Subscribe:

Pages

Saturday, November 27, 2010

இயற்கையின் எழிலில்... வண்ண ஓவியங்கள்!

          கொஞ்சம் சிரமமாக தெரிந்தாலும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை புகைப்படம் எடுத்து, பின்பு அதை பார்த்து வரைவது என்பது சந்தோஷம் தர‌க்கூடியதாகவே இருக்கிறது. அப்படி என்னால் வண்ணம்தீட்டபட்ட‌ ஓவியங்கள் மிக குறைவுதான். கீழே காணும் இரண்டு ஓவியங்களும் அப்படி வரையப்பட்டவைக‌ள்தான். முதல் முறையாக என்னவரின் கொலீக் ஒருவர் அவர் வீட்டு அருகாமையில் உள்ள சிறிய பாலத்தையும் அதன் கீழே ஓடும் ஓடத்தையும் ரசித்தவராய் அதை அப்படியே பெயிண்ட் பண்ணி தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டவர், பின் அவரே அந்த இடத்தை புகைப்படமும் எடுத்து கொடுத்தார். சில நாட்களிலேயே அவர் விரும்பியபடி வரைந்துக்கொடுக்க, சந்தோஷமுடன் பெற்று சென்றார். இதேப்போல் நான் வரைந்த ஐந்தாறு ஓவியங்கள் என்னை நியாபகப்படுத்தியபடி எனது உறவினர்க‌ள், நண்பர்களின் வீடுகளில் இருக்கிறது.இயற்கையை படம்பிடித்து வரைவது சிறப்பல்ல என்பதுபோல் இங்குள்ள சில ஓவிய கலைஞர்கள் அழகான இயற்கை எழில் நிறைந்த இடங்களை தேர்ந்தெடுத்து அங்கேயே அமர்ந்து வரைந்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். உயிரோட்டமுள்ள ஓவியமாக அவைகள் உருவாகிற‌தை காணும் போது அதிசயத்து நின்றிருக்கிறேன். இறைவன் நல்ல ரசனை உணர்வு நிரம்பிய நேரத்தில் படைக்கப்பட்ட பகுதி இந்த தென்பிரான்ஸ் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன், இங்குள்ள இயற்கை அழகினை ரசிக்கும்போது. அப்படி கடவுளால் தீட்டப்பட்ட ஓவியங்களை.... அத்தகையை இடங்களை ரசிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் இங்குள்ள‌ சில ஓவிய‌கலைஞர்கள் உயிரோட்டமுள்ள‌ கலைப்படைப்புகளை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள். தற்பொழுது சாத்தியமில்லை என்றபோதும், எனக்கும் ஆசைதான் என்றாவது ஒரு நாள் அவர்களை போல நானும் எழில் கொஞ்சும் இயற்கையினை என் கண்களினால் படம்பபிடித்தபடி வரைய வேண்டுமென்று. முயற்சிக்க‌வேண்டும்....!

Sunday, November 21, 2010

பொக்கிஷம்!


ண்ண‌ற்ற பரிசுகள்
உன்னிடமிருந்து
முதல்பார்வை கொண்டு
இன்றுவரை
ஒவ்வொன்றும்
ஒரு பொக்கிஷமாகவே!

ஜெபமாலை......
சிறிது ஏமாற்றம்தான் என்றாலும்
உன்னிடமிருந்து
முதலாய் வ‌ந்த பெருமையதற்கு...
தெய்வத்திடமிருந்தே ஆரம்பம்
நமதுறவு என்பதால்!

காய்ந்தப்பின்பும்
காதலுடன்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
நீ கொடுத்த ரோஜா.....
காலம் கடந்தும் தொடரும்
உன் அன்பைப் போலவே!

என்னில் நீ ரசிப்பவைகளில்
என்றும் முதலிடம் பிடிப்பது
என் நெற்றி பொட்டு......

அன்று நீ வாங்கிக்கொடுத்தது
இன்றும் என்னிடம்
பத்திரமாக‌!

குழந்தையின் பாதமாக
எண்ணி கொஞ்சிடும் நீ
அழகுபடுத்திட‌ பரிசளித்தாயே
தங்க கொலுசு......
என்றுமே என் கால்களை தழுவியபடி
வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
எழும் சலங்கை சப்தம்
உன்னை நினைப்படுத்திக்கொண்டு!

