கோடை விடுமுறை என்றாலே பெரும்பாலான மக்கள் தேடி வருமிடம் கடல்களாகத்தான் இருக்கும். பூமியின் மேற்பரப்பில் மூன்று மடங்கு தண்ணீரால் அமையப்பெற்றுள்ளது இப்படி நாம் அனைவரும் அனுபவிக்கத்தானோ என தோன்றியது கடற்கரையில் குவிந்திருந்த கூட்டத்தை காண்கின்ற போது. அதிலும் நாங்கள் வசிக்கும் பகுதி மிகசிறந்த சுற்றுலா தளம் என்பதற்கு அடையாளமே இந்த கடல்கள்தான்.
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வெளி நாட்டினருக்கு நன்கு தெரிந்த Saint Tropez எனும் ஊரும் அங்குள்ள Pampolonne Beech ம்தான். சொந்த கப்பலகளில் வந்திறங்கும் வி.ஐ.பிகளை வித விதமாக புகைப்படம் எடுத்து லட்சக்கணக்கில் காசு பார்த்திட விலை உயர்ந்த கேமராக்களுடன் காத்திருக்கும் பாப்பராஸிகள்(Paparazzi) ஒரு புறமும் கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டு இருக்கும் கப்பல்களை காண்பதற்காகவே கூட்டம் கூட்டமாக காத்திருக்கும் மக்கள் இன்னொரு புறமும் என்று கடந்த இரண்டு மாதமும் ஊரே விழாகோலம் கொண்டிருந்தது. சாதாரண மக்களில் இருந்து வி.ஐ.பிகள் வரை தன் வசப்படுத்தி வைத்திருக்கும் கடல் மகத்தானதுதான் !!!
என்னை சுற்றி சூழ்ந்துள்ள கடலலைகளின் தாலாட்டிலே எப்பொழுதும் நான் வாழ்ந்துக்கொண்டிருப்பதாக தோன்றும். தவழ்ந்து வரும் கடலலைகளில் மனம் நனைய சலிக்க சலிக்க அதன் அழகினை ரசித்துவிட்டேன். ஆனாலும் மனம் மீண்டும் மீண்டும் தண்ணீரை நோக்கியே செல்கிறது. கோடை விடுமுறையின் கடைசி நாட்களில் அழகான சொர்க பூமிக்கு பயணமானோம்.
நகரத்து இரைச்சலும், செல்போல் மணியும் அலுத்து போகிற போது இப்படி ஏதாவது அமைதியான இடங்களுக்கு சென்று வருவது வழக்கம். எங்கள் வீட்டில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள சின்னஞ்சிறிய ஊர் அது. கார் பார்க்கிங்கில் இருந்து 2கிமீ நடந்து செல்ல வேண்டும். நடைப்பாதையின் இருபுறமும் அடர்த்தியான மரங்கள் மெல்லிய காற்றுடன் வரவேற்கிறது. கொஞ்சம் கூட மாசு படியாத சுத்தமான காற்றினை சுவாசிப்பதை உள்ளே நடக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலே உணர முடிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சுற்றிலும் பசுமை கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
நகரத்து ஆரவாரமற்ற அப்பகுதியில் தூரத்தில் இருந்து எங்கோ நீர் வீழ்ச்சியின் மெல்லிய ஓசையை மட்டுமே கேட்க முடிந்தது. அதை நெருங்க நெருங்க கொட்டும் நீரின் சத்தமும் அதிகமாக நம்மை நனைக்கும் சாரலை நன்றாக உணர முடிந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது ஏதோ மலைகளின் நடுவில் வெள்ளை நிறத்தில் போடப்பட்டு இருந்த ஒரு கோடு போல தெரிந்தது.
சரியான பாதை அமைக்கப்படாததால் நடப்பதற்கு சற்று சிரமமாக இருந்தது. ஆனாலும் தூரத்தில் இருந்து வந்த அருவியின் சத்தம் ஆவலை தூண்டி நடையில் வேகத்தைக் கொடுத்தது. நாங்கள் சென்ற பாதை மலையடிவாரத்தில் அழகாக ஓடிக்கொண்டு இருந்த நதியிடம் கொண்டு சேர்த்தது. சுற்றிலும் பசுமை போர்த்திக்கொண்டு இருந்ததால் தண்ணீரின் நிறமும் பச்சையாகவே காட்சியளித்தது.
