Subscribe:

Pages

Monday, March 29, 2010

எனக்கு பிடித்த (10) பெண்கள்........

தீபா
அழகு:

அழகு என்றால் தீபா
தீபா என்றால் அழகு


இப்படிதான் சொல்ல தோன்றுகிறது…அந்த அழகிய பெண்னைப் பற்றி நினைக்கும்போது. தீபா ஒரு வட‌ நாட்டுப்பெண். பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவ‌ கல்லூரியில் B.Pharm.படிக்கவந்தவர்.

அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். சில வட‌ நாட்டு பெண்கள், கல்லூரியில் ஹாஸ்டல் வசதி இல்லாததால் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்கள். இவர்களில் பளிச்சென்று தெரிந்தவர்தான் தீபா. வெறும் அழகி என்று சொல்ல முடியாது...தேவதை!

தீபா அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். எங்கள் அனைவருடனும் மிக friendlyயாக ப‌ழகுவார். கல்லூரி கலை நிகழ்ச்சிகளின் போது தீபா தன்னை அலங்கரித்து செல்வதை சொல்ல வார்த்தைகள் போதாது. (அவர் மட்டுமே தாவணி அணிந்து தலையில் பூவைத்து செல்வார்). அச்சமயங்களில் என் அம்மா தீபாவை அழைத்து கண்ணு பட்டு விடும் என்று சுற்றி போடுவார்கள்.

அழகை தன் மேனியில் மட்டுமல்லாமல் மனதிலும் கொண்ட தீபாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவளை முதல் முறை பார்த்துபோது இதுவரை இப்படி ஒரு அழகான பெண்ணை பார்த்ததில்லையே என்றும் இனி அப்படி ஒரு பெண்ணை பார்க்க போவதும் இல்லை என்றுதான் நினைத்தேன். உண்மைதான்… இன்றுவரை அவளைவிட அழகாக ஒருத்தியை பார்த்ததும் இல்லை இவ்வுலகில் இருப்பதாக தோன்றவும் இல்லை. இன்று உலகில் எந்த மூலையில இருக்கின்றாரோ தெரியாது... ஆனாலும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
(வருத்துகிறேன் இப்படி பின்னாளில் அவரைப் பற்றி எழுதுவேன் என்று தெரிந்திருந்தால் ஒரு போட்டோ ஆவது வாங்கி வைத்திருப்பேன். நான் சொல்வது எவ்வளவு உண்மை என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்)


மஸிக்கா
உற‌வு :

உறவுக்கார பெண் அல்ல‌ என் எதிர் வீட்டு பெண். அல்ஜேரியா நாட்டை சேர்ந்த முஸ்லிம் பெண். சிறு வயதிலே பிரான்ஸுக்கு வந்தவர். என்னை விட வயதில் மூத்தவர். என் கணவரின் மூலமாகத்தான் இவரின் நட்பு கிடைத்தது. சில உறவுகளிடம் இருந்து பாசம் கிடைத்தாலும் அதில் எப்பொழுதும் நட்பு இருந்ததில்லை. ஆனால் மஸிக்காவின் நட்பில் நான் உறவினை கண்டேன். அவரின் பாசத்தை கண்டு பிரமித்துபோனேன். இங்கு வந்த புதிதில் என்னவர் இரவில் வேலைக்கு சென்றுவிட்ட நாட்களில் பயமின்றி இருந்தேன் என்றால் அவங்களால்தான். என் வாழ்க்கையில் நான் சந்தோஷத்தை கொண்டாடிய‌ போது என்னை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டும், மிகப் பெரிய‌ இழப்பினை சந்தித்தபோது கட்டியனைத்து கண்ணீரும் விட்டவர். என் சந்தோஷத் தருணங்களில் அவரின் உண்மையான மிகிழ்ச்சியும்,சோகத்தில் கண்களில் கண்ணீரையும் பார்த்து இருக்கிறேன். இவருடனான உறவு இன்றும் தொடர்ந்துக் கொண்டு இருக்கிற‌து.


