Subscribe:

Pages

Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

Tuesday, January 28, 2014

உயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..!!!

 
"முத்தம்
சத்தமில்லாத இசை  
சந்தம் தழுவிய கவிதை"
                                       .......இப்படி முத்தத்தை பற்றிதான் எத்தனை எத்தனை கவிதைகள்..... உணர்ச்சிகளின் வெளிபாடாக ஒவ்வொரு உறவு நிலைக்கு தகுந்து முத்தம் மாறுபட்டாலும், காதலோடு கொடுக்கும் / பெறும் முத்தம் ...மட்டும் இரண்டு ஆன்மாக்கள் இணையும் தருணமாகிறது. இதை பற்றி ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதப்பட்டாலும், கவிதையாய் ஒரு ஓவியம் வரைந்திட நீண்ட நாள் ஆசைக்கொண்டிருந்தேன். அதற்கான ஒரு தருணம் வாய்திட, இதோ....முழுவதுமாக ஒன்பது மணி நேரத்தில் ஒரு முத்தச்சித்திரம் உருவானது. உண்மையிலே உயிர் திறக்கும் முத்தம்... ஒரு வித்தைதான், இல்லையா நண்பர்களே..!




Wednesday, January 15, 2014

நானே நல்ல மேய்ப்பன்...!

         
         ப்ரியமான பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவுகளிட்டு எனது வலைதளத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்கவே விரும்புகிறேன். ஆனால் பல சமயங்களில் அது முடியாமலே போகிறது. எழுதுவது குறைந்து போனாலும் வரைவது மட்டும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் பென்சிலால் வரைவதில் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதற்காக நிறைய நுணுக்கங்களை கற்றுகொள்வதில் ஆரம்பித்து சிறந்த ஆர்ட் மெட்டிரியல்களை தேடி தேடி பார்த்து வாங்கி கொண்டிருக்கிறேன். கடந்த வருடத்தில் வரைந்த சில‌ சித்திரங்களை இனி வரும் பதிவுகளில் உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். அதில், நான் மிகவும் விரும்பி....பல காலமாக வரைய நினைத்ததுதான் இங்கு நீங்கள் காண்பது


பைபிள் கூறும் வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் இது
'நானே நல்ல மேய்ப்பன்'..... நீண்ட நாட்களாக இதற்கு ஏற்றபடி ஒரு படம் வரைய வேண்டும் என நினைத்திருந்தேன். விரும்பியபடியே ஒரு வாழ்த்து அட்டையில் இருந்த படம் என்னை கவர, அதை பார்த்து வரைந்திருக்கிறேன். இம்முறை A5 தாளில், HB, 2B-6B பென்சில்களை உபயோகித்து வரைந்தேன், வரைந்து முடித்தபோது மனது முழுவதும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.


Monday, August 5, 2013

முதல் ஸ்பரிசம்...!


              புகைப்படங்களை பார்த்து வரைவது என்பது எப்போதுமே சுவாரஸியமாகத்தான் இருக்கிறது. அதிலும் நம்மோட படத்தை பார்த்து நாமே வரையும் போது இன்னும் சுவாரஸியம் கூடுகிறது. என் நிச்சயத்தார்த்தத்தின் போது என்னவர் என் கைபிடித்து மோதிரம் போடும் புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.., அதுவே இம்முறை என்னை வரையத்தூண்டியது. பொதுவாக என்னை கவரும் எதையும் நான் நேசித்தே வரைகிறேன்.... அதேப்போல் இதையும் நான் மிகவும் ரசித்து நேசித்தே வரைந்திருக்கிறேன்.


வழக்கம் போல் A4 தாளில்....  HB - 6B பென்சிலால் வரைந்திருக்கிறேன். மொத்தமாக வரைந்து முடிக்க 5 மணி நேரம் ஆனது. முன்பே பதிவுகளில் சொல்லி இருப்பதை போல பெயிண்டிங்ஸை போல் அல்ல பென்சில் ஸ்கெட்ச், வரைவது மிக சுலபமாகவே இருக்கிறது. அதிக நேரம் கூட‌ தேவைப்படுவதில்லை.
 
