Subscribe:

Pages

Tuesday, December 21, 2010

ஒளி பிறக்க..... ஒளியேற்றுவோம்!

           னக்கு பிடித்தவைகள் ஏராளமானவை என்றாலும் அவைகளில் ஒரு சில மட்டுமே நேசிக்கக்கூடியதாக இருக்கிறது. அப்படி மிகவும் நேசிக்கும் ஒன்று ஒளி. விழிகளின் வழியே எனக்குள் ஊடுருவி செல்பவைகளில் இவ்வொளி ஏனோ நீங்கா இடம்பிடித்து விடுகிறது. படர்ந்திருக்கும் இரவில் ஏற்றிவைக்கும் ஒரு சிறு ஒளி அந்த இடத்தையே அழகானதாக மாற்றிவிடுகிறது இல்லையா!

ஏன் எதற்காக தீபம் ஏற்றப்படுகிறது என்று அறியாமலே அதன் அழகுக்காக மட்டுமே விவரம் அறியாத வயதிலேயே கார்த்திகை தீபத்திருவிழாவினால் ஈர்க்கப்பட்டு எங்கள் வீட்டில் தீபம் ஏற்றும் பழக்கம் இல்லாதபோதும் அகல்விளக்குகளை வாங்கி வந்து வீட்டை தீபங்களால் அழகுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். அதேப்போல் கிறிஸ்துமஸின் போதும் மெழுவத்தியினை கொண்டு அலங்கரிப்பது நான் மிகவும் நேசிக்கும் ஒன்று. சாதாரனமாக ஏற்றிவைக்கும் வத்தியுடன் கூடவே சில Christmas ornaments கொண்டு அலங்கரித்தால் இன்னும் அழகாக தோற்றமளிக்கும். இன்னும் கிரியேட்டிவாக செய்வதென்றால் இயற்கையாக கிடைக்கும் மலர்கள், இலைகள், சருகுகள், குச்சிகள் இவற்றில் எதைக்கொண்டு வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். வெயில் பட்டவுடன் பூப்போல விரிந்து கிடக்கும் Pine cones கொண்டு அலங்கரிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கிறிஸ்துமஸ் அலங்காரப்பொருட்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. பூக்களைப்போல காட்சியளிக்கும் இவைகளுக்கு பல நிறங்களில் வண்ணந்தீட்டி தற்பொழுது கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதிகளுக்கும் அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கும் சென்று வரும் பொழுதுகளில் மரங்களினின்று கீழே விழுந்துக்கிடக்கும் Pine conesகளை சேகரித்து வைத்துக்கொள்வேன். நான்காவது மற்றும் கடைசிப்படத்தில் இருப்பது அதைக்கொண்டு அலங்கரித்ததுதான்.

Artificial flowers, Pine cones, Christmas balls, paper garlands.... இவைகளுடன் சிறியது பெரியதுமாக வண்ண மெழுகுவத்திகள் கொண்டு நான் உருவாங்கிய Candle decorations........ புகைப்படங்களாக்கி உங்கள் முன் வைத்துள்ளேன். ஆர்வம் உள்ளவர்கள் இதேப்போல் மெழுவத்திகளை கொண்டு உங்கள் வீட்டினை அழகுப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டின் உள்ளமைப்புக்கு ஏற்றார்போல தேவைப்படும் நிறங்களில் அலங்கரிப்பது கூடுதல் அழகைக்கொடுக்கும். ஒளியினால் உங்கள் வீட்டின் அறை அழகாக தோற்றமளிப்பதோடு உங்கள் உள்ளத்து அறைகளும் ரம்மியமாக மாறிவிடும். இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள்!!!
ஹேப்பி ஹாலிடேஸ்!!!!!


Tuesday, December 14, 2010

வளம்பெற வரம்தரும்... தேவதையில் நான்!

           சில மாதங்களுக்கு முன் 'உங்களை பற்றிய குறிப்புடன் புகைப்படமும் அனுப்பினால் தேவதை இதழில் பிரசுரிக்கப்படும்' என‌ இரண்டொருமுறை மெசேஜ் வந்திருந்த போதிலும் இது ஏதோ விளம்பரமோ அல்லது விளையாட்டிற்காகவோ என்றெண்ணி அதில் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். பதிவுலக நட்பின் மூலமாகதான் பின்னாளில் இவை நடந்தேற வேண்டும் என்று இருந்திருக்கிறதோ என்னவோ... இதோ இப்பொழுது தோழி ஒருவரால் இந்த மாத தேவதை இதழில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறேன். இன்று உத்தரவின்றியே உங்கள் வீடுகளில் நான் நுழைந்திருக்கிறேன்.

என்னை பற்றி நல்ல அறிமுகம் தந்து, எனக்காக சில பக்கங்களையும் ஒதுக்கி, எனது வலைத்தளமும் எனது ஓவியங்களும் இன்று... இன்னும் நிறைய தமிழ் மக்களை சென்றடைய செய்த தேவதை இதழ் நிர்வாக குழுவிற்கு எனது தாழ்மையான நன்றிகள். மேலும் அறிமுகம் என்ற பேரில் எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் தேவதையின் பணி சிறந்திட‌ எனது வாழ்த்துக்கள்!

இவங்க என் பிரெண்ட் என சொல்லும்போதே பெருமை கொள்கிறது மனது; அத்தகைய நட்பினை பதிவுலகின் மூலமாக நான் பெற்றிருப்பதால் உண்மையிலேயே நான் அதிர்ஷ்ட‌சாலிதான். இன்று நான் தேவதையில் வர காரணமாயிருந்த தோழி விக்னேஷ்வரிக்கு எனது அன்பான நன்றி.

