Subscribe:

Pages

Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Tuesday, March 15, 2011

என்றும் கண்மனியாக... (தொடர்பதிவு)

     எனக்கு ஏன் இந்த பெயர் வச்சிங்க? பாருங்க யாருமே என் பேரை சரியா சொல்ல மாட்றாங்க?.... பள்ளி நாட்களில் பெரும்பாலும் இதுதான் என் புலம்பலாக இருந்தது. சரியாக உச்சரிக்க முடியாமல் அவரவர் அவர்கள் இஷ்டத்திற்கு சொல்லி அழைக்கும்போது எனக்கு எரிச்சலாக இருக்கும். அப்பொழுதெல்லாம் அம்மாவிடம் ஷார்ட் & ஸ்வீட்டா எத்தனை பெயர்கள் இருக்கு; அதில் ஏதாவது ஒரு பெயரை வச்சிருக்கலாமே, ஏன் இந்த பெயரை வச்சிங்கன்னு கேட்டிருக்கிறேன். அதற்கு அம்மா ஒரு குட்டி பிளாஷ் பேக் சொல்வாங்க.


பெயர் பிறந்த கதை...

எங்கள் குடும்பத்தில் ஆங்கில அல்லது பிரெஞ்ச் பெயர் வைப்பது சகஜமான ஒன்றுதான் என்றாலும் எனக்காக இந்த பிரெஞ்ச் பெயரை தேர்ந்தெடுத்தது என் பெரியம்மாதான். அம்மாவின் அக்கா அதாவது என் பெரியம்மா நான் பிறப்பதற்கு முன்னே இந்த நாட்டிற்கு(France) வந்துவிட்டார். மேலும் என் ஞானஸ்நான தாயாகவும்(Godmother) இருந்ததால் அவர் தேர்ந்தெடுத்த பிரெஞ்ச் பெயரையே என் பெற்றோர் எனக்கு வைத்தார்கள். மற்றபடி பிறந்த நேரம் நாள் என எதையும் பார்த்து பெயர் வைக்காமல் பிடித்த பெயரை சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.


பள்ளியில்...

ஒரு சில நெருங்கிய தோழிகளை தவிர எனது பள்ளி நாட்களில் சக மாணவிகளாலும் ஆசிரியர்களாலும் எனது பெயர் படாதப்பாடுபட்டது. அவரவர் விருப்பப்படி பலவிதமான உச்சரிப்பில் என்னை பெயர் சொல்லி அழைப்பார்கள். சிலர் என்னிடமே எப்படி சரியாக சொல்வது என கேட்பார்கள். அச்சமயங்களில் அவர்களுக்கு சரியாக சொல்லி கொடுப்பதே என் வேலையாக இருந்துவந்தது. அதிலும் +1ல் பிஸிக்ஸ் மிஸ் என் பெயர் சொல்லும்போது வகுப்பில் லேசாக சிரிப்பு சத்தம் எழும்... அவ்வளவு போசமாக pronounce பண்ணுவாங்க. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நான் பிறகு 'இல்ல மிஸ், அப்படி இல்ல இப்படிதான் சொல்லனும்' அப்படின்னு சொல்லிவிடுவேன். ஆனால் அந்த இரண்டு வருடமும் கடைசிவரை அவர்களால் சரியாகவே உச்சரிக்க முடியவில்லை.


கல்லூரியில்....

ஆனால் அது பள்ளிவரைதான் நீண்டது. கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த பிறகுதான் எனது பெயரை எனக்கு பிடிக்க ஆரம்பித்தது. இலக்கியங்கள் படித்தவர்கள் என்பதாலோ என்னவோ என் கல்லூரி ஆசிரியர்கள் என் பெயரை மிக சரியாக உச்சரித்து அழகாக கூப்பிடுவார்கள். ஒருமுறை Literature வகுப்பில் Shakespeare பாடத்தில் (Shakespeare's play 'Much Ado About Nothing') என் பெயர் வர அதைப்பற்றி விளக்கிய மேடம் இது ஒரு பிரெஞ்ச் பெயர், லத்தின் மொழியில் இருந்து வந்தது எனவும், சரியாக உச்சரித்தால் அழகாக இருக்கும் என்று சொல்லி என்னைப்பார்த்து you know, you have such a beautiful and romantic name... என்றார்கள். அதுவரை அம்மாவிடம் தொடர்ந்துவந்த எனது பெயரைப்பற்றிய புலம்பல் அத்துடன் நின்றுவிட்டது. இப்படி பள்ளிதொடங்கி கல்லூரிவரை உடன்படித்தவர்களிடம் இருந்து என் பெயர் தனித்துதான் இருந்தது.


வேலையில்...

ஆனால் படிப்பு முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தபோது மீண்டும் பெயர் பிரச்சனை ஆரம்பித்தது. வேலைக்கு சேர்ந்த புதிதில் மாணவர்கள் என் பெயரை சொல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள் என்பதனை தெரிந்துக்கொண்டேன். அப்படியே விட்டு விட முடியுமா... அதுவும் இங்க்ளீஷ் டீச்சராக இருந்து கொண்டு! அதனால் சரியான உச்சரிப்பை சொல்லிக்கொடுத்துவிட்டேன். ஆனாலும் உடன் பணிபுரிந்து ஆசிரியர்களில் சிலருக்கு கடைசிவரை சரியாகவே சொல்ல வரவில்லை.


பிரான்ஸில்...

இது எல்லாமே இந்த நாட்டிற்கு வரும்வரைதான் தொடர்ந்தது. இங்குள்ளவர்களுக்கு மிக பரிட்சயமான பெயர் என்பதால் மற்றவர்களிடம் என் பெயர் சொல்லும்போதும் சரி மற்றவர்கள் பெயரிட்டு அழைக்கும்போதும் ச‌ரி மிக comfortableலாக ஃபீல் பண்ணுகிறேன்.


குடும்பத்தில்...

வெளியில் தான் என் பெயர் இப்படி... மற்றப்படி சொந்தத்தில் சரியாகவே சொல்லி கூப்பிடுவார்கள். அம்மா எப்பொழுதும் என்னை ம்மா, என்னடா எனவும் அப்பாவோ கண்மனி என்றுதான் சொல்வார்; அதிலும் அப்பா அயல் நாட்டில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமயங்களில் அவரிடம் இருந்து வரும் கடிதங்களில் ஒருமுறை கூட என் பெயரை எழுதியதில்லை. ஏனெனில் அவருக்கு எப்பொழுதும் நான் கண்மனிதான். என் கண்மனி எப்படி இருக்கிறாள்? என் கண்மனி எப்படி படிக்கிறாள்? இப்படியாகத்தான் எழுதுவார். கூப்பிடும்பொழுதுமட்டும் மிக மெதுவாக என் பெயருடன் 'ம்மா' சேர்த்து அழைப்பார். இன்றும் அப்பாவின் கன்மணியாக‌ இருப்பதே பிடித்திருக்கிறது. வீட்டில் முதல் குழந்தை என்பதால் உடன்பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் நான் அக்காதான். அவர்கள் நண்பர்களும் தோழிகளும் கூட இன்றுவரை என்னை அக்கா என்றுதான் அழைப்பார்கள். என்னவர் என் அப்பாவை போலவே சாஃப்டாக பெயருடன் 'ம்மா' சேர்த்து அழைப்பார். அப்பாவின் குரலில் எப்பொழுதும் என் பெயர் ஓரே டோனில் ஒலிக்கும்; அதில் பாசம் மட்டுமே தெரியும். ஆனால் அப்பாவைபோலவே கூப்பிட்டாலும் என்னவரின் அழைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எதற்காக அழைக்கபடுக்கிறதோ அதை பொருத்து ஏற்ற இறக்கமாக‌ அமையும்.

சரி அப்படி என்னதான் உன் பெயர் என கேட்கிறீர்களா... எப்பொழுதும் என்னவரிடம் இருக்கும் இதோ என் வீட்டு சாவியுடனே சேர்ந்திருக்கும் இந்த கீ செயினில் எழுதியிருப்பதுதான். எஸ்... மை நேம் இஸ் பெயாத்ரிஸ்! மற்றவர்களால் சுருக்கமாக பெயா என்றே அழைக்கப்படும்; நான் விரும்புவதும் அப்படியே.

 


Origin of the name: Derived from the Latin beatrix (she who makes happy, she who brings happiness), which is from beātus (happy, blessed).

Pronounced: be-ah-TREE-che(Italian), BEE-ə-tris(English) BAY-uh-TREECE(French)

Meaning: Bringer of joy, Blessed


பதிவுலகில்...

