Subscribe:

Pages

Tuesday, July 27, 2010

கொஞ்சம் வரைந்துதான் பாருங்களேன்!!!

                  சாதாரணமாக வரைய தெரிந்திருந்தாலே போதும் உங்கள் வீட்டு வரவேற்பரை சுவரில் நீங்களே வரைந்த படத்தைக்கொண்டு அழகுப் படுத்திட முடியும். இதற்கு நன்றாக வரைய தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. பொதுவாக எல்லோருக்கும் ஒரு சிறு பூவாவது வரைய தெரிந்து இருக்கும் இல்லையா! அதனால் அதற்கு எப்படி வண்ணங்கள் தீட்டுவது என்று பார்ப்போம்.


அதிக வண்ணங்கள் கூட அவசியமில்லை. தேவையானவை 5 அல்லது 6 நிறங்கள் அது வாட்டர் கலரா அல்லது ஆயில் கலரா என்பது உங்க விருப்பம். (இங்கே நான் பயன்படுத்தி இருப்பது ஆயில் பெயிண்ட்) 50 x 70cm அள‌வில் ஒரு பெரிய தாள் அல்லது கேன்வஸ் போர்ட், இரண்டு பிரஷ், பென்சில் கூடவே கொஞ்சம் பொறுமை நிறைய ஆர்வம்... !

செம்பருத்தியோ ரோஜாவோ அல்லது தாமரையோ முதலில் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பூவை ஒன்றின் பக்கம் ஒன்றாக பெரியதும் சிறியதுமாக‌ நான்கைந்து பூக்களை பென்சிலால் வரைந்துக்கொள்ளுங்கள். இலைகள் கூட அவசியமில்லை. இங்கே நான் வரைந்திருப்பது ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பூக்கும் ‘கொக்லிக்கோ’(Coquelicot(Fre.) - Poppy(Eng.)) மலர்கள்.


எப்போதும் வண்ணங்களை தேர்ந்தெடுப்பதில்தான் அதிக கவனம் தேவை. முதலில் டார்க் கலரை கொண்டு பூக்களற்ற மற்ற பகுதியில் பெயிண்ட் பண்ணுங்க. அது உங்க வீட்டு வரவேற்பரையில் உள்ள கர்ட்டன் கலரிலோ... டேபிள் க்ளாத் கலரிலோ இருந்தால் கூடுதல் அழகை கொடுக்கும்.

வெறும் ஒரே நிறத்தைக்கொண்டு தீட்டாமல் ஓரங்களில் கொஞ்சம் கருப்பு நிறத்தையும் உட்புறமாக கொஞ்சம் வெள்ளையும் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.



அடுத்து பூக்களுக்கான நிறத்தை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். சிகப்பு, ஆரஞ்சு, பிங்க், நீலம்..... இப்படி எந்த நிறமாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் ஏற்கனவே தாளில் கொடுக்கப் பட்டிருக்கும் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட் ஆக‌ இருந்தால் பார்க்க பளிச்சென்று இருக்கும். பூவிதழ்களின் ஓரங்களில் கொஞ்சம் அழுத்தமாக, டார்காகவோ அல்லது லைட்டாகவோ வண்ணம் தீட்டினால் ஒவ்வொரு இதழ்களும் தனித்தனியாக தெரியும். பூத்தண்டுகளுக்கு பச்சையும் இடையிடையே கொஞ்சம் கருப்பு நிறமும் கலந்து அடித்து விடுங்கள்.





பொருத்தமாக ஃபிரேம் செய்து விட்டால், அவ்வளவுதான்.... ஒரு சிம்பிளான பெயிண்டிங் ரெடி! காசுக் கொடுத்து வாங்கும் பொருளை விட நாமே தீட்டிய ஓவியத்தைக்கொண்டு வீட்டை அழகுப்படுத்துவது சந்தோஷம்தானே! உங்களுக்குள் இருக்கும் வரையும் திறனை வெளிக்கொண்டு வரும் சிறு முயற்சியாக இது இருக்கட்டுமே.. கொஞ்சம் வரைந்துதான் பாருங்களேன்!