என் வலைப்பக்கத்தை தொடர்ந்து பார்வையிட்டும், விருதுகளினாலும், பின்னூட்டங்களினாலும் எப்பொழுதும் என்னை உற்சாகப்படுத்தி வரும்  இணைய நண்பர்களுக்கு எனது ப்ரியமான நன்றிகள்! இன்று எனக்கென ஒரு அடையாளத்தை அடைய காரணம் நீங்களே! தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் உங்கள் பாசமான வார்த்தைகளால்தான் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

எல்லாவற்றிர்க்கும் மேலாக சிறந்த நண்பர்களையும் நன்மைகளையும் இதன்மூலம் தந்தருளும் இறைவனுக்கு என் முதன்மையான‌ நன்றி!


Friday, December 10, 2010

கல்லிலே கலைவண்ணம் தேடிய கண்கள்!

            டற்கரைக்கு செல்வது என்பதே பிடித்தமான ஒன்றுதான். அதிலும் கடல் அலைகளை ரசிப்பதிலே தனிசுகம் இருக்கத்தான் செய்கிறது. இதற்காகவே கோடையில் மட்டுமல்லாமல் குளிர் காலத்திலும் சென்று வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி செல்கிறபோது வெறும் கடல் அலைகளை மட்டும் ரசிப்பதோடு நிறுத்தி விடாமல் கடற்கரையில் பரவி கிடக்கும் பாறைகள், கற்கள் என அனைத்தையும் ரசிப்பதுண்டு. இயற்கையாகவே சில கற்கள் பல‌விதமான வடிவங்களில் இருந்தாலும்.... சில நேரங்களில் ஆச்சிரியப்பட வைக்கும் அளவிற்கு செதுக்கியது போல் இருக்கும். இப்படி கற்களில் கலையை தேடிக்கொண்டு இருந்த எனக்கு  பாறை உடைந்து சிதறியதை போல் ஒரு கல் கண்ணில்பட்டது. அட, பார்ப்பதற்கு ஃபிரான்ஸ் மேப் மாதிரியே இருக்கே என்று நினைத்து கையில் எடுத்த எனக்கு ஆச்சிரியமாக இருந்தது! வேறு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் நிறுத்தி வைக்கலாம். காரணம், இயற்கையாகவே சமமாக அமைந்த அதன் அடிபாகம்தான். அதனால் இதில ஏதாவது செய்யலாமே என்றெண்ணி வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டேன். சென்ற சனிக்கிழமை கையிலெடுத்த கல்... வண்ணங்களின் கலவையில் ஒரு மணி நேரத்திற்கு பின் புதுவடிவம் பெற்றது.

இதோ எனது கண்கள் கண்டெடுத்த கல்லும் எனது விரல்கள் படைத்த ஓவியமும்!


Saturday, November 27, 2010

இயற்கையின் எழிலில்... வண்ண ஓவியங்கள்!

          கொஞ்சம் சிரமமாக தெரிந்தாலும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை புகைப்படம் எடுத்து, பின்பு அதை பார்த்து வரைவது என்பது சந்தோஷம் தர‌க்கூடியதாகவே இருக்கிறது. அப்படி என்னால் வண்ணம்தீட்டபட்ட‌ ஓவியங்கள் மிக குறைவுதான். கீழே காணும் இரண்டு ஓவியங்களும் அப்படி வரையப்பட்டவைக‌ள்தான். முதல் முறையாக என்னவரின் கொலீக் ஒருவர் அவர் வீட்டு அருகாமையில் உள்ள சிறிய பாலத்தையும் அதன் கீழே ஓடும் ஓடத்தையும் ரசித்தவராய் அதை அப்படியே பெயிண்ட் பண்ணி தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டவர், பின் அவரே அந்த இடத்தை புகைப்படமும் எடுத்து கொடுத்தார். சில நாட்களிலேயே அவர் விரும்பியபடி வரைந்துக்கொடுக்க, சந்தோஷமுடன் பெற்று சென்றார். இதேப்போல் நான் வரைந்த ஐந்தாறு ஓவியங்கள் என்னை நியாபகப்படுத்தியபடி எனது உறவினர்க‌ள், நண்பர்களின் வீடுகளில் இருக்கிறது.இயற்கையை படம்பிடித்து வரைவது சிறப்பல்ல என்பதுபோல் இங்குள்ள சில ஓவிய கலைஞர்கள் அழகான இயற்கை எழில் நிறைந்த இடங்களை தேர்ந்தெடுத்து அங்கேயே அமர்ந்து வரைந்துக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். உயிரோட்டமுள்ள ஓவியமாக அவைகள் உருவாகிற‌தை காணும் போது அதிசயத்து நின்றிருக்கிறேன். இறைவன் நல்ல ரசனை உணர்வு நிரம்பிய நேரத்தில் படைக்கப்பட்ட பகுதி இந்த தென்பிரான்ஸ் என்று அடிக்கடி நினைத்துக்கொள்வேன், இங்குள்ள இயற்கை அழகினை ரசிக்கும்போது. அப்படி கடவுளால் தீட்டப்பட்ட ஓவியங்களை.... அத்தகையை இடங்களை ரசிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் இங்குள்ள‌ சில ஓவிய‌கலைஞர்கள் உயிரோட்டமுள்ள‌ கலைப்படைப்புகளை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள். தற்பொழுது சாத்தியமில்லை என்றபோதும், எனக்கும் ஆசைதான் என்றாவது ஒரு நாள் அவர்களை போல நானும் எழில் கொஞ்சும் இயற்கையினை என் கண்களினால் படம்பபிடித்தபடி வரைய வேண்டுமென்று. முயற்சிக்க‌வேண்டும்....!

