Subscribe:

Pages

Friday, January 14, 2011

தி ஆர்ட் ஆஃப் கோலம்!

        பொங்கல் என்றதும் சட்டென்று என் நினைவில் வருவது கோலங்கள்தான். தினந்தினம் கோலங்களால் வீட்டு வாசலை அழகுப்படுத்தும் நம் நாட்டுப் பெண்கள்தான் எத்தனை கலை நயமிக்கவர்கள்! அதிலும் இந்த திருநாட்களுக்காக‌ போடப்படும் கோலங்கள் கொள்ளை அழகுதான். என் சிறுவயதில் அம்மா கோலமிடுவதைக் கண்டு பிரமித்து இருக்கிறேன். அந்நாட்களில் பள்ளி செல்கையில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போடப்பட்டு இருக்கும் கோலங்களை கண்டு வியந்து, நமக்கும் இதுபோல் கோலம் போட வருமா, அதுவும் இவ்வளவு பெரியதாக எல்லாம் கோலமிட முடியுமா? என கேள்விகள் எழும்பும்.

அம்மா அவர்களுக்கென்று ஒரு நோட்டு புத்தகத்தில் நிறைய கோலங்கள் வரைந்து வைத்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். அப்பொழுது நானும் உங்களை மாதிரி கோலம் போட வேண்டுமென அம்மாவிடம் சொல்ல, தனியாக பேப்பரும் பென்சிலும், அவ‌ர்கள் போட்ட கோலம் ஒன்றினையும் த‌ந்து, அதை பார்த்து போடச் சொன்னார்கள். புள்ளிகளை மிகச் சரியாக வைத்து முதல்முறையாக ஐந்துவயதில் ஒரு ஐந்துப்புள்ளிக் கோலம் போட்டது இன்றும் நினைவில் இருக்கிறது.

அம்மாவிடமிருந்து நிறைய பூக்கோலங்களை கற்றுக்கொண்டு வந்த போதிலும் என்னுடைய ஈர்ப்பு எப்பொழுதும் சிக்கு கோலங்கள் மீதே இருந்தது. ஏனோ அம்மாவிற்கு அதில் ஆர்வம் குறைவு... ஆனால் அதுதான் எனக்கு  ரொம்ப பிடித்த ஒன்றானது. பின் அம்மாவை போலவே நானும் எனக்கென ஒரு நோட்டுபுத்தகம் உருவாக்கிக்கொண்டேன்; அதில் தொன்னூறு ச‌தவீதம் சிக்கு கோலங்கள்தான் இருந்தன.

எதையும் கற்றுக்கொள்ளும் புதிதில் அடிக்கடி செய்துப்பார்க்க தோன்றுமில்லையா, அப்படிதான் கொஞ்சம் வளர்ந்த பெண்ணான‌ பிறகு நானே விரும்பி தினமும் ஒரு கோலம் என்று போட்டு வந்தேன். ஆர்வமிகுதியால் பள்ளிவிட்டு வந்தபிறகு மாலையிலும் கோலமிடுவது சில நேரங்களில் தொடர்ந்தது. நான் கோலம் போட ஆரம்பித்த பிறகு நிறைய சிக்கு கோலங்கள்தான் எங்கள் வீட்டு வாசலை அலங்கரித்தது. அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களோ, வீட்டிற்கு வருபவர்களோ கோலத்தை பற்றி கேட்டுவிட்டால் போதும், அம்மாவோ பெருமையோடு "எனக்கு சிக்கு கோலமே வராது, ஆனா என் பொண்ணு என்ன சுலபமா போடுறா" எனச் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள்.

கற்றுக்கொண்ட ஒன்று பழக்கமாகிப் போகும்போது ஆர்வம் குறைந்து போர் அடிக்க ஆரம்பிக்குமே... அப்படிதான், என் கல்லூரி நாட்களில் கோலம் போட என்னை எழுப்பும் அம்மாவிடம் அதெல்லாம் வேஸ்ட் ஆஃப் டைம் என்று சொல்லி மறுத்ததுண்டு(என்னசெய்வது அப்போதெல்லாம் தூக்கம்தான் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது) அப்பொழுதுதான் 'ஏன் கோலம் போடனும்... அதனால என்ன பயன்...' என அம்மாவிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்ததின் தொடர்ச்சியாக அவற்றை பற்றி நான் தெரிந்துக்கொண்டவைகள்.....