சரி பெயாவாகிய நான் ப்ரியாவானது எப்படி? தமிழில் பதிவெழுத ஆசைப்பட்டு வலைத்தலம் ஆரம்பித்தபொழுது எனது முந்தைய‌ அனுபவங்களால் வேறு ஏதாவது ஒரு தமிழ் பெயரில் தொடங்கலாம் என்றெண்னி என் சொந்த பெயரை விட்டுவிட்டேன். சின்ன வயசில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த பெயர் ப்ரியா. இணையத்தில் ஒரு சில தமிழ் வலைத்தலத்திற்கு எனது கவிதைகளை ப்ரியா என்ற பெயரிலேயே அனுப்பினேன. அப்படியே பிரசுரிக்கப்பட்டது. சரி இதுவே நம‌து புனைபெயராக இருந்துவிட்டு போகட்டுமே என்றெண்ணி வலைத்தலம் ஆரம்பிக்கும் பொழுது ச்சும்மா ப்ரியா என்று வைக்க இன்று பதிவுலகில் அதுவே என் பெயராகிப்போனது. இடையில் எனது உண்மையான பெயருடன் எழுத ஆசை வந்தும் ஏனோ மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டேன். இன்று உங்களால் ப்ரியமாக ப்ரியா என்று அழைக்கப்படுவதில் எனக்கு சந்தோஷமே!

 

**********


சிறுவயதில் இருந்தே என் பெயரைப்பற்றி மனதுக்குள் இருந்தவைகளை இன்று உங்கள் முன்னால் வைக்க வாய்ப்பாக இருந்தது தோழி சுசியின் பெயர்க்காரணம் பற்றிய தொடர்பதிவு.
நன்றி சுசி! 
இவற்றை தொடர்ந்திட

Wednesday, August 4, 2010

தொடரும் தொடர்பதிவு........

     நீண்ட நாளுக்கு பிறகு ஒரு தொடர்பதிவு, அதுவும் பேட்டி வடிவில்! கேள்விகளை படித்தவுடன் மனதில் தோன்றியவைகளையே பதில்களாக தந்து இருக்கிறேன். இந்த தொடர்பதிவுக்கு அழைத்து தோழி சுசிக்கு எனது நன்றிகள். பதிவை பப்ளிஷ் பண்ணுகிற சமயத்தில் மீண்டும் அழைப்பு இந்த தொடர் பதிவுக்கு. இம்முறை நண்பர் சீமான்கனியிடம்   இருந்து. என்னை அன்புடன் அழைத்த இருவருக்கும் எனது நன்றிகள்.



1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ப்ரியா

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. ப்ரியா என் செல்ல பெயர்….. ப்ரியமாக அழைப்பதற்காக வைக்கப்பட்டது ! எனக்கு மிகவும் பிடித்த பெயரும் இதுதான்.
அப்பா அம்மா வைத்த நிஜப்பெயர் பிரெஞ்சில்.... ஏதோ நல்ல‌ பெயர்தான். ஆனால் பள்ளி பருவத்தின் போது ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அழைக்கும் போது ஈஸியா pronounce பண்ணுற மாதிரி ஏன் எனக்கு பெயர் வைக்கலைன்னு வீட்டில் வந்து புலம்புவேன். தவறாக உச்சரிப்பவர்களிடம் திருத்தி சொல்வதே என் வேலையாக இருந்தது. ஆனால் கல்லூரி வந்த பிறகுதான் என் பெயரை மிகச் சரியாக உச்சரிக்க ஆரம்பித்தார்கள். வலைபதிவில் என் நிஜப் பெயர் இல்லாமைக்கு இதுதான் காரணம்.


3) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

பதிவுலகில் என்ட்ரி ஆனது என்னவோ பிரெஞ்சில்தான். ஆனால் உள்ளத்தின் உணர்வுகளை உள்ளபடியே எழுதிட எனக்கு தமிழ்தான் சிறந்தது என தோன்ற முதலில் என் வலது காலடியை தமிழ் வலைபதிவுலகில் வைத்தேன். ஒரு சில மாதங்களில் இன்னொரு காலடியையும் வைக்க சொல்லி என்னை உங்களில் ஒருத்தியாக தமிழ் வலை பதிவுலகம் ஏற்றுக்கொண்டது.


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எதுவும் செய்யல. என்னைக்காவது எனது வலைபதிவு பிரபலமாகும் என்ற நம்பிக்கையில் இன்னும் நன்றாக எழுத முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறேன்.


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

அதிகமா சொந்த விஷயங்களைதான் எழுதுகிறேன். விளைவு.... பதிவுலக நண்பர்களுடன் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பள்ளி படிக்கும் போது அபராதத்திற்கு பயந்து ஆங்கிலத்தில் பேசி.... ஆங்கில வழி கல்விபயின்று பின் அதிலேயே முதுகலை பட்டமும் பெற்று..... ஆங்கில ஆசிரியையாக‌ பணி செய்துக்கொண்டும்... தினசரி வாழ்க்கைக்கு பிரெஞ்சும் பேசிக்கொண்டு இருக்கும் எனக்கு, எங்கே தமிழ் பேச எழுத வாய்ப்பே இல்லாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் ஆசையாக எழுத ஆரம்பித்தேன். பொழுதுபோக்காகவும் இருக்கிறது மனது நிறைவாகவும் இருக்கிறது. நல்ல நட்புக்களை பெற்று தந்திருப்பதில் சந்தோஷமாகவே இருக்கிறேன்.


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இரண்டு...... பிரெஞ்சில் ஒன்று, தமிழில் ஒன்று!
விரைவில் என் பெயிண்டிங்ஸுக்காக ஒரு வெப்சைட் தொடங்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

இல்லை. மாறாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக எழுதும் எழுத்துக்களை கண்டு வியப்படைகிறேன்.


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதன் முதலில்……… இந்த வார்த்தையில்தான் எத்தனை சுகம் இருக்கு. அது தரும் சந்தோஷமே தனிதான். அப்படி ஒரு சந்தோஷத்தை தந்தவர் நண்பர் ஜோ ... தனக்கென தனி ஸ்டைலில் எழுதுபவர். வித்தியாசமாக எழுதும் இவரது எழுத்துக்களுக்கு ரசிகை நான். என் கவிதைகளுக்காக முதன்முதலில் கமெண்ட் எழுதியவர். அன்று முழுக்க என்னவரிடம், என் கவிதைகளையும் பாராட்டி யாரோ முகம் தெரியா ஒருவர் உலகில் எங்கிருந்தோ பாராட்டி எழுதி இருக்கிறார் என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். இன்றும் நல்ல தோழனாய் இவருடன் நட்பு தொடர்கிற‌து.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ம்ம் சொல்லலாம்! ஆனா முந்தைய‌ கேள்விகளுக்கு சொன்ன பதில் போல இல்லாமல் இதுக்கு detailed தான் சொல்லனும். உங்க நேரத்தை வீணாக்க வேண்டாமேன்னு பார்க்கிறேன். சுருக்கமாக எப்படி எழுதுறது? சரி ஒரு சில வார்த்தைகளில்………..

இன்றுவரை அப்பா அம்மாவின் செல்ல குழந்தையாய், உடன் பிறந்தவர்களுக்கு பிரெண்ட்லியான அக்காவாய், என்னவருக்கு ஆசை மனைவியாய், உறவுகளுக்கு பாசமானவளாய், என் மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியையாய்... உங்கள் அனைவருக்கும் நல்ல தோழியாய்…கனவுகளை நிஜமாக்க முயன்று கொண்டிருப்பவளாய், எந்த சூழ்நிலையிலும் பொறுமையுடன் தன்னம்பிக்கை நிறைந்தவளாய், கொஞ்சம் சோம்பேறியாய், ப‌யங்கர சென்செட்டிவாய், வாழ்க்கையில் சின்ன சின்ன விஷ‌யங்களையும் ரசித்து ஒவ்வொரு மணிதுளியும் நேசிபவள் நான்..... இப்படியெல்லாம் சொல்லனும்னுதான் ஆசை! ஆனா நானே என்னை பற்றி எப்படி சொல்லிக்க‌றது. என்னை விட என்னைப்பற்றி என் நண்பர்களாகிய உங்களுக்கு தெரிந்திருக்கும் தானே.... நீங்களே இதற்கு பதில் சொல்லுங்களேன் !