Sunday, November 21, 2010

பொக்கிஷம்!


ண்ண‌ற்ற பரிசுகள்
உன்னிடமிருந்து
முதல்பார்வை கொண்டு
இன்றுவரை
ஒவ்வொன்றும்
ஒரு பொக்கிஷமாகவே!

ஜெபமாலை......
சிறிது ஏமாற்றம்தான் என்றாலும்
உன்னிடமிருந்து
முதலாய் வ‌ந்த பெருமையதற்கு...
தெய்வத்திடமிருந்தே ஆரம்பம்
நமதுறவு என்பதால்!

காய்ந்தப்பின்பும்
காதலுடன்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறது
நீ கொடுத்த ரோஜா.....
காலம் கடந்தும் தொடரும்
உன் அன்பைப் போலவே!

என்னில் நீ ரசிப்பவைகளில்
என்றும் முதலிடம் பிடிப்பது
என் நெற்றி பொட்டு......

அன்று நீ வாங்கிக்கொடுத்தது
இன்றும் என்னிடம்
பத்திரமாக‌!

குழந்தையின் பாதமாக
எண்ணி கொஞ்சிடும் நீ
அழகுபடுத்திட‌ பரிசளித்தாயே
தங்க கொலுசு......
என்றுமே என் கால்களை தழுவியபடி
வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
எழும் சலங்கை சப்தம்
உன்னை நினைப்படுத்திக்கொண்டு!

என்னை நினைத்து எழுதிய
கவிதை பக்கங்கள்….....
எனக்காக பார்த்து பார்த்து
வாங்கிய ஆடைகள்….....
கடைசியாக
என் பிறந்த நாளுக்கு
பரிசளித்த கைகடிகாரம் வரை
அனைத்துமே என்னிடம்
பொக்கிஷங்களாக‌……..

நமதுறவில் எழுதிய க‌விதையாய்
உன்னால் மட்டுமே தரக்கூடிய‌.....
தந்த உயிரின் பரிசைமட்டும்
தொலைத்து விட்டவளாய்
கண்ணீருடன் நான்!

Friday, November 12, 2010

பகிர்தலை நோக்கி....

 தொடர்ந்து பதிவெழுதுவதில் ஏனோ... தவிர்க்க முடியாமல் சிறு சிறு இடைவெளி வந்துவிடுகிறது. ஆனால் இந்த இடைப்பட்ட நாட்களில் நான் சந்தித்த சம்பவங்கள் மனிதர்கள் என் எல்லாமே சுவாரஸியமாக அமைந்துவிட, இங்கே சந்தோஷமுடன் அவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஓவிய கண்காட்சிகளில் பங்குபெற நிறைய‌ வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருந்த போதிலும் விருப்பமில்லாமல் சில காலமாக தவிர்த்து வந்தேன். இம்முறையும் அப்படி ஒரு வாய்ப்பு தேடிவர தவிர்க்க முடியாமல் கலந்துக்கொண்டதற்கான‌ காரணம் இந்தியா நாட்டினை தலைப்பாய் கொண்டு நடத்தப்பட்டது என்பதால். மற்ற நாடுகளை பற்றியும் அவர்களின் கலாச்சாரங்களை பற்றியும் தெரிந்துக்கொள்வதில்தான் எத்தனை ஆர்வம் இவர்களுக்கு!


சமீப காலமாக‌ இங்குள்ள மக்கள் இந்திய நாட்டை பற்றி தெரிந்துக்கொள்வதில் அதிக ஆர்வம் கொள்கிறார்கள். கடந்த சில நாட்களாக‌ நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் விழாக்களே இதற்கு சான்று!நான் பணிபுரியும் இடத்தில் சென்ற மாதம் Voyage en Inde என்ற தலைப்பில் ஒரு மாலை பொழுதினை ஏற்பாடு செய்ய, இந்திய பெண்ணானதால் பாதிக்கு மேற்பட்ட பொறுப்பு என்னிடம் வந்து சேர்ந்ததுவிட்டது. நம் நாட்டின் முக்கிய அம்சங்களை விளக்கப்படங்களுடன் கட்டுரையாக தொகுத்து வழக்கியது, விழா நடைப்பெற்ற ஹாலின் வாசலில் கோலம் போட்டது, மாலை பொழுதினை சுவைத்து மகிழ்ந்திட சிற்றுண்டி தயார் செய்தது என..... இதற்கான தேடலின் போதுதான் நம் நாட்டை பற்றி இன்னும் நிறைய தெரிந்துக்கொண்டேன். இந்திய பெண் என சொல்லிக்கொள்வதில் பெருமையாகவும் உணர்ந்தேன்.


கோலமிட எதுவும் கிடைக்காத போதும் கிடைத்த ஒரு சில கலர் மணல்களை வைத்து அவசர அவசரமாக‌ கோலமிட்ட  சில‌ நிமிடங்கள்  மீண்டும் நம் தமிழ்மண்ணை நினைக்க வைத்தது. ஊரில் இருக்கும்போது நன்றாகவே கோலம் போடுவேன் என்றாலும் இங்கு வந்து இப்படி பிரெஞ்சு மக்களுக்காக என்ற போது ஏதோ முதல்முறை போன்றதொரு உணர்வு எற்பட்டது. எனக்கு உதவியாக ஒரு பிரெஞ்சு நண்பரும் மிகுந்த ஈடுபாட்டுடன் இணைந்து கோலமிட்டதை கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. கோலத்தை குறித்து நிறைய கேள்விகளை எழுப்பினர். அது ஆரம்பக்காலங்களில் எதற்காக போடப்பட்டது, அதனால் வரும் பயன் என்ன, இப்பொழுதும் தொடர்கிறதா என நம் நாட்டின் இந்த பழக்கத்தை கண்டு பிரமித்தனர்! நமது முன்னோர்களின் ஆழ்ந்த சிந்தனையையும் கலைதிறனையும் கேட்டு வியந்தனர்!

