Subscribe:

Pages

Friday, February 18, 2011

இயற்கையில் இத்தனை அதிசயங்களா.......!!!

        ஒரே ரசனை உள்ளவர்கள் வாழ்க்கையில் இணையும் போது வாழ்க்கையே ரம்மியமானதாகி விடுகிறது. எனது ரசனைகளேற்ற வாழ்க்கை துணை எனக்கு கிடைத்திருப்பதால் காணும் ஒவ்வொன்றிலும் இன்பம் அடைகிறேன். இயற்கையை ரசித்து வாழத்தெரிந்தாலே எப்போழுதும் மனதில் உற்சாகம்தான்... அதிலும் பிடித்தவருடன் எனும்போது காணும் அனைத்தும் சொர்க்கம்தான். இந்த நாட்டிற்கு வந்ததில் இருந்து எத்தனையோ அழகழகான இடங்களை எல்லாம் என்னை அழைத்துசென்று காண்பித்த என்னவர், இம்முறை சென்ற வாரக்கடைசியில் அழைத்துச்சென்றது கேன்ஸ் ஃபிலிம்  ஃபெஸ்டிவல் நடக்கும் ஊரில் இருந்து  பத்து கிமீ தொலைவில் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியை போல இருந்த ஒர் இடத்திற்கு!

நகரத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட அப்பகுதியில் சுற்றிலும் அடர்ந்திருந்த மரங்களின் நடுவில் ஒரே ஒரு கட்டிடம், பார்ப்பதற்கு வீடு போல் தோற்றமளித்தது. ஆனால் அதற்குள் இத்தனை அதிசயங்கள் நிறைந்திருக்குமா என எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. ஒருசில கார்கள் மட்டும் அங்கே நிறுத்தப்பட்டு இருந்தது. அதேப்போல சில குடும்பங்களும் காத்திருந்தனர். சரியாக மதியும் இரண்டு மணிக்கு பூட்டி இருந்த அந்த கட்டிடத்தின் கதவு திறக்கப்பட, எல்லோரும் உள்ளே நுழைந்தார்கள்... நாங்களும் பின் தொடர்ந்தோம்.

 உள்ளே நுழைந்தவுடன் எதிரில் ரிசப்ஷன், வலதுபுறத்தில் சிறிய கடை இடதுபுறத்தில் சின்ன ரெஸ்டாரண்ட் என மிக எளிமையாக இருந்தது. ரிசப்ஷனிஸ்ட் வர, அனைவரும் டிக்கெட் வாங்கிக்கொண்டு காத்திருந்தோம். சிறிது நேரத்திற்குபின் அங்கு வந்து சேர்ந்தார் ஒரு கைட். காத்திருந்த 25 பேர்க்கொண்ட குழுவினை தன்னை பின் தொடருமாறு சொல்லி ரிசப்ஷன் பக்கம் இருந்த கதவினை திறந்தார். வியக்க வைக்கும் அதிசயங்கள் உள்ளே காத்திருந்தது தெரியாமல் அவரை தொடர்ந்துபடி படிக்கட்டுகளில் இறக்கிச்சென்றேன். ஆஹா, அதற்குள் ஒரு உலகம்.... கீழ் நோக்கியபடி 11 அடுக்குகளை கொண்டிருந்த Cavernனுடைய பெயர் Grottes de Saint Cézaire.

Cavern னை சுற்றி பார்ப்பதற்கு முன் அது பிறந்த கதையைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோமே. 1890ல் Mr.Leon Dozol என்பவர் தன் தோட்டத்தில் திராட்சை செடிகளை நடுவதற்காக பள்ள‌ம் தோண்டி இருக்கிறார். சிறிய பள்ளம் தோண்ட முயன்றவர் ஆழமான குழியில் விழுந்துவிட பின் தன்னுடைய குடும்பத்தினரால் சிரமப்பட்டு வெளியே வந்து இருக்கிறார்.( படத்தில் வலதுபுறத்தில் இருப்பவர்தான் Mr. Dozol, அப்பொழுது இருந்த நுழைவு வாயிலில்...அவரது குடும்பத்தோடு!) அப்பொழுதுதான் கீழே பூமிக்கடியில் மிக பெரிய குகை இருப்பதாக தெரியவர‌ ஆவலுடன் தன் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் உதவியோடு மூன்று வருட முயற்சிக்குபின் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இந்த Cavern. த‌ன்னை தேடி வரும் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரையும் மெழுகுவத்தியின் வெளிச்சத்தில் இந்த இடத்தை சுற்றிக்காட்ட ஆரம்பித்து இருக்கிறார். பின் அந்த ஊருக்கு வரும் சுற்றுலாவினர் மெல்ல மெல்ல இதைப்பற்றி கேள்விப்பட்டு இவ்விடத்தை பார்க்க வர ஆரம்பித்துள்ளார்கள்.
 