***********

 
இவற்றை தொடர்ந்திட நண்பர் ரகுவையும்  , தோழி ஆனந்தியையும்  அன்புடன் அழைக்கிறேன்.

Monday, May 3, 2010

பதின்ம வயது நினைவுகள்.....

          நினைத்தாலே இனிக்கும் இனிமையான நினைவுகளை கொண்டதுதான் இந்த பதின்ம காலங்கள்! என்றுமே மூச்சினில் கலந்து சுவாசத்தில் உயிர்த்திருக்கும் அழகான நினைவுகளை திரும்பி பார்க்க ஒரு வாய்ப்பாக இருந்தது நண்பர் ரகுவின் இந்த தொடர் பதிவு அழைப்பு.
நன்றி ரகு!

ண்களில் மின்னல் பார்வை
எப்போதும் சிரிப்பு
மனது முழுவதும் சந்தோஷம்
பொங்கி வழிந்த உற்சாகம்
நிறைய படிப்பு
சின்ன சின்னதாய் கலாட்டக்கள்

யாரையும் புண்படுத்தாக வகையில் சில குறும்புகள்
கலர் கலராய் சில கனவுகள்..........

இதுதான் என் பதின்ம வயதில் நிறைந்திருந்தது!




நிறைய மாற்றங்களை நான் கொண்டது இந்த வயதில்தான். வெறும் Frocks, skirts… போட்டு சுற்றிக்கொண்டிருந்த நான் முதல் முறையாக 16 வயதில் புடவை கட்டி கொண்டு சர்ச்சுக்கு சென்ற நாள் மறக்க முடியாதது. அடிக்கடி வீட்டில் புடவை கட்டி பார்த்ததுண்டு என்றாலும் வெளியில் சென்ற‌து அதுவே முதல்முறை. அதுவரை என்னை பார்த்தவர்களின் பார்வை இம்முறை வேறு மாதிரியாக இருந்தது. என்னையே நான் புதிதாக பார்த்துக்கொண்டதும் அப்போதுதான்!

அம்மா இரண்டு ஜடை பிண்ணி ரிப்பன் வைத்து மடித்து கட்டியது எல்லாம் மாறிப்போய் ஹேர்கட் செய்து கொண்டு பள்ளி நாட்களை தவிர மற்ற நேரங்களில் லூஸ் ஹேர் என்று மாறிப்போனது. அதற்கு முன்பு வரை அம்மா போட்டு விட்ட பவுடர், கண்மை என்று எதுவும் பிடிக்காமல் Fair & Lovely ட்ரை பண்ணியதில் ஆரம்பித்து ஐலைனர், மஸ்காரா என்று என் அலங்காரம் மாறிபோனது. இப்படி சின்ன சின்னதாய் எத்தனையோ மாற்ற‌ங்கள்.

டிவியிலோ வாரப் பத்திரிக்கைகளிலோ எந்த அழகு குறிப்பு வந்தாலும் தவறாமல் பார்த்தும் படித்தும் விடுவேன். வெறும் பார்ப்பதோடு நிறுத்தாமல் அதையே முயற்சி செய்தும் பார்ப்பேன். "இப்படி எதையாவது முகத்தில பூசிக்கொண்டிரு முப்பது வயதுக்குள்ளேயே என்னாக போகுதுன்னு பாரு".... என்ற தம்பியின் கிண்டலை கண்டு கொண்டதே இல்லை. Glowing skin என்பது இயற்கையாகவே அந்த வயதில் இருக்கும் என்பது தெரிந்தும் மேலும் மெருகேற்றிக் கொள்ள வேண்டுமென்ற ஆசையால் விடுமுறை நாட்களானால் எப்போதும் என் முகத்தில் தக்காளி, கேரட், தயிர், தேன்.... இப்படி ஏதாவது ஒன்றினை கொண்டு ஒரு மாஸ்க் இருக்கும்!


ப்பொழுது எனக்கு இருந்த கெட்ட பழக்கமாக அம்மா சொல்வது இதைதான்.... சாப்பிடும்போது புத்தகம் படிப்பது! ஏதாவது ஒரு புத்தகம்…. அது பாடப் புத்தகமாகவோ கதை புத்தகமாகவோ ஏதோ ஒன்று சாப்பிடும் பொழுது என்னிடம் இருந்தாக‌ வேண்டும். அப்படி படித்துகொண்டே சாப்பிட்டால்தான் சாப்பிடுவதே உள்ளுக்குள் இறங்கும். நான் கவனிக்கின்றேனா என்று பார்ப்பதற்காகவே வேண்டுமென்றே என் தம்பி சில நேரங்களில் பேப்பர் துண்டுகளை என் தட்டில் போட்டு விடுவான். கண்டும் காணாததை போல புத்தகத்தில் இருந்து பார்வையை திருப்பாமலே தட்டில் இருக்கின்ற தாள்களை எடுத்து போட்டு விட்டு சாப்பிடுவேன். நானும் ஓரளவு உஷார்தான் !

இப்பொழுதும் தனியாக சாப்பிடும் சமயங்களில் இந்த (படிக்கும்) ப‌ழக்கம் தொடர்கிறது.


தூக்கம், டிவி, போன்.... இந்த மூன்றும்தான் எனக்கு அப்போது மிகவும் பிடித்தவைகளாக‌ இருந்தது. எதற்குமே கோபப்படாத நான் தூங்கும் போதுமட்டும் யாராவது எழுப்பினால் கையில் கிடைப்பதை தூக்கி எறிந்து எதிரில் உள்ளவர்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன். இதை வைத்தே எனக்கும் என் தம்பிக்கும் அடிக்கடி சண்டை நடக்கும்.

படிக்கும் நேரங்களில் படிப்பு… மற்ற நேரங்களில் எப்பொழுதும் டிவிதான். இதுதான் பிடிக்கும் என்றில்லாமல் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்ப்பேன். அம்மாவிடம் சில நேரம் திட்டு வாங்கினாலும் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் நான் பாட்டுக்கு ஒவ்வொரு சேனலாக மாற்றி மாற்றி பர்த்துக்கொண்டு இருப்பேன்.

அடுத்து மிகவும் பிடித்த ஒன்று போன். ஏன் என்றே தெரியாது… போனில் பேசுவது விருப்பமான ஒன்றாகி போனது. வெறும் பத்து பதினைந்து நிமிடம் என்றில்லாமல் தோழிகளிடம் மணி கணக்கில் அரட்டை அடிப்பது பிடிக்கும். வீட்டில் போன் ரிங் ஆனாலே நான் தான் ஓடி போய் எடுப்பேன்… அந்த அளவுக்கு பிடிக்கும்.

சின்ன வயதில் இருந்தே sense of dressing அதிகம் எனக்கு. அதிலும் இந்த பதின்ம காலத்தில் விதவிதமாய் நிறைய டிரஸ் வாங்கிவது பிடித்திருந்தது. Interior decoration னில் ஆர்வம் என்பதால் வீட்டை ஓரளவு சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்வேன். வீட்டில் வேறு எந்த வேலையும் முக்கியமாக சமையல் எதுவும் செய்யாமல் போனாலும் வீட்டையாவது அழகா வைத்துக்கொள்கிறேனே என்று என் அம்மாவிற்கு சந்தோஷம்.

முறைப்படி நடனம் கற்றுகொள்ளவில்லை என்றாலும் கொஞ்சம் நன்றாகவே ஆட வரும். இதனால் பள்ளி கல்லூரி காலங்களில் நிறைய நடன நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வேன். எட்டாவதும் படிக்கும் போது முதல் முறையாக நடன போட்டியில் பரிசும் பெற்றேன். பள்ளியில் எந்த கலை நிகழ்ச்சி என்றாலும் எனது டீச்சர்ஸ்கிட்டே இருந்து எனக்கு எப்போதும் அழைப்பு வரும். அப்படி கலந்து கொண்டவைகளின் நினைவாக எண்ணற்ற புகைப்படங்கள் இன்றும் என்னிடம்! ப‌ள்ளியில் ம‌ட்டுமில்லாம‌ல் வீட்டிலும் அடிக்க‌டி என் ந‌ட‌ன‌ அர‌ங்கேற்ற‌ம் ந‌ட‌ந்துகொண்டே இருக்கும்.


னதில் எப்போதும் உற்சாகம் நிரம்பிய‌ வயது என்பதால் நிறைய நல்ல விஷ‌யங்களை கற்றுக்கொள்ள ஆசை வந்தது. ஒன்பதாம் வகுப்பு படித்தபோது டூவீலர் ஓட்ட ஆசை வ‌ர‌, அதை கற்றுக்கொண்டது பெரிய கதை. அதைப்பற்றி எழுத வேண்டுமென்றால் தனியாக ஒரு சில பக்கங்கள் தேவை.