கிறிஸ்தியான
ஆர்டிஸ்ட் :

கிறிஸ்தியான் ஒரு ஆர்டிஸ்ட். 60 வயதை தான்டிய வயதிலும் அழகான ஓவியங்களை வரைபவர். என்னை இவரிடம் அறிமுகப்படுத்தி நான் வரைந்த படங்களையும் காட்டினார் என்னவர். என் ஓவியங்களை பார்த்து பாராட்டிய கிறிஸ்தியான் மறு நாளே என்னை ஒரு ஓவியப் பள்ளிக்கு அழைத்து சென்று அங்கிருந்தவர்களிடம் என்னை ஒரு ஆர்டிஸ்ட் என்றே அறிமுக படுத்தினார். முதல்முறை என்னையும் ஒரு ஆர்டிஸ்டாக பார்த்தவர் அவர்தான். அவருக்கு தெரிந்த ஒரு இடத்தில் என் ஓவிய கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்தவர். ஹாபியாக வரைந்துக் கொண்டு இருந்த என்னை கண்காட்சி செய்ய வைத்து முதல் முறையாக பணம் செலுத்தி என் படங்களையும் மற்றவர்கள் வாங்கும் படி செய்தவர். என் கலை பயனத்தில், என் முதல் படுக்கட்டாக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக என் பெயர் உள்ளூர் செய்தி தாள்களில் வர காரணமாக இருந்தவர்.


கரோல்
அரசு அதிகாரி :

அரசு அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர். எனக்கு இவருக்குமான அறிமுகம் officialலாகத்தான் இருந்தது. சிரித்த முகத்துடன் எளிமையாக‌ பேசிய இவரை பார்ததுமே பிடித்து விட்டது. இவர் அரசு பதிவியில் இருந்துகொண்டே யுனிவர்சிட்டியிலும் ஆசிரியராக பணி புரிகிறார். தனியாக ரிசேர்ச்சில் ஈடுபட்டு நிறைய புத்தக‌ங்கள் எழுதுகிறார். இதன் நிமித்தமாக அடிக்கடி வெளி நாடுகளுக்கு சென்று வருபவர்(நம் இந்திய நாட்டிற்கு கூட வந்து இருக்கிறாராம்).

 திறமைகள் இருந்தும் வெளி நாட்டினரை சற்று ஏள‌னமாக பார்க்கும் சில பிரெஞ்சுகாரர்களின் மத்தியில் இவர் மட்டும் வித்தியாசமானவர். சந்தித்த இரண்டாம் முறையே என் திற‌மைகளை மதித்து அவர் எழுதிய The adolescent pshycology என்ற ஆங்கில பிரெஞ்சு புத்தகத்தில் சில பக்கங்களை மொழி பெயர்ப்பு பணி செய்ய வாய்ப்பு அளித்தவர். சிறிய வயதிலேயே இத்தனை திறமைகள் இருந்தும் கொஞ்சம் கூட கர்வமோ தலை கண‌மோ இல்லாதவர் கரோல். எவ்வளவு உயர்ந்த நிலையை நாம் அடைந்தாலும் இவரை போலதான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.


லிதி
ந‌ட்பு :

Blog என்ற ஒன்று இருப்பதை எனக்கு அறிமுகப்படுத்திய தோழி. வெளி உலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்த சமயம் அது. வரைவதில் முற்றிலும் ஆர்வமின்றி இருந்தேன். அப்பொழுதுதான் லிதி நீ ஏன் ஒரு பிளாக் கிரியேட் பண்ணக்கூடாது? என்று கேட்டு அவளே ஒரு French blog ஒன்றை ஆரம்பித்து கொடுத்தாள். எனது தனிமையை கிரியேட்டிவாக மாற்றியது அவள்தான். ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறைய கற்றுக்கொண்டு அவளுக்கு தெரியாத சில வற்றை நான் சொல்லி கொடுத்த‌ போது கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் என்னை மனதாரப் பாராட்டியவள். அவள் ஆரம்பித்து வைத்ததின் தொடர்ச்சியாகதான் இந்த blogகும். இதன்மூலமாக எனக்கு கிடைத்த நட்பு வட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது இவளின் ந‌ட்புதான்.


