"பொண்ணு பாக்க போறோம்".......... தொடர் பதிவை எழுத அழைத்த (மாட்டிவிட்ட) அப்பாவி தங்கமணிக்கு எனது நன்றி! அவங்க சொன்னது இதுதான்...........நீங்க தங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க வந்த கதையையும்...ரங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க போன கதையையும்...இன்னும் கல்யாணம் ஆகலேன்னா எப்படி இருக்கணும்னு உங்களுக்குள்ள இருக்கற கற்பனையும் அள்ளி வீசுங்க.
நல்லவேளை, பெரிதாக கண்டிஷன்ஸ் எதுவும் இல்லை என்பதால் எண்ணங்கள் தடையின்றி வார்த்தைகளாக வர இதோ என் ஃப்ளாஷ்பேக்!
********
இந்தா இந்த பட்டு புடவையை கட்டிக்க
இல்ல எனக்கு இது வேண்டாம். எனக்கு பிடிச்ச சிறிய சரிகை வைத்து ப்ளுகலர் சாரிதான் கட்டுவேன்
இல்ல எனக்கு இது வேண்டாம். எனக்கு பிடிச்ச சிறிய சரிகை வைத்து ப்ளுகலர் சாரிதான் கட்டுவேன்
சரி இந்த நகைகளை எல்லாம் போட்டுக்க
எனக்குதான் நிறைய நகைகள் போட்டுக்கறது பிடிக்காதில்ல எனக்கு இந்த ஒரு சின்ன ஜெயின் மட்டும் போதும்
சரி, கொஞ்சம் பூவையாவது அதிகமா வச்சிக்க
இல்ல எனக்கு எப்போதும் போல இரண்டுசரம் பூ போதும்மா
இதெல்லாம் என்னை பெண் பார்க்க வந்த போது (மாப்பிள்ளை பார்க்கும் முன்னும்) எனக்கும் என் அம்மாவிற்கும் நடந்த உரையாடலின் சிறு பகுதி!
என் பதிமூன்றாம் வயதில் இருந்து இருபத்தி இரண்டு வயதுவரை நிறைய proposals!!! லெட்டரில், போனில், நேராக என்று பலவிதத்தில் என்னை விரும்பியதாக சொன்னவர்களை சிநேகமான முறையில் விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டேன். காரணம் அவர்களில் யாரையுமே பிடிக்க வில்லை என்பது அல்ல! ஏனோ மனதிற்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கவில்லை! நிச்சயம் எனக்காக பிறந்தவர் சரியான நேரத்தில் என்னை தேடி வருவார் என்று நினைத்திருந்தேன். அவரும் என்னை தேடி வந்தார் பிரான்ஸில் இருந்து! சின்ன வயதில் இருந்தே எனக்கு எது பெஸ்ட் என்று பார்த்து பார்த்து செய்து, 22 வயதிலும் என்னை செல்லம் கொஞ்சிக்கொண்டு இருந்த என் அப்பா அம்மாவிடமே எனக்காக பிறந்தவரை தேடும் வேலையைக் கொடுத்து விட்டேன்.
கல்லூரி காலங்களில் தோழிகள் சிலர் பெண் பார்க்கும் சடங்கை பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவ பெண்ணான எனக்கு அவர்களை போல் அல்லாமல் சர்ச்சில் வைத்தே பெண் பார்ப்பது நடந்தது. மாப்பிள்ளையின்(என்னவரின்) குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக ஏற்கனவே என்னைப்பற்றி மாப்பிள்ளை வீட்டுக்கும், அவரை பற்றி எங்கள் வீட்டுக்கும் பறிமாறிக் கொண்டவைகளை வைத்தே இந்த பெண் பார்ப்பது(மாப்பிள்ளை பார்ப்பதும்) நடந்தது!
ஜூலை 30..... நானும் என்னவரும் பார்த்துக்கொண்ட முதல் நாள். நான் என் பொற்றோருடன் சர்ச்சிக்கு செல்ல எங்களுக்கு முன்னமே அவரும் அவர் அம்மா இன்னும் சில நெருங்கிய உறவினர்கள் என்று காத்துக்கொண்டு இருந்தார்கள். எங்களை பார்த்ததும் மாப்பிள்ளை வீட்டினர் நெருங்கி வர, ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்துக் கொள்வது நடந்தது.