என்னை நினைத்து எழுதிய
கவிதை பக்கங்கள்….....
எனக்காக பார்த்து பார்த்து
வாங்கிய ஆடைகள்….....
கடைசியாக
என் பிறந்த நாளுக்கு
பரிசளித்த கைகடிகாரம் வரை
அனைத்துமே என்னிடம்
பொக்கிஷங்களாக‌……..

நமதுறவில் எழுதிய க‌விதையாய்
உன்னால் மட்டுமே தரக்கூடிய‌.....
தந்த உயிரின் பரிசைமட்டும்
தொலைத்து விட்டவளாய்
கண்ணீருடன் நான்!

Friday, November 12, 2010

பகிர்தலை நோக்கி....

 தொடர்ந்து பதிவெழுதுவதில் ஏனோ... தவிர்க்க முடியாமல் சிறு சிறு இடைவெளி வந்துவிடுகிறது. ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் நான் சந்தித்த சம்பவங்கள் மனிதர்கள் என் எல்லாமே சுவாரஸியமாக அமைந்துவிட, இங்கே சந்தோஷமுடன் அவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஓவிய கண்காட்சிகளில் பங்குபெற நிறைய‌ வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருந்த போதிலும் விருப்பமில்லாமல் சில காலமாக தவிர்த்து வந்தேன். இம்முறையும் அப்படி ஒரு வாய்ப்பு தேடிவர தவிர்க்க முடியாமல் கலந்துக்கொண்டதற்கான‌ காரணம் இந்தியா நாட்டினை தலைப்பாய் கொண்டு நடத்தப்பட்டது என்பதால். மற்ற நாடுகளை பற்றியும் அவர்களின் கலாச்சாரங்களை பற்றியும் தெரிந்துக்கொள்வதில்தான் எத்தனை ஆர்வம் இவர்களுக்கு!


சமீப காலமாக‌ இங்குள்ள மக்கள் இந்திய நாட்டை பற்றி தெரிந்துக்கொள்வதில் அதிக ஆர்வம் கொள்கிறார்கள். கடந்த சில நாட்களாக‌ நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் விழாக்களே இதற்கு சான்று!நான் பணிபுரியும் இடத்தில் சென்ற மாதம் Voyage en Inde என்ற தலைப்பில் ஒரு மாலை பொழுதினை ஏற்பாடு செய்ய, இந்திய பெண்ணானதால் பாதிக்கு மேற்பட்ட பொறுப்பு என்னிடம் வந்து சேர்ந்ததுவிட்டது. நம் நாட்டின் முக்கிய அம்சங்களை விளக்கப்படங்களுடன் கட்டுரையாக தொகுத்து வழக்கியது, விழா நடைப்பெற்ற ஹாலின் வாசலில் கோலம் போட்டது, மாலை பொழுதினை சுவைத்து மகிழ்ந்திட சிற்றுண்டி தயார் செய்தது என..... இதற்கான தேடலின் போதுதான் நம் நாட்டை பற்றி இன்னும் நிறைய தெரிந்துக்கொண்டேன். இந்திய பெண் என சொல்லிக்கொள்வதில் பெருமையாகவும் உணர்ந்தேன்.


கோலமிட எதுவும் கிடைக்காத போதும் கிடைத்த ஒரு சில கலர் மணல்களை வைத்து அவசர அவசரமாக‌ கோலமிட்ட  சில‌ நிமிடங்கள்  மீண்டும் நம் தமிழ்மண்ணை நினைக்க வைத்தது. ஊரில் இருக்கும்போது நன்றாகவே கோலம் போடுவேன் என்றாலும் இங்கு வந்து இப்படி பிரெஞ்சு மக்களுக்காக என்ற போது ஏதோ முதல்முறை போன்றதொரு உணர்வு எற்பட்டது. எனக்கு உதவியாக ஒரு பிரெஞ்சு நண்பரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்து கோலமிட்டதை கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. கோலத்தை குறித்து நிறைய கேள்விகளை எழுப்பினர். அது ஆரம்பக்காலங்களில் எதற்காக போடப்பட்டது, அதனால் வரும் பயன் என்ன, இப்பொழுதும் தொடர்கிறதா என நம் நாட்டின் இந்த பழக்கத்தை கண்டு பிரமித்தனர்! நமது முன்னோர்களின் ஆழ்ந்த சிந்தனையையும் கலைதிறனையும் கேட்டு வியந்தனர்!