தேவைப்படுவது எல்லாம் ஒரு Paper, Pencil, Eraser ...  கொஞ்சம் பொறுமை மட்டுமே.




Wednesday, November 28, 2012

உறங்கும் அழகி...!

      
       எந்த ஒரு காட்சியையோ அல்லது ஒரு புகைப்படத்தையோ  பார்த்து உடனே வரைந்து பார்க்க தோன்றும்... அப்படி தோன்றிய உடனே அவற்றை இன்னும் கூர்ந்து கவனிப்பேன். ஒவ்வொரு அங்கமாக பார்த்து அதில் இருக்கும் அனைத்தையும் மனதில் உள்வாங்கிக்கொண்ட பிறகுதான் வரைய வேண்டும் என்ற முடிவுக்கு வருவேன். அப்படி பார்த்தவுடனே பிடித்து போனது தோழி ஒருவர் தந்த பெண் குழந்தையின் போட்டோ. கண்மூடி உறங்கும் அழகியாக தோன்றியது. அதிலும் அந்த குழந்தையின் தலைமுடி அவ்வளவு அழகாக இருந்தது. அதற்காகவே இதை வரைந்துப் பார்க்க வேண்டுமென நினைத்தேன். நினைத்த படி மூன்று மணி நேரத்தில் வரைந்ததுதான் இங்கே காணும் பென்சில் ஸ்கெட்ச்.

Thursday, January 5, 2012

காதலே கலை என்பதாலா.....

      சிலை முழுவதும் ப‌ரவி கிடக்கும் காதல்... சுற்றிலும் நிரம்பி வழியும் பார்வையாளர்கள்...க்ளிக் க்ளிக் என தொடர்ந்து எழும் சத்தத்தின் நடுவிலும் ஃப்ளாஷின் வெளிச்சத்திலும் மிக கம்பீரமாய் வீற்றிருக்கிறது - Psyche Revived By Cupid's Kiss எனும் பெயர்க்கொண்ட அச்சிலை!

அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்  அந்த சிலையின் உள்ளே ஒளிந்திருக்கும்  கதை மிக சுவாரஸியமானது. அழகான கதைக்கு உயிர் கொடுத்து கலையால் கல்லிலும் காதலை பேசவைத்த அற்புதமான ஐரோப்பிய கலைஞர்...Antonio Canova(1757‒1822). சில மாதங்களுக்கு முன்பு லூவர் மியூசியத்திற்கு (பாரிஸ், பிரான்ஸ்) சென்ற போது இந்த‌ சிலையின் அழகில் மனம் ஈர்க்கப்பட்டு புகைப்படம்  எடுத்துவந்தேன். அவற்றை பார்க்கும் போதெல்லாம் சுவாரஸியமாக தெரிய... இதையே பென்சிலில் வரைந்து பார்த்தால் என்ன என தோன்ற.. முழுவதுமாக 6 மணி நேரத்திற்கு பின் நான் விரும்பியபடியே வரைந்துமுடித்தேன்!


கலையின் மீதுள்ள காதலா அல்லது காதலே கலை என்பதாலா ..... எது என்னை வரைய தூண்டியது என தெரியவில்லை... ஆனால் நான் மிகவும் ரசித்து அனுபவித்து வரைந்தது இது!!!


உங்கள் ஒவ்வொருவரின் உற்சாகமான ஊக்கங்களால் இதுவரை தொடரும் எனது கலைப்பயணம் இனியும் தொடர ஃபேஸ் புக்கில் என் ஓவியங்களுக்கென Bp-Art-Gallery ஒரு இடத்தை ஏற்படுத்தி உள்ளேன். பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் அளித்துவரும் உங்கள் அனைவரது ஆதரவும் அங்கேயும் தொடர அன்புடன் வேண்டுகிறேன்.