நானும் என்னவரும் முதன்முதலில் பார்த்துக்கொண்ட சர்ச் இதுதான்!
"இதுதான் எங்க பொண்ணு" என்று அப்பா அவர்களிடம் சொல்ல எல்லோரும் என்னை பார்க்க நானும் புன்னகையுடனே மாப்பிள்ளையை "ஒரு பார்வை" பார்த்துவிட்டு தலை குனிந்துவிட்டேன். வெட்கத்தினால் அல்ல, என்ன செய்வது என்று தெரியாமல். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல் என் ஒவ்வொரு கை விரல்களையும் நகங்களில் உள்ள நெயில் பாலிஷினையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு தெரியாது அதே நேரத்தில் மாப்பிள்ளையாலும் என் விரல்கள் ரசிக்கப் படுகிறது என்று.
"இந்த பெண்ணின் கை விரல்கள் எத்தனை அழகாக இருக்கிறது. எவ்வளவு அழகாக நகங்களை வெட்டி ஷேப் செய்து, மென்மையான கலரில் நெயில் பாலிஷ் போட்டு இருக்கிறாள்"...... இதுதான் என்னை பார்த்த முதல் நொடி அவருக்குள் தோன்றியதாம்.
என் மகனுக்கு சரியா தமிழ் பேசத்தெரியாது(என்னவர் பிறந்தது பாண்டிச்சேரியில்தான் என்றாலும் சிறுவனாக இருக்கும் போதே அவரது குடும்பம் இங்கு வந்து விட்டது) என்று அவர் அம்மா சொன்னதை என் பெற்றோர் அவருக்கு தமிழே தெரியாது என்று புரிந்துக்கொண்டு, அவரிடம் இரண்டொரு வார்த்தைகளோடு முடித்துகொண்டு அவரின் அம்மா மற்றும் உறவினர்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். என்னமோ அவர்கள்தான் சேர்ந்து வாழப்போவதை போல அப்படி என்னதான் பேசினார்களோ தெரியாது. பாவமாக ஒருபுறம் நானும், பரிதாபமாக இன்னொருபுறம் அவரும் நின்றுக்கொண்டு இருந்தோம். எனக்கு மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்.... நானோ நான்- ஸ்டாப்பாக பேசிக்கொண்டிருப்பவள். எனக்கோ பிரெஞ்சு தெரியாது. இவருக்கோ தமிழ் சரியாக பேசத் தெரியாது பிறகு எப்படி பேசிக் கொள்வது? தெரியாத மொழியை கற்றுக்கொள்வது என்ன பெரிய விஷயமா என்று பின்பு நானே எனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன். எப்படியாவது அவருக்கும் தமிழ் கற்றுக்கொடுத்து விடலாம் என்று நினைத்துக்கொண்டேன். (இங்கு வந்து ஒன்றரை வருடத்தில் சரளமாக பிரெஞ்சு பேச கற்றுக்கொண்டேன். என்னவரும் நம் தமிழ் படங்களின் உதவியால் நன்றாகவே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். கொஞ்சம் எழுத படிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் என்றால் தமிழ் மாதிரி ஒரு கஷ்டமான மொழி உலகத்தில வேறு எதுவும் இருக்க முடியாது என்று எஸ்கேப்பாகிறார்)
நீண்ட நேர உரையாடலுக்கு பின் மாப்பிள்ளைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும், மேற்கொண்ட வீட்டிற்கு வந்து பேச விரும்புவதாகவும் சொன்னார்கள். எங்கள் வீட்டில் எனக்காக பார்த்த முதல் மாப்பிள்ளையே என் துணைவராக ஆனார். ஆனால் அவர் எனக்கு முன் இரண்டு பெண்களை பார்த்து பிடிக்காமல் போக, என்னை பார்த்ததுமே ரொம்ப பிடித்து விட்டதாம். எங்கள் வீட்டில் சம்மதம் சொல்ல சில நாட்கள் எடுத்துக்கொள்ள எங்கே நான் கிடைக்காமல் போய் விடுவேனோ என்று நினைத்து ‘எனக்கு இந்த பெண்தான் வேண்டும் எப்படியாவது அவளையே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டாராம்.(விதி வலியது! வேண்டுதல் பலித்து என்வசம் மாட்டிக்கொண்டார்)
பெண் பார்க்க வந்த போது அவர் வீட்டில் இருந்து கொண்டு வரபட்ட தட்டு வரிசைகள்!