அறிவியல் பாடத்தின் மேல் உள்ள ஆர்வத்தால் +1 ல் ஃப்ர்ஸ்ட் குருப் (பயாலெஜி) எடுத்து படித்தேன். ஆனால் கல்லூரியில் படிக்குபோது கம்ப்யூட்டர் சயின்ஸ் ப‌டிக்க ஆசை வர டிப்ளமா கோர்ஸில் சேர்ந்து அதையும் கற்றுகொண்டேன். படிப்பது மிகவும் பிடித்த ஒன்றுதான் என்றாலும் அதற்காக செய்த தியாகங்கள் ஏராளம். ஆம், எத்தனையோ இரவுகள் மூன்று நான்கு மணிவரை கண்முழித்து படித்திருக்கிறேன். இதற்காக எத்தனையோ நாட்கள் டிவி பார்ப்பதையே தவிர்த்திருக்கிறேன்.

பள்ளி நாட்களில் படிப்பை போலவே Extracurricular activities ல் ஆர்வம் இருந்தது. இதனால் நிறைய போட்டிகளில் கலந்துக்கொள்வேன். சில பரிசுகளும் பெற்றுள்ளேன். இதில் எனக்கு பெரிய சவாலாக இருந்தது ஒன்பதாம் வகுப்பில் கலந்துகொண்ட பேச்சு போட்டிதான். போட்டியின் முடிவை தெரிவித்த நடுவர்கள் நானும் இன்னொரு மாணவியும் சமமாக மார்க் எடுத்துள்ளதாக சொல்லி மீண்டும் எங்கள் இருவரையும் பேச வைத்தார்கள். முதல் முறை பேசியபோது இருந்த துணிச்சல் போய் கொஞ்சம் பயம் வந்து விட எப்படியோ அதையும் மறைத்துக்கொண்டு பேசிமுடித்தேன். ரிசல்டும் வந்தது...ஆனால் நான் இரண்டாவது என்று! சற்று வருத்தமாக இருந்தாலும் முதல் பரிசு பெற்றவள் என் நெருங்கிய தோழி என்பதால் இருவரும் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டோம்.

NSS ல் இருந்ததினால் அடிக்கடி பாண்டிச்சேரியின் முக்கிய இடங்களுக்கு எங்களை அழைத்து செல்வார்கள். அப்படி ஒரு முறை, பள்ளி இறுதி ஆண்டின் போது Pondy Central Prison க்கும் ஒரு Slum Area வுக்கும் சென்று வந்தது மறக்க முடியாதது. அந்த இரண்டு இடங்களையும் பார்த்த போது அதுவரை சந்தோஷமாகவே நான் பார்த்த உலகம், முதல்முறையாக‌ இப்படியும் இருக்கிறது என்பதனை தெரிந்துக்கொண்டேன்.


திமூன்று வயதில் என் பின்னால் சுற்றி கொண்டிருந்தான் ஒருவன்.... ஸ்கூல் போகும்போது பஸ் பின்னால் சைக்களில் தொடர்ந்து வருவான். அதே போல் மாலை ஸ்கூலில் இருந்து பஸ் ஸ்டாப் வரை வந்து, திரும்ப வீடு வரை தொடந்து வருவான். பலமுறை என்னிடம் பேச முயன்று தோல்வி கண்டு இரண்டு வருடம் இப்படியே சுற்றுகொண்டு இருந்தவன், பின் என் வீட்டில் உள்ளவர்களின் கண்டிப்புக்கும் பிறகு நிறுத்தி விட்டான்.

இவனை தொடர்ந்து நிறைய கடிதங்கள், போன் கால்ஸ் என்று பதின்ம வயது முழுதும் காதல் என்னை துரத்தியது. நான்கு வரியில் தமிழில் கவிதையாக எழுதியவன் ஒருவன், எட்டு பக்கங்களில் ஆங்கிலத்தில் கதையாக எழுதியவன் இன்னொருவன் என்று பலவகையான காதல் க‌டிதங்கள் வ‌ந்தது. ச‌ற்று பயந்து பயந்து காதல் சொன்னவர்கள் சிலர் என்றால் மிக தைரியமாக கண்களை பார்த்து காதல் சொன்ன தைரியசாலிகளும் உண்டு.


வாழ்வின் வசந்த காலம் என்றால் அது இந்த கல்லூரி காலங்கள்தான். எதற்கென்றே தெரியாமல் எப்போதும் எதையாவது பேசி சிரித்துக்கொண்டே இருப்போம். பெண்கள் கல்லூரி என்பதால் நிறைய வசதி... அதிலும் காலேஜ் பஸ்ஸில் நாங்கள் அடித்த லூட்டிகளை இன்று நினைத்தாலும் இனிக்கிறது. வாட்ச்மேன் ஏமாந்த சமயம் பார்த்து நைஸாக க‌ல்லூரியை விட்டு வெளியேறி வெளியில் சுற்றி இருக்கிறோம்.

நான் ஓரளவு வரைவேன் என்று என் நெருங்கிய தோழிகள் மட்டுமே அறிந்திருந்த நிலையில், ஒரு தோழியின் மூலம் நான் வரைந்த ஓவியம் கல்லூரி ஆண்டு மலரில் வந்துவிட கொஞ்சம் கல்லூரியில் பிரபலம் ஆனேன். கவிதை என்ற பெயரில் கிறுக்க ஆரம்பித்த வயதும் இதுதான்!

என் பதின்ம வயதின் நினைவு சின்னமாக இருப்பது பள்ளி... கல்லூரி காலங்களின் இறுதியில் கவிதையாய் கிறுக்கிகொண்ட ஆட்டோகிராப்ஸ்தான்!



தோழமை இல்லாத வாழ்வு நிச்சயம் இனிக்க முடியாது. எனக்கும் நிறைய நல்ல நட்புகள் இருந்தன‌. எதிர் வீட்டில் இருந்த சரியாக பேசவே தெரியாத இரண்டு வயது பைய‌னில் இருந்து, என்னையே கல்யாணம் செய்துக்கொள்ள‌ போவதாக சொன்ன என் பக்கத்து வீட்டு மூன்று வயது பையன் வரை எல்லோரும் எனக்கு பிரெண்ட்ஸ். தங்கைக்கு அவள் தோழிகளிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பில் கூட என் நட்பு பரவி இருந்தது. அவளிடம் பேசி முடித்தப்பின் அவள் தோழிகள் எப்பொழுதும் என்னிடமும் பேசுவார்கள். அதேப்போல் என் தம்பியை தேடி வரும் அவன் நண்பர்கள், தம்பி வீட்டில் இல்லாமல் போனால் கூட என்னிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு செல்வார்கள்.

இப்படி நல்ல நட்புகள் நிறைந்த….மனதில் எந்த கலக்கமும் இன்றி… எந்த ஒரு தேடலும் இன்றி… ஒவ்வொரு நொடியும் சந்தோஷமாக கழிந்த நாட்கள் அது.

Wednesday, April 14, 2010

பொண்ணு பார்த்த கதை..... (மாப்ள பார்த்ததும்)!!!

                 

                "பொண்ணு பாக்க போறோம்".......... தொடர் பதிவை எழுத அழைத்த (மாட்டிவிட்ட) அப்பாவி தங்கமணிக்கு  எனது நன்றி! அவங்க சொன்னது இதுதான்...........நீங்க தங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க வந்த கதையையும்...ரங்கமணியா இருந்தா பொண்ணு பாக்க போன கதையையும்...இன்னும் கல்யாணம் ஆகலேன்னா எப்படி இருக்கணும்னு உங்களுக்குள்ள இருக்கற கற்பனையும் அள்ளி வீசுங்க.

நல்லவேளை, பெரிதாக கண்டிஷன்ஸ் எதுவும் இல்லை என்பதால் எண்ணங்கள் தடையின்றி வார்த்தைகளாக வர இதோ என் ஃப்ளாஷ்பேக்!