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


 

Thursday, November 17, 2011

காதல் தேசத்தை தேடி......

     வண்ணக்கலவையில் உருவாகும் ஓவியத்தை விட கருப்பு வெள்ளை  ஓவியம்தான் பெரும்பாலானவர்களை கவர்கிறது. எனது பள்ளி நாட்களில் இருந்தே எனக்கும் பென்சில் ஸ்கெட்சில் மிகுந்த ஆர்வம் உண்டு. சமீப நாட்களாக இவற்றை பற்றி நிறைய தெரிந்துக்கொள்வதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் அதிகமாகிக்கொண்டு வருகிறது. இதோ மீண்டும் என் கைவண்ணத்தில் மலர்ந்த அரும்புகள்....  


சிறந்த ரசனையோடு ஆழமான பார்வை கொண்டவர்களால் ஓவியங்கள் உயிர்பெறுகிறது என்பது என் எண்ணம். இதோ உங்கள் ரசனையைக்கொண்டு இதற்கு கவிதை படைத்திடுங்கள். உங்களின் கவிதைகளால் உயிர் பெறட்டும் எனது ஓவியம்!


யாருமற்ற தனிமையில்
யாதுமற்ற‌ நிலையினில்
காதல் மட்டுமே துணையாய்
நீ என்னிலும்
நான் உன்னிலும்
சொல்லாத வார்த்தைகளும்
பொல்லாத காதலும்.....

விரல்களின் இறுக்கத்தில் கசிந்திட‌
காதல் தேசத்தை தேடி
நடைபயில்வோம் வா!

Monday, November 7, 2011

மலர்ந்திடும் அரும்புகள்.....!

                ஓவியம் வரைவதற்கான தூண்டுதல் எல்லா மனிதர்களிடமும் சிறுவயதில் இருந்தே உண்டு... அந்த இயற்கையான குணத்திற்குட்பட்டு நாமும் வரைந்து பார்க்க தொடங்கிவிடுவோம். கோடு போட கையில் எது கிடைத்தாலும் அதைக்கொண்டு மனதில் மலரும் கற்பனைக்கேற்றபடி வரைந்து அதை பார்த்து மகிழ்ச்சியடைவோம். இதில் சிறுவர்களுக்கு பெரும் பங்குண்டு. இவர்களுக்கும் ஓவியங்களுக்குமான நெருக்கம் மிக பெரியது. தோன்றும் கற்பனைகளையும் கனவுகளையும் காட்சிகளையும் ஓவியமாக தர இயல்பாக இவர்களால் முடிகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த சிறுவர்களின் ஓவியங்களை போல சிறுவர்களையே ஓவியமாய் பார்க்கும் எத்தனையோ திறமை மிக்க ஓவியர்களும் உண்டு. குழந்தைகளை ஓவியமாக வரைபவர்களை பார்க்கும் போது பிரமிப்பாக‌ தோன்றும். இணையத்தில் குழந்தைகளின் ஓவியங்களோ அல்லது அவர்களின் புகைப்படங்களோ எதுவாக இருந்தாலும் பார்க்க தவறுவது இல்லை. வரைவதை போல நான் நேசிக்கும் இன்னொன்று புகைப்படம்... ஒரு நொடி உணர்ச்சியையும் படமாக்கி கொடுக்கும் கலை அது. அதிலும் சிறுவர்களை படம்பிடிப்பது என்பது அழகான ஒன்று. இதுவே தூண்டுதலாக அமைய பார்த்த முதல் முறையே மனதில் ஒட்டி கொண்ட.... என்னை மிகவும் கவர்ந்தஒரு புகைப்படத்தை பார்த்து நான் வரைய ஆரம்பித்தேன்.

இம்முறை வழக்கமாக பயன்ப்படுத்தும் HB பென்சிலை தவிர்த்து Graphite pencil 2B-6B உபயோகப்படுத்தினேன். இதனால் எதிர்பார்த்த கருமை நிறம் கிடைத்தது.