வீட்டிற்கு வந்ததும் தம்பியும் தங்கையும் மாப்பிள்ளை எப்படி இருந்தார், பிடிச்சிருக்கா? எப்படி டிரஸ் பண்ணிட்டு இருந்தாரு?....என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தேன் ! ஏன் என்றால் அப்போது அவர் முகம் கூட எனக்கு சரியாக நியாபகம் இல்லை. ஆனால் அவர் போட்டிருந்த லைட் பிங்க் கலர் சர்ட்டும் அவரின் ஆர்மி கட்டிங் ஹேர் ஸ்டைலும்தான் நியாபகம் வந்தது. (தனது 24 வயது வரை ஆர்மியில் அதுவும் Parachutist( skydiving) ஆக இருந்தவராம். மேலிருந்து குதிக்கும் போது ஏற்பட்ட மிக பெரிய விபத்து ஒன்றினால் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் இரண்டு வருடம் முன்னாலதான் ஆர்மியை விட்டு, வந்து விட்டதாகவும்... வெளியேறியப் பின்னும் பழக்க தோஷத்தினால்தான் இந்த ஹேர் ஸ்டைல் என்றும் தெரிந்துக் கொண்டேன்)
பின் இங்குள்ள என் உறவினர்களுக்கு அவரின் விவரங்கள் மெயிலிலும் ஃபேக்ஸிலும் அனுப்பி வைக்கப்பட்டது. Princess ஆக வளர்க்க பட்ட என்னை ஒரு நல்ல பிரின்ஸிடம் ஒப்படைக்க வேண்டுமே என்பதால் நிறைய விசாரிப்புகள். இரண்டு வாரத்தில் எல்லா விசாரிப்புகளும் முடிந்து ஒரு வழியாக என் வீட்டில் இருந்து, அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. பின்பு இங்கு இருக்கும் அவர் நெருங்கிய உறவுகள் இந்தியாவிற்கு பறந்து வர முறைப்படி அவர் குடும்பத்தார் என் வீட்டிற்குவந்து (இரண்டாவது முறையாக) பெண் பார்த்து விட்டு சென்றனர். மிக வேகமாக இரண்டு பேரின் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாகின. ஆகஸ்ட் 27 நிச்சயதார்த்தம் என்றும் செப்டம்பர் 6 திருமணம் என்று நாள் குறிக்கப் பட்டது. இந்த இடைபட்ட நாட்களில் என்னவர் தினமும் என்னை பார்க்க வந்து விடுவார். எனக்கே தெரியாமல் அவருடன் ஏதோ ஒரு உணர்வு ஏற்படத் தொடங்கிய நாட்கள் அது!
எங்கள் நிச்சயத்தார்த்தம் அன்று அவர் எனக்கு மோதிரம் போடும் போது எடுத்த படம்!
செப்டம்பர் ஆறு…. நானும் அவரும் திருமண பந்தத்தினால் இனைவதற்காக மதியும் மூன்று மணிக்கு சட்டபடி பதிவு திருமணம் நடந்து, மாலை ஐந்தரை மணிக்கு பாண்டிச்சேரி புனித சவேரியார் ஆலயத்தில், ரோமில் இருந்து வரவழைக்க பட்ட மாண்மிகு திரு கர்தினால்(Cardinal) தலைமையில் ஏழு பாதிரியார்களின் ஆசிர்வாதத்தோடு மிக சிறப்பாக எங்கள் திருமணம் நடந்தது. ஆலய திருப்பலிக்கு பின் ரிசப்ஷனுக்காக பாண்டிச்சேரி ஜெயராம் மண்டபத்தில் 1500 க்கு அதிகமான சுற்றமும் நட்பும் ஒன்றுகூடி வாழ்த்த மிக இனிதாக எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம்!
நானும் அவரும் கையெழுத்திடுவது எங்கள் பதிவு திருமணத்தின் போது!