Friday, July 23, 2010

தொடர்ந்திடும் உற்சாகம் !!!

         டலில் சோர்வு என்றால் நன்றாக தூங்கியோ உடற்பயிற்சியாலோ சரி செய்து விடலாம். ஆனால் மனது சோர்வுரும் நேரங்களில் என்ன செய்வது. அப்படிப்பட்ட சமயங்களில் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டால் நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் புதியதாக ஒரு விஷயத்தை தெரிந்துக்கொள்வதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் ஏற்பட்டு நிச்சயம் மனதில் உற்சாகம் பெருகிடும். அப்படிதான் கடந்த இரண்டு மாதமாக நான் யோகா கற்றுக்கொண்டு வருவதும்.

நம் நாட்டில் இருந்தவரை அதைப்பற்றி ஏதும் தெரியாது, தெரிந்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் இல்லை. இன்று ஏதோ ஒன்று என்னை யோகா கற்றுக்கொள்ள தூண்டியது. நம் இந்திய நாட்டிற்கு பலமுறை வந்து முறைப்படி யோகா படித்து பட்டம் பெற்ற ஒரு பிரெஞ்சு பெண்தான் இந்த வகுப்புகளை நடத்துகிறார்.

உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வது எனக்கு பிடிக்கும். அதனால் என் கல்லூரி நாட்களில் இருந்தே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் செய்ய‌ மாட்டேன். சும்மா வீட்டிலேயே கையை காலை அசைத்து குனிந்து நிமிர்ந்து ஏதாவது செய்துக்கொண்டு இருப்பேன். உடற்பயிற்சி வெறும் உடலை மட்டுமா நன்றாக வைத்துக்கொள்ளும், மனதையும் சேர்த்துதானே! அது பற்றாத வேளையிலதான் இந்த யோகா பயிற்சி மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மனதில் தேவையில்லாமல் இருக்கும் கோபம், எரிச்சல், etc.,எதுவாகினும் அதை நீக்கிட யோகா உதவும் என்று நினைக்கிறேன். பொதுவாக நான் எளிதில் உணர்ச்சி வசப்பட மாட்டேன், முக்கியமாக கோபப்படும் விஷயத்தில். அவசியமற்ற கோபம் நம் மனதை அசிங்கமாக்கிவிடும் வாய்ப்புள்ளது. எனவே, நான் என் மனதை எப்போதும் அழகாக வைத்துக்கொள்வே விரும்புகிறேன், சில நேரங்களில் தானாகவே வந்து சேர்ந்திடும் சோர்வுகளை எதிர்த்து!

மனதிற்கு உற்சாகமும் சந்தோஷமும் கொடுக்கக்கூடிய இன்னொரு விஷயம் பரிசுகளும் பாராட்டுக்களும். தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி வரும் பதிவுலக நண்பர்களின் பின்னூட்டங்களும், ஊக்கப்படுத்திவரும் விருதுகளும் இன்னும் என் சந்தோஷத்தை அதிகப்படுத்தி மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கிறது. மீண்டும் ஒரு தங்கமகன்/மகள் விருது தந்த ஜெய்லானிக்கும், அனபாக ஒரு விருது அளித்த ஆனந்திக்கும் எனது நன்றிகள்.


Tuesday, July 20, 2010

சுதந்திர தினம் - 3 வான வேடிக்கை படங்கள்!!!

