கள்.



இதையே ஆயில் பெயிண்டில் வரைந்து பார்க்க தோன்றியது. அதனால் 50X20 அளவு கேன்வாஸ் போர்டில் முதலில் பென்சிலில் வரைந்துக்கொண்டேன்.  தற்பொழுது என் வீட்டு ஹால் இன்டீரியர் டெக்கரேஷன்  ப்ளு & பிரவுன் நிறங்களில்தான் செய்துள்ளேன். இந்த இரண்டு கலரும் நல்ல காம்பினேஷனாக இருக்கிறது. அதனால் அதே நிறங்களில் முயற்சி செய்து பார்த்தேன். எப்படி இருக்கிறது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

Friday, August 20, 2010

வெட்கப்புன்னகை !


ன்றுதான்
முதல் முறை
நீயும் நானும் பேசிக்கொண்டது.

உன் குர‌லை
கேட்கப்போகிறேன்
ஆவல் ஒரு புறம் !
உளறாமல் நான் பேசவேண்டுமே
பதட்டம் மறுபுறம் !

தொலைப்பேசி என் கையிலும்
படபடப்பு நெஞ்சிலும்
மனம் நிறைய மகிழ்ச்சி
அன்று உன் பிறந்தநாள் ஆனதால் !

நீயே எடுக்க வேண்டும்
எண்ணியபடி
எண்களை அழுத்துகிறேன்
எதிர்ப்பார்ப்பின் உச்சமாய்
நினைத்தபடி
நீயேதான் !

"ஹலோ" என்றாய்
"ஹாப்பி பர்த்டே" என்றேன் நான்
சட்டென "வெறும் வாழ்த்துக்கள்
மட்டும்தானா" என்றாய் நீ !

பேச எழுந்த வார்த்தைகளை
என் புன்னகையினூடே
உதடு கடித்து மறைத்துக்கொண்டேன்!
சிந்திய
வெட்கப்புன்னகையினை
சிதறாமல் பிடிக்க
என் முன்னே
இல்லை நீ !

அங்கே சிறிது மெளனம்!
நிலவிய மெளனத்தில்
அரங்கேறி இருக்க வேண்டும்
நம் காதல்
உனக்கு தெரியாமலும்
எனக்கு தெரியாமலும்!

பின் ஏதேதோ பேச நினைத்தும்
முதல் உரையாடலில்
முடியாமல் போனது.

தொலைபேசியை
வைத்துவிட்டு தேடிச் சென்றேன்
பகிர்ந்துக்கொள்ள
என் அம்மாவை நோக்கி !

வெட்கங்களின் இடையிடையே
சொற்களை கோர்த்து
நீ பேசியதை சொன்னேன்.
"அதெல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம்தான்னு
சொல்ல வேண்டியதுதானே" என்றாள் அம்மா.

உன்னிடம் முதலில்
தோன்றி மறைந்த
வெட்கப்புன்னகை
மீண்டும் சிந்தியது
இம்முறை
அம்மாவின் முன்னால்.

அன்று  ஆரம்பித்தது
உன்னால்
இன்றுவரை
தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது
உன்னிடமே !

ஆனால் அன்று சிதறிய
என் வெட்கப் புன்னகையை
இன்று
சிதறாமல் சேகரிக்கின்றாய் !


என்னில் வாழும் என் இன்னொரு உயிரான என்னவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Happy Birthday Xavier 


Wednesday, August 18, 2010

மனம் தேடும் சந்தோஷம்!

                நெற்றியில் பதிந்த‌ என்னவரின் அழுத்தமான முத்தத்தினால் அழகாக விடிந்தது  எனது பொழுது. பிறந்த நாள் என்றாலே எல்லோருக்கும் ஏதோ ஒரு வகையில் மனது சந்தோஷம் கொள்கிறது.
எனக்கும் அப்படிதான்! எழுந்ததில் இருந்து சொந்தங்கள், நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளினாலும், மெயில்கள் மற்றும் பதிவின் மூலமாகவும் வாழ்த்துக்களை பெற்ற மகிழ்ச்சியில் காலையில் கோவிலுக்கு சென்றேன். மாதாவின் பெருவிழா என்பதால் ஒன்பது பாதிரியார்களின் ஆசிர்வாதத்தில் திருப்பலி கண்டு மகிழ்ந்தேன்.