1925ல் அதன் மேல் ஒரு கட்டிடம் எழுப்பி மின்சார வசதியும் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு 1926ல் Cavernனுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு பிரெஞ்சு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா இடமாகி இன்று நூற்றுக்கணக்கான மக்களின் கண்களுக்கு விருந்தாக காட்சியளித்து கொண்டிருக்கிறது.
(மின்சார இணைப்பற்ற நிலையில் கையில் விளக்குடன் சுற்றி பார்த்தவர்கள்... 1926ல்!)

இந்த cavern பிறந்த கதை இதுதான் என்றாலும் அப்படி என்ன அதிசயங்கள் அதன் உள்ளே நிறைந்திருக்கும் என்பவர்களுக்காக இதோ நான் ரசித்து எடுத்து புகைப்படங்கள்! 


உள்ளே இறங்க ஏற்படுத்தப்பட்ட வழி இதுதான்...
 
 
 
 ஆனால் Mr. Leon Dozol கண்டுப்பிடித்த வழி.... இது! 
 

இயற்கையில் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றெண்ணியவாறு படம்பிடித்துக்கொண்டிருக்க, அந்த கைட் சொன்ன விளக்கங்கள் மேலும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. Combination of chemical processes, erosion from water, tectonic forces, micro organisms, pressure, atmospheric influences, digging.etc என‌பலத்தரப்பட்ட geological processes மூலமே இப்படி உருவாகிறதாம். ஏதோ ஒன்றிரன்டு வருடங்கள் அல்ல பல நூற்றாண்டுக்களாக வள‌ர்ந்து வருகிறதாம். ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் பலவிதங்களில் வடிவம் பெறுவதை என்னவென்று சொல்வது! பூக்களைப் போலவும், பழவகைகளைப்போலவும், விலங்குகளைப்போலவும் தோற்றமளிக்கிறது.
கீழே காணும் படத்தில் இருக்கும் இடத்திற்கு திராட்சை குவியல் என்று பெயர்... மேலிருந்து சொட்டும் ஒவ்வொரு துளி நீரும் கல்லில் பட்டு சிதறும் போது இப்படி திராட்சை பழங்களைப் போல தோற்றம் பெற்றுள்ளது.


இயற்கையாகவே இப்படியொரு உருவம் பெற்ற Limestone....ஆச்சரியம்தானே!!!
இதற்கு ரோமியோ என பெயரிட்டு அழைக்கிறார்கள்!இதோ, இந்த கட்டிடத்தின் கீழேதான் Cavern  என்றால் நம்பமுடிகிறதா!!!


செயற்கையாக பல இடங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு இருந்தாலும் இயற்கையே இப்படி பல வடிவங்களை கொடுத்திருப்பது அதிசயம்தானே. மேலும் அங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளின் வெளிச்சத்தில் ஏதோ குகைக்குள் ஒரு தனி உலகமே தெரிவதுபோல தோன்றியது. அத்தனை அழகுடன் கண்களுக்கு மட்டுமில்லாமல் காதுகளுக்கும் விருந்தளித்து limestoneல் இருந்து எழும்பிய இசை... கேட்டு பாருங்கள், உண்மையிலேயே அதிசயம்தான்!


Friday, February 11, 2011

நேசித்து வரைகிறேன்!


               சின்ன வயதில் பென்சிலை பிடித்த கை இன்னும் அதை விட மறுக்கிறது. அதிலும் வரைவதற்கு என்கிறபொழுது இன்னும் விதவிதமாக அதை உபயோகப்படுத்தி பார்க்க முயல்கிறது. இங்குள்ள ஓவியர்கள் கடற்கரை சாலையில் வரைய அமர்ந்தாலே பெரும்பாலும் பென்சில் ஸ்கெட்ச்தான் பண்ணுவார்கள். அதிலும் Portraits தான் அதிகமாக இருக்கும். எனக்கும் சிறு வயதில் இருந்தே பென்சில் டிராயிங் மிகவும் பிடிக்கும் என்பதால் நிறைய பெயிண்டிங்ஸ் என தொடர்ந்தாலும் இடையிடையே இப்படி பென்சில் ஸ்கெட்ச் செய்வதுண்டு.

இயற்கை எழில் நிறைந்த இடங்களை வரைந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு நீண்ட நாளாக இருந்து வந்தது.