         தோ... நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த (அப்படி யாராவது இருக்கிங்களா?) வான வேடிக்கை படங்கள். பிரான்ஸின் சுதந்திர தின விழாவிற்காக  அன்று இரவு கடலில் நடத்திய வான வேடிக்கையை காண இரு கண்கள் போதவில்லை. அவ்வளவு அழகு! நான் முன்பே சொல்லி இருந்த மாதிரி வானில் விடப்பட்ட முதல் வான வேடிக்கையிலேயே, அழகில் மயங்கி புகைப்படம் எடுக்க மறந்து போனேன். மேலும் கேமராவின் கண்கள் வழியே பார்ப்பதைவிட என் இரண்டு கண்களால் ரசிப்பதையே விரும்பினேன். அதனால் கீழே காணும் அத்தனை படங்களும் என்னவர் எடுத்தது.

பல வண்ணங்களில் அழகாய் தெரிந்த வான வேடிக்கைகளில் இம்முறை புதியதாக நிறைய வடிவங்களை புகுத்தியிருந்தனர். முதல் முறையாக இதயம் வடிவில்......பதிமூன்றாவது படத்தில் பாருங்கள். எனக்கு மிகவும் பிடித்தது கடைசி படம்தான். நன்றாக பார்த்தால் தெரியும் அது பனைமரம் வடிவில் இருப்பது. இங்கு கடற்கரை சாலைகளில் முழுவதும் அழகாக தோற்றமளிப்பது இந்த‌ பனை மரங்கள்தானே!!!

முதல்முறையாக வீடியோ இணைத்திருக்கிறேன். வெறும் ஒரு சில நொடிகள்தான்.   ஃபுல் ஸ்க்ரீனில் பார்க்கலாம். பாருங்கள், நான் ரசித்ததை நீங்களும் உணர்வீர்கள்.




















Saturday, July 17, 2010

சுதந்திர தினம் - 2 நள்ளிரவு கொண்டாட்டங்கள்‍!

         சுதந்திர தினத்தன்று (ஜூலை 14) கடற்கரை சாலையில் எடுக்கப்பட்ட நள்ளிரவு கடைகளின் படங்கள் இது. உறங்கும் நேரத்தில் உல்லாசமாய் கரைந்த‌ இரவு!

சிறுவர்கள் பெரியவர்கள் என்று எல்லோரையும் கவர்ந்த கடை இதுவாகத்தான் இருக்கும். கிடைக்காத மிட்டாய்களே இல்லை, அத்தனை வகைகள்!!!





வண்ணங்களை கொண்டு பலவகையாக வரைந்திருக்கும் கலைஞர்களின் கடைகள்தான் நீங்கள் கீழே காணும் படங்கள். 

கண்ணாடியில்.......



மரத்துண்டுகளில்......



துணிகளில்.....






ஆப்பிரிக்கன் ஹேர் ஸ்டைலில் ஜடை பின்ன‌ப்படுகிறது...



ஆண் பெண் இருபாலரையும் கவர்ந்த Tattoos!



இதுதான் எனக்க பிடித்த ரெஸ்டாரண்ட்!



பாருங்க, எவ்வள‌வு கூட்டம். ரெஸ்டாரண்ட் வாசலையும் தாண்டி வெளியே சாலைவரை வரிசையில்.....



சாலையோரம் அமர்ந்து வரைந்துக் கொண்டிருக்கும் ஆர்டிஸ்ட்!




வீதிக்கு வீதி நடைப்பெற்ற இசை கச்சேரிகள்!




மைகேல் ஜேக்ஸனின் பாடல்களை அவரை போலவே உடுத்திக்கொண்டு ஆடி பாடிக்கொண்டிருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் நெருங்கி சென்று படம் எடுக்க முடியவில்லை.

 


எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஐஸ்க்ரீம் பார்லர் இது. கடற்கரை சாலை முழுவதும் நிறைய கடைகள் இருந்தாலும் எப்போதும் இந்த கடையில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நிறைய வகைகளில் வேறு எங்கேயும் கிடைக்காத ஐஸ்க்ரீம்ஸ் இங்கதான் கிடைக்கும்.