ஷான்தால்
டீச்சர் :

+1ல் என் Maths Miss. எப்பொழுதும் அவரிடம் ஒரு ஸ்டைல் இருக்கும். பேசுவதில், நடப்பதில், பாடம் எடுப்பதில் என்று எல்லாமே அழகாக இருக்கும். எனக்கு இவரிடம் பிடித்ததே சாக்பீஸை எடுத்துக்கொண்டு பிளாக்போர்டில் எழுத ஆரம்பிக்கு அந்த நிமிடங்கள்தான். ஸ்டெப் பை ஸ்டெப்பாக கணக்குகளை விளக்கிக் கொண்டே அவர் எழுதுவதை பார்த்தால் சரியாக படிக்காத மாணவிக்கூட புரிந்துக்கொள்வாள். அத்தனை தெளிவாக அடித்தல் திருத்தல் இல்லாமல் neatஆக‌ எழுதுவார்.

எனது படிப்பு முடிந்து ஆசிரியர் வேலைக்கு சேர்ந்த ஆரம்ப நாட்களில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்தபடியே போர்டில் எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ரவுண்ட்ஸ் வந்த பிரின்ஸ்பால் வெளியில் இருந்தபடியே கவணித்து, பின் வகுப்பில் நுழைந்தவர் உங்க கை எழுத்து மிக அழகாக இருக்கிறது. போர்டில் நீங்க எழுதுவது மிக தெளிவாக நீட்டாக இருக்கிறது…. என்று சொல்லி மாணவர்களிடம் நீங்களும் உங்க‌ மிஸ் மாதிரி அழகா எழுத கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார். சந்தோஷமுடன் அவருக்கு நன்றி சொல்லிய அடுத்த நிமிடம் எனக்கு என் மிஸ்ஸின் முகம் நினைவில் வந்து போனது. மனதிற்குள்ளே அவருக்கும் நன்றி சொல்லி கொண்டேன்.


கஸ்தூரி
காதல் :

என் கல்லூரி தோழியான இவள் பார்ப்பதற்கு நடிகை மீரா ஜாஸ்மினை போல் மிக அழகாக இருப்பாள். சும்மா பொழுது போக்கிற்காக காதல், பெற்றவர்களை விட்டு ஓடிப்போய் வாழும் காதல், மெச்சுயூரிட்டி வந்தபின் கழட்டிவிட்ட காதல்.... என்று பள்ளி… கல்லூரி காலத்தில் என்னை சுற்றி நிகழ்ந்த சில காதல் கதைகளில், இவளால் மட்டுமே காதல் மரியாதைக்குரியது என்பதனை உணர்ந்தேன்.

விவரம் அறியாத வயதில் இருந்தே குடும்ப நண்பர் ஒருவருடன் நட்பாகி,பின் அவர்கள் வளர வளர காதலும் மலர்ந்துள்ளது. பேசும்போது எப்போதும் அவரின் பேரைச் சொல்ல மாட்டாள். அவர் சொன்னார், அவர் வந்தார் என்றுதான் சொல்லுவாள். அவள் எவ்வளவு சென்சட்டிவ் என்றால் தோழிகள் நாங்கள் யாரும் அவரை பெயர் சொல்லி பேசக்கூடாது, என்றாவது மறந்துபோய் ரிஷி எப்படி இருக்கார் என்று கேட்டு விட்டால் கோபம் கொண்டு எங்களை திட்டிவிடுவாள். (இப்போது அவரின் பெயரை சொன்னதற்காக மனதாற அவளிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்) என்ன இவ இப்படி இருக்கா என்று நினைத்துக்கொண்டாலும் அதில் மறைந்திருக்கும் அவளின் உண்மையான நேசத்தை நினைத்து சந்தோஷப் பட்டுக்கொள்வேன். இன்று காதல் கண‌வன், குழந்தை என்று அழகிய குடும்பம் அவளுடையது.