இதோ... இங்கே கீழே காணும் முதல் இரண்டு படங்கள் அப்படி முயற்சி செய்து பார்த்ததுதான்.
வரைந்தப் ப‌டங்களை கணினியில் ஏற்றியபோது தொடர்ந்த கலைத்தாகத்தால் மீண்டும் சில மாற்றங்கள் கொண்டன இவ்விருப்படங்களும்.... ஆனால் இம்முறை கணினியின் உதவியோடு! படங்களை காண.... இங்கே செல்லவும்.

பெயிண்டிங்ஸை போல் அல்ல பென்சில் ஸ்கெட்ச், வரைவது மிக சுலபம். அதிக நேரம் தேவைப்படுவதில்லை. பெயிண்ட்ஸ், பிரஷ்கள், கேன்வாஸ் போர்ட், பெயிண்டிங் மீடியம்ஸ்... என பொருட்கள் பரவி கிடக்கும் நிலையும் இல்லை... வேலை முடிந்த பிறகு பிரஷ்களை சுத்தமாக கழுவி வைப்ப‌தில் ஆரம்பித்து எல்லாவற்றையும் பத்திரப்படுத்தி வைக்கும் வேலையும் இதில் இல்லை. தேவைப்படுவது எல்லாம் ஒரு Paper, Pencil, Eraser மட்டுமே.

என்னென்னவோ வரைந்துப் பார்த்தாலும் பூக்களை வரைவதில் அலாதி பிரியம் இருக்கத்தான் செய்கிறது.


பொதுவாக பென்சில் ஸ்கெட்சில் ஆர்வம் உள்ளவர்கள் முதலில் பூக்களைக்கொண்டே தங்கள் வரையும் திறனை வளர்த்துக்கொள்ளலாம்.

வரையும் போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள். மிக மெலிதான கோடுகளால் அவுட் லைன்களை போடவேண்டும். முடிந்தவரை அழித்து அழித்து கோடுகள் மேல் கோடுகள் வரைவதை தவிர்க்க வேண்டும். Pencil strokes பண்ணும்போது அழுத்தம் இல்லாமல் ஓரே சீராக இருக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் மட்டும் மிக அழுத்தமான strokes கொடுத்து கான்ட்ராஸ்ட் காட்டலாம். இலைக்களுக்கு அப்படி செய்தால் நன்றாக இருக்கும். பின் cotton swab அல்லது tissue paper கொண்டு pencil strokesசை சற்று மெதுவாக தேய்த்துவிட்டால் போதும், சுலபமான பென்சில் ஸ்கெட்ச் ரெடி!

Tuesday, February 1, 2011

எனக்கே..... எனக்கானவனாய்!


வெளியில் அழைத்துச்செல்கையில்
ஆசையுடன் பார்த்தாலே
பிடிச்சிருக்கா எனக்கேட்டு
விரும்பும் பொருட்களை
வாங்கி கொடுக்கும் போது
தாயாகிறாய்!
வீடு திரும்பியதும்
பசிக்கிறது எனக்கேட்டு
பாசத்துடன் நான் பரிமாறுவதை
ருசித்து உண்ணும் போது
சேயாகிறாய்!

தெரியாத நல்ல விஷயங்களை
பொறுமையாய்
விளக்கி சொல்கையில்
தாயாகிறாய்!
அதே அறிந்தவைகளை
தெரிந்தும் தவறிழக்க செய்துவிட்டு
செல்ல திட்டுகள் பெற்று
முழிக்கையில் சேயாகிறாய்!

உடல் நலக்குறைவால்
சோர்ந்துப்படுக்கும் எனக்கு
உணவளித்து மருந்தளிக்கையில்
தாயாகிறாய்!
நீயோ
உடல் நலமின்றி இருக்கும்போது
பக்கமிருத்தி என்னை
அணைத்துக்கொண்டு உறங்குகையில்
சேயாகிறாய்!

சோகங்களில் கலங்குகையில்
தலைக்கோதி
மார்பினில் சாய்த்து
என் நெற்றியில் முத்தமிட்டு
ஆறுதல் புரியும் போது
தாயாகிறாய்!
என்னடா... என்னாச்சிடா என்ற‌
அன்னையின் பரிவான‌
சொல்லுக்கு ஏங்கும் குழந்தைப்போல
மனதறிந்து கேட்கையில்
என் மடியிலே கலக்கங்களை
புதைத்துக்கொள்ளும் போது
சேயாகிறாய்!

இப்படி தாயாய் சேயாய் தொடர்கையிலும்
சின்ன சின்ன குறும்புகளுடன்
உணர்ச்சிகளை தூண்டும்போதும்......
செல்ல செல்ல சீண்டல்களுமாய்
சண்டை பிடிக்கும்போதும்......மட்டும்

நீ...
எனக்கே.....
எனக்கானவனாய் இருக்கின்றாய் !