வான வேடிக்கைகையை காண காத்திருக்கும் கூட்டம்!



கடற்கரை பாறைகளில் முன்பே சென்று இட‌ம்பிடித்து காத்திருக்கும் மக்கள்.... வான வேடிக்கையை மிக அருகினில் காண்பதற்கு!


சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக அன்று நடத்தப்பட்ட‌ வான வேடிக்கையின் படங்கள் அடுத்த பதிவில் தொடரும்.

Thursday, July 15, 2010

சுதந்திர தினக் கொண்டாட்டம் -1 !!!

                நேற்று காலையிலேயே கிளம்பி எங்கேயாவது வெளியே சென்று சுற்றிவிட்டு வரலாம் என்று நினைத்திருந்தோம். காரணம் நேற்று பிரான்ஸின் சுதந்திர தினவிழா. ஆனால் கடைசி நேரத்தில் என்னவருக்கு அழைப்பு வந்துவிட  வேலைக்கு சென்றுவிட்டார். நல்ல வேளை காலையில் மட்டும்தான். அதனால் மாலையில் கடற்கரைக்கு செல்வது என்று முடிவு செய்தோம். மாலை ஏழுமணிக்கு மேல்தான் வீட்டில் இருந்து கிளம்பினோம். எனக்கு மிகவும் பிடித்த இடம் Fréjus பீச்சுதான்!!..... இங்கு வந்த புதிதில் முதல்முறை என்னவர் என்னை அழைத்து சென்ற போது, பேச வார்த்தைகளற்று அதன் அழகில் மயங்கி போனேன். பிரான்ஸின் மற்ற பகுதியில் இருந்து எங்கள் வீட்டுற்கு வரும் உறவினர்கள், நண்பர்களை நாங்கள் தவறாமல் இந்த பீச்சுக்கு அழைத்து சென்று விடுவது வழக்கம்... பார்த்த எல்லோருக்குமே பிடித்த இடமாகி போனதுதான் இதன் ஸ்பெஷல்.



தலைநகரம் பாரிஸில் நேற்று காலையில் இருந்து பயங்கர மழையாக இருந்திருக்கிறது. ஆனால் கோடை காலம் என்பதை நிருப்பிக்க எங்கள் ஊரில் மட்டும் வெயிலாக இருந்தது. இரவு எட்டு மணியாகியும் வெயில் அதிகமாகவே இருந்தது. பள்ளி ஆண்டு விடுமுறை (ஜூலை‍ - ஆகஸ்ட்) தொடங்கி விட்டதால் பீச்சில் அவ்வளவு மக்கள் கூட்டம். நிறைய வெளி நாட்டு சுற்றுலாவினரை பார்க்க முடிந்தது. நான் ஒரு ஸ்டாரை பார்த்தேன். அவரை சுற்றி பெரிய கூட்டம். அவரைப்பற்றி தனியாக அடுத்த பதிவில்  எழுதுகிறேன்...படங்களுடன்!

கடற்கரை சாலையிலே ஓவிய கலைஞர்கள் பலர் மாடல்களை முன் அமர்த்தி வரைந்து கொண்டிருந்தார்கள். நாமும் மாடலாக இருந்து வரைந்த படத்தை பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். நிறைய பேர் தங்களது குழந்தைகளை வரையச் சொல்லி வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது.