Clair Chazal
செய்தி வாசிப்பாளர் :


பிரான்ஸ் முன்னனி தொலைக்காட்சியில் (TF1) செய்தி வாசிப்பாளராக இருப்பவர். 50 வயதிலும் பார்ப்பவர்களை கவர்ந்து விடும் வகையில் இவரின் தோற்றமும் செய்தி வாசிக்கும் அழகும் இவரின் சிறப்பு. செய்தி வாசிப்பவர்களுக்கு குரல் வளம் எத்தனை அவசியமோ அதே போல் தோற்றமும், சரியான‌ வார்த்தை உச்சரிப்பும் அவசியம். சரியான முகபாவங்களும் தேவை. அது நேச்சுரலாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

நம் தமிழ் செய்தி வாசிப்பவர்களை பார்க்கும்போது ஏதோ ஒரு விஷேத்திற்கு கலந்துக்கொள்ள வந்தவர்களை போல பட்டு புடவையும், தலை நிறைய பூவும், நகைகள் என்று பார்வையாளர்களை சற்று உறுத்துவது போல் உள்ளதாக தோன்றும். அவர்கள் பேசுவது இயல்பாக இல்லாததைபோலவும் ரொம்ப கண்டிப்பான தோரணையில் சொல்லுவதாக‌ தோன்றும். அந்த வகையில் Clair chazalலின் இயல்பான செய்தி வாசிக்கும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்.


தாமரை
கவிஞர் :

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

என்ற வரிகளை கேட்டபோதே யாரிவர் என்று தேட வைத்தவர். அதன் பிறகு எத்தனையோ பாடல்களை எழுதி, சமீபத்தில் வந்த விண்ணைதாண்டி வருவாயா வரை பலபேரின் இதயத்தை கொள்ளை கொணடவர்.

நம்மை புதுபிப்பதில் அதிக பங்கு வகிப்பது இசை. அப்படிபட்ட இசைக்கு தகுந்த கவிதை வ‌ரிகள் அமைந்து விட்டால்... கேட்கும் போது சுகம்தானே! எப்பொழுதும் அழகிய பாடல் வரிகள் நம் மனதின் மெல்லிய உணர்வுகளை மாற்றி அமைக்க கூடிய சக்தி படைத்தவை. அப்படி நம் உணர்வுகளை புதுபித்துக்கொள்ள சிறந்த க‌விதைகளை தரும் தாமரை அவர்களை என்ன சொல்லி வாழ்த்துவது!


மோனலிசா

மோனலிசா.... Leonardo Da Vinci யின் மாஸ்டர் பீஸ் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இட்டாலியை சேர்ந்த டாவின்சியின் ஓவியம் பல நூற்றாண்டுகளாக பிரெஞ்சு அரசின் Royal collectionsன் கீழ் உள்ளது.

சிறுவயது முதலே இவரை பற்றி படங்களில் பார்த்தபோதோ பத்திரிக்கைகளில் படித்தபோதோ ஏதோ ஒரு மர்மமான பெண்ணாக தோன்றியது. அழகான பெண்களை எப்போதும் மோனலிசாவுடன் ஒப்பிட்டு சொல்லும்போது…. ஏன், யாரிந்த மோனலிசா ? என்று பல கேள்விகள் எழுந்தது. அந்த மாடல் பெண் யார்? அவரின் பார்வையிலும் புன்னகையிலும் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

அந்த மர்ம பெண்ணின் நிஜப்பெயர் Lisa del Giocondo. பின் ஏன் அவரின் Portraitக்கு மோன லிசா என்ற பெயர் வந்தது? இட்டாலி மொழியில் Mona என்றால் மேம்/மேடம் என்று ஆங்கிலத்தில் மரியாதையுடன் அழைப்பதைப் போன்ற‌ சொல் என்பதால் மோனாவுடன் அவரின் உண்மையான பெயரும் சேர்ந்து மோன லிசாவானது.

இன்றுவரை அவரைப்பற்றி நிறைய மர்மங்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த படத்தை நன்றாக உற்று பார்த்தால் தெரியும்… அப்பெண்ணின் ஓவியத்தில் புருவங்களோ கண் இமைகளோ இன்றி வரையப்பட்டு இருக்கும. வரைந்து முடிக்க நான்கு வருடம் ஆன நிலையில், இவரின் சோகம் கலந்த புன்னகையில் மறைந்திருக்கும் மர்மம் என்னவோ? தன் குழந்தையின் இழப்பால், தன் கணவனின் குடிப் ப‌ழக்கத்தினால், etc.... என்று இவரை பற்றிய studies சொல்கிறது.