இந்தியாவிற்கு சுற்றுலா சென்று வந்த நண்பர் ஒருவர் slide projector ரில் இந்திய‌ புகைப்படங்களை காண்பிக்க‌...... பின்னணியில் இனிமையான கர்னாடக சங்கீதமும் இசைத்துக்கொண்டிருக்க‌, பருகிட தேனீர், கூடவே சம்மோசாவும், மசால வடையும் சுவைத்து மகிழ்ந்த சில மணி நேரங்கள் வந்திருந்த அனைவரும் இந்தியாவிற்கே பயணித்தது போல் இருந்தது என்றனர்.

இதேபோல் எங்கள் ஊரில் உள்ள‌ (Médiathèque) மீடியாசென்டரிலும் Novembre en Inde என்ற தலைப்பில் கடந்த சில நாட்களாக இந்திய சமையல், இலக்கியம், சினிமா, கோலமிடுதல், மியுசிக்கள் கான்ஃபெரன்ஸ், புகைப்படம் மற்றும் ஓவிய கண்காட்சியென ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

இங்கு இந்திய மக்கள் அதிகமில்லாத பகுதி என்பதால் அடிக்கடி இந்திய பயணம் மேற்கொள்ளும் பிரெஞ்சு மக்கள் அனைவரும் சேர்ந்து இப்படி ஒரு பகிர்தலை மேற்கொண்டுள்ளார்கள். இவற்றின் நோக்கமே மற்ற நாடுகளின் மொழி, இனம், மதம், கலாச்சார பழக்கவழக்கங்கள்........ பற்றி தெரிந்துக்கொள்வதற்காகவே!


கடந்த வாரம் இரண்டு நாள் தொடர்ந்து நடைபெற்ற இந்திய சமையல் வகுப்புகளில் கலந்துக்கொண்டு வந்திருந்த பதினைந்துக்கும் மேற்ப்பட்ட பிரெஞ்சு பெண்களுக்கு நம் தென் இந்திய‌ சமையலை செய்துக்காட்டியது மிகவும் சுவாரஸியமாக இருந்தது. முதல்முறை இப்படி வெளியிடத்தில் சமைப்பது என்பது கொஞ்சம் சவாலாகவே தெரிந்தது எனினும் சரியான முறையில் சுவையாக செய்துவிட, அனைவரும் ஒன்று சேர்ந்து ருசித்து மகிழுந்தது நிறைவாக இருந்தது.

அடுத்து, அனைவரது பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் எனது ஓவியங்கள்.... கீழே காணும் படங்கள்.... சென்ற வாரம் எடுத்தது.வழக்கம்போல எனது ஓவியங்களை காண்பவர்கள் கேட்கும் கேள்விக‌ள் "ஏதாவது டிராயிங் கிளாஸ்க்கு போயிருக்கிங்களா?","எத்தனை வருஷம் கத்துக்கிட்டீங்க?" என இம்முறையும் கேட்கப்பட.... "இல்லை, அப்படி எதுவுமில்லை. என் குடும்பத்தில் அனைவரும் ஓரளவிற்கு வரைய தெரிந்தவர்கள், அதனால் அது ஜீன் வழியாக‌ வருகிறதுன்னு நினைக்கிறேன்" என்ற எனது பதிலும் வழக்கமானதாக இருந்தது.

நிகழ்ச்சி அழைப்பிதழ்களிலும்.... நிகழ்வினை பற்றி வெளிவந்த செய்திதாள்களிலும் எனது பெயரை கண்டு மகிழும் உள்ளம்.........
நம் நாட்டை பற்றி ஆர்வமாய் பல வகையான கேள்விகள், நிறைய விமர்சனங்கள், ஒருவர் மற்றொருவருடன் தெரிந்த நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளுதல் என இனிமையாக நகரும் நிகழ்வுகளில் நானும் கலந்துக்கொண்டதில் இந்திய பெண்ணாய் பெருமைகொள்ள‌தான் செய்கிற‌து.

Wednesday, October 13, 2010

நீங்காத அவளின் நினைவுகள்....

                 புதிய நாடு, புதிய மனிதர்கள், புதிய உணவு வகைகள், புதிய பழக்கவழக்கங்கள் என எல்லாமே புதியதாக, இனிமையான தருணங்களையும் சந்தோஷமான நிமிடங்களையும் பெற்று தந்தது கடந்த வார ஸ்பெயின் பயணம். 400 கிமீ தொலைவில் இருக்கும் நண்பர் வீட்டிற்கு சென்று பின் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து சென்றுவந்த பயணம் கொடுத்த உற்சாகத்தில் மீண்டும் எனது ப்ரியமான பதிவுலக நண்பர்களை சந்திக்க வந்துள்ளேன்.பிரான்ஸின் எல்லையை தாண்டிய அடுத்தடுத்த நிமிடங்களில் என்னற்ற மாற்றங்களை தந்து பிரமிக்க வைத்தது ஸ்பெயின். பிரான்ஸை ஒப்பிடுகையில் பொருட்கள் எல்லாம் விலை மலிவாக கிடைக்கிறது. வயிற்றிர்க்கு உணவளிக்கும் உணவகங்களில் செவிக்கும் விருந்தாக இசைக்கச்சேரிகள் நடைப்பெறுகிறது. பிரான்ஸை போல் அல்லாமல் இந்த நாடு தனது சட்டத்திட்டங்களில் சிலவற்றை தளர்த்தி இருப்பதை பார்க்க முடிந்தது.