*********
சற்று நீண்டு விட்ட எனது கதையை பொறுமையுடன் படித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த தொடர் பதிவை எழுதிட நானும் சிலரை மாட்டி விடலாம் என்று நினைக்கிறேன்.
இதோ அவங்கெல்லாம்......
45 comments:
ரொம்ப நல்லா இருக்கு பிரியா உங்கள் நினைவுகள்
நினைவுகளை அசை போட்ட விதம் அழகு, அதுவும் புகைப்படங்களுடன்.
அருமை பிரியா....
உங்கள் திருமண நேரத்து புகைப்படங்களையும், ரசனை மிக்க பெண் பார்த்த கதையையும் சொல்லி அசத்தி விட்டீர்கள், பிரியா.
Spoken French is not easy. You have learnt to read, write and to speak fluently in 1 1/2 years. WOW! Awesome!
எனக்கு தொடர் பதிவு எழுதும் அளவுக்கு மேட்டர் ஒன்றும் இல்லை. அதான், அங்கேயே ஒரு புருடா கதை விட்டேன். ஹி,ஹி,ஹி,.....
நிஜமா.......அடுத்த தொடர் பதிவு அழைப்பை நிச்சயம் ஏற்று கொள்கிறேன் (என்னை வம்பில் மாட்டாத தலைப்பு என்றால். ஹா, ஹா, ஹா....)
.(விதி வலியது! வேண்டுதல் பலித்து என்வசம் மாட்டிக்கொண்டார்)
அருமை...:-) ;-)
அருமையான நினைவுகள் ப்ரியா!!
//கொஞ்சம் எழுத படிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் என்றால்///
நல்ல வேலை தப்பிச்சிட்டார் ..
//விதி வலியது! வேண்டுதல் பலித்து என்வசம் மாட்டிக்கொண்டார்)//
உண்மை உண்மை..
//பாவமாக ஒருபுறம் நானும், பரிதாபமாக இன்னொருபுறம் அவரும் நின்றுக்கொண்டு இருந்தோம். ///
எல்லாருக்கும் பொதுவா நடக்கற ஒன்னுதான்
//எனக்கே தெரியாமல் அவருடன் ஏதோ ஒரு உணர்வு ஏற்படத் தொடங்கிய நாட்கள் அது!//
காதல் வந்துச்சோ காதல் வந்துச்சோ
நல்ல விவரிப்பு
அழகான படங்களோடு அருமையான பகிர்வு.
தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.
உங்கள்(ஐ) பெண் பார்த்த கதை அருமையா இருந்தது.
உண்மையில் உங்கள் விரல்கள் அழகாகதானிருக்கிறது.( படத்தில்)
//ஆனால் எனக்கு தெரியாது அதே நேரத்தில் மாப்பிள்ளையாலும் என் விரல்கள் ரசிக்கப் படுகிறது என்று//
கதை எழுத சொன்னா....கவிதையா எழுதறீங்க ப்ரியா...கலக்கல். என் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியதிற்கு மிக்க நன்றி ப்ரியா
//இவருக்கோ தமிழ் சரியாக பேசத் தெரியாது பிறகு எப்படி பேசிக் கொள்வது?//
காதல் வந்த பின்னாலே
கண்கள் மட்டும் போதுமடி
வாய்பேசும் மொழிகள் இங்கே
வார்த்தையன்றி ஓடிவிடும்!!!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
படங்கள் அருமை ,
//எங்கள் வீட்டில் எனக்காக பார்த்த முதல் மாப்பிள்ளையே என் துணைவராக ஆனார்.//
அதிஷ்டசாலிதான் நீங்க .இதுப்போல எல்லாருக்கும் அமைவது இல்லை.
ஏற்கனவே இரண்டு தொடர்பதிவு வைட்டிங்ல இருக்கு, ஓகே போட்டுடலாம். அழைப்புக்கு நன்றி.
அழகா எழுதி இருக்கீங்க சகோதரி. :)
--
போன பதிவையும் இப்பதான் வாசிச்சேன்.
:)
வாழ்க வளமுடன்.:)
அந்த சர்ச் நேரில் உள்ள ஹாஸ்டலில் தான் நான் தங்கி இருந்தேன் .சொல்லிருந்தா வந்திருப்பேன் :(
பொண்ணு பார்த்த கதை சுவாரஸ்யமாக இருந்தது. படங்களும் அழகு...