A decorative appearance என்பதையும் தாண்டி ஆரம்ப கால‌ங்களில் அரிசி மாவினால் கோலம் போடப்ப‌ட்டதால் சின்னஞ்சிறிய உயிரினங்களுக்கு உணவாக இருந்திருக்கிற‌து என்பது நாமனைவரும் அறிந்ததே. காலையில் ஒளிரும் சூரிய ஒளிகதிர்களால் உடலுக்கு நல்லது என்றும், குனிந்து நிமிர்ந்து கோலமிடுவதால் பெண்களுக்கு உடற்பயிற்சியாகவும், முக்கியமாக Reproductive organs சிறந்தமுறையில் இயங்குவதற்கும் உதவுகிறதாம். மேலும் புள்ளிகள், கோடுகள், வட்டம், சதுரம்....என்று பலகோணங்களில் போடப்படுவதால் கோலங்களை Mathematical type of art என்றும் சொல்லப்படுகிறது; அழகு, ஆரோக்கியம், கணிதம், பக்தி என‌ அனைத்தையும் கொண்டு, கோலம் ஒரு பெண்ணுக்குள் இருக்கும் கலை உணர்வை வெளிக்கொண்டு வருகிறது. பொறுமை மற்றும் கான்ஸ்சென்ட்ரேஷன் பவரை அதிகப்படுத்துகிறது. இதையெல்லாம் விட சிக்கு கோலங்களைப்பற்றி எனக்கு தெரிந்த கேள்விப்பட்ட ஒன்றிது; எப்படி ஒரு புள்ளியில் ஆரம்பித்து, இருபது முப்பது புள்ளிகள்வரை நீண்டு, அவைகள் அத்தனையும் இணைத்து ஒரு கோலமாக்க முடிகிறதோ அதேப்போலதான், வாழ்க்கையில் எந்த மாதிரியான சந்தர்ப்பங்களிலும் பிரச்சனைகளில் இருந்தும் அழகாக சுமுகமாக நடந்துக்கொள்ள‌ கோலமிடுதல்… சிறந்த பயிற்சி அளிக்கிறதாம். இதோ... அத்தகைய சிறப்பு மிக்க சிக்கு கோலங்களை, என் நோட்டு புத்தகத்தில் நான் வரைந்து வைத்திருந்த ஒரு சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். 

Saturday, January 8, 2011

இனிதாய் தொட‌ரும் (வாழ்க்கை)பயண‌ம்....

                  பிரியமான பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த வருடத்தில் கிடைத்த சிறந்த இணைய நட்புகளும், அறிந்தும் தெரிந்தும் கொண்ட விஷயங்களும் நல்லதொரு அனுபவங்களை பெற்று தந்தது. நள்ளிரவு குளிரில் நடுங்கியபடியே கடற்கரையில் கூடி இருந்த நூற்றுக்கணக்கான மக்களுடன் சேர்ந்து இப்புதிய வருடத்தை தொடங்கியதுகூட புது அனுபவத்தை தந்தது. இதோ கடந்துவந்த நாட்களை அசைப்போட்டபடியே நிகழ்கால நாட்களை ரசித்திட மேற்கொண்ட புதிய வருடத்தின் பயனமும் இனிமையாகவே அமைந்தது.

ஆல்ப்ஸ் மலைதொடர்களின் அடிவராத்தில அமைந்துள்ள ஒரு சின்னஞ்சிறிய ஊராகிய Laus க்கு செல்லும் போதே -3°c யில் சாலை எல்லாம் பனிமூட்டமாகவே இருந்தது. காலை நேர பனிபடர்ந்த‌ சாலைகள்தான் எத்தனை அழகு!