500 வருடங்கள் கடந்தப்பின்னும் ஓவியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மோன லிசாவை போல் ஒரு பெண் இனி வரும் காலங்களில் கிடைப்பாரா?


***********

வர்களுடன்..... இதுவரை என் வாழ்வில் சந்தித்த இனி சந்திக்க போகும் பெண்கள் அனைவருமே எனக்கு பிடித்தவர்கள். இந்த தொடர் பதிவிற்கு அழைத்த நண்பர் Raghuக்கு என் நன்றிகள். வாங்க JoePadma,  appavi thangamani  இப்பதிவை தொடர்ந்திடுங்கள்.


 இதோ அதற்கான விதி முறைகள் !

1. உற‌வின‌ர்க‌ளாக‌ இருக்கக்கூடாது.
2. வ‌ரிசை முக்கிய‌மில்லை.
3. ஒரே துறையில், பிடித்த‌ ப‌ல‌ பெண்க‌ள் இருந்தாலும் ஒருவ‌ரைத்தான் குறிப்பிட‌வேண்டும்.
 Thursday, March 25, 2010

சம்திங் ஸ்பெஷல்.... !!!

    
     "ன்னோட பிறந்த நாளன்றுதான் மாப்பிள்ளைக்கும் பிறந்த நாளாம்" என்று என் அப்பாவின் பிறந்த நாளைப்பற்றி சொல்லி என் அம்மாவிற்கு (அவர்கள் திருமணத்திற்கு முன்) சந்தோஷத்தை கொடுத்தாராம் என் மாமா(அம்மாவின் அண்ணன்). "மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் ஒரே நாளில்தான் பிறந்த நாளாம்".....அப்பா அம்மாவின் திருமணத்தின் போது குடும்பத்தில் இதே பேச்சாக இருந்ததாம். ஆம்... இருவரின் பிறந்த நாளும் மார்ச் 25. திருமணம் முடிந்த அடுத்த பத்து மாதத்தில் பிறந்த முதல் குழந்தை நான். இரண்டரை வருடத்திற்குப் பின் பிறந்த என் தம்பிக்கு என்ன ஆசையோ..... வந்து பிறந்தான் அதே மார்ச் 25ல். எதிர்பாராமல் அதே நாளில் தம்பியும் பிறந்ததால் குடும்பத்தில் எல்லோருக்கும் ஆச்சரியம்.

சில வருடங்களுக்கு பிறகு... என் தங்கை, அம்மாவின் வயிற்றில் இருந்த சமயம் அது. மார்ச் மாதக்கடைசியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் டெலிவரி ஆகுமென்று டாக்டர் சொல்லிவிட வீட்டில் எல்லோருக்கும் இந்த குழந்தையும் அதே தேதியில் பிறந்து விடுமோ என்று நினைத்ததைவிட, எதிர்பார்த்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். மார்ச் 25தும் வந்தது! தம்பிதான் அம்மாவின் வயிற்றை தொட்டுப் பார்த்துக்கொண்டே "பாப்பா இன்னைக்கு பொறந்திடுமா ம்மா ?", என்று கேட்க அம்மாவும் சிரித்துக் கொண்டே "தெரியலையேப்பா" என்றது இன்றும் என் நினைவில்.