கஷ்டப்பட்டு நான் சமைத்த பிரியாணியும் சிக்கன் 65யும் மதியம் சாப்பிட்டு முடித்து, இரண்டு மணி நேரம் அப்பா அம்மாவுடன் சாட்டிங்கில் பேசிக்கொண்டே அவர்கள் முன்னால் கேக்  கட் பண்ணி, ( நானே செய்த கேக் இது என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்)அவர்களுக்கும் சேர்த்து நானே சாப்பிட்டுவிட்டு,  மாலை என்னவருடன் கடற்கரைக்கு பயனமானேன்.


கடற்கரை சுற்றிலும் நிரம்பி இருந்த ஜனநெருக்கடியில் நானும் ஒருத்தியாகி, தொலைந்து போகாமல் இருக்க என்னவரின் கையை இறுக்க பிடித்துக் கொண்டேன். இதமாக காற்றில் அசைந்தாடும் படகில், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக்கொண்டு இருக்கும் சூரியனின் ஒளிக்கதிர்கள் தண்னீரில் பட்டு ஜொலிக்கும் அழகை என்னவரின் தோலில் சாய்ந்து கொண்டு முப்பது நிமிட படகு பய‌ணத்தை ரசித்தேன்.


வழக்கம்போல் கடற்கரை உணவகங்களில் நீண்ட வரிசை! காத்திருக்க பிடிக்காமல் என்னவருக்கும் எனக்கும் பிடித்த சைனீஸ் ரெஸ்டாரண்ட்டில் இரவு உணவை முடித்து, கடலில் நடைபெற்ற வான வேடிக்கையினை கண்டு மகிழ்ந்தேன்.




நள்ளிரவு தாண்டியும் சோர்வடையாமல் மொய்க்கும் மக்கள் கூட்டத்தில் நான் மட்டும் கொஞ்சம் சோர்வடைந்துப் போனேன். அங்கிருந்த நீண்ட டிராஃபிக்கை சிரமப்பட்டு தாண்டி வீடு வந்துசேர 2 மணி ஆகிவிட்டது.



சிறுமியாக இருந்தபோது பிறந்த நாளில் புது டிரஸ் கிடைத்தாலே சந்தோஷம், பள்ளி வயதில் தோழிகளின் வாழ்த்து அட்டைகள் வந்தாலே சந்தோஷம், கல்லூரி பருவத்தில் தொலைப்பேசியில் வரும் வாழ்த்துக்களினால் சந்தோஷம், திருமணம் முடிந்ததால் என்னவரின் காதல் பரிசுகளில் சந்தோஷம் என்று இன்று வரை என் ஒவ்வொரு பிறந்த நாளும் ஏதாவது ஒரு வகையில் சந்தோஷத்தால் நனைந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடம் பதிவுலக நண்பர்களும் இணைந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி!

ஆனால் இவற்றால் மட்டும் மனது முழு சந்தோஷத்தை அடைந்து விடுகிறதா…  இந்த கேள்வியால் ஏனோ உண்மையான சந்தோஷத்தை மனது தேட முயற்சிக்கிறது.  ஏதாவது கஷ்டப்படும் ஏழை சிறுவர்களுக்கு உதவிட வேண்டும் என தோன்றியது. அதன் தொடக்கமாக நேற்று பாண்டிச்சேரியின் முக்கிய வீதி ஒன்றில் நடைப்பாதையில் வசிக்கும் குடும்பத்தில் உள்ள 4 வயது சிறுவனுக்கு ஆடைகள், செருப்பு, நோட்டு புத்தகங்கள், பென்சில்கள், இனிப்பு கூடவே கொஞ்சம் பணமும் கொடுத்து மகிழ்ந்தேன். நேரடியாக என்னால் அதை செய்ய முடியாமல் போனதில் சின்ன வருத்தம்தான். ஆனால் பொருட்களை பெறும் போது கிடைத்த மகிழ்ச்சியினை புன்னகையால் அச்சிறுவன் வெளிப்படுத்தியதை என் தம்பி புகைப்படமாக்கி அனுப்பி இருந்தான். பார்த்து சந்தோஷம் அடைந்தேன்.

பிறந்த நாளில் மட்டும் இல்லாமல் தினசரி நிகழ்வுகளின் மூலமாக நிறைய சந்தோஷங்களை அள்ளி கொடுக்கும் இறைவனுக்கு 'நன்றி' என்று ஒற்றை சொல்லில் முடித்துவிட முடியுமா?

