Subscribe:

Pages

Showing posts with label கோலம். Show all posts
Showing posts with label கோலம். Show all posts

Friday, January 14, 2011

தி ஆர்ட் ஆஃப் கோலம்!

        பொங்கல் என்றதும் சட்டென்று என் நினைவில் வருவது கோலங்கள்தான். தினந்தினம் கோலங்களால் வீட்டு வாசலை அழகுப்படுத்தும் நம் நாட்டுப் பெண்கள்தான் எத்தனை கலை நயமிக்கவர்கள்! அதிலும் இந்த திருநாட்களுக்காக‌ போடப்படும் கோலங்கள் கொள்ளை அழகுதான். என் சிறுவயதில் அம்மா கோலமிடுவதைக் கண்டு பிரமித்து இருக்கிறேன். அந்நாட்களில் பள்ளி செல்கையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போடப்பட்டு இருக்கும் கோலங்களை கண்டு வியந்து, நமக்கும் இதுபோல் கோலம் போட வருமா, அதுவும் இவ்வளவு பெரியதாக எல்லாம் கோலமிட முடியுமா? என கேள்விகள் எழும்பும்.

அம்மா அவர்களுக்கென்று ஒரு நோட்டு புத்தகத்தில் நிறைய கோலங்கள் வரைந்து வைத்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். அப்பொழுது நானும் உங்களை மாதிரி கோலம் போட வேண்டுமென அம்மாவிடம் சொல்ல, தனியாக பேப்பரும் பென்சிலும், அவ‌ர்கள் போட்ட கோலம் ஒன்றினையும் த‌ந்து, அதை பார்த்து போடச் சொன்னார்கள். புள்ளிகளை மிகச் சரியாக வைத்து முதல்முறையாக ஐந்துவயதில் ஒரு ஐந்துப்புள்ளிக் கோலம் போட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.

அம்மாவிடமிருந்து நிறைய பூக்கோலங்களை கற்றுக்கொண்டு வந்த போதிலும் என்னுடைய ஈர்ப்பு எப்பொழுதும் சிக்கு கோலங்கள் மீதே இருந்தது. ஏனோ அம்மாவிற்கு அதில் ஆர்வம் குறைவு... ஆனால் அதுதான் எனக்கு  ரொம்ப பிடித்த ஒன்றானது. பின் அம்மாவை போலவே நானும் எனக்கென ஒரு நோட்டுபுத்தகம் உருவாக்கிக்கொண்டேன்; அதில் தொன்னூறு ச‌தவீதம் சிக்கு கோலங்கள்தான் இருந்தன.

எதையும் கற்றுக்கொள்ளும் புதிதில் அடிக்கடி செய்துப்பார்க்க தோன்றுமில்லையா, அப்படிதான் கொஞ்சம் வளர்ந்த பெண்ணான‌ பிறகு நானே விரும்பி தினமும் ஒரு கோலம் என்று போட்டு வந்தேன். ஆர்வமிகுதியால் பள்ளிவிட்டு வந்தபிறகு மாலையிலும் கோலமிடுவது சில நேரங்களில் தொடர்ந்தது. நான் கோலம் போட ஆரம்பித்த பிறகு நிறைய சிக்கு கோலங்கள்தான் எங்கள் வீட்டு வாசலை அலங்கரித்தது. அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களோ, வீட்டிற்கு வருபவர்களோ கோலத்தை பற்றி கேட்டுவிட்டால் போதும், அம்மாவோ பெருமையோடு "எனக்கு சிக்கு கோலமே வராது, ஆனா என் பொண்ணு என்ன சுலபமா போடுறா" எனச் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள்.

கற்றுக்கொண்ட ஒன்று பழக்கமாகிப் போகும்போது ஆர்வம் குறைந்து போர் அடிக்க ஆரம்பிக்குமே... அப்படிதான், என் கல்லூரி நாட்களில் கோலம் போட என்னை எழுப்பும் அம்மாவிடம் அதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் என்று சொல்லி மறுத்ததுண்டு(என்னசெய்வது அப்போதெல்லாம் தூக்கம்தான் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது) அப்பொழுதுதான் 'ஏன் கோலம் போடனும்... அதனால என்ன பயன்...' என அம்மாவிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்ததின் தொடர்ச்சியாக அவற்றை பற்றி நான் தெரிந்துக்கொண்டவைகள்.....

A decorative appearance என்பதையும் தாண்டி ஆரம்ப கால‌ங்களில் அரிசி மாவினால் கோலம் போடப்ப‌ட்டதால் சின்னஞ்சிறிய உயிரினங்களுக்கு உணவாக இருந்திருக்கிற‌து என்பது நாமனைவரும் அறிந்ததே. காலையில் ஒளிரும் சூரிய ஒளிகதிர்களால் உடலுக்கு நல்லது என்றும், குனிந்து நிமிர்ந்து கோலமிடுவதால் பெண்களுக்கு உடற்பயிற்சியாகவும், முக்கியமாக Reproductive organs சிறந்தமுறையில் இயங்குவதற்கும் உதவுகிறதாம். மேலும் புள்ளிகள், கோடுகள், வட்டம், சதுரம்....என்று பலகோணங்களில் போடப்படுவதால் கோலங்களை Mathematical type of art என்றும் சொல்லப்படுகிறது; அழகு, ஆரோக்கியம், கணிதம், பக்தி என‌ அனைத்தையும் கொண்டு, கோலம் ஒரு பெண்ணுக்குள் இருக்கும் கலை உணர்வை வெளிக்கொண்டு வருகிறது. பொறுமை மற்றும் கான்ஸ்சென்ட்ரேஷன் பவரை அதிகப்படுத்துகிறது. இதையெல்லாம் விட சிக்கு கோலங்களைப்பற்றி எனக்கு தெரிந்த கேள்விப்பட்ட ஒன்றிது; எப்படி ஒரு புள்ளியில் ஆரம்பித்து, இருபது முப்பது புள்ளிகள்வரை நீண்டு, அவைகள் அத்தனையும் இணைத்து ஒரு கோலமாக்க முடிகிறதோ அதேப்போலதான், வாழ்க்கையில் எந்த மாதிரியான சந்தர்ப்பங்களிலும் பிரச்சனைகளில் இருந்தும் அழகாக சுமுகமாக நடந்துக்கொள்ள‌ கோலமிடுதல்… சிறந்த பயிற்சி அளிக்கிறதாம். இதோ... அத்தகைய சிறப்பு மிக்க சிக்கு கோலங்களை, என் நோட்டு புத்தகத்தில் நான் வரைந்து வைத்திருந்த ஒரு சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.