"எங்க பிறந்த நாளன்றுதான் பாப்பாவும் பொறக்கும். நாங்களெல்லாம் ஒன்னா சேர்ந்து கொண்டாடுவோமே, எங்க பிறந்த நாள்தான் ஸ்பெஷல் டேவாக இருக்கும்" என்று தம்பிதான் ரொம்ப ஆசையாக சொல்லிக் கொண்டு இருந்தான். "ஆமா நீங்கள் எல்லாம் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவிங்க. ஆனால் என்னோட பர்த்டேவை விடுமுறை நாளாக்கி இந்த நாடும் சேர்ந்து கொண்டாடும். அதனால் என்னோட பிறந்த நாள்தான் ஸ்பெஷல்"என்று சொல்லிக்கொள்வேன். (பின்ன, நான் பிறந்தது ஆகஸ்ட் 15 ஆச்சே !) என் பர்த்டேதான் ஸ்பெஷல் என்று தம்பியிடம் சொல்லிக் கொண்டாலும் ஒரே நாளில் பிறந்த என் அப்பா, அம்மா, தம்பி மூவரும் சேர்ந்து கொண்டாடிடும் பிறந்த நாள்தான் சம்திங் ஸ்பெஷல் எங்கள் வீட்டில் !
(அப்புறம் தங்கை எப்போதுதான் பிற‌ந்தாள் என்று கேட்கிறீர்களா… எதிர்ப்பாராமல் அப்பா அம்மாவின் பிறந்த நாளன்றே தம்பி பிறந்தான். எதிர்ப்பார்த்த தங்கையோ... இல்லை, வேறொரு நாளில்தான் பிறப்பேன் என்று ஏப்ரலில்தான் பிறந்தாள்).இன்று பிறந்த நாள் கொண்டாடிடும்
அப்பா அம்மா தம்பி மூவருக்கும்
என் அன்பின் இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!Thursday, March 18, 2010

மன்னிப்பாயா…….

   
    காதலை நாம தேடி போகக்கூடாது தானாவே அது நம்ம தேடி வரனும்........ விண்ணைதாண்டி வருவாயாவில் சிம்பு சொன்ன மாதிரி இந்த பாட்டு நல்லா இருக்குமா கேட்டு பார்க்கனும் அல்லது கேட்க கேட்க பிடிக்கும் என்றில்லாமல் ஒரு இனிமையான பாட்டு முதல்முறை கேட்கும்போதே தானாகவே மனதில் நுழைந்துக்கொள்ள வேண்டும். .......இதமாக இதயத்தை வருட வேண்டும்.


நல்ல இசை, பாடிய‌வரின் குரல் இனிமை இவற்றுடன் பாடல்வரிகள் கொண்டே எப்பொழுதும் ஒரு பாடலை நான் ரசிக்கின்றேன். அப்படி நிறைய பாடல்கள் இருந்தும் தற்பொழுது என் மனதினை தொட்ட பாடல் மன்னிப்பாயா. பிடித்திருந்து விட்டு விலகிக்கொண்ட ஒரு பெண்னின் மன நிலையை அழகாக உணர்த்தும் பாடல். கேட்ட முதல் முறையே பிடித்துவிட்டது, குறிப்பாக பாடல் வரிகள் என்னை கவர்ந்துவிட்டது. ஒவ்வொரு முறை கேட்குபொழுது அந்த பாடலில் மூழ்கி நான் என்னை மறக்கிறேன்.


இந்த பாடலின் சிறப்பே இடையே வரும் திருக்குறள்கள் தான்.எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.தாமரை அவர்களின் வரிகளை மேலும் மெருகேற்றுகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

காதலை(காதலனை)நினைத்து சிந்தும் கண்ணீர் போதுமே காதலை காட்டிக் கொடுத்து விட.........

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

காதல் வந்தாலே தனக்கென எதையும் வைத்து கொள்வார்களா காதலர்கள்………

புலப்பலென சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு

காதலில் இதயமும் இதயமும் இணைவதுதானே அழகு........


பெண் :
கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடித்திருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் கடலிடமே……….

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா…….

(ஒரு நாள்…)

ஆண் :
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே……

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே……..
மேலும் மேலும் உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்.........

பெண் :
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் தவர விட்டேன்
மன்னிப்பாயா அன்பே……….

ஆண் :
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

(ஒரு நாள்…)

பெண் :
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ ?
போவாயோ கானல் நீர் போலே தோன்றி………
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்………

(ஒரு நாள்…)
(கண்ணே…)


மேலும் மேலும் உருகி உருகி...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்னை செய்வேன் ?
மேலும் மேலும் உருகி உருகி...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்னை செய்வேன் ?

ஒ...உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ????????????

« ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ ? » என்ற ஒற்றை வரியில் அவளின் மொத்த காதலும் « வரம் கிடைத்தும் தவர விட்டேன் » என்பதில் அவளின் புலம்பலும் « மன்னிப்பாயா » என்று கேட்பதில் காதல் வலியும் நன்றாகவே உணரமுடிகிறது.


ஜெஸ்ஸி மாதிரி இன்னும் எத்தனை பெண்கள் மன்னிப்பாயா என்று கேட்டு இருக்கிறார்களோ அல்லது கேட்டுக் கொண்டிருக்கிறார்களோ....?!

Monday, March 15, 2010

எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி......


Un Gars Une Fille: (a Guy a Girl) இங்கு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர் இது. தொடர் என்றால் நம்மூர் சீரியல்கள் போல் அறுக்காமல், இரவு எட்டுமணி செய்துகளுக்கு முன்னால் வெறும் 20 நிமிடங்களே வரும் நகைச்சுவைத்தொடர். தொடர்கதையாக இல்லாமல் தினமும் ஒரு எபிசோடாக வருவதினால் எப்பொழுது பார்த்தாலும் புரிந்துவிடும்.

ஒரு Coupleகுள் நடக்கும் தினசரி நிகழ்வுகளாக அவர்களுக்குள் நடக்கும் கொஞ்சல்கள், சின்ன சின்ன சண்டைகள், ஒருவரிடம் ஒருவர் காணும் குறைகள்.... என்று தொடரும் கதையில் எல்லாமே மிக‌ யதார்த்தமாக காட்டப்பட்டு இருக்கும். குறிப்பாக, ஒருவரை ஒருவர் செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவதில் ஆரம்பித்து ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் இருந்து தொலைபேசியில் பேசிக்கொள்வது, வீட்டுக்கு வரும் நண்பர்களிடம் சீன் போடுவது, படுக்கை அறையில் பேசும் பேச்சுக்கள், கூடவே நிகழும் சின்ன சின்ன காதல் விளையாட்டுக்கள்.....என்று எல்லாமே நகைசுவையாக இருக்கும். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு தருணத்திலும் ஒருவர் ஒருவரிடம் காணும் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை மிகவும் நகைசுவையாக சொல்லும் தொடர் இது. நிமிடதிற்கு நிமிடம் சிரிப்பை வரவழைக்கும் தொடர் என்பதால், இத்தொடரைப் பார்க்க பிடிக்கும்.

இத்தொடரின் தனித்தன்மையே ஜான் அலெக்ஸ் என இருவர் மட்டுமே திரையில் வரும் நபர்கள். மற்ற க‌தாப்பாத்திரங்கள் வரும்போது அவர்களை பின்புறமாகவோ அல்லது வெறும் குரலாலே காட்டப்படுவார்கள். திரையில் இருவரின் முகத்தை மட்டுமே பார்ப்பதினால் போர் அடிக்கும் என்றால், அதுதான் இல்லை. அத்தனை பொருத்தமான‌ கணவன் மனைவி கதாப்பாத்திரத்தில் வரும் ஜானும் அலெக்ஸும் நிஜ வாழ்க்கையிலேயே கணவன் மனைவி. அதனால்தானோ என்னவோ காட்சிகள் அத்தனையும் வெகு இயல்பாக இருக்கிறது.

எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் ஏன் இணைந்து வாழ்கிறார்கள்... ஆணுக்கு பெண் தேவை, பெண்ணுக்கு ஆண் தேவை...இதை உணர்த்தும் விதமாக ஒரு நிமிடம் சண்டை, அடுத்த நிமிடமே... கட்டிப்பிடித்து முத்தம் என்று ஜானும் அலெக்ஸும் The mirror of the couples ஆகவே தெரிகிறார்கள்.


