என் வண்ணங்களில் உயிர்பெற்ற இந்த பட்டாம்பூச்சிகள் ஒருசில நாட்கள் மட்டுமே என்னிடம் இருந்தது. என்னுடைய ஓவிய கண்காட்சிக்கு வந்த ஒருவர் ரொம்ப விருப்பபட்டு வாங்கிச் சென்றுவிட ஏனோ எனக்கு சற்று வருத்தமாக இருந்தது. இருந்தாலும் இன்று எங்கோ ஒரு வீட்டின் சுவற்றில் என் பெயருடன் வாழ்ந்துக் கொண்டிருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டு கொள்கிறேன். பட்டாம்பூச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் மீண்டும் இதையே வரைந்து இம்முறை எனக்காக வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். (இதற்கு முன் நீங்கள் பார்த்த என் பெயிண்டிங்ஸை (70 ×50cm) விட இது சிறியது(25× 20cm))
இதற்கு அழகாக ஒரு கவிதை எழுத வேண்டுமென்று ஆசை. ஆனால் காதலை தவிர எனக்கு, வேறு எதை பற்றியும் கவிதையாக எழுததெரியாது என்பதால்... இதை பார்க்கும் போது உங்களுக்கு ஏதாவது கவிதை தோன்றினால்...எழுதுங்க! பட்டாம்பூச்சிகள்......... கவிதைகளாக சிறகடித்து பறக்கட்டும்!
உன் முன்னால் தொலைந்து போன என் வார்த்தைகளை தேடிப்பிடித்து கவிதைகளாக்குகிறேன் உனக்காகவே! கண்டெடுக்க உதவிய உனக்கு சமர்பிக்கவே !
***************************
நீ படித்த என் கவிதைகளோ சிறுகதையாக என்னுள் புதையுண்டுப்போன படிக்காத கவிதைகளோ தொடர்கதையாக......
***************************
நீ சோர்ந்து போகையில் என் கவிதைகளை வாசித்திரு இதமாக உன் இதயத்தை அது வருடி செல்லும் !
என் நியாபகம் வரும்போதெல்லாம் என் கவிதைகளை நேசித்திரு உன்னை என்றும் உயிர்ப்போடு அது வைத்திருக்கும் !
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பனியால் மூழ்கி கிடக்கிறது. ஆனால் நான் வசிக்கும் சவுத் ப்ரான்ஸில் மட்டும் எப்பொழுதும் குளிர் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் இம்முறை இங்கேயும் அதிக குளிர் என்றும் நிறைய பனிமழை பொழியப்போவதாகவும் கடந்த மூன்று நாட்களாக டிவியில் அலர்ட் நியூஸ் வந்துக்கொண்டேயிருந்தது.
நான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த அந்த நாளும் நேற்று வந்தது. வெள்ளை மழை பொழிய.... எங்கும் கொள்ளை அழகு! குளிரோ தாங்க முடியாத அளவில்.... பனிப்போர்வையால் மூடியிருந்த பால்கனியில், பனியில் நனைந்துக்கொண்டே ஒரு ஹார்ட் வரைந்து ஐலவ்யூ எழுதி, ஒரு ரோஜா பூவும் வைத்து என்னவரை அழைத்துக் காட்ட, அவரும் ரசித்து உடனே ஒரு போட்டோவும் எடுத்து "என் ரொமாண்டிக் பொண்டாட்டியே, முதல்ல உள்ள வா" என்று அக்கறையோடு உள்ளே அழைத்து வந்துவிட்டார்.
புதுவருடக் கொண்டாட்டம்அத்தனையும் தாண்டி என்மனம் என் வீட்டு எதிரில் இருக்கும் மலைகளின் பின்னால் ஓடி ஒளிந்துக்கொள்ளும் சூரியனில் லயித்து நின்றது.
வந்திருந்தவர்களிடம் excuse me என்று சொல்லிவிட்டு கேமராவுடன் பால்கனியில் வந்து நின்றுக்கொண்டேன். ஆனால் ஏனோ புகைப்படம் எடுக்க மறந்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருக்கும் சூரியனை ஏக்கத்துடன் பார்க்க, "கவலை வேண்டாம் நாளை மீண்டும் விடியல் வரும், நானும் வருவேன்" என்று சொல்லிச் செல்வதைப் போல் தோன்றியது.(இங்கு பல நாட்கள் சூரியனையே பார்க்க முடியாது என்பது வேறு விஷயம்). அந்த இருண்ட சூரியஒளி என்னில் பட்டு மீண்டும் கண்களில் மின்னும் கனவுகளுமாய் நெஞ்சில் நம்பிக்கையுடன் ஒரு புகைப்படம் எடுத்து, என் விழி அசைவுகளின் மூலம் அதனிடமிருந்து விடைப்பெற்று மீண்டும் ஒரு விடியலுக்காக காத்திருக்கிறேன்....
இதற்குமுன் இதே மாதிரி பல சமயங்களில் என்னை கவர்ந்த என் வீட்டு முன்னால் தோன்றிய அழகிய காட்சிகளை, நான் ரசித்து எடுத்தவைகளைப் பார்க்கஇங்கே க்ளிக் பண்ணுங்க!