இனி வரும் பிறந்த நாட்களில் ஒரு சிறுவனுக்கு உதவிடும் நிலை மாறி இன்னும் கஷ்டப்படும் சில‌ சிறுவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சிறு சிறு உதவிகளை தொடர்ந்து செய்ய நல்ல மனதை அளித்திடுமாறு இறைவனை வேண்டுகிறேன்.

Saturday, August 14, 2010

இன்னொரு தாயாக.....

         
                  «ம்ம்ம்மா»……… வலியில் இப்படிதான் நீ கத்தியிருக்க வேண்டும். இதோ நர்சுகள் உன்னை பிரசவ அறைக்குள் அழைத்து சென்று படுக்க வைக்கிறார்கள். சில நிமிடங்களில் மருத்துவர் உதவியுடன் உனக்கு அதிகம் கஷ்டம் கொடுக்காமல் நான் பிறந்துவிட்டேன்.

தேசம் சுதந்திர தினத்தினாலும், கிறிஸ்துவர்களோ அன்னை மரியாளின் விண்ணேற்பு திருவிழாவினாலும் சந்தோஷத்தில் இருக்க நீயோ என்னை பெற்றெடுத்த ஆனந்தத்தில் மூழ்கி கிடக்கிறாய். ஆகஸ்ட் 15ல் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் அன்று மருத்துவமனை பரிசுகள் வழங்க‌, அப்பாவோ நான் பிறந்த சந்தோஷத்தில் மருத்துமனையில் உள்ளவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கி கொண்டாடி இருக்கிறார்.

யார் யாரோ என்னை வந்து பார்க்கிறார்கள். தூக்கி கொஞ்சுகிறார்கள். முத்தமிட்டு மகிழ்கிறார்கள். இது பார்ப்பதை பாரேன், எவ்வளவு அழகாய் சிரிக்கிறது பாரேன் என்று மற்றவர்கள் சொல்வதை கேட்டு பூரிப்படைந்திருக்கிறாய். அதனால்தான் இப்பொழுதும் முதல் குழந்தை தரும் நினைவுகள் போல் இனிமையானது வேறெதுவும் இல்லை என்கிறாய்.

என் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்தவள் நீ. ரசித்துக் கொண்டிருப்பவளும் நீதான். உன் முதல் குழந்தையாக‌ செல்ல மகளாய் வளம் வந்தவள் நான். இன்று திருமணம் முடிந்த பிறகும் உன் செல்லமாய் நான். எனக்கு தெரியும் இனி எத்தனை குழந்தைகளை நான் பெற்றெடுத்தாலும் உனக்கு நான் குழந்தைதான்.

நான் உடுத்திய முதல் ஆடையினை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறாய். என் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் மறக்காமல் அதை எடுத்து பார்த்து மகிழ்ச்சி கொள்கிறாய். பிறந்தவுடன் எனக்கு கிடைத்த முதல் பரிசாக உன் தந்தை அணிவித்த மோதிரத்தையும் பத்திரமாக வைத்திருக்கிறாய். என்னவனுடன் உன்னை சந்திக்க வரும்போதும் மறக்காமல் என் சிறுவயது பொருட்களை நினைவுப்படுத்தி என் முதல் ஆடையினையும் மோதிரத்தையும் காண்பிக்கின்றாய். ஆசையுடன் தொட்டு பார்க்கிறேன். மோதிரத்தை போட்டு பார்க்க ஆசையுடன் முயன்று சுண்டு விரலின் நுனியிலே நின்று விட எல்லோரும் என்னை பார்த்து சிரிக்கிறார்கள். நீ மட்டும் வளர்ந்த என்னை பார்த்து பிரம்மிப்பு அடைகிறாய்.

'மோதிரத்தை நான் எடுத்துக்கொள்ளவா' என்றால், 'அது உன்னுடையது, உனக்குதான் சொந்தமாகும். உனக்கு குழந்தை பிறக்கட்டும் அதன் பிஞ்சு விரலிலே இது உன் அம்மாவின் மோதிரம் என்று சொல்லி போட்டு விடுவேன்' என்கிறாய்.