********


ந்தா இந்த பட்டு புடவையை கட்டிக்க‌

இல்ல எனக்கு இது வேண்டாம். எனக்கு பிடிச்ச சிறிய சரிகை வைத்து ப்ளுகலர் சாரிதான் கட்டுவேன்

சரி இந்த நகைகளை எல்லாம் போட்டுக்க‌

எனக்குதான் நிறைய நகைகள் போட்டுக்கறது பிடிக்காதில்ல எனக்கு இந்த ஒரு சின்ன ஜெயின் மட்டும் போதும்

சரி, கொஞ்சம் பூவையாவது அதிகமா வச்சிக்க‌

இல்ல எனக்கு எப்போதும் போல இரண்டுசரம் பூ போதும்மா

இதெல்லாம் என்னை பெண் பார்க்க வந்த போது (மாப்பிள்ளை பார்க்கும் முன்னும்) எனக்கும் என் அம்மாவிற்கும் நடந்த உரையாடலின் சிறு பகுதி!

என் பதிமூன்றாம் வயதில் இருந்து இருபத்தி இரண்டு வயதுவரை நிறைய proposals!!! லெட்டரில், போனில், நேராக என்று பலவிதத்தில் என்னை விரும்பியதாக சொன்னவர்களை சிநேகமான முறையில் விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டேன். காரண‌ம் அவர்களில் யாரையுமே பிடிக்க வில்லை என்பது அல்ல! ஏனோ மனதிற்குள் பட்டாம் பூச்சிகள் பறக்கவில்லை! நிச்சயம் எனக்காக பிறந்தவர் சரியான நேரத்தில் என்னை தேடி வருவார் என்று நினைத்திருந்தேன். அவரும் என்னை தேடி வந்தார் பிரான்ஸில் இருந்து! சின்ன வயதில் இருந்தே எனக்கு எது பெஸ்ட் என்று பார்த்து பார்த்து செய்து, 22 வயதிலும் என்னை செல்லம் கொஞ்சிக்கொண்டு இருந்த என் அப்பா அம்மாவிடமே எனக்காக பிறந்தவரை தேடும் வேலையைக் கொடுத்து விட்டேன்.

கல்லூரி காலங்களில் தோழிகள் சிலர் பெண் பார்க்கும் சடங்கை பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவ பெண்ணான எனக்கு அவர்களை போல் அல்லாமல் சர்ச்சில் வைத்தே பெண் பார்ப்பது நடந்தது. மாப்பிள்ளையின்(என்னவரின்) குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக ஏற்கனவே என்னைப்பற்றி மாப்பிள்ளை வீட்டுக்கும், அவரை பற்றி எங்கள் வீட்டுக்கும் பறிமாறிக் கொண்டவைகளை வைத்தே இந்த பெண் பார்ப்பது(மாப்பிள்ளை பார்ப்பதும்) நடந்தது!


ஜூலை 30..... நானும் என்னவரும் பார்த்துக்கொண்ட முதல் நாள். நான் என் பொற்றோருடன் சர்ச்சிக்கு செல்ல எங்களுக்கு முன்னமே அவரும் அவர் அம்மா இன்னும் சில நெருங்கிய உறவினர்கள் என்று காத்துக்கொண்டு இருந்தார்கள். எங்களை பார்த்ததும் மாப்பிள்ளை வீட்டினர் நெருங்கி வர, ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்துக் கொள்வது நடந்தது.

நானும் என்னவரும் முதன்முதலில் பார்த்துக்கொண்ட சர்ச் இதுதான்!

"இதுதான் எங்க பொண்ணு" என்று அப்பா அவர்களிடம் சொல்ல எல்லோரும் என்னை பார்க்க நானும் புன்னகையுடனே மாப்பிள்ளையை "ஒரு பார்வை" பார்த்துவிட்டு தலை குனிந்துவிட்டேன். வெட்கத்தினால் அல்ல, என்ன செய்வது என்று தெரியாமல். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல் என் ஒவ்வொரு கை விரல்களையும் நகங்களில் உள்ள நெயில் பாலிஷினையும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு தெரியாது அதே நேரத்தில் மாப்பிள்ளையாலும் என் விரல்கள் ரசிக்கப் படுகிறது என்று.

"இந்த பெண்ணின் கை விரல்கள் எத்தனை அழகாக இருக்கிறது. எவ்வளவு அழகாக நகங்களை வெட்டி ஷேப் செய்து, மென்மையான கலரில் நெயில் பாலிஷ் போட்டு இருக்கிறாள்"...... இதுதான் என்னை பார்த்த முதல் நொடி அவருக்குள் தோன்றியதாம்.


என் மகனுக்கு சரியா தமிழ் பேசத்தெரியாது(என்னவர் பிறந்தது பாண்டிச்சேரியில்தான் என்றாலும் சிறுவனாக இருக்கும் போதே அவரது குடும்பம் இங்கு வந்து விட்டது) என்று அவர் அம்மா சொன்னதை என் பெற்றோர் அவ‌ருக்கு தமிழே தெரியாது என்று புரிந்துக்கொண்டு, அவ‌ரிடம் இரண்டொரு வார்த்தைகளோடு முடித்துகொண்டு அவரின் அம்மா மற்றும் உறவினர்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். என்னமோ அவர்கள்தான் சேர்ந்து வாழப்போவதை போல அப்படி என்னதான் பேசினார்களோ தெரியாது. பாவமாக ஒருபுறம் நானும், பரிதாப‌மாக இன்னொருபுறம் அவரும் நின்றுக்கொண்டு இருந்தோம். எனக்கு மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்.... நானோ நான்‍- ஸ்டாப்பாக பேசிக்கொண்டிருப்பவள். எனக்கோ பிரெஞ்சு தெரியாது. இவருக்கோ தமிழ் சரியாக பேசத் தெரியாது பிறகு எப்படி பேசிக் கொள்வது? தெரியாத மொழியை கற்றுக்கொள்வது என்ன பெரிய விஷயமா என்று பின்பு நானே எனக்கு சமாதானம் சொல்லிக்கொண்டேன். எப்படியாவது அவ‌ருக்கும் தமிழ் கற்றுக்கொடுத்து விடலாம் என்று நினைத்துக்கொண்டேன். (இங்கு வந்து ஒன்றரை வருடத்தில் சரளமாக பிரெஞ்சு பேச கற்றுக்கொண்டேன். என்னவரும் நம் தமிழ் படங்களின் உதவியால் நன்றாகவே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். கொஞ்சம் எழுத படிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள் என்றால் தமிழ் மாதிரி ஒரு கஷ்டமான மொழி உலகத்தில வேறு எதுவும் இருக்க முடியாது என்று எஸ்கேப்பாகிறார்)


நீண்ட நேர உரையாடலுக்கு பின் மாப்பிள்ளைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என்னை மிகவும் பிடித்திருப்பதாகவும், மேற்கொண்ட வீட்டிற்கு வந்து பேச விரும்புவதாகவும் சொன்னார்கள். எங்கள் வீட்டில் எனக்காக பார்த்த முதல் மாப்பிள்ளையே என் துணைவராக ஆனார். ஆனால் அவர் எனக்கு முன் இரண்டு பெண்களை பார்த்து பிடிக்காமல் போக, என்னை பார்த்ததுமே ரொம்ப பிடித்து விட்டதாம். எங்கள் வீட்டில் சம்மதம் சொல்ல சில நாட்கள் எடுத்துக்கொள்ள எங்கே நான் கிடைக்காமல் போய் விடுவேனோ என்று நினைத்து ‘எனக்கு இந்த பெண்தான் வேண்டும் எப்படியாவது அவளையே திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்’ என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டாராம்.(விதி வலியது! வேண்டுதல் பலித்து என்வசம் மாட்டிக்கொண்டார்)

பெண் பார்க்க வந்த போது அவர் வீட்டில் இருந்து கொண்டு வரபட்ட தட்டு வரிசைகள்!