தை தவிர எனக்கு பிடித்தது  La soirée de l'étrange என்ற நிகழ்ச்சி. இதில்  பயங்கரமான, மிகவும் பிரமிப்பான‌ உலகில் நடந்த, நடக்கின்ற‌ உண்மை சம்பவங்களை டாப் 30 என்று தொகுத்து வழங்குவார்கள். பார்க்கும்போது ஏற்படும் த்ரில்லிங் ஃபீலுக்காகவே இந்நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பேன். சன் டிவியாலும் நெட்டின் உதவியாலும் நம்மூர் தொலைக்காட்சி நிகழச்சிகளையும்  பார்ப்பதுண்டு. அதில் ரொம்ப பிடித்தது கோபியின் நீயா நானா. பலத்தரப்பட்ட கருத்துக்களை இந்நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்தாலும் பர்சனலாக எனக்கு கோபியின் பேச்சு திறமை பிடிப்பதனால், அது என்னை வெகுவாக கவர்ந்ததினால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியும் பார்ப்பேன்.

இவ்வளவு நீளமாக என்னை எழுத வைத்த நண்பர் Seemangani  அவர்களுக்கு என் நன்றிகள். எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி பதிவை தொடர விரும்புகின்றவர்கள், தொடருங்கள்!

Monday, March 8, 2010

இரண்டாம் வாய்ப்பு !
ன்றொரு நாள்
எனக்கு அறிமுகமானவன் நீ
என் ஒவ்வொரு அசைவுகளையும்
பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னிடம் !

நினைத்து பார்க்கையில்
வலிக்கிறது.
ஒவ்வொரு வார்த்தையிலும்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணிதுளியும்
நான் உன்னுடன் இருந்திருக்கிறேன்.

எவ்வளவு நெருக்கமாக
உணர்ந்தேன்
ஏதோ ஒன்று
வெகு ஆழமாக
நீ - என்னில் பாதியாக……
என் உயிரில் பாதியாக……
என் இதயத்தின் பாதியாக…..

ஒவ்வொரு விடியலும்
உன்னாலே….
காண முடியாத
ஒவ்வொரு நாளும்
கடினமாகவே……

வருந்துகிறேன்
என் மவுனத்தில் கரைந்த
அந்நாட்களை நினைத்து.

சொல்லியிருக்க வேன்டும்
ஏதாவது
எப்படியாவது
நீ புரிந்துகொள்ளும் வகையில் !

வேறொரு நாள்
பிரிந்தோம்.
நம்மிடையே இடைவெளி
நாம் பேசுவது நின்றுப்போனது. 
என் தவறுதான்
என்னால்தான் !
மீண்டும்
நம்பிக்கை கொள்கிறேன்
இதை மாற்றக்கூடும்
என்னால் மட்டுமே !

எத்தனை இரவுகள்
வெகு நேரமாகியும்
தூங்காமல் தவித்திருக்கிறேன்
ஏன் தெரியுமா
நீ என்னுடன் இருந்திருக்கிறாய்
நெருக்கமாக
என் வசம் இழுத்து
உன்னை அனைத்திருக்கிறேன்
என் போர்வைக்குள் !

சற்று நினைத்துபார்
உணர்ந்துக்கொள்வாய்
உன்னில் பாதியாக – நான் !

எத்தனை முறை
என் உணர்வுகளை
கரைத்திருக்கிறேன்
கண்ணீரிலே !

காத்துக்கொண்டிருந்து இருக்கிறேன்
எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன்
ஏங்கிக் கொண்டிருந்திருக்கிறேன்
உன் தொடுதலை உணர்வதற்காக‌ !

உன்னுடன் சேர்ந்திருக்க
உன்னுடன் கைகோர்த்திருக்க
 முத்தம்
ஒன்றினை கொடுக்க
ஒரு முறையாவது !

எத்தனை விடியல்கள்
உன்னை தேடியபடியே
விழித்திருக்கிறேன்
ஆனால் நீயில்லை !

சில நேரங்களில்
கற்பனையில் நீ
என்னுடன்
என்னில் அக்கறையாக
பேசிக்கொண்டிருக்கிறோம்……
மறுபடியும் !

எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருக்கிறேன்
உன்னருகில் இருக்கும்
என் இரண்டாம் வாய்ப்பை !

***

(இது என் க‌விதை அல்ல‌… மொழிப்பெயர்ப்பு செய்வது ரொம்ப பிடிக்கும் என்பதால் என்னை கவர்ந்த‌  ஒரு ப்ரெஞ்சு கவிதையினை நான் தமிழாக்கம் செய்ததுதான் இது)