Subscribe:

Pages

Friday, April 30, 2010

மீண்டும்....மீண்டும்.....!!!

மீண்டும் ஒரு விருது!


  இந்த வைர‌ விருதை வடிவமைத்து வழங்கிய ஜெய்லானிக்கு நன்றிகள் பல!


******************************


மீண்டும் அதே இடம்!

       ரண்டு வாரம் முன்பு வரை இங்கு டிவியில் இதுதான் ஹாட் நியூஸாக இருந்தது. Islandல் எரிந்துக்கொண்டிருந்த எரிமலையின் காரண‌மாக அந்நாட்டில் மட்டுமன்றி வானம் எங்கும் பரவிக்கொண்டிருந்த புகைமண்டலம் சில ஐரோப்பிய நாடுகளையும் சூழ்ந்துக்கொள்ள, சில நாட்களாக இங்கு( பிரான்ஸ்) நாடும் முழுதும் விமான போக்குவரத்து Paralysed ஆனது. கடந்த திங்கள் அன்று என் வீட்டு எதிரில் வானம் மேகமூட்டதுடன் இருண்டு போய் இருந்ததைப் பார்த்து அந்த எரிமலையின் புகையால்தானோ இப்படி என்று நினைத்தேன். ஆனால் நல்ல வேளை இவ்வளவு தூரம் வர விடாமல் காற்று அந்த புகைமண்டலத்தை கலைத்து விட்டது. எப்பொழுதும்  அதிசயமாகவே காட்சி அளிக்கும் வானம் இம்முறை இப்படி கறுத்திருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! இருண்டுபோனாலும் வானம் அழகாகத தோன்ற மீண்டும் என் வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக எடுத்த‌ படம்! 


இதேப்போல் என் வீட்டு எதிரில் இருந்து எடுத்த சில‌ படங்கள் இங்கே!!!

Monday, April 26, 2010

பனி மலைகளினூடே… ஒரு பயணம் (புகைப்படங்கள்)!!!

            

      மார்ச் மாதம் சென்று வந்த பனி மலைகளினூடே… ஒரு பயணம்  புகைப்படங்களுடன்! எடுத்து சென்ற போட்டோ கேமிரா பேட்டரி தீர்ந்து பழி வாங்கி விட அனைத்து படங்களுமே செல்போனில் எடுத்தது.


பனியை நோக்கி செல்லும் பயணம்...
பார்ப்பதற்கு ஏதோ எதிரிலே இருப்பது போல் தோன்றினாலும் போக போக போய் கொண்டே இருந்த சாலை!


சற்று நெருங்கிய‌ பின் எடுத்தது....
வளைந்த மலைபாதைக்கும் எதிரில் தெரியும் பனிசிகரத்திற்கு இடையே மிக பெரிய பள்ளத்தாக்கு. கேமிராவின் வழியே பார்த்த போது ஏதோ தொட்டு விடும் தூரம்தான் தெரிந்தது!


1600m altitude அறிவிப்பு பலகையை தாண்டியதும் அதன் உச்சிக்கு செல்ல ஆரம்பித்த சாலை!

 
சாலையில் வாகனங்கள் செல்ல வசதியாக ஒதுக்கி விடப்பட்ட பனிக்கட்டிகள்!


ஓடும் காரில் இருந்தபடியே  பறக்கும் விமானத்தை எடுத்தது. கண்ணாடி வழியாக எடுத்தும் ப‌டம் நன்றாக வந்த திருப்தியால்  செல்லுக்கு செல்லமாய் ஒரு முத்தம்!


வெயில் பட்ட இடங்கள் மட்டும் பனி கரைந்து திட்டு திட்டாக பச்சையும் வெள்ளையுமாக காட்சியளித்த மலைகள்!


வெண்மையான மணற்பரப்பில் வளர்ந்துள்ளதை போலிருந்த மரங்கள்!


உச்சியை அடைந்தபோது சுற்றிலும் வெண்மைதான்!
மேகங்களற்ற வானம் நீல நிறத்திலும்.... பூமி வெள்ளை நிறத்திலும்.... வெறும் இரண்டே நிறங்களில் கூட இத்தனை அழகா!!!


வழக்கம் போல் எனது கிறுக்கல்... என்னவருக்காக!

