Subscribe:

Pages

Wednesday, November 28, 2012

உறங்கும் அழகி...!

      
       எந்த ஒரு காட்சியையோ அல்லது ஒரு புகைப்படத்தையோ  பார்த்து உடனே வரைந்து பார்க்க தோன்றும்... அப்படி தோன்றிய உடனே அவற்றை இன்னும் கூர்ந்து கவனிப்பேன். ஒவ்வொரு அங்கமாக பார்த்து அதில் இருக்கும் அனைத்தையும் மனதில் உள்வாங்கிக்கொண்ட பிறகுதான் வரைய வேண்டும் என்ற முடிவுக்கு வருவேன். அப்படி பார்த்தவுடனே பிடித்து போனது தோழி ஒருவர் தந்த பெண் குழந்தையின் போட்டோ. கண்மூடி உறங்கும் அழகியாக தோன்றியது. அதிலும் அந்த குழந்தையின் தலைமுடி அவ்வளவு அழகாக இருந்தது. அதற்காகவே இதை வரைந்துப் பார்க்க வேண்டுமென நினைத்தேன். நினைத்த படி மூன்று மணி நேரத்தில் வரைந்ததுதான் இங்கே காணும் பென்சில் ஸ்கெட்ச்.

Sunday, November 11, 2012

மீண்டும் உங்களோடு.....

 

      "நான் இந்தியாவுக்கு போறேன்"... என தெரிந்தவர்களிடம் எல்லாம் சந்தோஷத்துடன் சொல்லிக்கொண்டிருந்த நான் அதே மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இந்த வருட தொடக்கத்திலே தாய் நாட்டிற்கு பயணமானேன். இதுவரை வெளியூர்களுக்கு தனியாக சென்றிராத நான் முதல்முறை அதுவும் தனியாக விமான பயணம் எனும்போது, விமானத்தில் நம் பக்கத்து சீட்டில் யார் வந்து அமர போகிறார்கள் என்பதில் ஆரம்பித்த சுவாரஸியம்... பயணம் முழுவதும் தொடர்ந்து, நொடிக்கொரு தரம் மாறும் காட்சிகளுடன், நிறைய புதுமுகங்களின் அறிமுகங்கள், வண்ணமயமான அனுபவங்கள் என எல்லாமே சேர்ந்து என்னை புதுப்பித்துக் கொடுத்தது.

ஐந்து வருடத்திற்கு பிறகு என்பதால் ஊரில் நிறைய மாற்றங்களை காண முடிந்தது. 'தானே'விற்கு பிறகு சற்று பொலிவு இழந்திருந்ததாலும் புதுச்சேரி தனக்கே உரிய அழகுடன் இருந்தது மனதிற்கு நிறைவை தந்தது. தேடிச்சென்று பார்த்துவிட்டு வந்த சொந்தங்களால் சந்தோஷம் என்றாலும் என்னை தேடி வந்த பார்த்த எனது நண்பர்களால் அளவில்லா சந்தோஷம் கொண்டேன். இழந்து போய்விட்டதாய் நான் நினைத்திருந்த சில நட்புகளை புதுப்பித்துகொள்ள முடிந்தது. குடும்பம் குழந்தை என வாழ்வில் கொண்ட மாற்றங்கள் எதுவுமே எங்களது நட்பினை மாற்றவில்லை எனும்போது...என்னசொல்வது, மனம் மகிழ்ந்தது!


 
(புதுச்சேரியின் அடையாளமாக வீற்றிருக்கும் காந்தி தாத்தாவை சுற்றி படத்தில் இருப்பது... எங்க வீட்டு தோட்டத்து மாங்காய்கள், நான் போட்ட கோலம், எங்க வீட்டு செல்ல புஜ்ஜி&குட்டிமா, அம்மாவின் கைமணத்தில் சில்லி சிக்கன், ஆசையாக பூ தொடுக்கும் நான், கடற்கரை மணலில் என்னவருக்காக‌ எழுதிய அன்பின் மொழி)