(அங்கு அதிகமாக விற்கப்படும் dried Sausage!)

ஆனால் இந்த பயணத்தையும் விடுமுறை நாட்களையும் அர்த்தமுள்ளதாக்கியள்..... கமி.


எனக்கும் குழந்தைகளுக்குமான உறவு எப்பொழுதும் ஆழமுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருப்பதாகவே தோன்றும். இம்முறையும் என்னை அப்படி நினைக்கவைத்தவள் நண்பரின் நான்கு வயது மகள். அழகான குட்டி தேவதை. பொம்மை போன்றதொரு தோற்றம். இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்ததை நியாபகத்தில் வைத்துக்கொண்டு தன் பெற்றோர் மூலம் எங்களின் வரவை தெரிந்துக்கொண்டவள் எங்களை கண்டவுடன் முந்திய‌ நாளே வரைந்து வைத்திருந்த படத்தை எங்கள் இருவருக்கும் பரிசளித்தாள்.


பின் அவள் அறைக்கு அழைத்து சென்று தன் குட்டி உலகத்தை பார்வையிட செய்தாள். அறை முழுவதும் கொட்டி கிடந்த விளையாட்டு பொருட்களின் நடுவில் அமர்ந்துக்கொண்டிருந்தவள் என்னையும் அழைக்க மீண்டும் குழந்தையாய் மாறிவிட்ட உணர்வில் அவளோடு கழிந்த நிமிடங்கள் இனிமையானது. Snow White, Cindrella, Beauty and the Beast, etc. கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உருவ பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடுவது இவளுக்கு பிடித்தது என்றால், அதைவிட அதிகம் பிடித்தது வரைவதுதான்!

என்னை பற்றி தன் அம்மாவின் மூலம் தெரிந்துக்கொண்டவள், தனது டிராயிங் நோட்டு புத்தகங்களை கொடுத்து பார்க்க சொன்னவள், பின் அவளுடன் சேர்ந்து என்னையும் வரைய வைத்தாள். நேரம் போவதே தெரியாமல் நிறைய வரைந்தோம். அவளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன் என்பதைவிட அவளிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

என் நெற்றியில் வைத்திருந்த பொட்டை பார்த்து கேட்ட கேள்வியில் ஆரம்பித்து இடைவிடாமல் நிறைய கேள்விகள் என எப்பொழுதும் பேசிக்கொண்டே இருந்தாள். பள்ளியில் மற்ற மாணவிகளை பார்த்துவிட்டு தனக்கும் அதுப்போல French braid போட்டு விட சொல்லி தன் அம்மாவிடம் நீண்ட நாளாக கேட்டு இருக்கிறாள். அவளின் அம்மா 'எனக்கு தெரியாது உனக்கு தெரிந்தால் போட்டுவிடு' என்றார் என்னிடம். கடந்த‌ சனிக்கிழமை அன்று அவள் விரும்பியபடி நான் போட்டு விட்டதும்தான் அவள் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி!


காரில் செல்லும்போது என் பக்கத்தில் அமர்ந்துக்கொள் என என்னை அழைத்து அவள் பக்கத்தில் அமர்த்திக்கொள்வதாகட்டும், ரெஸ்டாரண்டில் அவள் பக்கதில் என்னை அமர்த்திகொண்டு, நான் ஆர்டர் செய்த உணவு வர தாமதமாக, அவளுக்கான உணவு சீக்கிரம் வந்துவிட‌ சாப்பிட்டு கொண்டிருந்தவள் , பசிக்குதா வேணும்னா என் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடு' என்பதாகட்டும், அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் கூட‌ கொஞ்ச நேரம் என் கூட  விளையாடிவிட்டு போ என்றவளின் ஆசையை நிறைவேற்றிய போதுமாகட்டும்... மீண்டும் குழந்தையாய் மாறிவிடமாட்டோமா என ஏங்க வைத்த இனிமையான தருணங்கள் அது!
மொத்தத்தில் இந்த பயன‌த்தை இனிமையாக்கியது குழந்தைக்கான இவளின் அடையாளங்கள்தான். இன்று என்னைவிட்டு பயனகளைப்பு நீங்கிவிட்டாலும் நீங்காமல் இருக்கிறது அவளின் நினைவுகள்.

Thursday, September 30, 2010

ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்!!!

அழகு என்பது பெண்பால் என்றால்
ரசனை என்பது நிச்சயம் ஆண்பால்தான்!

மிக சாதாரனமாக‌ வசீகரிக்கும் ஒன்றைகூட ஆண்கள் ரசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். பெண்களின் ரசனை அமைதியானது என்றால் ஆண்களின் ரசனையோ ஆழமானதாக இருக்கிறது….குறிப்பாக பெண்களை ரசிப்பதில். பெண்கள் ஆண்களால் ரசிக்ககூடியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். பெண்ணும் ஆணின் ரசனையாலேதான் அழகாக்கப்படுவதாக கருதுகிறேன். நம்மைவிட நமக்கு எது பொருத்தமாக இருக்கிற‌து என்பதில் இவர்களின் தேர்வு மிக அழகானதாக உணர்கிறேன். என் வாழ்வில் எனக்கு கிடைத்த ஆண்கள் அனைவருமே ரசனைமிக்கவர்கள் என்பதில் எப்போதும் எனக்கு பெருமை உண்டு. அப்பாவில் ஆரம்பித்து தம்பிகள், கஸின்கள், கல்லூரி நண்பர்கள், என்னவர் என அனைவருமே நல்ல ரசனை உணர்வு படைத்தவர்கள்தான்.

நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை என் செயல்கள் அனைத்தையும் ரசித்துக்கொண்டு இருப்பவர்… ஸ்கூல் யூனிஃபார்மில் இருந்து சுடிதாருக்கு மாறிய போதும் சரி, திருமணக்கோலத்தில் என்னை கண்ட போதும் சரி என்னை பார்த்து பார்த்து ரசித்து மகிழ்ந்த என் அப்பா………

அக்கா உனக்கு இது நல்லாயில்ல, இது நல்லா இருக்கும் என்பதாகட்டும், அதுவரை ப்யூட்டி பார்லர் போகாத நான் தோழியின் ஆலோசனைபடி என் நிச்சயதார்த்தம் அன்று மேக்கப் போட்டுகொண்டு வந்து நின்ற போது, ‘நீ சாதாரனமாவே நல்லாயிருப்பியே’ என்று சொன்ன‌ இவர்களின் விருப்பப்படி ப்யூட்டி பார்லர் போகாமலே திருமணத்திற்காக‌ நானே என்னை அலங்கரித்துக்கொண்ட போது ‘ஆங் இதுதான் எங்க அக்கா’ என சொல்லி என்னை மகிழ்வித்த தம்பிகள், கஸின்கள்………

நட்பின் உரிமையில் உனக்கு இதுதான் எடுப்பா இருக்கு, இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இல்ல, இந்த செருப்புதான் உன் காலுக்கு அழகா இருக்கு என சொல்வதில் ஆரம்பித்து, புரியும் செயல்கள் அனைத்தையும் உடன் இருந்து ரசித்து, இவர்கள் இத்தனை கூர்மையாக கவனிப்பார்களா, இவ்வளவு ரசனைமிக்கவர்களா ஆண்கள் என உணர்த்திய எனது கல்லூரி நண்பர்கள்……

என்னை ரசித்து பின் என் சின்ன சின்ன செயல்களையும் ரசித்து, இந்த பிறவியை ரசித்து வாழ்ந்திட இறைவன் எனக்களித்த வரமாக நான் நினைக்கும் என்னவர்……

இவர்களை தொடர்ந்து இன்று நான் சந்தித்து வரும் இனைய நண்பர்கள்.... இவர்களை பற்றி என்ன சொல்வது!!! நான் வரைந்த சித்திர பெண்ணழகை ரசித்து வர்ணித்து இவர்கள் எழுதிய கவிதைகள் படியுங்கள், உங்களுக்கே புரியும்... ஆண்கள் எவ்வளவு ரசனை மிக்கவர்கள் என்று. ஓவிய பெண்ணிற்கே கவிதையால் உயிர் கொடுக்க‌ நினைக்கும் ஆண்கள் இவர்கள். இப்பொழுது சொல்லுங்கள் தோழிகளே, ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தானே இருக்கமுடியும்!!!துப்பட்டா தேவதை

தென்றல் காற்றில்
பறக்கும் பார்வையை
வீசி செல்லும்
யார் இந்த
தேவதை
துப்பட்டா
தாரிகை !!!
                 …சிவா

துப்பட்டா என்னும்
என் தேவதையின் சிறகுகள்
பறக்கத்தானே செய்யும்..
                        …ப்ரியமுடன் வசந்த்


துப்பட்டாவில் படபடக்குதென் உசிரு
உன் பார்வை பட்டு(ப்) புள்ளியானேன்
கட்டிக் கொள்ளு இல்லைக் கண்ணை மூடு! :)
                                                                 …பாலன்


தேவதைக்கு இறகு இருக்குமாம் - பறக்க
ஆனால் பார்தவர்கள் யாரும் இல்லை
இன்று
உன் வண்டியில் நீ வரும் போது
காற்றில் பறந்த உன் துப்பட்டா - என்
கண்ணுக்கு தெரிந்தது அது இறகாக
                                                            …புதுவை சிவா

 
ராத்திரி வானின் ஒரு துண்டை
ரகசியமாய் திருடிவந்து
துப்பட்டா செய்திருக்கிறாய் காற்றில்
துடித்து பகல் வானத்திடம்
ஒழுங்கு காட்டுகிறது உன் துப்பட்டா...
                                                                     …சீமான்கனி


சுருண்டு நெளிந்து நீண்டு விழும்
கூந்தல் அருவியில்
சிக்கிக் கொள்ளும் ஒரிதழாவாவது
மாறேனோ?
                                      …பாலாஜிசரவணா


பாவையின் பார்வையிலே
பொய் கோபம் தெரியுதடி
கோவலன் நானிலையோ
கோபிக்க மாட்டாயோ
                                  …தினேஷ்குமார்

குளிர் நிறை கண்கள்
மடல் விசுறும் போதும்

தேன் இனிக்கும் உதட்டில்-தீந்
தமிழ் நழுவும் போதும்
காணமுடியா இடை
தாளமிடும் போதும்

காற்றிலே சேலை
வானவில்லான போதும்

நான் செத்து செத்து பிழைக்கிறேன்
உனை தொட்டுவிட துடிக்கிறேன்
                                                              …யாதவன்

 
ஒ பெண்ணே எனக்கு மட்டும்
உயிர் கொடுக்கும் சக்தியிருந்தால்
நொடியில் உன்னை என்னவளாக
மாற்றியிருப்பேன் .காலந்தோறும்
கவிபாடியிருப்பேன் இப்படி ஒற்றை
கவியில் புலம்ப வைத்து விட்டாயே..!!
                                                                       …ஜெய்லானி

Thursday, September 23, 2010

அழகு என்பது நிச்சயம் பெண்பால்தான்!!!

« அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண் பாலடா
ஏஹே... கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா »

"ஷாஜகான்" படத்தில் "மின்னலை பிடித்து மின்னலை பிடித்து" பாடலில் வரும் வரிகள் இவை. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் எவ்வளவு அழகாக பெண்னை ரசித்து எழுதப்பட்டு இருக்கிறதே என்று நினைத்துக்கொள்வேன். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் அழகுதான். ஒரு பெண்ணாக பெண்களை வரையும் போது இந்த பாடல் வரிகள்தான் நினைவில் வரும். ஏனோ என்னையும் அறியாமல் பெண்களை வரையும் போது மட்டும் இந்த பாடலை முனுமுனுத்தபடி வரைகிறேன்.

மேலே உள்ள படங்கள் அனைத்தும் நம் தமிழ் வாரப்பத்திரிக்கைகளை பார்த்து வரைந்தது. நான் வரைபவைகளை ரசித்து தொடர்ந்து பின்னூட்டமிடும் (ஆண்)நண்பர்கள் வழக்கம் போல் நன்றாக வரைந்து இருக்கிறீர்கள் என சொல்லாமல் இந்த சித்திரப் பெண்ணழகை பற்றி 'கனவு கன்னிகையோ.... காதல் தேவதையோ....' என எப்படி தோன்றினாலும் கவிதையாக எழுதிவிடுங்கள். காரணம் அழகு என்பது பெண்பால் என்றால், ரசனை என்பது நிச்சயம் ஆண்பாலாகத்தான் இருக்க முடியும்!

Tuesday, September 14, 2010

சொர்க பூமி!!!

             கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான மக்கள் தேடி வருமிடம் கடல்களாகத்தான் இருக்கும். பூமியின் மேற்பரப்பில் மூன்று மடங்கு தண்ணீரால் அமையப்பெற்றுள்ளது இப்படி நாம் அனைவரும் அனுபவிக்கத்தானோ என தோன்றியது கடற்கரையில் குவிந்திருந்த‌ கூட்டத்தை காண்கின்ற போது. அதிலும் நாங்கள் வசிக்கும் பகுதி மிகசிறந்த சுற்றுலா தளம் என்பதற்கு அடையாளமே இந்த கடல்கள்தான்.

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வெளி நாட்டினருக்கு நன்கு தெரிந்த Saint Tropez எனும் ஊரும் அங்குள்ள Pampolonne Beech ம்தான். சொந்த கப்பலகளில் வந்திறங்கும் வி.ஐ.பிகளை வித விதமாக புகைப்படம் எடுத்து லட்சக்கணக்கில் காசு பார்த்திட விலை உயர்ந்த கேமராக்களுடன் காத்திருக்கும் பாப்பராஸிகள்(Paparazzi) ஒரு புறமும் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு இருக்கும் கப்பல்களை காண்பதற்காகவே கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் மக்கள் இன்னொரு புறமும் என்று கடந்த‌ இரண்டு மாதமும் ஊரே விழாகோலம் கொண்டிருந்தது. சாதாரண மக்களில் இருந்து வி.ஐ.பிகள் வரை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் கடல் மகத்தானதுதான் !!!


என்னை சுற்றி சூழ்ந்துள்ள கட‌லலைகளின் தாலாட்டிலே எப்பொழுதும் நான் வாழ்ந்துக்கொண்டிருப்பதாக தோன்றும். தவழ்ந்து வரும் கடலலைகளில் மன‌ம் நனைய சலிக்க சலிக்க அதன் அழகினை ரசித்துவிட்டேன். ஆனாலும் மனம் மீண்டும் மீண்டும் தண்ணீரை நோக்கியே செல்கிறது. கோடை விடுமுறையின் கடைசி நாட்களில் அழகான சொர்க பூமிக்கு பயணமானோம்.

நகரத்து இரைச்சலும், செல்போல் மணியும் அலுத்து போகிற போது இப்படி ஏதாவது அமைதியான இடங்களுக்கு சென்று வருவது வழக்கம். எங்கள் வீட்டில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள சின்னஞ்சிறிய‌ ஊர் அது. கார் பார்க்கிங்கில் இருந்து 2கிமீ நடந்து செல்ல வேண்டும். நடைப்பாதையின் இருபுறமும் அடர்த்தியான மரங்கள் மெல்லிய காற்றுடன் வரவேற்கிறது. கொஞ்சம் கூட மாசு படியாத சுத்தமான காற்றினை சுவாசிப்பதை உள்ளே நடக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே உணர முடிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சுற்றிலும் பசுமை கண்களுக்கு விருந்தாக அமைந்தது.