எழுதுவதற்கு குச்சிகள் ஏதும் கிடைக்காத நிலையில் க்ளவுஸ் கூட இல்லாத எனது விரலால் எழுதிவிட்டு அடுத்த சில நிமிடங்கள் வலியால் துடித்துக்கொண்டு இருந்தேன்!


சுருக்கங்கள் இல்லாத வெள்ளை போர்வையாய் இருந்த பனியில் நாங்கள் இருவரும் நடந்து நடந்து ஏற்படுத்திய கால் தடங்கள்!


தெரியவில்லை?! எப்படி தானாகவே இப்படி ஒரு கலரில்...படம் வந்தது என்று!


இது வேறு யாரும் இல்லைங்க. நாங்களேதான்!
 காதலில் கரைந்து... பனியில் உருகிய போது என்னவர் எடுத்தது!


Friday, April 23, 2010

பனி மலைகளினூடே… ஒரு பயணம்.

          
          கடந்த நான்கு மாதமாக நிறைய பனி ம‌ழை பொழிந்ததால் மலைகள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கும் என்று மனதில் கற்பனையாய் காட்சிகள் விரிய ஜனவரி மாதமே போகலாம் என்று நினைத்திருந்தும் அதிகபட்ச பனியால் மலை பாதைகள் எல்லாம் மூடி இருந்ததால் அப்போது செல்வது பாதுகாப்பானது அல்ல என்று நினைத்து, சென்ற மாதம்தான் போய் வந்தோம்.

750m altitudeல் உள்ள Castellane என்ற ஊருக்கு மலைப்பாதைகளின் வழியே சென்றடைந்தப் பின் மீண்டும் அங்கிருந்து 1600m altitudeல் இருக்கு அழகான பனி பிரதேசமான‌ Vauplane போய் சேர்ந்தோம்.

பொதுவாக இதுபோல 100 அல்லது 150கிமீ தொலைவில் உள்ள இடங்களுக்கு செல்வது என்றால் காலையிலேயே கிளம்பி சென்று, இரவு வீடு திரும்பிவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை ஞாயிறு மதியம் சாப்பிட்டு முடித்ததும். "இன்னிக்கு கிளைமேட் ரொம்ப நல்லா இருக்கு. போயிட்டு வரலாமா?" என்றார் என்னவர். சென்று வர வெறும் ஐந்து மணி நேர பயணம்தானே என்று நினைத்து "ஓகே போயிட்டு வரலாம்" என்று சந்தோஷமுடன் கிளம்பினேன்.
'மறக்காம கேமிரா எடுத்து வச்சுகிட்டியா?'..... என்னவர்.
'ம்ம்... அத மறப்பேனா!....... இது நான்.

உயரத்தில் ஏற ஏற கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலைகள் எல்லாம் வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. வழக்கம்போல அழகான இடங்களை பார்த்ததும் போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். முதல் இரண்டு போட்டோ நன்றாக வந்தது. அடுத்த படம் எடுக்க ஆன் பட்டனை அழுத்த, charge battery என்றது. என்ன கொடுமை இது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே கேமிரா சுத்தமாக நின்று விட்டது.

ச்ச என்ன இப்படியாகிவிட்டதே..."நிறைய போட்டோஸ் எடுக்கலாம்ன்னு எவ்வளவு ஆசையோட வந்தேன்"......என்று என் புலம்பல் தொடர‌, என்னவர் என்னை நன்கு அறிந்தவராய் "இப்ப என்ன, blogல போட போட்டோஸ் வேணும் அவ்வளவுதான. என் மொபைல எடுத்துக்கலாம்" என்றார். என்னதான் அவரோட மொபைளில் அழகா போட்டோக்கள் எடுக்கலாம் என்று மனது சமாதானம் ஆனாலும் Sony cyber-shot போல வருமா? என்ற கேள்வி எனக்குள்!

உச்சியை அடைந்த போது சுற்றிலும் பனி. நீல நிற வானமும் வெள்ளை மலைகளும் சூப்பர் கலர் காம்பினேஷனில் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது.