கோடைக்கால கொண்டாட்ட‌த்தின் ஒரு பகுதியாக இந்த கடற்கரை சாலையில் இரவு ஏழு மணியிலிருந்து நள்ளிரவு தாண்டியும் இரண்டு மணிவரை வீதியோர கடைகள் இருக்கும். நீச்சல் உடைகளில் ஆரம்பித்து கைவினை பொருட்கள் என்று பல வகையான பொருட்கள் கிடைக்கும். நாங்களும் ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு சாப்பிடலாம் என்று நினைத்து ரெஸ்டாரண்டை தேடி போனால்…. அங்கே ஒவ்வொரு ரெஸ்டாரண்டிலும் வாசலை தாண்டி ஒரு பெரிய வரிசை காத்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் தள்ளி இருந்த சைனிஸ் ரெஸ்டாரண்டிற்கு செல்லலாம் என்றால் அங்கேயும் ஒரு க்யூ. பசி எடுக்க ஆரம்பிக்க வேறு வழியில்லாமல் வரிசையில் நின்று உள்ளே நுழைந்தோம். ‘இவ்வளவு கூட்டமா இருக்கே விரும்பிய ஐயிட்டம் சாப்பிட கிடைக்குமா..’ என்ற கவலை என்னவருக்கு. ஒருவழியாக ஆசைப்பட்டதை சாப்பிட்டு முடித்து வெளியே வந்தால் மீண்டும் ஜனநெரிசல். பத்து மணிக்குமேல் கூட்டம் இன்னும் அதிகமாகிப்போனது.

இத்தனை கூட்டமும் எதற்காக தெரியுமா...? சுதந்திர தின விழாவினை கொண்டாடி மகிழ இரவில் நடத்தப்படும் வானவேடிக்கையை காண்பதற்காக! அதிலும் கடலில் இருந்து நடத்தப்ப‌டும் என்பதால் கூடுதல் அழகு! இதை மிக அருகில் காண்பதற்காகவே சில மக்கள் முன்பே சென்று கரையில் இடம் பிடித்து அமர்ந்து விட்டனர். பத்து மணிக்கு ஆரம்பித்த வானவேடிக்கை பத்தரை மணி வரை தொடர்ந்தது. இந்த அரைமணி நேரமும் அத்தனை பெரிய மக்கள் கூட்டத்தை... வானமே வண்ணமயமாக மாறி கலர்கலரான நெருப்பு முத்துக்களால் தன் வசப்படுத்தி இருந்தது.

கேமராவுடன் ரெடியாக நின்றிருந்த நான்...........வானத்தில் விடப்பட்ட முதல் வானவேடிக்கையிலேயே மயங்கிப்போனேன். இதமாக வீசிய மெல்லிய க‌டற்கரைக்காற்று... என் பின்னால் இருந்து தன் கைகளால் என்னை அனைத்திருந்த என்னவரின் நெருக்கம்... பட் பட் என்ற வெடிச்சத்தம்… சத்ததால் மனதில் ஏற்பட்ட மெல்லிய அதிர்வு… பட படவென வானில் வெடித்து சிதறும் வண்ணங்கள்... அது தண்ணீரிலே பட்டு மின்னும் அழகு.... இப்படி என்னை சுற்றி கவிதையாக‌ நிமிடங்கள் நகர, போட்டோ எடுக்க மறந்துப்போனேன். அப்புறம் என்னவர்தான் சில போட்டாக்கள் எடுத்து கொடுத்தார்.

அது முடிந்ததும் இசை கச்சேரி ஆரம்பித்தது. ஒரு வருடம் ஆகிய நிலையில் மறக்க முடியாமல் இருக்கும் மைகேல் ஜேக்ஸன் ரசிகர்களுக்காவே அவரின் பாடல்கள்தான் பாடப்பட்டது. அதிலும் அவரைபோல டிரஸ் பண்ணிக்கொண்டு, அவரைபோலவே ஆடிக்கொன்டிருந்தனர். அதையும் சிறிது நேரம் பார்த்துவிட்டு ஐஸ்க்ரீம் பார்லருக்கு சென்றால் அங்கேயும் கூட்டம். நீண்ட வரிசை…… வரிசையில் நின்று எனக்கு பிடித்த ஃப்லேவரில் ஐஸ்க்ரீம் வாங்கி வந்தார் என்னவர். கடற்கரை மணலில் அமர்ந்து ருசித்து சாப்பிட்ட அந்த நிமிடங்கள்தான் எத்தனை சுகமானவை! நேரமோ நள்ளிரவு...ஆனால் என்னவோ அப்பொழுதான் எழுந்தது போல எல்லோரது முகத்திலும் ஒரு மலர்ச்சி!