நகரத்து சத்தங்கள் ஏதுமின்றி இருந்த அந்த ஊருக்குள் நுழையும் போதே எதிர்க்கொள்ளும் அமைதி மனதிற்கு உற்சாகத்தை கொடுத்தது. இந்த ஊர் பிரபலமாவதற்கு காரணமாக சொல்லப்படும் ஆலயம் மிகவும் அழகாக இருந்தது.


இதுவரை நான் இங்கு பார்த்த ஆலய‌ங்களில் இருந்து இது சற்று மாறுப்பட்டு இருந்தது. வழக்கமாக ஆலய‌த்தின் பீடத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் பூக்கள் இங்கில்லை. காரணம் ஆலயத்தின் உள்ளே நுழையும்போதே இயற்கையாவே வரும் மலர்களின் வாசம்தான் என சொல்லப்படுகிறது. ஏனோ எந்த வாசனையையும் நான் உணரவில்லை.

நாம் கடவுளிடம் பேசுவதற்கு இதுப்போல ஒரு புனித ஸ்தலம் தேவைப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாக பல ஊர்களில் இருந்து நிறைய மக்கள் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. அமைதியாக இருக்கும் ஆலயத்தில் மக்களின் கண்ணீர் கலந்த வேண்டுதல்களை பார்த்தபோது சிலிர்ப்பாக இருந்தது. இப்படி இங்கு வேறெந்த ஆலயங்களிலும் நான் பார்த்ததில்லை.


பிரான்ஸின் லூர்து(Lourdes) நகரில் காட்சியளித்ததைப் போலவே மாதா இங்கேயும் 1664 ஆம் ஆண்டு பெனுவா எனபவருக்கு காட்சிக்கொடுத்து இருக்கிறார். அவர் தோன்றிய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கும் நினைவுச்சின்னம்தான் கீழே காணும் படம்.


ஆலயத்தை சுற்றிலும் ஒரே மாதிரியாக கட்டப்பட்டு இருந்த காட்டேஜ்கள் பார்ப்பதற்கு மிக அழகாய் தெரிந்தது. நல்லவேலையாக இன்னும் அந்த பகுதி Commercialized ஆகாமல் இருப்பதை பார்த்திட சந்தோஷமாக இருந்தது.அதேப்போல ஆலயத்தின் எதிர்புறத்தில் காட்சியளித்த பனிப்படர்ந்த மலைகளோ மனதை கொள்ளை கொள்ளும் அழகோடு இருந்தது.


Altitude அதிகமில்லாத போதும் குளிர் அதிகமாகவே இருந்தது. அங்கிருந்து கீழே இறங்கியபோது எதிர்கொண்டது Serre Poncon எனும் ஏரி, அதிகபட்ச பனியால் தண்ணீரின் அளவு குறைந்து உறைந்ததுபோல காட்சியளித்தது.கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஊர் என்பதற்கு சான்றாக அங்கு நிறைந்துள்ள இயற்கை அழகுகள் ஒருபுறம் என்றாலும் அந்த ஊர் மக்களும் அவர்களது நல்ல உள்ளங்களும் இன்னொரு சான்று. ஏதோ பல நாட்கள் பழகியதைப் போல் பார்த்ததும் புன்னகைத்து பேசும் அவர்களது எளிமை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடிக்கடி பார்த்துக்கொள்கின்ற போதும் புன்னகைக்க மறுக்கும் நகரத்து மக்களுக்கு இடையில் இந்த சின்னஞ்சிறிய ஊர் மக்கள் எப்பொழுதும் புன்னகைக்க மறப்பதில்லை. அவர்களுடன் பேசினாலே போதும், நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது, அத்தனை அன்பாக பேசுகிறார்கள். இவர்களது எளிமையான குணத்திற்கும் சிரித்த முகத்திற்கும் காரணம்.... இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் வசிப்பதா அல்லது உறுதியாக நம்பப்படும் இந்த புனித ஸ்தலமா... தெரியவில்லை! ஆனால் அங்கிருந்தவரை நானும் என்னவரும் இயற்கையை ரசித்து தெய்வீக சக்தியை உணர்ந்து சந்தோஷமாக கழித்த பொழுதுகளது!