அந்த அழகினை ரசித்துக்கொண்டிருந்த என் கவனத்தை கவர்ந்தான் ஒரு ஐந்து வயது சிறுவன். மேலிருந்து skatingல் மிக வேகமாக வளைந்து நெளிந்து இறங்கி கொண்டு இருந்த அவனை பார்த்து நான் பயந்தே போனேன். ஆனால் அவனோ அவன் அப்பா அம்மாவோ எந்த பயமுமின்றி அவர்கள் முன்னால் இறங்க பின்னாலே அச்சிறுவனும் குறிப்பிட்ட நிறுத்தும் இடத்திற்கு வந்ததும் மிகச்சரியாக ஸ்லோ செய்து நிறுத்திய அவனை கண்டு வியந்தேன். வருங்கால Championனை இப்போதே பார்த்துவிட்ட சந்தோஷம் எனக்கு! நமக்கு தெரியலைன்னாலும் செய்பவர்களை பார்த்து திருப்தி கொள்ள‌ வேண்டுமல்லவா... அப்படிதான் வெகு நேரமாக விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனை ஆர்வத்துடன் (கொஞ்சம் பயத்துடனும்) பார்த்து ரசித்தேன்.

சூரியனின் வெப்பம் குறைய ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்தவர்கள் ஒருவர்பின் ஒருவராக கிளம்பத்தொடங்கினர். நாங்களும் நிறைய புகைப்படங்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு கீழ் இறங்க ஆரம்பித்தோம். சிறிது தூரம் இறங்கியபின் காருக்கு பெட்ரோல் போடணும் என்றார் என்னவர். சரி பனி சிகரங்களில் இருந்து இறங்கிய உடன் ஒரு சின்ன கிராமம் வரும் அங்கே போட்டு கொள்ளலாம் என்று எதிர்ப்பார்த்து சென்ற எங்களுக்கு பெரிய ஏமாற்றம். இருந்த இரண்டு பெட்ரோல் ஸ்டேஷனும் சண்டே என்பதால் மூடப்பட்டிருந்தது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் கிரிடிட் கார்ட் செல்ப் சர்வீஸ் என்று இருந்தது. எங்கள் நேரம் சரியில்லையோ என்னவோ அங்கிருந்த சர்வீஸ் சிஸ்டம் சரியாக நடக்காமல் போனது. ரிசர்வரில் இருக்கும் பெட்ரோலில் எப்படியும் கீழே இறங்கி விடலாம் என்றார் என்னவர். காரில் ‘Fuel warning’ லைட் எரிய ஆரம்பித்து எச்சரிக்கை கொடுத்த நேரமது.

எப்போதும் எதையாவது பேசிக்கொண்டிருக்கும் நான் அமைதியாக வந்தது அவ‌ருக்கு எப்படி இருந்ததோ தெரியவில்லை. ‘ஏன் அமைதியா வர? பயமா இருக்கா? கவல படாத எப்படியும் மலைகளில் இருந்து கீழ இறங்கும் வர பெட்ரோல் இருக்கும்... ’என்றார். கார் வேகமெடுத்தாலோ அல்லது வழியை தவறவிட்டு சுற்றி கொண்டு வந்தாலோ அதிகமா பெட்ரோல் செலவாகிவிடும் என்று மிக நிதானமாக ஓட்டிக் கொண்டு வந்தார். (இதுப்போல தொலைதூர பயணம் என்றால் அதற்கு முன்தினமே டேன்க் ஃபில் பண்ணிக்கொள்வார். ஆனால் அன்று திடீரென்று கிளம்பியதால் அதை கவனிக்க தவறிய‌தால் வந்த டென்ஷன் இது)

சூரியன் முற்றிலும் மறைந்து போய் இருள் பரவ‌ எனக்கு மீண்டும் பயம் வந்து ஒட்டிக்கொண்டது. எப்படியாவது கீழே இறங்கும் வரையிலாவது பெட்ரோல் இருக்க வேண்டுமே என்று மனதில் வேண்டிக்கொண்டே வந்தேன். ஒருவழியாக மலைப்பாதைகளில் இருந்து இறங்கி மனித நடமாட்டமுள்ள சராசரி உலகிற்கு நுழைந்ததும் தான் எனக்கு நிம்மதியானது. இறங்கிய உடன் எதிர் பட்ட முதல் petrol stationல் பெட்ரோல் போட்டதும் தான் என்னவர் முகத்திலும் சின்ன சிரிப்பு வந்தது. இத்த‌னை நேரம் அவருக்குள்ளும் பயம் இருந்து இருக்கிறது என்று அந்த சிரிப்பில்தான் தெரிந்த‌து.

‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணா இப்படிதான்..’ இது நான்!
‘ஆமாமா, இனிமே ஒழுங்கா "பிளான்" பண்ணி போயிட்டு வருவோம்’ என என்னவர் சொல்ல சற்று முன்னால் இருந்த பயம் எல்லாம் போய் அன்று பார்த்த அழகிய காட்சிகள் கண்முன்னே வர அதைப்பற்றி பேசிக்கொண்டே சந்தோஷத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.Stade de Vauplane

In Summer........

 


In Winter.........மேலும் புகைப்படங்கள் அடுத்த பதிவில்........


Wednesday, April 14, 2010

பொண்ணு பார்த்த கதை..... (மாப்ள பார்த்ததும்)!!!

                 

                "பொண்ணு பாக்க போறோம்".......... தொடர் பதிவை எழுத அழைத்த (மாட்டிவிட்ட) அப்பாவி தங்கமணிக்கு  எனது நன்றி! அவங்க சொன்னது இதுதான்...........நீங்க தங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க வந்த கதையையும்...ரங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க போன கதையையும்...இன்னும் கல்யாணம் ஆகலேன்னா எப்படி இருக்கணும்னு உங்களுக்குள்ள இருக்கற கற்பனையும் அள்ளி வீசுங்க.

நல்லவேளை, பெரிதாக கண்டிஷன்ஸ் எதுவும் இல்லை என்பதால் எண்ணங்கள் தடையின்றி வார்த்தைகளாக வர இதோ என் ஃப்ளாஷ்பேக்!


********


ந்தா இந்த பட்டு புடவையை கட்டிக்க‌

இல்ல எனக்கு இது வேண்டாம். எனக்கு பிடிச்ச சிறிய சரிகை வைத்து ப்ளுகலர் சாரிதான் கட்டுவேன்

சரி இந்த நகைகளை எல்லாம் போட்டுக்க‌

எனக்குதான் நிறைய நகைகள் போட்டுக்கறது பிடிக்காதில்ல எனக்கு இந்த ஒரு சின்ன ஜெயின் மட்டும் போதும்

சரி, கொஞ்சம் பூவையாவது அதிகமா வச்சிக்க‌

இல்ல எனக்கு எப்போதும் போல இரண்டுசரம் பூ போதும்மா

இதெல்லாம் என்னை பெண் பார்க்க வந்த போது (மாப்பிள்ளை பார்க்கும் முன்னும்) எனக்கும் என் அம்மாவிற்கும் நடந்த உரையாடலின் சிறு பகுதி!

என் பதிமூன்றாம் வயதில் இருந்து இருபத்தி இரண்டு வயதுவரை நிறைய proposals!!! லெட்டரில், போனில், நேராக என்று பலவிதத்தில் என்னை விரும்பியதாக சொன்னவர்களை சிநேகமான முறையில் விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டேன். காரண‌ம் அவர்களில் யாரையுமே பிடிக்க வில்லை என்பது அல்ல! ஏனோ மனதிற்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கவில்லை! நிச்சயம் எனக்காக பிறந்தவர் சரியான நேரத்தில் என்னை தேடி வருவார் என்று நினைத்திருந்தேன். அவரும் என்னை தேடி வந்தார் பிரான்ஸில் இருந்து! சின்ன வயதில் இருந்தே எனக்கு எது பெஸ்ட் என்று பார்த்து பார்த்து செய்து, 22 வயதிலும் என்னை செல்லம் கொஞ்சிக்கொண்டு இருந்த என் அப்பா அம்மாவிடமே எனக்காக பிறந்தவரை தேடும் வேலையைக் கொடுத்து விட்டேன்.

கல்லூரி காலங்களில் தோழிகள் சிலர் பெண் பார்க்கும் சடங்கை பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவ பெண்ணான எனக்கு அவர்களை போல் அல்லாமல் சர்ச்சில் வைத்தே பெண் பார்ப்பது நடந்தது. மாப்பிள்ளையின்(என்னவரின்) குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக ஏற்கனவே என்னைப்பற்றி மாப்பிள்ளை வீட்டுக்கும், அவரை பற்றி எங்கள் வீட்டுக்கும் பறிமாறிக் கொண்டவைகளை வைத்தே இந்த பெண் பார்ப்பது(மாப்பிள்ளை பார்ப்பதும்) நடந்தது!