நள்ளிரவு தாண்டி வீடு வந்து சேர்ந்தோம். பாவம் என்னவர்தான், இன்று காலையிலேயே நான்கு மணிக்கு வேலைக்கு சென்று விட்டார். நான் ஒன்பது மணி வரை நன்றாக தூங்கி எழுந்து... மிகவும் சந்தோஷமுடன் இதை எழுதிக்கொன்டிருக்கிறேன்.

தொடரும்......

Tuesday, July 13, 2010

ஸ்ட்ராபெர்ரி வாரம்!!!


     சீசன் பழமான ஸ்ட்ராபெர்ரி... அத‌ன் இனிப்பான‌ சுவைக்காக‌ ம‌ட்டும் இல்லாம‌ அழ‌கிய‌ சிக‌ப்பு நிற‌த்தில இருப்ப‌தாலும் அனைவ‌ரையும் க‌வ‌ர்ந்த‌ ப‌ழ‌மாக‌ இருக்கிறது. Citrus வ‌கை ப‌ழ‌ங்க‌ளிலே அதிக‌மாக‌ வைட்ட‌மின் C இருக்கும் ப‌ழ‌ம் இது. எல்லா ரெட் கலர் பழங்களிலேயும் "லைக்கோடின்" சத்து அடங்கியிருக்கு. நம்ம உடம்புல இருக்கிற இரத்தத்திலேயும் ஐம்பது சதவீதம் இருக்கு. ஆனா, அதற்கு குறைவா இருக்கும்போதுதான் சத்துக்குறைவு ஏற்படுது. இய‌ற்கையிலேயே இதில் Folic Acid உள்ள‌தால் கர்ப்பமான பெண்கள் அவ‌சியம் சாப்பிட வேண்டிய‌ பழமிது. இதனால் குழந்தை எந்த குறையுமின்றி முக்கியமாக brain and nervous System disorders ஏதுமின்றி பிறக்குமாம். மேலும் இது Fat free food என்பதால் பலவகையான diet க்கு பயன்படுத்தபடுகிறது.

நம்ம‌ சரும பாதுக்காப்பிற்கும் உதவுது என்பதால் இப்பழங்களை கொண்டு இப்போது நிறைய ஃபேஸ் வாஷ், ஃபேஷியல் மாஸ்க் எல்லாம் கிடைக்குது. இதெல்லாம் போட்டு வெளி அழகை மெருகேற்றுவதைவிட‌, இந்த பழங்களை நிறைய சாப்பிடுவதால் “உள்ளே வெளியே” என ஒரே சமயத்தில பல நன்மைகள் கிடைக்கும்.

எத்தனை நாள்தான் அப்படியே சாப்பிடுவது, அதையே கொஞ்சம் வேறு விதமாக செய்து சாப்பிட்டா... அப்படி நான் செய்து ருசித்தவைகள் குறிப்புடன் தந்திருக்கேன். செய்து பாருங்க... அதன் அழகான ரெட் கலரிலும் சுவையிலும் மயங்கி போயிடுவீங்க!


ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்

¼ கப் ஸ்ட்ராபெர்ரி
1 கப் பால்
2 ஸ்பூன் சர்க்கரை
2 ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்க்ரீம்











சுத்தமாக கழுவப்பட்ட பழங்களை துண்டுக்களாக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொண்டு, அதோடு பால், சர்க்கரை, வெண்ணிலா ஐஸ்க்ரீமையும் சேர்த்து அரைக்க வேண்டும். நுரை பொங்கிய நிலையில் இப்போது ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் தயார்.