வீட்டிற்கு வந்ததும் தம்பியும் தங்கையும் மாப்பிள்ளை எப்படி இருந்தார், பிடிச்சிருக்கா? எப்படி டிரஸ் பண்ணிட்டு இருந்தாரு?....என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தேன் ! ஏன் என்றால் அப்போது அவர் முகம் கூட எனக்கு சரியாக‌ நியாபகம் இல்லை. ஆனால் அவர் போட்டிருந்த லைட் பிங்க் கலர் சர்ட்டும் அவரின் ஆர்மி கட்டிங் ஹேர் ஸ்டைலும்தான் நியாபகம் வந்தது. (தனது 24 வயது வரை ஆர்மியில் அதுவும் Parachutist( skydiving) ஆக இருந்தவராம். மேலிருந்து குதிக்கும் போது ஏற்பட்ட மிக பெரிய விபத்து ஒன்றினால் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் இரண்டு வருடம் முன்னாலதான் ஆர்மியை விட்டு, வந்து விட்டதாகவும்... வெளியேறியப் பின்னும் பழக்க தோஷத்தினால்தான் இந்த ஹேர் ஸ்டைல் என்றும் தெரிந்துக் கொண்டேன்)


பின் இங்குள்ள என் உறவினர்களுக்கு அவரின் விவரங்கள் மெயிலிலும் ஃபேக்ஸிலும் அனுப்பி வைக்கப்பட்டது. Princess ஆக‌ வளர்க்க பட்ட என்னை ஒரு நல்ல பிரின்ஸிடம் ஒப்படைக்க வேண்டுமே என்பதால் நிறைய‌ விசாரிப்புகள். இரண்டு வாரத்தில் எல்லா விசாரிப்புகளும் முடிந்து ஒரு வழியாக என் வீட்டில் இருந்து, அவர்களுக்கு சம்மதம் தெரிவிக்கப்ப‌ட்டது. பின்பு இங்கு இருக்கும் அவர் நெருங்கிய உறவுகள் இந்தியாவிற்கு பறந்து வர முறைப்படி அவர் குடும்பத்தார் என் வீட்டிற்குவந்து (இரண்டாவது முறையாக‌) பெண் பார்த்து விட்டு சென்றனர். மிக வேகமாக இரண்டு பேரின் வீட்டிலும் திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாகின. ஆகஸ்ட் 27 நிச்சயதார்த்தம் என்றும் செப்டம்பர் 6 திருமணம் என்று நாள் குறிக்கப் பட்டது. இந்த இடைபட்ட நாட்களில் என்னவர் தினமும் என்னை பார்க்க வந்து விடுவார். எனக்கே தெரியாமல் அவருடன் ஏதோ ஒரு உணர்வு ஏற்படத் தொடங்கிய நாட்கள் அது!

எங்கள் நிச்சயத்தார்த்தம் அன்று அவர் எனக்கு மோதிரம் போடும் போது எடுத்த‌ படம்!

செப்டம்பர் ஆறு…. நானும் அவ‌ரும் திருமண பந்தத்தினால் இனைவதற்காக மதியும் மூன்று மணிக்கு சட்டபடி பதிவு திருமணம் நடந்து, மாலை ஐந்தரை மணிக்கு பாண்டிச்சேரி புனித சவேரியார் ஆலயத்தில், ரோமில் இருந்து வரவழைக்க பட்ட மாண்மிகு திரு கர்தினால்(Cardinal) தலைமையில் ஏழு பாதிரியார்களின் ஆசிர்வாதத்தோடு மிக சிறப்பாக‌ எங்கள் திருமணம் நடந்தது. ஆலய திருப்பலிக்கு பின் ரிசப்ஷனுக்காக பாண்டிச்சேரி ஜெயராம் மண்டபத்தில் 1500 க்கு அதிகமான சுற்றமும் நட்பும் ஒன்றுகூடி வாழ்த்த மிக இனிதாக எங்கள் வாழ்க்கையை ஆரம்பித்தோம்!




நானும் அவரும் கையெழுத்திடுவது எங்கள் பதிவு திருமண‌த்தின் போது!












 
*********


சற்று நீண்டு விட்ட எனது கதையை பொறுமையுடன் படித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இந்த தொடர் பதிவை எழுதிட‌ நானும் சிலரை மாட்டி விடலாம் என்று நினைக்கிறேன்.
இதோ அவங்கெல்லாம்......








Monday, March 29, 2010

எனக்கு பிடித்த (10) பெண்கள்........

தீபா
அழகு:

அழகு என்றால் தீபா
தீபா என்றால் அழகு


இப்படிதான் சொல்ல தோன்றுகிறது…அந்த அழகிய பெண்னைப் பற்றி நினைக்கும்போது. தீபா ஒரு வட‌ நாட்டுப்பெண். பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவ‌ கல்லூரியில் B.Pharm.படிக்கவந்தவர்.

அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். சில வட‌ நாட்டு பெண்கள், கல்லூரியில் ஹாஸ்டல் வசதி இல்லாததால் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்கள். இவர்களில் பளிச்சென்று தெரிந்தவர்தான் தீபா. வெறும் அழகி என்று சொல்ல முடியாது...தேவதை!

தீபா அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். எங்கள் அனைவருடனும் மிக friendlyயாக ப‌ழகுவார். கல்லூரி கலை நிகழ்ச்சிகளின் போது தீபா தன்னை அலங்கரித்து செல்வதை சொல்ல வார்த்தைகள் போதாது. (அவர் மட்டுமே தாவணி அணிந்து தலையில் பூவைத்து செல்வார்). அச்சமயங்களில் என் அம்மா தீபாவை அழைத்து கண்ணு பட்டு விடும் என்று சுற்றி போடுவார்கள்.

அழகை தன் மேனியில் மட்டுமல்லாமல் மனதிலும் கொண்ட தீபாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவளை முதல் முறை பார்த்துபோது இதுவரை இப்படி ஒரு அழகான பெண்ணை பார்த்ததில்லையே என்றும் இனி அப்படி ஒரு பெண்ணை பார்க்க போவதும் இல்லை என்றுதான் நினைத்தேன். உண்மைதான்… இன்றுவரை அவளைவிட அழகாக ஒருத்தியை பார்த்ததும் இல்லை இவ்வுலகில் இருப்பதாக தோன்றவும் இல்லை. இன்று உலகில் எந்த மூலையில இருக்கின்றாரோ தெரியாது... ஆனாலும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.
(வருத்துகிறேன் இப்படி பின்னாளில் அவரைப் பற்றி எழுதுவேன் என்று தெரிந்திருந்தால் ஒரு போட்டோ ஆவது வாங்கி வைத்திருப்பேன். நான் சொல்வது எவ்வளவு உண்மை என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்)


மஸிக்கா
உற‌வு :

உறவுக்கார பெண் அல்ல‌ என் எதிர் வீட்டு பெண். அல்ஜேரியா நாட்டை சேர்ந்த முஸ்லிம் பெண். சிறு வயதிலே பிரான்ஸுக்கு வந்தவர். என்னை விட வயதில் மூத்தவர். என் கணவரின் மூலமாகத்தான் இவரின் நட்பு கிடைத்தது. சில உறவுகளிடம் இருந்து பாசம் கிடைத்தாலும் அதில் எப்பொழுதும் நட்பு இருந்ததில்லை. ஆனால் மஸிக்காவின் நட்பில் நான் உறவினை கண்டேன். அவரின் பாசத்தை கண்டு பிரமித்துபோனேன். இங்கு வந்த புதிதில் என்னவர் இரவில் வேலைக்கு சென்றுவிட்ட நாட்களில் பயமின்றி இருந்தேன் என்றால் அவங்களால்தான். என் வாழ்க்கையில் நான் சந்தோஷத்தை கொண்டாடிய‌ போது என்னை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தமிட்டும், மிகப் பெரிய‌ இழப்பினை சந்தித்தபோது கட்டியனைத்து கண்ணீரும் விட்டவர். என் சந்தோஷத் தருணங்களில் அவரின் உண்மையான மிகிழ்ச்சியும்,சோகத்தில் கண்களில் கண்ணீரையும் பார்த்து இருக்கிறேன். இவருடனான உறவு இன்றும் தொடர்ந்துக் கொண்டு இருக்கிற‌து.


கிறிஸ்தியான
ஆர்டிஸ்ட் :

கிறிஸ்தியான் ஒரு ஆர்டிஸ்ட். 60 வயதை தான்டிய வயதிலும் அழகான ஓவியங்களை வரைபவர். என்னை இவரிடம் அறிமுகப்படுத்தி நான் வரைந்த படங்களையும் காட்டினார் என்னவர். என் ஓவியங்களை பார்த்து பாராட்டிய கிறிஸ்தியான் மறு நாளே என்னை ஒரு ஓவியப் பள்ளிக்கு அழைத்து சென்று அங்கிருந்தவர்களிடம் என்னை ஒரு ஆர்டிஸ்ட் என்றே அறிமுக படுத்தினார். முதல்முறை என்னையும் ஒரு ஆர்டிஸ்டாக பார்த்தவர் அவர்தான். அவருக்கு தெரிந்த ஒரு இடத்தில் என் ஓவிய கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்தவர். ஹாபியாக வரைந்துக் கொண்டு இருந்த என்னை கண்காட்சி செய்ய வைத்து முதல் முறையாக பணம் செலுத்தி என் படங்களையும் மற்றவர்கள் வாங்கும் படி செய்தவர். என் கலை பயனத்தில், என் முதல் படுக்கட்டாக இருந்தவர். அதன் தொடர்ச்சியாக என் பெயர் உள்ளூர் செய்தி தாள்களில் வர காரணமாக இருந்தவர்.