ஜூலை 30..... நானும் என்னவரும் பார்த்துக்கொண்ட முதல் நாள். நான் என் பொற்றோருடன் சர்ச்சிக்கு செல்ல எங்களுக்கு முன்னமே அவரும் அவர் அம்மா இன்னும் சில நெருங்கிய உறவினர்கள் என்று காத்துக்கொண்டு இருந்தார்கள். எங்களை பார்த்ததும் மாப்பிள்ளை வீட்டினர் நெருங்கி வர, ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்துக் கொள்வது நடந்தது.

நானும் என்னவரும் முதன்முதலில் பார்த்துக்கொண்ட சர்ச் இதுதான்!

"இதுதான் எங்க பொண்ணு" என்று அப்பா அவர்களிடம் சொல்ல எல்லோரும் என்னை பார்க்க நானும் புன்னகையுடனே மாப்பிள்ளையை "ஒரு பார்வை" பார்த்துவிட்டு தலை குனிந்துவிட்டேன். வெட்கத்தினால் அல்ல, என்ன செய்வது என்று தெரியாமல். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல் என் ஒவ்வொரு கை விரல்களையும் நகங்களில் உள்ள நெயில் பாலிஷினையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு தெரியாது அதே நேரத்தில் மாப்பிள்ளையாலும் என் விரல்கள் ரசிக்கப் படுகிறது என்று.

"இந்த பெண்ணின் கை விரல்கள் எத்தனை அழகாக இருக்கிறது. எவ்வளவு அழகாக நகங்களை வெட்டி ஷேப் செய்து, மென்மையான கலரில் நெயில் பாலிஷ் போட்டு இருக்கிறாள்"...... இதுதான் என்னை பார்த்த முதல் நொடி அவருக்குள் தோன்றியதாம்.


என் மகனுக்கு சரியா தமிழ் பேசத்தெரியாது(என்னவர் பிறந்தது பாண்டிச்சேரியில்தான் என்றாலும் சிறுவனாக இருக்கும் போதே அவரது குடும்பம் இங்கு வந்து விட்டது) என்று அவர் அம்மா சொன்னதை என் பெற்றோர் அவ‌ருக்கு தமிழே தெரியாது என்று புரிந்துக்கொண்டு, அவ‌ரிடம் இரண்டொரு வார்த்தைகளோடு முடித்துகொண்டு அவரின் அம்மா மற்றும் உறவினர்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். என்னமோ அவர்கள்தான் சேர்ந்து வாழப்போவதை போல அப்படி என்னதான் பேசினார்களோ தெரியாது. பாவமாக ஒருபுறம் நானும், பரிதாப‌மாக இன்னொருபுறம் அவரும் நின்றுக்கொண்டு இருந்தோம். எனக்கு மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்.... நானோ நான்‍- ஸ்டாப்பாக பேசிக்கொண்டிருப்பவள். எனக்கோ பிரெஞ்சு தெரியாது. இவருக்கோ தமிழ் சரியாக பேசத் தெரியாது பிறகு எப்படி பேசிக் கொள்வது? தெரியாத மொழியை கற்றுக்கொள்வது என்ன பெரிய விஷயமா என்று பின்பு நானே எனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன். எப்படியாவது அவ‌ருக்கும் தமிழ் கற்றுக்கொடுத்து விடலாம் என்று நினைத்துக்கொண்டேன். (இங்கு வந்து ஒன்றரை வருடத்தில் சரளமாக பிரெஞ்சு பேச கற்றுக்கொண்டேன். என்னவரும் நம் தமிழ் படங்களின் உதவியால் நன்றாகவே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். கொஞ்சம் எழுத படிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் என்றால் தமிழ் மாதிரி ஒரு கஷ்டமான மொழி உலகத்தில வேறு எதுவும் இருக்க முடியாது என்று எஸ்கேப்பாகிறார்)


நீண்ட நேர உரையாடலுக்கு பின் மாப்பிள்ளைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும், மேற்கொண்ட வீட்டிற்கு வந்து பேச விரும்புவதாகவும் சொன்னார்கள். எங்கள் வீட்டில் எனக்காக பார்த்த முதல் மாப்பிள்ளையே என் துணைவராக ஆனார். ஆனால் அவர் எனக்கு முன் இரண்டு பெண்களை பார்த்து பிடிக்காமல் போக, என்னை பார்த்ததுமே ரொம்ப பிடித்து விட்டதாம். எங்கள் வீட்டில் சம்மதம் சொல்ல சில நாட்கள் எடுத்துக்கொள்ள எங்கே நான் கிடைக்காமல் போய் விடுவேனோ என்று நினைத்து ‘எனக்கு இந்த பெண்தான் வேண்டும் எப்படியாவது அவளையே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டாராம்.(விதி வலியது! வேண்டுதல் பலித்து என்வசம் மாட்டிக்கொண்டார்)

பெண் பார்க்க வந்த போது அவர் வீட்டில் இருந்து கொண்டு வரபட்ட தட்டு வரிசைகள்!

