Subscribe:

Pages

Tuesday, December 21, 2010

ஒளி பிறக்க..... ஒளியேற்றுவோம்!

           னக்கு பிடித்தவைகள் ஏராளமானவை என்றாலும் அவைகளில் ஒரு சில மட்டுமே நேசிக்கக்கூடியதாக இருக்கிறது. அப்படி மிகவும் நேசிக்கும் ஒன்று ஒளி. விழிகளின் வழியே எனக்குள் ஊடுருவி செல்பவைகளில் இவ்வொளி ஏனோ நீங்கா இடம்பிடித்து விடுகிறது. படர்ந்திருக்கும் இரவில் ஏற்றிவைக்கும் ஒரு சிறு ஒளி அந்த இடத்தையே அழகானதாக மாற்றிவிடுகிறது இல்லையா!

ஏன் எதற்காக தீபம் ஏற்றப்படுகிறது என்று அறியாமலே அதன் அழகுக்காக மட்டுமே விவரம் அறியாத வயதிலேயே கார்த்திகை தீபத்திருவிழாவினால் ஈர்க்கப்பட்டு எங்கள் வீட்டில் தீபம் ஏற்றும் பழக்கம் இல்லாதபோதும் அகல்விளக்குகளை வாங்கி வந்து வீட்டை தீபங்களால் அழகுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தேன். அதேப்போல் கிறிஸ்துமஸின் போதும் மெழுவத்தியினை கொண்டு அலங்கரிப்பது நான் மிகவும் நேசிக்கும் ஒன்று. சாதாரனமாக ஏற்றிவைக்கும் வத்தியுடன் கூடவே சில Christmas ornaments கொண்டு அலங்கரித்தால் இன்னும் அழகாக தோற்றமளிக்கும். இன்னும் கிரியேட்டிவாக செய்வதென்றால் இயற்கையாக கிடைக்கும் மலர்கள், இலைகள், சருகுகள், குச்சிகள் இவற்றில் எதைக்கொண்டு வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். வெயில் பட்டவுடன் பூப்போல விரிந்து கிடக்கும் Pine cones கொண்டு அலங்கரிப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கிறிஸ்துமஸ் அலங்காரப்பொருட்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. பூக்களைப்போல காட்சியளிக்கும் இவைகளுக்கு பல நிறங்களில் வண்ணந்தீட்டி தற்பொழுது கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதிகளுக்கும் அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கும் சென்று வரும் பொழுதுகளில் மரங்களினின்று கீழே விழுந்துக்கிடக்கும் Pine conesகளை சேகரித்து வைத்துக்கொள்வேன். நான்காவது மற்றும் கடைசிப்படத்தில் இருப்பது அதைக்கொண்டு அலங்கரித்ததுதான்.

Artificial flowers, Pine cones, Christmas balls, paper garlands.... இவைகளுடன் சிறியது பெரியதுமாக வண்ண மெழுகுவத்திகள் கொண்டு நான் உருவாங்கிய Candle decorations........ புகைப்படங்களாக்கி உங்கள் முன் வைத்துள்ளேன். ஆர்வம் உள்ளவர்கள் இதேப்போல் மெழுவத்திகளை கொண்டு உங்கள் வீட்டினை அழகுப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டின் உள்ளமைப்புக்கு ஏற்றார்போல தேவைப்படும் நிறங்களில் அலங்கரிப்பது கூடுதல் அழகைக்கொடுக்கும். ஒளியினால் உங்கள் வீட்டின் அறை அழகாக தோற்றமளிப்பதோடு உங்கள் உள்ளத்து அறைகளும் ரம்மியமாக மாறிவிடும். இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்கள்!!!
ஹேப்பி ஹாலிடேஸ்!!!!!


Tuesday, December 14, 2010

வளம்பெற வரம்தரும்... தேவதையில் நான்!

           சில மாதங்களுக்கு முன் 'உங்களை பற்றிய குறிப்புடன் புகைப்படமும் அனுப்பினால் தேவதை இதழில் பிரசுரிக்கப்படும்' என‌ இரண்டொருமுறை மெசேஜ் வந்திருந்த போதிலும் இது ஏதோ விளம்பரமோ அல்லது விளையாட்டிற்காகவோ என்றெண்ணி அதில் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். பதிவுலக நட்பின் மூலமாகதான் பின்னாளில் இவை நடந்தேற வேண்டும் என்று இருந்திருக்கிறதோ என்னவோ... இதோ இப்பொழுது தோழி ஒருவரால் இந்த மாத தேவதை இதழில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறேன். இன்று உத்தரவின்றியே உங்கள் வீடுகளில் நான் நுழைந்திருக்கிறேன்.