நகரத்து ஆரவாரமற்ற அப்பகுதியில் தூரத்தில் இருந்து எங்கோ நீர் வீழ்ச்சியின் மெல்லிய ஓசையை மட்டுமே கேட்க முடிந்தது. அதை நெருங்க நெருங்க கொட்டும் நீரின் சத்தமும் அதிகமாக‌ நம்மை நனைக்கும் சாரலை நன்றாக உணர முடிந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஏதோ மலைகளின் நடுவில் வெள்ளை நிறத்தில் போடப்பட்டு இருந்த ஒரு கோடு போல தெரிந்தது.சரியான பாதை அமைக்கப்படாததால் நடப்பதற்கு சற்று சிரமமாக இருந்தது. ஆனாலும் தூரத்தில் இருந்து வந்த அருவியின் சத்தம் ஆவலை தூண்டி நடையில் வேகத்தைக் கொடுத்தது. நாங்கள் சென்ற பாதை மலையடிவாரத்தில் அழகாக ஓடிக்கொண்டு இருந்த நதியிடம் கொண்டு சேர்த்தது. சுற்றிலும் பசுமை போர்த்திக்கொண்டு இருந்ததால் தண்ணீரின் நிறமும் பச்சையாகவே காட்சியளித்தது.

அருவியினை அருகில் சென்று பார்க்கலாம், தண்ணீரில் நனைந்துவிட்டு வரலாம் என ஆவலுடன் அதை நெருங்கும் பாதையில் நடந்து சென்றோம். ஆனால் அங்கிருந்த எச்சரிக்கை பலகையை பார்த்தவுடன் பெரிய ஏமாற்றமாக இருந்தது. மலை பாறைகள் சரிவதாலும் அதனால் சிறு சிறு கற்கள் கீழே விழுவதாலும் அங்கே சரியான பாதை அமைக்க வேலை நடந்துக்கொண்டிருப்பதால் தற்காலிகமாக அத‌ன் வழியை தடைசெய்து கம்பிகளை கொண்டு மூடி இருந்தார்கள்.

நாமெல்லாம் என்னைக்கு விதிகளை கடைப்பிடித்து இருக்கிறோம் என்பதை போல ஒரு சிலர் அந்த கம்பிகளை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு அந்த பாதையில் செல்வதை பார்த்தோம். அன்று விடுமுறை நாள் என்பதால் வேலையாட்களும் இல்லை.


‘இவ்வள‌வு தூரம் வந்து அருவியின் அருகில் சென்று பார்க்காமல் போவதா’ என என்னவர் என்னை அந்த தடை செய்யப்பட்ட பகுதிக்கு அழைத்தார். ‘இல்லை ஆபத்து அதிகம் இருப்பதால்தான் அந்த பாதையில் செல்ல தடை செய்திருக்கிறார்கள். அதை மீறுவது பாதுகாப்பானது அல்ல, நாம் இன்னொரு நாள் வரலாம்’ என மறுத்துவிட்டேன். என்னை போல அந்த பாதையில் செல்ல விரும்பாமல் ஒரு பெண் தன் குழந்தையுடன் எச்சரிக்கை பலகையின் அருகில் நின்றிருந்தார். அந்த பெண்ணின் கணவரும் மகனும் மட்டும் அந்த பாதையில் நுழைந்திருக்க வேண்டும். அங்கேயிருந்து அச்சிறுவன் அவன் அம்மாவிற்கு "இந்த பகுதியில் எந்த ஆபத்தும் இல்லை. அதனால் பயம் வேண்டாம், தைரியமா வாங்க. அருவியினை அருகில் பார்க்க அழகா இருக்கு" என அழைப்பு விடுத்தான். அப்பொழுதுதான் அந்த பெண்னை கடந்து சென்றுக் கொண்டிருந்த எங்களுக்கு அச்சிறுவனின் வார்த்தைகள் காதில் விழ தானாகவே என் கால்கள் நின்றது. ஒரு நிமிடம் பக்கம் இருந்த என்னவரை ‘நாமும் போகலாமா’ என்பதை போல பார்க்க, அவரும் என் பார்வையின் அர்த்தம் புரிந்தவராய், அதற்காகவே காத்திருந்தவராய் என் கையை பிடித்துக்கொள்ள, மீண்டும் வந்த வழியே திரும்பி, அப்பகுதிக்குள் நுழைந்து, கரடு முரடான வழியில் ந‌டந்துச்சென்றோம்.

முன்னேறி செல்ல செல்ல பன்னீர் தெளித்து வரவேற்பதை போல் இருந்தது மேலே பட்ட சாரல். மிதமான வெயில், மலைகளில் இருந்து கொட்டும் தண்ணீர், அதன் மெல்லிய‌ சத்தம், நனைக்கும் சாரல்...... இப்படி அதன் இனிமையை உணர்கிற போது மனதில் ஏற்பட்ட ரம்யமான உணர்வுகளை எப்படி வார்த்தைகளில் சொல்வது! அது ஒரு சொர்கபூமி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. சொர்கமாய் தெரிந்த அந்த இடத்தின் பெயர் இதுதான்…Sillan la cascade !

அருவியை நெருங்கியும் இதற்கு மேல் எச்சரிக்கையை மீறுவது தவ‌று என்பதால் அன்று அங்கு யாருமே தண்ணீரில் இறங்கி குளிக்க முன் வரவில்லை. மாறாக முழுக்க முழுக்க கண்களுக்கு விருந்தளித்த காட்சியினை அனுபவித்து திரும்பினர்.
எதையும் அமைதியாகவே எதிர் நோக்கும் என்னை போலவே அங்கு ஒரு பறவை அமைதியாக தனிமைமையில் யார் வரவையோ எதிர்ப்பார்த்து காத்திருந்தது.இத்தனை ரம்யமான தருணங்களை, தண்ணீரின் இனிமையினை மனிதர்களாகிய நம்மால் மட்டும்தான் உணரமுடியமா இல்லை இல்லை அனைத்து உயிரினங்களுக்குமே பொதுவானதுதான் என தோன்றியது அந்த பறவையினை பார்த்தபோது.

 "நீரின்றி அமையாது உலகு"!!!!!