வீட்டிற்கு வந்ததும் தம்பியும் தங்கையும் மாப்பிள்ளை எப்படி இருந்தார், பிடிச்சிருக்கா? எப்படி டிரஸ் பண்ணிட்டு இருந்தாரு?....என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தேன் ! ஏன் என்றால் அப்போது அவர் முகம் கூட எனக்கு சரியாக‌ நியாபகம் இல்லை. ஆனால் அவர் போட்டிருந்த லைட் பிங்க் கலர் சர்ட்டும் அவரின் ஆர்மி கட்டிங் ஹேர் ஸ்டைலும்தான் நியாபகம் வந்தது. (தனது 24 வயது வரை ஆர்மியில் அதுவும் Parachutist( skydiving) ஆக இருந்தவராம். மேலிருந்து குதிக்கும் போது ஏற்பட்ட மிக பெரிய விபத்து ஒன்றினால் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் இரண்டு வருடம் முன்னாலதான் ஆர்மியை விட்டு, வந்து விட்டதாகவும்... வெளியேறியப் பின்னும் பழக்க தோஷத்தினால்தான் இந்த ஹேர் ஸ்டைல் என்றும் தெரிந்துக் கொண்டேன்)


பின் இங்குள்ள என் உறவினர்களுக்கு அவரின் விவரங்கள் மெயிலிலும் ஃபேக்ஸிலும் அனுப்பி வைக்கப்பட்டது. Princess ஆக‌ வளர்க்க பட்ட என்னை ஒரு நல்ல பிரின்ஸிடம் ஒப்படைக்க வேண்டுமே என்பதால் நிறைய‌ விசாரிப்புகள். இரண்டு வாரத்தில் எல்லா விசாரிப்புகளும் முடிந்து ஒரு வழியாக என் வீட்டில் இருந்து, அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கப்ப‌ட்டது. பின்பு இங்கு இருக்கும் அவர் நெருங்கிய உறவுகள் இந்தியாவிற்கு பறந்து வர முறைப்படி அவர் குடும்பத்தார் என் வீட்டிற்குவந்து (இரண்டாவது முறையாக‌) பெண் பார்த்து விட்டு சென்றனர். மிக வேகமாக இரண்டு பேரின் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாகின. ஆகஸ்ட் 27 நிச்சயதார்த்தம் என்றும் செப்டம்பர் 6 திருமணம் என்று நாள் குறிக்கப் பட்டது. இந்த இடைபட்ட நாட்களில் என்னவர் தினமும் என்னை பார்க்க வந்து விடுவார். எனக்கே தெரியாமல் அவருடன் ஏதோ ஒரு உணர்வு ஏற்படத் தொடங்கிய நாட்கள் அது!

எங்கள் நிச்சயத்தார்த்தம் அன்று அவர் எனக்கு மோதிரம் போடும் போது எடுத்த‌ படம்!

செப்டம்பர் ஆறு…. நானும் அவ‌ரும் திருமண பந்தத்தினால் இனைவதற்காக மதியும் மூன்று மணிக்கு சட்டபடி பதிவு திருமணம் நடந்து, மாலை ஐந்தரை மணிக்கு பாண்டிச்சேரி புனித சவேரியார் ஆலயத்தில், ரோமில் இருந்து வரவழைக்க பட்ட மாண்மிகு திரு கர்தினால்(Cardinal) தலைமையில் ஏழு பாதிரியார்களின் ஆசிர்வாதத்தோடு மிக சிறப்பாக‌ எங்கள் திருமணம் நடந்தது. ஆலய திருப்பலிக்கு பின் ரிசப்ஷனுக்காக பாண்டிச்சேரி ஜெயராம் மண்டபத்தில் 1500 க்கு அதிகமான சுற்றமும் நட்பும் ஒன்றுகூடி வாழ்த்த மிக இனிதாக எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம்!
நானும் அவரும் கையெழுத்திடுவது எங்கள் பதிவு திருமண‌த்தின் போது!
 