வரைய ஆரம்பித்த மூன்று மணி நேரங்களுக்கு பின் கிடைத்ததுதான் கீழே காணும் அரும்புகளின் அணைப்பு.... புகைப்படத்தில் தெரிந்த அன்பின் வெளிப்பாடு நான் வரைந்ததில் தெளிவாக தெரிகிறதா என்பது தெரியவில்லை...! ஆனாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு என் ப்ரியமான பதிவுலக நண்பர்களை மீண்டும் சந்தித்ததிலும் வரைந்ததை பகிர்ந்துக்கொண்டதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.

Thursday, July 28, 2011

காதல் மொழி பேசும்.... கற்கள்!

                வரைவதில் குறையாத ஆர்வம்... தொடர்கையில் புது புது முயற்சிகளில் ஈடுபட மனம் முயல்கிறது. கொஞ்ச நாட்களாகவே கல்லில் வரைவது பிடித்திருக்கிற‌து. மிக குறைந்த நேரத்தில் வரைய முடிகிறது. இதற்காக கடற்கரை செல்லும் பொழுதுகளில் கல்லை தேடி தேடி எடுக்கிறேன். நான் மட்டுமல்ல எனக்காக என்னவரும் கண்களை நிலத்தில் தவழ விட்டபடி கற்களை தேடி அலைந்ததை பார்க்கும்போது கொஞ்ச‌ம் சிரிப்பு வந்தாலும் நெஞ்சம் மகிழத்தான் செய்கிறது. அவரின் ஊக்கம் மிக பெரிய பலம் எனக்கு!

வரைய நினைக்கும் காட்சிகளை கண்முன் நிறுத்தி கற்பனை கொண்டு வண்ணம் தீட்ட, குவிந்திருக்கும் கற்களில் எதை எடுத்தாலும் அழகாகவே தெரிந்தது.


அழகாய் தெரிந்த கற்களை இன்னும் அழகாக்க ஏதோ சிறு முயற்சி செய்ததுதான் கீழ்காணும் படங்களில் உள்ளவை. இதற்கான பெயிண்ட் இல்லாத நிலையில் என்னிடம் இருக்கும் ஆயில் பெயிண்டையே உபயோகித்து சென்ற‌ வாரம் வரைந்தேன். நன்றாக காய்ந்தபின் கொஞ்சம் வார்னிஷ் அடித்துவிட... கல் கண்ணாடி போல் ஆனது!


முதலில் ஒரு ஜோடியை நீல நிறத்தின் பின்னனியில் வரைய ஆரம்பித்தேன். பின் அதுவே சுவாரஸியமாக தெரிய அப்படியே தொடர்ந்தேன்... வெவ்வேறு வண்ணங்களில். இதோ.... காதல்  மொழி பேச தனித்திருக்கும் இரு உள்ளங்கள்!






Friday, July 1, 2011

அதிசயத்துடன் கூடிய சித்திரமவள்... பெண்!

ழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்...என்ற தலைப்பில் நான் வரைந்த ஒரு சில பெண் ஓவியங்களை பகிர்ந்துக்கொண்டதின் தொடர்ச்சியாக இங்கே இன்னும் மூன்று ஓவியங்களை தந்திருக்கிறேன். கருப்பு வெள்ளை படங்களில் எனக்கு எப்பொழுதும் ஆர்வம் அதிகம் எனபதால் வாரப்பத்திரிக்கைகளில் வண்ண ஓவியங்களாக இருந்ததை வெறும் பென்சில் மட்டுமே உபயோகித்து சிறு சிறு மாற்றங்களுடன் எனக்கு பிடித்தமாதிரி வரைந்துக்கொண்டேன்.

நகரத்து நவநாகரிக நங்கையாக......



ஆச்சாரம் சிதறாத பதுமையாக‌.....



அம்சமான செல்வ சீமாட்டியாக......