அப்பாவிடம் இருந்து, உடன் பிறந்த‌வர்களிடம் இருந்து, சொந்தங்களிடம் இருந்து, நண்பர்களிடம் இருந்து எனக்கு கிடைக்கிற‌ பிறந்த நாள் பரிசுகள்தான் எத்தனை எத்தனை! வாழ்த்துக்களை சுமந்து வரும் வாழ்த்து அட்டைகளும் தொலைப்பேசி அழைப்புகளும் நிறைய ! ஆனால் இவர்களை போல பொருட்களாக நீ எதுவும் வழங்கியது இல்லை. ஃபார்மலாக ஹாப்பி பர்த்டே சொன்ன‌தில்லை. ஆனால் நீ தரும் பரிசோ ஈடு இணையில்லாதது. உயிரிலே கலந்து உணர்வுகளிலே வாழ்ந்துக்கொண்டிருப்பது.


ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பேன். ச‌ரியாக‌ இர‌வு 12 ம‌ணிக்கு பிறந்த நாள் பரிசாக என் கேசம் வருடி நெற்றியில் அழுத்த‌மான‌ முத்த‌ம் ஒன்று த‌ருவாயே... இது போதாதா என‌க்கு! அன்றை நாள் முழுவ‌தும் ச‌ந்தோஷ‌முட‌ன் செல்ல‌! கண்மூடி தூக்கத்தில் இருந்தாலும் உன் முத்தத்தை உணர்ந்திடுவேனே! ஆயிரம் தேவதைகளின் ஆசிரை போல, உலகம் மக்களின் வாழ்த்துக்களை பெற்றதைப்போல உன் முத்தம் என் பிறந்த நாளை நிரப்பும். இன்றோ நினைத்தவுடன் கிளம்பி வரமுடியா தூரத்தில் நான். தொலைபேசியிலும் சாட்டிங்கிலுமாய் வாழ்த்துக்களை பெற வேண்டிய நிலையை நினைத்து ஏங்குகிறேன். என் ஏக்கங்களை போக்குகின்றவனாய் இன்று உன் இடத்தில் இருந்துகொண்டு என் பிறந்த நாளை துவங்கி வைக்கிறது என்னவனின் முத்தம்.

Wednesday, August 4, 2010

தொடரும் தொடர்பதிவு........

     நீண்ட நாளுக்கு பிறகு ஒரு தொடர்பதிவு, அதுவும் பேட்டி வடிவில்! கேள்விகளை படித்தவுடன் மனதில் தோன்றியவைகளையே பதில்களாக தந்து இருக்கிறேன். இந்த தொடர்பதிவுக்கு அழைத்து தோழி சுசிக்கு எனது நன்றிகள். பதிவை பப்ளிஷ் பண்ணுகிற சமயத்தில் மீண்டும் அழைப்பு இந்த தொடர் பதிவுக்கு. இம்முறை நண்பர் சீமான்கனியிடம்   இருந்து. என்னை அன்புடன் அழைத்த இருவருக்கும் எனது நன்றிகள்.



1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ப்ரியா

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. ப்ரியா என் செல்ல பெயர்….. ப்ரியமாக அழைப்பதற்காக வைக்கப்பட்டது ! எனக்கு மிகவும் பிடித்த பெயரும் இதுதான்.
அப்பா அம்மா வைத்த நிஜப்பெயர் பிரெஞ்சில்.... ஏதோ நல்ல‌ பெயர்தான். ஆனால் பள்ளி பருவத்தின் போது ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அழைக்கும் போது ஈஸியா pronounce பண்ணுற மாதிரி ஏன் எனக்கு பெயர் வைக்கலைன்னு வீட்டில் வந்து புலம்புவேன். தவறாக உச்சரிப்பவர்களிடம் திருத்தி சொல்வதே என் வேலையாக இருந்தது. ஆனால் கல்லூரி வந்த பிறகுதான் என் பெயரை மிகச் சரியாக உச்சரிக்க ஆரம்பித்தார்கள். வலைபதிவில் என் நிஜப் பெயர் இல்லாமைக்கு இதுதான் காரணம்.