********************


ஸ்ட்ராபெர்ரி ஒயிட் சீஸ்

1 கப் ஸ்ட்ராபெர்ரி
1 கப் ஒயிட் சீஸ்
2 ஸ்பூன் சர்க்கரை
2 பிஸ்கட்ஸ்











ழங்களை சிறுசிறு துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வைக்கவும். சீஸ்ஸூடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவேண்டும். பரிமாற இரண்டு கண்ணாடி கிளாஸ் எடுத்து, அதில் முதல ஒரு ஸ்பூன் சீஸ் போட்டு, மேல ஒரு ஸ்பூன் பழங்களை சேர்த்து மீண்டும் கொஞ்சம் சீஸ் கொஞ்சம் பழங்கள் என மாற்றி மாற்றி போடவும். தேவையான அளவு மூன்று நான்கு அடுக்கு என கடைசியா பழங்கள் மேல பிஸ்கட்டுகளை விரல்களாலே உடைத்து தூவிவிடுங்கள். கண்ணை கவரும் கலரில் சுவையான சத்தான டெசர்ட் ரெடி!


******************


ஸ்ட்ராபெர்ரி சீஸ் கேக்

15 – 20 பிஸ்கட்ஸ் (இந்த வகை கேக்குகளுக்கு என்று விற்கப்படும்)
2 கப் ஸ்ட்ராபெர்ரி
3 கப் ஒயிட் சீஸ்
4 ஸ்பூன் சர்க்கரை
1 ஸ்பூன் எலுப்பிச்சை சாறு
2 ஸ்பூன் வெண்ணிலா பவுடர்





 
ழங்களை சிறுசிறு துண்டுக்களாக்கி அதோடு 2 ஸ்பூன் வெண்ணிலா, ஒரு ஸ்பூன் எலும்பிச்சை பழச்சாறு கலந்து வைத்துக்கொள்ளவும்.  சீஸ்ஸுடன் சர்க்கரையை சேர்த்து அதோடு பழத்துண்டுகளையும் சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.

வட்டமான ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதன் உட்புறமாக சுத்தமான பாலிதின் கவரை ஓட்டியபடி வைக்கவும். ஒரு ஸ்பூன் சர்க்கரை கலந்த தண்ணியை வாயகன்ற கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த பிஸ்கட்டுகளில் முன்பக்கம் மட்டும் சர்க்கரை ஓட்டி இருக்கும். சர்க்கரை இல்லாத பின் பகுதியை சர்க்கரை தண்ணியிலேயே நனைத்து ஒன்னு பக்கத்தில ஒன்னு ஒன்னா அடுக்கிக் கொண்டே வரனும். பிஸ்கட்டின் நனைந்த பகுதி பாத்திரத்தை ஓட்டியபடி இருக்கனும். பின் அடிப்பக்கமும் இதே மாதிரி அடுக்கிக்கொண்டு கலந்து வைத்துள்ள சீஸ் பழ கலவையை இந்த பிஸ்கட்டுகள் மேல கொட்டி விடவேண்டும். மீண்டும் மேல்புறமும் நனைத்த பிஸ்கட்டுகளை அடுக்கவேண்டும். நன்றாக மூடிய நிலையில் பிரிட்ஜில் எட்டுமணி நேரம் வைக்க வேண்டும்.

பிரிட்ஜில் இருந்து எடுத்து, கேக் பாத்திரத்தை ஒரு தட்டில் தலைக்கீழா கவுத்துவிட்டால் கேக் இப்போது தட்டில் வந்துவிடும். மேல சுற்றி உள்ள பாலிதின் கவரை எடுத்து விட்டு ஐந்தாறு ஸ்ட்ராபெர்ரி பழங்களை வைத்து அலங்கரிக்கவும்.

மற்ற கேக் வகைகளைப்போல அதிக வேலையில்ல. குறைந்த நேரத்தில செய்ய டேஸ்ட்டான கேக் இதுதான்.