என்னை பற்றி நல்ல அறிமுகம் தந்து, எனக்காக சில பக்கங்களையும் ஒதுக்கி, எனது வலைத்தளமும் எனது ஓவியங்களும் இன்று... இன்னும் நிறைய தமிழ் மக்களை சென்றடைய செய்த தேவதை இதழ் நிர்வாக குழுவிற்கு எனது தாழ்மையான நன்றிகள். மேலும் அறிமுகம் என்ற பேரில் எனக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கும் தேவதையின் பணி சிறந்திட‌ எனது வாழ்த்துக்கள்!

இவங்க என் பிரெண்ட் என சொல்லும்போதே பெருமை கொள்கிறது மனது; அத்தகைய நட்பினை பதிவுலகின் மூலமாக நான் பெற்றிருப்பதால் உண்மையிலேயே நான் அதிர்ஷ்ட‌சாலிதான். இன்று நான் தேவதையில் வர காரணமாயிருந்த தோழி விக்னேஷ்வரிக்கு எனது அன்பான நன்றி.

என் வலைப்பக்கத்தை தொடர்ந்து பார்வையிட்டும், விருதுகளினாலும், பின்னூட்டங்களினாலும் எப்பொழுதும் என்னை உற்சாகப்படுத்தி வரும்  இணைய நண்பர்களுக்கு எனது ப்ரியமான நன்றிகள்! இன்று எனக்கென ஒரு அடையாளத்தை அடைய காரணம் நீங்களே! தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் உங்கள் பாசமான வார்த்தைகளால்தான் தொடர்ந்து எழுதி வருகிறேன்.

எல்லாவற்றிர்க்கும் மேலாக சிறந்த நண்பர்களையும் நன்மைகளையும் இதன்மூலம் தந்தருளும் இறைவனுக்கு என் முதன்மையான‌ நன்றி!


Friday, December 10, 2010

கல்லிலே கலைவண்ணம் தேடிய கண்கள்!

            டற்கரைக்கு செல்வது என்பதே பிடித்தமான ஒன்றுதான். அதிலும் கடல் அலைகளை ரசிப்பதிலே தனிசுகம் இருக்கத்தான் செய்கிறது. இதற்காகவே கோடையில் மட்டுமல்லாமல் குளிர் காலத்திலும் சென்று வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி செல்கிறபோது வெறும் கடல் அலைகளை மட்டும் ரசிப்பதோடு நிறுத்தி விடாமல் கடற்கரையில் பரவி கிடக்கும் பாறைகள், கற்கள் என அனைத்தையும் ரசிப்பதுண்டு. இயற்கையாகவே சில கற்கள் பல‌விதமான வடிவங்களில் இருந்தாலும்.... சில நேரங்களில் ஆச்சிரியப்பட வைக்கும் அளவிற்கு செதுக்கியது போல் இருக்கும். இப்படி கற்களில் கலையை தேடிக்கொண்டு இருந்த எனக்கு  பாறை உடைந்து சிதறியதை போல் ஒரு கல் கண்ணில்பட்டது. அட, பார்ப்பதற்கு ஃபிரான்ஸ் மேப் மாதிரியே இருக்கே என்று நினைத்து கையில் எடுத்த எனக்கு ஆச்சிரியமாக இருந்தது! வேறு எந்த சப்போர்ட்டும் இல்லாமல் நிறுத்தி வைக்கலாம். காரணம், இயற்கையாகவே சமமாக அமைந்த அதன் அடிபாகம்தான். அதனால் இதில ஏதாவது செய்யலாமே என்றெண்ணி வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டேன். சென்ற சனிக்கிழமை கையிலெடுத்த கல்... வண்ணங்களின் கலவையில் ஒரு மணி நேரத்திற்கு பின் புதுவடிவம் பெற்றது.

இதோ எனது கண்கள் கண்டெடுத்த கல்லும் எனது விரல்கள் படைத்த ஓவியமும்!