3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

பதிவுலகில் என்ட்ரி ஆனது என்னவோ பிரெஞ்சில்தான். ஆனால் உள்ளத்தின் உணர்வுகளை உள்ளபடியே எழுதிட எனக்கு தமிழ்தான் சிறந்தது என தோன்ற முதலில் என் வலது காலடியை தமிழ் வலைபதிவுலகில் வைத்தேன். ஒரு சில மாதங்களில் இன்னொரு காலடியையும் வைக்க சொல்லி என்னை உங்களில் ஒருத்தியாக தமிழ் வலை பதிவுலகம் ஏற்றுக்கொண்டது.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எதுவும் செய்யல. என்னைக்காவது எனது வலைபதிவு பிரபலமாகும் என்ற நம்பிக்கையில் இன்னும் நன்றாக எழுத முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அதிகமா சொந்த விஷயங்களைதான் எழுதுகிறேன். விளைவு.... பதிவுலக நண்பர்களுடன் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பள்ளி படிக்கும் போது அபராதத்திற்கு பயந்து ஆங்கிலத்தில் பேசி.... ஆங்கில வழி கல்விபயின்று பின் அதிலேயே முதுகலை பட்டமும் பெற்று..... ஆங்கில ஆசிரியையாக‌ பணி செய்துக்கொண்டும்... தினசரி வாழ்க்கைக்கு பிரெஞ்சும் பேசிக்கொண்டு இருக்கும் எனக்கு, எங்கே தமிழ் பேச எழுத வாய்ப்பே இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் ஆசையாக எழுத ஆரம்பித்தேன். பொழுதுபோக்காகவும் இருக்கிறது மனது நிறைவாகவும் இருக்கிறது. நல்ல நட்புக்களை பெற்று தந்திருப்பதில் சந்தோஷமாகவே இருக்கிறேன்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு...... பிரெஞ்சில் ஒன்று, தமிழில் ஒன்று!
விரைவில் என் பெயிண்டிங்ஸுக்காக ஒரு வெப்சைட் தொடங்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இல்லை. மாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதும் எழுத்துக்களை கண்டு வியப்படைகிறேன்.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன் முதலில்……… இந்த வார்த்தையில்தான் எத்தனை சுகம் இருக்கு. அது தரும் சந்தோஷமே தனிதான். அப்படி ஒரு சந்தோஷத்தை தந்தவர் நண்பர் ஜோ ... தனக்கென தனி ஸ்டைலில் எழுதுபவர். வித்தியாசமாக எழுதும் இவரது எழுத்துக்களுக்கு ரசிகை நான். என் கவிதைகளுக்காக முதன்முதலில் கமெண்ட் எழுதியவர். அன்று முழுக்க என்னவரிடம், என் கவிதைகளையும் பாராட்டி யாரோ முகம் தெரியா ஒருவர் உலகில் எங்கிருந்தோ பாராட்டி எழுதி இருக்கிறார் என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்றும் நல்ல தோழனாய் இவருடன் நட்பு தொடர்கிற‌து.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ம்ம் சொல்லலாம்! ஆனா முந்தைய‌ கேள்விகளுக்கு சொன்ன பதில் போல இல்லாமல் இதுக்கு detailed தான் சொல்லனும். உங்க நேரத்தை வீணாக்க வேண்டாமேன்னு பார்க்கிறேன். சுருக்கமாக எப்படி எழுதுறது? சரி ஒரு சில வார்த்தைகளில்………..

இன்றுவரை அப்பா அம்மாவின் செல்ல குழந்தையாய், உடன் பிறந்தவர்களுக்கு பிரெண்ட்லியான அக்காவாய், என்னவருக்கு ஆசை மனைவியாய், உறவுகளுக்கு பாசமானவளாய், என் மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியையாய்... உங்கள் அனைவருக்கும் நல்ல தோழியாய்…கனவுகளை நிஜமாக்க முயன்று கொண்டிருப்பவளாய், எந்த சூழ்நிலையிலும் பொறுமையுடன் தன்னம்பிக்கை நிறைந்தவளாய், கொஞ்சம் சோம்பேறியாய், ப‌யங்கர சென்செட்டிவாய், வாழ்க்கையில் சின்ன சின்ன விஷ‌யங்களையும் ரசித்து ஒவ்வொரு மணிதுளியும் நேசிபவள் நான்..... இப்படியெல்லாம் சொல்லனும்னுதான் ஆசை! ஆனா நானே என்னை பற்றி எப்படி சொல்லிக்க‌றது. என்னை விட என்னைப்பற்றி என் நண்பர்களாகிய உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே.... நீங்களே இதற்கு பதில் சொல்லுங்களேன் !


***********

 
இவற்றை தொடர்ந்திட நண்பர் ரகுவையும்  , தோழி ஆனந்தியையும்  அன்புடன் அழைக்கிறேன்.