//அதே நேரத்தில் மாப்பிள்ளையாலும் என் விரல்கள் ரசிக்கப் படுகிறது என்று//அட...பார்ரா....
உங்கள் நினைவுகளை அழகாய் பகிர்த்து இருக்கீங்க பிரியா...எழுத்து ரசிக்கும்படியா இருக்கு.உங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...
alakaana post akka!!
ப்ரியா மேம்.. உங்க திருமண வைபவம் மிக அழகு.. நேர்த்தியாக சொல்லியிருக்கிறீர்கள்.. சூப்பர்.. இன்னும் கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லியிருந்தால், அருமையான சிறுகதை.. முயற்சி செய்யுங்கள்...
ரொம்ப இன்டரஸ்டிங்கா இருந்தது பிரியா ...நல்லா எழுதி இருக்கீங்க .. வாழ்த்துக்கள் !
//என் அப்பா அம்மாவிடமே எனக்காக பிறந்தவரை தேடும் வேலையைக் கொடுத்து விட்டேன்//
ரொம்ம்ம்ப நல்லவங்க நீங்க!
//ஆனால் எனக்கு தெரியாது அதே நேரத்தில் மாப்பிள்ளையாலும் என் விரல்கள் ரசிக்கப் படுகிறது என்று//
ரசனையான வரி :)
//எனக்கே தெரியாமல் அவருடன் ஏதோ ஒரு உணர்வு ஏற்படத் தொடங்கிய நாட்கள் அது//
அதுக்கு பேரு, 'கா'ல ஆரம்பிச்சு 'ல்'ல முடியுற மூணு எழுத்து வார்த்தை. கண்டுபுடிக்க கஷ்டமா இருந்தா ஒரே ஒரு க்ளு தர்றேன், நடு எழுத்து 'த'.
இருக்கற ஃபோட்டோஸ்லேயே, எனக்கு ரொம்ப புடிச்சது, அழகா அடுக்கி வெச்ச லட்டுவும் ஜாங்கிரியும் இருக்கற ஃபோட்டோதான் ;)
ஜோக்ஸ் அபார்ட், அழகா, சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க. தொடரை தொடர அழைத்ததற்கு நன்றி, கண்டிப்பா எழுதறேன் :)
நன்றி sarusriraj!
நன்றி அஹமது இர்ஷாத்!
நன்றி சித்ரா!
ஆரம்பத்தில பேச ரொம்பவும் தயக்கமா இருந்தது. ஏன்னா சரியான accent வராம சில நேரம் ஆங்கிலம் கலந்த நம்ம தமிழ் மாதிரி, பிரெஞ்சு பேசும் போதும் இந்த ஆங்கிலம் accent வந்துவிடும்.
நன்றி Han!F R!fay!
நன்றி Mrs.Menagasathia!
நன்றி LK!
//எல்லாருக்கும் பொதுவா நடக்கற ஒன்னுதான்//..... ஓ அப்படியா!!!
நன்றி துபாய் ராஜா!
உங்களுக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
உங்க ரசனைக்கு மிக்க நன்றி அம்பிகா!
நன்றி அப்பாவி தங்கமணி!
//கதை எழுத சொன்னா....கவிதையா எழுதறீங்க ப்ரியா..//..... ஹிஹிஹி அது தானா வருது:)
பாத்திங்களா கமெண்ட எழுதும் போது கூட உங்களுக்கு கவிதை வந்திடுச்சி:)
Mrs.Menagasathia....உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நன்றி ஜெய்லானி!
உங்களால எப்போ எழுத முடியுமோ அப்போ இந்த தொடர் பதிவை தொடருங்க!
நன்றி ஷங்கர்!
நன்றி பத்மா!
நிஜமாகாவா சொல்றிங்க. சர்ச் எதிரில் உள்ள ஹாஸ்டல் என்றால் அது இம்மாகுலேட் ஸ்கூல் ஹாஸ்டலா? ஏன்னா நான் அந்த ஸ்கூலில்தான் படிச்சேன்!
மிக்க நன்றி ஜெயா!
நன்றி seemangani!
உங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நன்றி தக்குடுபாண்டி!