எனக்கே எனக்கான சின்ன சின்ன ஆசைகளை எல்லாமே சந்தோஷமுடன் நிறைவேற்றிக்கொண்டேன். காலையில் கண் விழிக்கும் முன்னே கேட்கும் காக்கா குருவிகளின் சத்தம், எந்நேரமும் கேட்டுக்கொண்டிருக்கும் வாகனங்களின் இரைச்சலும், எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும் மனித பேச்சுக்கள்... என இவைகள் எல்லோமே... சுத்தமாக துடைத்து வைத்தாற்போல் அமைதியாக இருக்கும் இங்கே ஒருபோதும் கிடைப்பதில்லை. மாலையில் பைக்கில் செல்லும்போது தொட்டு செல்லும் தென்றலின் இனிமையும் அது தரும் சுகமும், நிச்சயமாக கண்ணாடி கதவை மூடிக்கொண்டு செல்லும் காரில் கிடைப்பதில்லை. எத்தனை உயர் தரமான ரெஸ்டாரன்டிலும் கிடைக்காத சுவை, அம்மாவின் கையால் சமைக்கும் போது மட்டும் கிடைக்க, அனுதினமும் சுவைத்து மகிழ்ந்தேன். உண்மையிலே நீ நல்லா சமைப்பியா என கேட்ட என் தம்பி தங்கையிடம் நான் அங்கு வரும் போது நிச்சயமாக நிருபிக்கிறேன் என சொல்லியிருந்தேன். ஆனால் சொன்ன படி அவர்களுக்கு எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை காரணம் என் அம்மாவின் கைமணத்தில் நான் உண்டு மகிழ்ந்து..... சமைப்பதையே மறந்தேன். அங்கிருந்த ஒவ்வோரு நாளும் என் தங்கையுடன் கழித்த நாட்கள் மிக இனிமையானவை. என்னுடைய தோழிகளை விட என் தம்பி தங்கையின் நண்பர்களுடன் கழித்த பொழுதுகளே அதிகம். அக்கா அக்காவென அன்புடன் அழைத்து என்னை சிரிக்க வைத்து அவர்கள் பொழிந்த பாச மழையில் சுகமாய் நான் நனைந்தேன்.

இனிமையாக நகர்ந்த சென்ற நாட்களில் மனதை மட்டுமல்ல உடலையும் ரனப்படுத்திய சாலை விபத்து மட்டும் தீராத அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. சிறிய ஊராகிய புதுச்சேரியில் அளவுக்கு அதிகமான ஜனத்தொகையால்... போக்குவரத்து மிக மோசமாகி வருவது வருந்தவைக்கிறது. விபத்தின் பயம் ஒரு பக்கம் இருந்தாலும் , நடந்த அடுத்த நொடியே முன்பின் அறியாத முகங்களானாலும் ஓடி வந்து உதவிய அந்த மனித அன்பிற்கு ஈடு இனை எதுவும் இல்லை என்றுதான் சொல்வேன். விபத்து என்பது இத்தனை பாதிப்புக்குள்ளாக்குமா என உணர வைத்து, உயிரின் மதிப்பை புரிய வைத்தது. உண்மையிலேயே கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு வரமாக நினைத்து வாழ கற்றுக்கொடுத்தது.

நிறைய புதுமுகங்கள் அதனால் கிடைத்த‌ அனுபவங்கள்... நான் ரசித்து, நேசித்த நிமிடங்கள், யோசிக்க வைத்த சம்பவங்கள், மனதை பாதித்தவைகள்... என‌ எனக்குள் சேமித்துக்கொண்டதை, சில சமயம் நேரமில்லாமலும் பல சமயம் ஆர்வம் இல்லாமலும் எழுத நினைத்தும் எழுதாமல் இருந்துவிட்டேன். ஆனாலும் தொடர்பில் இருந்த பதிவுலக நண்பர்களால் மீண்டும் எழுத தோன்றியது. இதோ பயணம் தந்த புத்துணர்வுடன் மீண்டும் தொடர்ந்து எழுத நினைத்திருக்கிறேன்.(இந்த இடைப்பட்ட நாட்களில் என்னுடைய முந்திய‌ பதிவுகளுக்கு பின்னூட்டம் அளித்த நண்பர்களுக்கு என் அன்பான நன்றிகள்).

ஒன்றல்ல இரண்டல்ல முழுவதுமாக எட்டு மாதங்கள் அங்கிருந்த ஒவ்வொரு நாளும் எனக்கே எனக்காக நான் வாழ்ந்த நாட்களது.