கரோல்
அரசு அதிகாரி :

அரசு அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பவர். எனக்கு இவருக்குமான அறிமுகம் officialலாகத்தான் இருந்தது. சிரித்த முகத்துடன் எளிமையாக‌ பேசிய இவரை பார்ததுமே பிடித்து விட்டது. இவர் அரசு பதிவியில் இருந்துகொண்டே யுனிவர்சிட்டியிலும் ஆசிரியராக பணி புரிகிறார். தனியாக ரிசேர்ச்சில் ஈடுபட்டு நிறைய புத்தக‌ங்கள் எழுதுகிறார். இதன் நிமித்தமாக அடிக்கடி வெளி நாடுகளுக்கு சென்று வருபவர்(நம் இந்திய நாட்டிற்கு கூட வந்து இருக்கிறாராம்).

 திறமைகள் இருந்தும் வெளி நாட்டினரை சற்று ஏள‌னமாக பார்க்கும் சில பிரெஞ்சுகாரர்களின் மத்தியில் இவர் மட்டும் வித்தியாசமானவர். சந்தித்த இரண்டாம் முறையே என் திற‌மைகளை மதித்து அவர் எழுதிய The adolescent pshycology என்ற ஆங்கில பிரெஞ்சு புத்தகத்தில் சில பக்கங்களை மொழி பெயர்ப்பு பணி செய்ய வாய்ப்பு அளித்தவர். சிறிய வயதிலேயே இத்தனை திறமைகள் இருந்தும் கொஞ்சம் கூட கர்வமோ தலை கண‌மோ இல்லாதவர் கரோல். எவ்வளவு உயர்ந்த நிலையை நாம் அடைந்தாலும் இவரை போலதான் இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.


லிதி
ந‌ட்பு :

Blog என்ற ஒன்று இருப்பதை எனக்கு அறிமுகப்படுத்திய தோழி. வெளி உலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்த சமயம் அது. வரைவதில் முற்றிலும் ஆர்வமின்றி இருந்தேன். அப்பொழுதுதான் லிதி நீ ஏன் ஒரு பிளாக் கிரியேட் பண்ணக்கூடாது? என்று கேட்டு அவளே ஒரு French blog ஒன்றை ஆரம்பித்து கொடுத்தாள். எனது தனிமையை கிரியேட்டிவாக மாற்றியது அவள்தான். ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறைய கற்றுக்கொண்டு அவளுக்கு தெரியாத சில வற்றை நான் சொல்லி கொடுத்த‌ போது கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் என்னை மனதாரப் பாராட்டியவள். அவள் ஆரம்பித்து வைத்ததின் தொடர்ச்சியாகதான் இந்த blogகும். இதன்மூலமாக எனக்கு கிடைத்த நட்பு வட்டத்திற்கு முன்னோடியாக இருந்தது இவளின் ந‌ட்புதான்.


ஷான்தால்
டீச்சர் :

+1ல் என் Maths Miss. எப்பொழுதும் அவரிடம் ஒரு ஸ்டைல் இருக்கும். பேசுவதில், நடப்பதில், பாடம் எடுப்பதில் என்று எல்லாமே அழகாக இருக்கும். எனக்கு இவரிடம் பிடித்ததே சாக்பீஸை எடுத்துக்கொண்டு பிளாக்போர்டில் எழுத ஆரம்பிக்கு அந்த நிமிடங்கள்தான். ஸ்டெப் பை ஸ்டெப்பாக கணக்குகளை விளக்கிக் கொண்டே அவர் எழுதுவதை பார்த்தால் சரியாக படிக்காத மாணவிக்கூட புரிந்துக்கொள்வாள். அத்தனை தெளிவாக அடித்தல் திருத்தல் இல்லாமல் neatஆக‌ எழுதுவார்.

எனது படிப்பு முடிந்து ஆசிரியர் வேலைக்கு சேர்ந்த ஆரம்ப நாட்களில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்தபடியே போர்டில் எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ரவுண்ட்ஸ் வந்த பிரின்ஸ்பால் வெளியில் இருந்தபடியே கவணித்து, பின் வகுப்பில் நுழைந்தவர் உங்க கை எழுத்து மிக அழகாக இருக்கிறது. போர்டில் நீங்க எழுதுவது மிக தெளிவாக நீட்டாக இருக்கிறது…. என்று சொல்லி மாணவர்களிடம் நீங்களும் உங்க‌ மிஸ் மாதிரி அழகா எழுத கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார். சந்தோஷமுடன் அவருக்கு நன்றி சொல்லிய அடுத்த நிமிடம் எனக்கு என் மிஸ்ஸின் முகம் நினைவில் வந்து போனது. மனதிற்குள்ளே அவருக்கும் நன்றி சொல்லி கொண்டேன்.


கஸ்தூரி
காதல் :

என் கல்லூரி தோழியான இவள் பார்ப்பதற்கு நடிகை மீரா ஜாஸ்மினை போல் மிக அழகாக இருப்பாள். சும்மா பொழுது போக்கிற்காக காதல், பெற்றவர்களை விட்டு ஓடிப்போய் வாழும் காதல், மெச்சுயூரிட்டி வந்தபின் கழட்டிவிட்ட காதல்.... என்று பள்ளி… கல்லூரி காலத்தில் என்னை சுற்றி நிகழ்ந்த சில காதல் கதைகளில், இவளால் மட்டுமே காதல் மரியாதைக்குரியது என்பதனை உணர்ந்தேன்.

விவரம் அறியாத வயதில் இருந்தே குடும்ப நண்பர் ஒருவருடன் நட்பாகி,பின் அவர்கள் வளர வளர காதலும் மலர்ந்துள்ளது. பேசும்போது எப்போதும் அவரின் பேரைச் சொல்ல மாட்டாள். அவர் சொன்னார், அவர் வந்தார் என்றுதான் சொல்லுவாள். அவள் எவ்வளவு சென்சட்டிவ் என்றால் தோழிகள் நாங்கள் யாரும் அவரை பெயர் சொல்லி பேசக்கூடாது, என்றாவது மறந்துபோய் ரிஷி எப்படி இருக்கார் என்று கேட்டு விட்டால் கோபம் கொண்டு எங்களை திட்டிவிடுவாள். (இப்போது அவரின் பெயரை சொன்னதற்காக மனதாற அவளிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்) என்ன இவ இப்படி இருக்கா என்று நினைத்துக்கொண்டாலும் அதில் மறைந்திருக்கும் அவளின் உண்மையான நேசத்தை நினைத்து சந்தோஷப் பட்டுக்கொள்வேன். இன்று காதல் கண‌வன், குழந்தை என்று அழகிய குடும்பம் அவளுடையது.


Clair Chazal
செய்தி வாசிப்பாளர் :


பிரான்ஸ் முன்னனி தொலைக்காட்சியில் (TF1) செய்தி வாசிப்பாளராக இருப்பவர். 50 வயதிலும் பார்ப்பவர்களை கவர்ந்து விடும் வகையில் இவரின் தோற்றமும் செய்தி வாசிக்கும் அழகும் இவரின் சிறப்பு. செய்தி வாசிப்பவர்களுக்கு குரல் வளம் எத்தனை அவசியமோ அதே போல் தோற்றமும், சரியான‌ வார்த்தை உச்சரிப்பும் அவசியம். சரியான முகபாவங்களும் தேவை. அது நேச்சுரலாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

நம் தமிழ் செய்தி வாசிப்பவர்களை பார்க்கும்போது ஏதோ ஒரு விஷேத்திற்கு கலந்துக்கொள்ள வந்தவர்களை போல பட்டு புடவையும், தலை நிறைய பூவும், நகைகள் என்று பார்வையாளர்களை சற்று உறுத்துவது போல் உள்ளதாக தோன்றும். அவர்கள் பேசுவது இயல்பாக இல்லாததைபோலவும் ரொம்ப கண்டிப்பான தோரணையில் சொல்லுவதாக‌ தோன்றும். அந்த வகையில் Clair chazalலின் இயல்பான செய்தி வாசிக்கும் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்.


தாமரை
கவிஞர் :

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

என்ற வரிகளை கேட்டபோதே யாரிவர் என்று தேட வைத்தவர். அதன் பிறகு எத்தனையோ பாடல்களை எழுதி, சமீபத்தில் வந்த விண்ணைதாண்டி வருவாயா வரை பலபேரின் இதயத்தை கொள்ளை கொணடவர்.