அக்காவா? சரி இருந்திட்டு போகட்டும் தம்பி:)
நன்றி பிரேமா மகள்!
நகைச்சுவையாகவா? அப்படி ஏதாவது எழுத போயி tragedyயா ஆச்சுனா;(
மிக்க நன்றி ஜெனோவா!
முதல உங்களுக்கு ஒரு பெரிரிரியய்ய்ய நன்று ரகு!
அவர் மேல எனக்கு ஏற்பட்ட உணர்வுக்கு பேர் தெரியாம இருந்தேன். என்ன அழகா முதல் எழுத்து, கடைசி எழுத்து, இன்னும் சுலபமா கண்டுபிடிக்க நடு எழுத்து எல்லாம் சொல்லிட்டீங்க:)
உங்கள மாதிரி யாராலும் கண்டுபிடிக்க முடியாதுதான்:)
நல்லா எழுதி இருக்கீங்க பிரியா ...
வாழ்த்துக்கள் !
ப்ரியா,
நெஞ்சமெங்கும் நினைவலைகள். .....ம்ம்ம்ம்ம்ம்ம்!
வாழ்த்துகள்.
hey hey am the
24th.....
etho vanthuvitennnnnnnn..
konjam late aitu...sangathila meetings mudichu vara..
erunga padichutu vantu comments podren..
v.v.s
complan surya
பத்து ஜாங்கரி போலவும்
ஒன்பது லட்டு போல இனிப்பான பதிவு
நான்கு சீப் வாழைபழம் போல சத்தான பதிவு
பனிரெண்டு ஆப்பிள் போல ஆரோகியமான பதிவு
பத்து ஆரஞ்சு மென்மையான பதிவு
அப்பரும்
மூன்று மாதுளை பழம் போல அருமையான பதிவுங்க
வாவ் எல்லாம் கரெக்டா இருக்கணு பாருங்க..
மிக எளிமையாக
உணர்களை பதிவு செய்து இருக்கிங்க.
வாழ்க வளமுடன்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா
அதுக்கு பேரு, 'கா'ல ஆரம்பிச்சு 'ல்'ல முடியுற மூணு எழுத்து வார்த்தை. கண்டுபுடிக்க கஷ்டமா இருந்தா ஒரே ஒரு க்ளு தர்றேன், நடு எழுத்து 'த'.
ada enna oru kulu nanum try panren ennanu kondu pidika mudialeyey.....ethalam padikrathoda niruthukanum,summa mooliku velai ellam kudukapidathu..apprum nama moolaioda value kurichupoidum...
varenunga...sangam kaipillaigal ellam katukitu erupanga..nan poithan armbikkanum..
nandri..valga valamudan.varuthapadtha sangam
complan.
அழகான ஓவியங்கள்..அருமையான புகைப்படங்கள்,பாராட்டுக்கள்!
கிட்டத்தட்ட ஒத்த ரசனையுடைய ஒரு தோழியைக் கண்ட உணர்வு வருகிறது..அடிக்கடி வருவேன்! :)
அழகாக உணர்ந்து எழுதியுள்ளீர்கள், பெண்பார்க்கும் படலத்தில் இருந்து திருமணம் வரை அழகாக நகர்த்தியிருக்கின்றீங்க, உங்கள் கணவருடன் இனிதே வாழ மனதார வாழ்த்துகின்றேன்.
நன்றி சே.குமார்!
நன்றி சத்ரியன்!
வாங்க Complan Surya..... லேட்டா ஆச்சின்னு கவல படாதிங்க,சங்கத்து "மீட்டிங்" ரொம்ப முக்கியமில்ல:)
ஆஹா... படத்தில இருக்குற பழங்களை வச்சே என் பதிவைப்பற்றி எழுதிட்டீங்க, சூப்பர்ர்ர்ர்ர்!!!!
கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்க சூரியா.. அந்த மூணு எழுத்து வார்த்தையை கண்டு பிடிச்சிடலாம்:)
மிக்க நன்றி மகி!
அடிக்கடி வாங்க.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாலன்!
ஹாய் பிரியா..
முதல் முறை உங்க ப்ளாக் வரேன்.. உங்க பெண் பார்த்த அனுபவம் அருமை..