*********


சற்று நீண்டு விட்ட எனது கதையை பொறுமையுடன் படித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த தொடர் பதிவை எழுதிட‌ நானும் சிலரை மாட்டி விடலாம் என்று நினைக்கிறேன்.
இதோ அவங்கெல்லாம்......
Friday, April 9, 2010

அம்முவாகிய உனக்கு.......


             நீண்ட நாளா உனக்கு ஒரு கடிதமாவது எழுத வேண்டுமென ஆசை எனக்கு. பக்கம் பக்கமாய் பேப்பரில் எழுதியது போய் மெயிலில் இரண்டொரு வரியாக சுருங்கிவிட்ட இன்டர்நெட் யுகத்தில் நாம் இருப்பதால் இதோ அதன் வழியாவே உனக்கு ஒரு கடிதம்.

ல்லா படிக்கிறியா? படிப்பில ஒழுங்கா கவனம் செலுத்து. நல்லா சாப்பிடு, எப்பவும் தூங்கிட்டு இருக்காத. அப்பா அம்மாகிட்ட கோபப்படாத. கூட படிக்கிற ஆண் நண்பர்களிடம் பார்த்து பழகு. நல்ல பொண்ணு என பேர் வாங்குற மாதிரி நடந்துக்கோ...... இப்படி எல்லாம் அட்வைஸ் பண்ணும் வழக்கமான அக்கா நான் இல்லைங்குறது உனக்கே தெரியும். அதனால ஏதோ எனக்கு தோணுவதை எழுதுறன்.

க்கா தங்கையாக இருந்தும் ஏனோ நமக்குள்ள சின்ன சின்ன சண்டைகள் கூட இதுவரை வந்ததில்ல. இனியும் வரப்போவதில்ல. ஓரே ரசனை ஒரே எண்ணம் என இருப்பது சந்தோஷமாதான் இருக்கு. ஆனா அதுக்காக என்னை மாதிரியே தூங்கும்போது எழுப்பினா இத்தனை கோபம் வருமா உனக்கு? ஆமாமா.... பொறுமையான எனக்கே தூக்கத்தில அத்தனை கோபம் வரும்போது கோவக்காரியான உனக்கு கோப‌ம் வருவது நியாம்தான !!!

ங்கிட்ட இருந்து நீ நிறைய கத்துக்கிட்டதா சொல்லி இருக்க. உனக்கு தெரியுமா நான் கூட உங்கிட்ட இருந்து நிறைய கத்துகிட்டுவரன். முக்கியமா நம்ம ரெண்டு பேருக்குமே பிடிச்ச மெடிகல் சயின்ஸ் பத்தி உன் மூலமா நிறைய தெரிஞ்சுக்கிறேன். இதுல ந‌ம்ம அப்பாக்குதான் ரொம்ப சந்தோஷம். இப்பல்லாம் அவரு அடிக்கடி சொல்லி கொள்வது என்ன தெரியுமா? நான் நிறைவேற்றிடாத அவரின் ஆசையை நீ படித்து நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறாயாம். நான் என்னடி செய்வேன். எனக்கும் மெடிக்கல் படித்திட ஆசைதான். அதற்காக எத்தனை Entrance Exams எழுதியிருப்பேன். வெளி ஊருல படிக்க வாய்ப்பு கிடைச்சும் உங்கள எல்லாம் விட்டுட்டு எப்படி போறதுன்னு சொன்னேன். இப்ப பாத்தியா ராமன் தேடிய சீதையாய் உன் மாமா என்னை தேடி வர நானும் அவருடன் உங்கள எல்லாம் விட்டு பிரிந்து இவ்வளவு தூரம் வந்துட்டேன். நினைக்குறப்ப‌ வியப்பாதான் இருக்கு. மருத்துவ பணி புனிதம்தான்.ஆனா நான் என்ன செய்ய அதை விட புனிதமான டீச்சர் வேலை எனக்காக காத்துக்கிட்டு இருந்திருக்கு. என்ன, நான் சொல்றது சரிதானே... உன்னைப்போல மருத்துவம் படிப்பவர்களுக்கு கூட கற்றுக்கொடுத்திட ஒரு ஆசிரியர் தேவை இல்லையா!!!