Tuesday, April 19, 2011

இறைவன் வரைந்த ஓவியங்கள்....

                ரு வழியாக குளிர் குறைந்துவிட்டது... காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் அழகாக இன்னும் அழகாக மெருகேற்றிக்கொண்டிருக்கும் இயற்கையினை, இறைவனால் வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களை ரசித்திட இருக்கண்கள் போதாது. ஊரெங்கும் மலர்ந்திருக்கும் மலர்களோ பல விதங்களில் பல வண்ணங்களில் அழகாய் காட்யளித்துக்கொண்டிருக்கிறது.

உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க போகும் கீழே மலர்ந்திருக்கும் படங்கள் சென்ற வாரத்தில் எடுத்தது. ஏதோ மலர் கண்க்காட்சியில் எடுத்தது என்று நினைப்பீர்களானால் தவறு! எங்கள் வீட்டில் இருந்து சுமார் பத்துகீமீ தொலைவிற்குள்ளே சாலைகளின் ஓரங்களில் மரங்களிலும், செடிகளிலும், மட்டுமல்லாமல் கொடிக‌ளில் மலர்ந்தும், நிலத்தினில் படர்ந்தும் இருக்க... மனதை கொள்ளைக்கொள்ளும் இந்த மலர்களை மிகவும் ரசித்து படம் பிடித்தேன்.

































என் வீட்டு பூந்தொட்டியில் மலர்ந்திருக்கும் மலர்கள்....

ழுத்துக்களை கோர்த்து வாக்கியங்களாக்குவதை விட வண்ணங்களை குழைத்து ஓவியங்களாக்குவதே மிக சுலபமானதாக இருக்கிறது எனக்கு.
எழுதுவதற்கு தேவைப்படும் நேரத்தைவிட வரைவதற்கு தேவையான நேரம் குறைவு என்பதாலும் எப்பொழுதும் குறையாத கலை ஆர்வம் தொடர்வதாலும் கடந்த சில நாட்களாக‌ நிறைய‌ வரைந்துக்கொண்டிருக்கிறேன்.

இறைவன் படைத்த‌ ஓவியங்களோ அற்புதம்... அதற்கு நிகர் இல்லை என்பதால் அவற்றை ரசித்தபடியே இதோ நான் வரைந்த Magnolias roses(30x60cm)!



Friday, February 11, 2011

நேசித்து வரைகிறேன்!


               சின்ன வயதில் பென்சிலை பிடித்த கை இன்னும் அதை விட மறுக்கிறது. அதிலும் வரைவதற்கு என்கிறபொழுது இன்னும் விதவிதமாக அதை உபயோகப்படுத்தி பார்க்க முயல்கிறது. இங்குள்ள ஓவியர்கள் கடற்கரை சாலையில் வரைய அமர்ந்தாலே பெரும்பாலும் பென்சில் ஸ்கெட்ச்தான் பண்ணுவார்கள். அதிலும் Portraits தான் அதிகமாக இருக்கும். எனக்கும் சிறு வயதில் இருந்தே பென்சில் டிராயிங் மிகவும் பிடிக்கும் என்பதால் நிறைய பெயிண்டிங்ஸ் என தொடர்ந்தாலும் இடையிடையே இப்படி பென்சில் ஸ்கெட்ச் செய்வதுண்டு.

இயற்கை எழில் நிறைந்த இடங்களை வரைந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு நீண்ட நாளாக இருந்து வந்தது.

இதோ... இங்கே கீழே காணும் முதல் இரண்டு படங்கள் அப்படி முயற்சி செய்து பார்த்ததுதான்.




வரைந்தப் ப‌டங்களை கணினியில் ஏற்றியபோது தொடர்ந்த கலைத்தாகத்தால் மீண்டும் சில மாற்றங்கள் கொண்டன இவ்விருப்படங்களும்.... ஆனால் இம்முறை கணினியின் உதவியோடு! படங்களை காண.... இங்கே செல்லவும்.