நீங்க அதை படங்களோட விவரித்திருந்தது..ரொம்ப நல்லா இருந்தது.. அப்புறம், உங்க கணவருக்காக.. நீங்க பிரெஞ்சு கத்துகிட்டது.... ரொம்ப ஸ்வீட்.... வாழ்த்துக்கள்..
உங்களை போல், எனக்கும், பார்த்த முதல் மாப்பிள்ளையே கணவரானார்.. :)
அன்புள்ள பிரியா,
கதையல்ல... நிஜம்...
கனவுல்ல... நினைவுகள்...
வரலாறல்ல... வாழ்கை...
வரிகளல்ல...வாழ்த்தாய்...
வாழ்க பல்லாண்டு...
@ ஆனந்தி...
//உங்களை போல், எனக்கும், பார்த்த முதல் மாப்பிள்ளையே கணவரானார்.. :)//
உங்களை போல் எல்லா பெண்களுக்கும் கிடைத்திட இறைவன் வழிசெய்யவேண்டும்.
நன்றி... வணக்கம்...
நட்புடன்,
தஞ்சை.வாசன்
priyama..priyama..
priya madamnu artham)...
கொஞ்சம் முயற்சி பண்ணி பாருங்க சூரியா.. அந்த மூணு எழுத்து வார்த்தையை கண்டு பிடிச்சிடலாம்:)
...நன் கண்டு பிடிச்சுவிட்டேன்..அது
காதல்.இதானே ..எப்புடி ...
apprum neram kidikupothu
entha kutipayan valaithalam vanthu thitivitu chellavum..
nandi valga valamudan
complan surya
உங்கள் பெண் பார்த்த கதையை அழகாக நல்ல க(வி)தையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
படங்களுடன் நினைவுகள் அருமை பிரியா.
ப்ளாஷ் பேக் அருமையாக எழுதிருக்கீங்க..
சித்ராக்க்காவை வேற மாட்டிருக்கீங்களா? அவங்க ஏற்கனவே இந்த தொடரை எழுதறேன்னு சொல்லி எல்லாரும் அல்வா கொடுத்தவங்க...... :))
சூப்பரா எழுதியிருக்கீங்க..
அருமையான நினைவுகள் ப்ரியா!!
மிக்க நன்றி Ananthi!
நன்றி தஞ்சை.ஸ்ரீ.வாசன்!
உங்க கமெண்டை ரசித்தேன்.
Complan Surya மீண்டும் உங்க வருகைக்கு நன்றி
குட், கண்டுபிடிச்சிட்டீங்களே:) வாழ்த்துக்கள்!!!
நன்றி சே.குமார்!
நன்றி அன்புடன் மலிக்கா!
நன்றி கண்ணா..!
ஆமா, மாட்டி விடலாம்ன்னுதான் நினைச்சேன்! ஆனா எஸ்கேப் ஆயிட்டாங்க:)
நன்றி அண்ணாமலையான்!
நன்றி NESAMITHRAN!
உங்கள் திருமண கால நிகழ்வுகளை ரொம்ப அழகா விவரிச்சிருக்கீங்க ப்ரியா!!!
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!
அருமையா நினவலைகளை திருப்பி அடிக்கச்சொல்லிப் புரட்டிப் பார்த்திருக்கீங்க.
அருமை அருமை.வாழ்த்துக்கல் தோழி.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கவிதன்!
நன்றி ஹேமா!
குகூல் ஏதோ தேட போய் உங்க பெண் பார்த கதையை sorry கவிதையை படிக்க நேர்ந்தது திருமணத்தை நேரில் பார்த்த உணர்வு.
அந்த சம்பா கோயிலில் V.O.C பள்ளியில் படிக்கும் போது நண்பர்களுடன் அதிக உரையாடிய பகுதி வாழ்வில் பல பசுமை நினைவுகளை தந்த கோயில்.
நன்றி
படிப்பதற்கு கவிதையாகவா இருந்தது?!ரசித்து படித்த உங்களுக்கு நன்றி சிவா.
நானும் அதே வீதியில் உள்ள பள்ளியில்தான் படித்தேன். நீங்க VOCனா நான் Immaculate!
உங்களைப்போலவே எனக்கும் என் தோழிகளுக்கும் நிறைய சந்தோஷ தருணங்களை கொடுத்த கோயில் அது.
Post a Comment