இந்தியாவிற்கு சுற்றுலா சென்று வந்த நண்பர் ஒருவர் slide projector ரில் இந்திய‌ புகைப்படங்களை காண்பிக்க‌...... பின்னணியில் இனிமையான கர்னாடக சங்கீதமும் இசைத்துக்கொண்டிருக்க‌, பருகிட தேனீர், கூடவே சம்மோசாவும், மசால வடையும் சுவைத்து மகிழ்ந்த சில மணி நேரங்கள் வந்திருந்த அனைவரும் இந்தியாவிற்கே பயணித்தது போல் இருந்தது என்றனர்.

இதேபோல் எங்கள் ஊரில் உள்ள‌ (Médiathèque) மீடியாசென்டரிலும் Novembre en Inde என்ற தலைப்பில் கடந்த சில நாட்களாக இந்திய சமையல், இலக்கியம், சினிமா, கோலமிடுதல், மியுசிக்கள் கான்ஃபெரன்ஸ், புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சியென ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கு இந்திய மக்கள் அதிகமில்லாத பகுதி என்பதால் அடிக்கடி இந்திய பயணம் மேற்கொள்ளும் பிரெஞ்சு மக்கள் அனைவரும் சேர்ந்து இப்படி ஒரு பகிர்தலை மேற்கொண்டுள்ளார்கள். இவற்றின் நோக்கமே மற்ற நாடுகளின் மொழி, இனம், மதம், கலாச்சார பழக்கவழக்கங்கள்........ பற்றி தெரிந்துக்கொள்வதற்காகவே!


கடந்த வாரம் இரண்டு நாள் தொடர்ந்து நடைபெற்ற இந்திய சமையல் வகுப்புகளில் கலந்துக்கொண்டு வந்திருந்த பதினைந்துக்கும் மேற்ப்பட்ட பிரெஞ்சு பெண்களுக்கு நம் தென் இந்திய‌ சமையலை செய்துக்காட்டியது மிகவும் சுவாரஸியமாக இருந்தது. முதல்முறை இப்படி வெளியிடத்தில் சமைப்பது என்பது கொஞ்சம் சவாலாகவே தெரிந்தது எனினும் சரியான முறையில் சுவையாக செய்துவிட, அனைவரும் ஒன்று சேர்ந்து ருசித்து மகிழுந்தது நிறைவாக இருந்தது.

அடுத்து, அனைவரது பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் எனது ஓவியங்கள்.... கீழே காணும் படங்கள்.... சென்ற வாரம் எடுத்தது.வழக்கம்போல எனது ஓவியங்களை காண்பவர்கள் கேட்கும் கேள்விக‌ள் "ஏதாவது டிராயிங் கிளாஸ்க்கு போயிருக்கிங்களா?","எத்தனை வருஷம் கத்துக்கிட்டீங்க?" என இம்முறையும் கேட்கப்பட.... "இல்லை, அப்படி எதுவுமில்லை. என் குடும்பத்தில் அனைவரும் ஓரளவிற்கு வரைய தெரிந்தவர்கள், அதனால் அது ஜீன் வழியாக‌ வருகிறதுன்னு நினைக்கிறேன்" என்ற எனது பதிலும் வழக்கமானதாக இருந்தது.

நிகழ்ச்சி அழைப்பிதழ்களிலும்.... நிகழ்வினை பற்றி வெளிவந்த செய்திதாள்களிலும் எனது பெயரை கண்டு மகிழும் உள்ளம்.........
நம் நாட்டை பற்றி ஆர்வமாய் பல வகையான கேள்விகள், நிறைய விமர்சனங்கள், ஒருவர் மற்றொருவருடன் தெரிந்த நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளுதல் என இனிமையாக நகரும் நிகழ்வுகளில் நானும் கலந்துக்கொண்டதில் இந்திய பெண்ணாய் பெருமைகொள்ள‌தான் செய்கிற‌து.