பெயிண்டிங்ஸை போல் அல்ல பென்சில் ஸ்கெட்ச், வரைவது மிக சுலபம். அதிக நேரம் தேவைப்படுவதில்லை. பெயிண்ட்ஸ், பிரஷ்கள், கேன்வாஸ் போர்ட், பெயிண்டிங் மீடியம்ஸ்... என பொருட்கள் பரவி கிடக்கும் நிலையும் இல்லை... வேலை முடிந்த பிறகு பிரஷ்களை சுத்தமாக கழுவி வைப்ப‌தில் ஆரம்பித்து எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைக்கும் வேலையும் இதில் இல்லை. தேவைப்படுவது எல்லாம் ஒரு Paper, Pencil, Eraser மட்டுமே.

என்னென்னவோ வரைந்துப் பார்த்தாலும் பூக்களை வரைவதில் அலாதி பிரியம் இருக்கத்தான் செய்கிறது.


பொதுவாக பென்சில் ஸ்கெட்சில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் பூக்களைக்கொண்டே தங்கள் வரையும் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

வரையும் போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். மிக மெலிதான கோடுகளால் அவுட் லைன்களை போடவேண்டும். முடிந்தவரை அழித்து அழித்து கோடுகள் மேல் கோடுகள் வரைவதை தவிர்க்க வேண்டும். Pencil strokes பண்ணும்போது அழுத்தம் இல்லாமல் ஓரே சீராக இருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் மட்டும் மிக அழுத்தமான strokes கொடுத்து கான்ட்ராஸ்ட் காட்டலாம். இலைக்களுக்கு அப்படி செய்தால் நன்றாக இருக்கும். பின் cotton swab அல்லது tissue paper கொண்டு pencil strokesசை சற்று மெதுவாக தேய்த்துவிட்டால் போதும், சுலபமான பென்சில் ஸ்கெட்ச் ரெடி!









Friday, December 10, 2010

கல்லிலே கலைவண்ணம் தேடிய கண்கள்!

            டற்கரைக்கு செல்வது என்பதே பிடித்தமான ஒன்றுதான். அதிலும் கடல் அலைகளை ரசிப்பதிலே தனிசுகம் இருக்கத்தான் செய்கிறது. இதற்காகவே கோடையில் மட்டுமல்லாமல் குளிர் காலத்திலும் சென்று வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி செல்கிறபோது வெறும் கடல் அலைகளை மட்டும் ரசிப்பதோடு நிறுத்தி விடாமல் கடற்கரையில் பரவி கிடக்கும் பாறைகள், கற்கள் என அனைத்தையும் ரசிப்பதுண்டு. இயற்கையாகவே சில கற்கள் பல‌விதமான வடிவங்களில் இருந்தாலும்.... சில நேரங்களில் ஆச்சிரியப்பட வைக்கும் அளவிற்கு செதுக்கியது போல் இருக்கும். இப்படி கற்களில் கலையை தேடிக்கொண்டு இருந்த எனக்கு  பாறை உடைந்து சிதறியதை போல் ஒரு கல் கண்ணில்பட்டது. அட, பார்ப்பதற்கு ஃபிரான்ஸ் மேப் மாதிரியே இருக்கே என்று நினைத்து கையில் எடுத்த எனக்கு ஆச்சிரியமாக இருந்தது! வேறு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் நிறுத்தி வைக்கலாம். காரணம், இயற்கையாகவே சமமாக அமைந்த அதன் அடிபாகம்தான். அதனால் இதில ஏதாவது செய்யலாமே என்றெண்ணி வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டேன். சென்ற சனிக்கிழமை கையிலெடுத்த கல்... வண்ணங்களின் கலவையில் ஒரு மணி நேரத்திற்கு பின் புதுவடிவம் பெற்றது.

இதோ எனது கண்கள் கண்டெடுத்த கல்லும் எனது விரல்கள் படைத்த ஓவியமும்!