நம்மை புதுபிப்பதில் அதிக பங்கு வகிப்பது இசை. அப்படிபட்ட இசைக்கு தகுந்த கவிதை வ‌ரிகள் அமைந்து விட்டால்... கேட்கும் போது சுகம்தானே! எப்பொழுதும் அழகிய பாடல் வரிகள் நம் மனதின் மெல்லிய உணர்வுகளை மாற்றி அமைக்க கூடிய சக்தி படைத்தவை. அப்படி நம் உணர்வுகளை புதுபித்துக்கொள்ள சிறந்த க‌விதைகளை தரும் தாமரை அவர்களை என்ன சொல்லி வாழ்த்துவது!


மோனலிசா

மோனலிசா.... Leonardo Da Vinci யின் மாஸ்டர் பீஸ் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இட்டாலியை சேர்ந்த டாவின்சியின் ஓவியம் பல நூற்றாண்டுகளாக பிரெஞ்சு அரசின் Royal collectionsன் கீழ் உள்ளது.

சிறுவயது முதலே இவரை பற்றி படங்களில் பார்த்தபோதோ பத்திரிக்கைகளில் படித்தபோதோ ஏதோ ஒரு மர்மமான பெண்ணாக தோன்றியது. அழகான பெண்களை எப்போதும் மோனலிசாவுடன் ஒப்பிட்டு சொல்லும்போது…. ஏன், யாரிந்த மோனலிசா ? என்று பல கேள்விகள் எழுந்தது. அந்த மாடல் பெண் யார்? அவரின் பார்வையிலும் புன்னகையிலும் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

அந்த மர்ம பெண்ணின் நிஜப்பெயர் Lisa del Giocondo. பின் ஏன் அவரின் Portraitக்கு மோன லிசா என்ற பெயர் வந்தது? இட்டாலி மொழியில் Mona என்றால் மேம்/மேடம் என்று ஆங்கிலத்தில் மரியாதையுடன் அழைப்பதைப் போன்ற‌ சொல் என்பதால் மோனாவுடன் அவரின் உண்மையான பெயரும் சேர்ந்து மோன லிசாவானது.

இன்றுவரை அவரைப்பற்றி நிறைய மர்மங்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அந்த படத்தை நன்றாக உற்று பார்த்தால் தெரியும்… அப்பெண்ணின் ஓவியத்தில் புருவங்களோ கண் இமைகளோ இன்றி வரையப்பட்டு இருக்கும. வரைந்து முடிக்க நான்கு வருடம் ஆன நிலையில், இவரின் சோகம் கலந்த புன்னகையில் மறைந்திருக்கும் மர்மம் என்னவோ? தன் குழந்தையின் இழப்பால், தன் கணவனின் குடிப் ப‌ழக்கத்தினால், etc.... என்று இவரை பற்றிய studies சொல்கிறது.

500 வருடங்கள் கடந்தப்பின்னும் ஓவியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மோன லிசாவை போல் ஒரு பெண் இனி வரும் காலங்களில் கிடைப்பாரா?


***********

வர்களுடன்..... இதுவரை என் வாழ்வில் சந்தித்த இனி சந்திக்க போகும் பெண்கள் அனைவருமே எனக்கு பிடித்தவர்கள். இந்த தொடர் பதிவிற்கு அழைத்த நண்பர் Raghuக்கு என் நன்றிகள். வாங்க JoePadma,  appavi thangamani  இப்பதிவை தொடர்ந்திடுங்கள்.


 இதோ அதற்கான விதி முறைகள் !

1. உற‌வின‌ர்க‌ளாக‌ இருக்கக்கூடாது.
2. வ‌ரிசை முக்கிய‌மில்லை.
3. ஒரே துறையில், பிடித்த‌ ப‌ல‌ பெண்க‌ள் இருந்தாலும் ஒருவ‌ரைத்தான் குறிப்பிட‌வேண்டும்.
 



Monday, March 15, 2010

எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி......


Un Gars Une Fille: (a Guy a Girl) இங்கு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடர் இது. தொடர் என்றால் நம்மூர் சீரியல்கள் போல் அறுக்காமல், இரவு எட்டுமணி செய்துகளுக்கு முன்னால் வெறும் 20 நிமிடங்களே வரும் நகைச்சுவைத்தொடர். தொடர்கதையாக இல்லாமல் தினமும் ஒரு எபிசோடாக வருவதினால் எப்பொழுது பார்த்தாலும் புரிந்துவிடும்.

ஒரு Coupleகுள் நடக்கும் தினசரி நிகழ்வுகளாக அவர்களுக்குள் நடக்கும் கொஞ்சல்கள், சின்ன சின்ன சண்டைகள், ஒருவரிடம் ஒருவர் காணும் குறைகள்.... என்று தொடரும் கதையில் எல்லாமே மிக‌ யதார்த்தமாக காட்டப்பட்டு இருக்கும். குறிப்பாக, ஒருவரை ஒருவர் செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவதில் ஆரம்பித்து ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் இருந்து தொலைபேசியில் பேசிக்கொள்வது, வீட்டுக்கு வரும் நண்பர்களிடம் சீன் போடுவது, படுக்கை அறையில் பேசும் பேச்சுக்கள், கூடவே நிகழும் சின்ன சின்ன காதல் விளையாட்டுக்கள்.....என்று எல்லாமே நகைசுவையாக இருக்கும். ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு தருணத்திலும் ஒருவர் ஒருவரிடம் காணும் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை மிகவும் நகைசுவையாக சொல்லும் தொடர் இது. நிமிடதிற்கு நிமிடம் சிரிப்பை வரவழைக்கும் தொடர் என்பதால், இத்தொடரைப் பார்க்க பிடிக்கும்.

இத்தொடரின் தனித்தன்மையே ஜான் அலெக்ஸ் என இருவர் மட்டுமே திரையில் வரும் நபர்கள். மற்ற க‌தாப்பாத்திரங்கள் வரும்போது அவர்களை பின்புறமாகவோ அல்லது வெறும் குரலாலே காட்டப்படுவார்கள். திரையில் இருவரின் முகத்தை மட்டுமே பார்ப்பதினால் போர் அடிக்கும் என்றால், அதுதான் இல்லை. அத்தனை பொருத்தமான‌ கணவன் மனைவி கதாப்பாத்திரத்தில் வரும் ஜானும் அலெக்ஸும் நிஜ வாழ்க்கையிலேயே கணவன் மனைவி. அதனால்தானோ என்னவோ காட்சிகள் அத்தனையும் வெகு இயல்பாக இருக்கிறது.

எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் ஆணும் பெண்ணும் ஏன் இணைந்து வாழ்கிறார்கள்... ஆணுக்கு பெண் தேவை, பெண்ணுக்கு ஆண் தேவை...இதை உணர்த்தும் விதமாக ஒரு நிமிடம் சண்டை, அடுத்த நிமிடமே... கட்டிப்பிடித்து முத்தம் என்று ஜானும் அலெக்ஸும் The mirror of the couples ஆகவே தெரிகிறார்கள்.


தை தவிர எனக்கு பிடித்தது  La soirée de l'étrange என்ற நிகழ்ச்சி. இதில்  பயங்கரமான, மிகவும் பிரமிப்பான‌ உலகில் நடந்த, நடக்கின்ற‌ உண்மை சம்பவங்களை டாப் 30 என்று தொகுத்து வழங்குவார்கள். பார்க்கும்போது ஏற்படும் த்ரில்லிங் ஃபீலுக்காகவே இந்நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பேன். சன் டிவியாலும் நெட்டின் உதவியாலும் நம்மூர் தொலைக்காட்சி நிகழச்சிகளையும்  பார்ப்பதுண்டு. அதில் ரொம்ப பிடித்தது கோபியின் நீயா நானா. பலத்தரப்பட்ட கருத்துக்களை இந்நிகழ்ச்சியில் அலசி ஆராய்ந்தாலும் பர்சனலாக எனக்கு கோபியின் பேச்சு திறமை பிடிப்பதனால், அது என்னை வெகுவாக கவர்ந்ததினால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியும் பார்ப்பேன்.

இவ்வளவு நீளமாக என்னை எழுத வைத்த நண்பர் Seemangani  அவர்களுக்கு என் நன்றிகள். எனக்கு பிடித்த டிவி நிகழ்ச்சி பதிவை தொடர விரும்புகின்றவர்கள், தொடருங்கள்!