மீபகாலமா நம்ம அம்மாவின் புலம்பல் இது.... "எனக்கு அம்மாவும் இவதான் மாமியாரும் இவதான்!" பாவமடி நம் அம்மா, கைகுழந்தையாக இருக்கும் போதே த‌ன் தாயை இழந்தவங்க. அதனால சில சமயங்களில் எட்டி பார்க்கும் உன் மாமியார் வேஷத்தை கலைச்சுட்டு அவங்களுக்கு அம்மாவாகவே இருந்து விடு!

ரி உன் பிறந்த நாள் அதுவுமா இதுக்கு மேல உன் பொறுமையை சோதிக்க மாட்டேன். இதுல எழுதி இருக்குற எல்லாம் எனக்கு தெரிந்ததுதானே அப்படிங்குற‌ உன் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது. அதனால் சில வரிகளோட முடிச்சிக்கிறேன்.

டீனேஜை விட்டு அடல்ட் உலகத்தில் காலடி எடுத்து வைக்கும் உன்ன அன்புடன் எங்க உலகத்திற்கு வரவேற்று கொள்ளுகிறோம். ஒன்னு மட்டும் சொல்றன் எத்தனை வயதானாலும் மனதளவில் குழந்தையாக இருந்திடு... என்றுமே சந்தோஷமா இருப்பாய்!

ன் கனவை நிஜமாக்கு ! கோல்ட் மெடல் வாங்கிடு ! விரும்பிய படியே மேற்படிப்பில் சைக்காலஜி எடுத்து படி! உன் துறையில் நீ வெற்றி பெற இந்த அக்காவின் வாழ்த்துக்கள்!!! மேலும் உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!(பி.கு........மேலே உள்ள புகைப்படத்தில் அம்முவின் கால்களை உரசிக்கொண்டிருப்பது கேரளாவின் அதிரம்பள்ளி அருவி!என்னவர் எடுத்த புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது)

Thursday, April 1, 2010

ஒரு கவிதை... ஒரு ஓவியம்... ஒரு விருது!
விக்கின்ற ணர்வுகள்

னம் புரியாத ஓர் உணர்வு
உணர்ச்சிகளின் முழு வடிவமாக இன்று !

பலமுறை பல கேள்விகளை
எழுப்பிய உணர்வு !
பதில் யோசித்து யோசித்து
அதில் என்னை மறந்த உணர்வு !

சந்தோஷங்களில் மூழ்குகின்ற‌ உணர்வு !
கண்ணீரிலும் கரைகின்ற‌ உணர்வு !
உண‌ர்வுக‌ள் அலைமோதிட‌
உணர்ச்சிக‌ள் த‌தும்ப‌
இத‌ய‌த்தின் ஆழ‌த்தில் எழுதிய‌ உண‌ர்வு !

பலப்பல கற்பனைகளை
வளர்த்த உணர்வு !
சில கவிதைகளையும்
படைத்த உணர்வு !

எண்ணற்ற மாற்றங்களை
என் உள்ளம் சந்தித்த போதிலும்
மாறாதொரு உணர்வு !
அதே உள்ளம்
சோகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டு
உயிர் இழந்து
முடிவாக எத்தனையோ விஷயங்கள்
மறந்த போதிலும்
மறக்காதொரு உணர்வு !

சொல்ல தவறிய வார்த்தைகளுக்காக‌
இன்று சொல்ல நினைத்தும்
முடியாமல் தவிக்கின்ற‌ உணர்வு !

சொல்லாமலே உள்ளுக்குள்
உறைந்து கிடக்கும் உணர்வு !
இறுதிவரை என்னுள்ளே
வாழ்ந்து கொண்டிருக்க போகும் உண‌ர்வு !
இதுவும் சுகமாக எனக்கு !


*******************************************************


ச்சும்மா வரைஞ்சது !!!
***********************************************************


திவுலகில் சில வாரங்களாக தொடர் பதிவுகள்.... விருதுகள்.... என்று தொடர்ந்துக் கொண்டு இருக்கிறது. எனக்கு கிடைத்து இருக்கும் இரண்டாவது விருது இது.


இந்த விருதை அளித்த தோழி பத்மாவுக்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறேன். மிகவும் சந்தோஷத்துடன் இந்த விருதினை நானும் சில நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.