அருவியினை அருகில் சென்று பார்க்கலாம், தண்ணீரில் நனைந்துவிட்டு வரலாம் என ஆவலுடன் அதை நெருங்கும் பாதையில் நடந்து சென்றோம். ஆனால் அங்கிருந்த எச்சரிக்கை பலகையை பார்த்தவுடன் பெரிய ஏமாற்றமாக இருந்தது. மலை பாறைகள் சரிவதாலும் அதனால் சிறு சிறு கற்கள் கீழே விழுவதாலும் அங்கே சரியான பாதை அமைக்க வேலை நடந்துக்கொண்டிருப்பதால் தற்காலிகமாக அதன் வழியை தடைசெய்து கம்பிகளை கொண்டு மூடி இருந்தார்கள்.
நாமெல்லாம் என்னைக்கு விதிகளை கடைப்பிடித்து இருக்கிறோம் என்பதை போல ஒரு சிலர் அந்த கம்பிகளை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு அந்த பாதையில் செல்வதை பார்த்தோம். அன்று விடுமுறை நாள் என்பதால் வேலையாட்களும் இல்லை.

‘இவ்வளவு தூரம் வந்து அருவியின் அருகில் சென்று பார்க்காமல் போவதா’ என என்னவர் என்னை அந்த தடை செய்யப்பட்ட பகுதிக்கு அழைத்தார். ‘இல்லை ஆபத்து அதிகம் இருப்பதால்தான் அந்த பாதையில் செல்ல தடை செய்திருக்கிறார்கள். அதை மீறுவது பாதுகாப்பானது அல்ல, நாம் இன்னொரு நாள் வரலாம்’ என மறுத்துவிட்டேன். என்னை போல அந்த பாதையில் செல்ல விரும்பாமல் ஒரு பெண் தன் குழந்தையுடன் எச்சரிக்கை பலகையின் அருகில் நின்றிருந்தார். அந்த பெண்ணின் கணவரும் மகனும் மட்டும் அந்த பாதையில் நுழைந்திருக்க வேண்டும். அங்கேயிருந்து அச்சிறுவன் அவன் அம்மாவிற்கு "இந்த பகுதியில் எந்த ஆபத்தும் இல்லை. அதனால் பயம் வேண்டாம், தைரியமா வாங்க. அருவியினை அருகில் பார்க்க அழகா இருக்கு" என அழைப்பு விடுத்தான். அப்பொழுதுதான் அந்த பெண்னை கடந்து சென்றுக் கொண்டிருந்த எங்களுக்கு அச்சிறுவனின் வார்த்தைகள் காதில் விழ தானாகவே என் கால்கள் நின்றது. ஒரு நிமிடம் பக்கம் இருந்த என்னவரை ‘நாமும் போகலாமா’ என்பதை போல பார்க்க, அவரும் என் பார்வையின் அர்த்தம் புரிந்தவராய், அதற்காகவே காத்திருந்தவராய் என் கையை பிடித்துக்கொள்ள, மீண்டும் வந்த வழியே திரும்பி, அப்பகுதிக்குள் நுழைந்து, கரடு முரடான வழியில் நடந்துச்சென்றோம்.
முன்னேறி செல்ல செல்ல பன்னீர் தெளித்து வரவேற்பதை போல் இருந்தது மேலே பட்ட சாரல். மிதமான வெயில், மலைகளில் இருந்து கொட்டும் தண்ணீர், அதன் மெல்லிய சத்தம், நனைக்கும் சாரல்...... இப்படி அதன் இனிமையை உணர்கிற போது மனதில் ஏற்பட்ட ரம்யமான உணர்வுகளை எப்படி வார்த்தைகளில் சொல்வது! அது ஒரு சொர்கபூமி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. சொர்கமாய் தெரிந்த அந்த இடத்தின் பெயர் இதுதான்…Sillan la cascade !
அருவியை நெருங்கியும் இதற்கு மேல் எச்சரிக்கையை மீறுவது தவறு என்பதால் அன்று அங்கு யாருமே தண்ணீரில் இறங்கி குளிக்க முன் வரவில்லை. மாறாக முழுக்க முழுக்க கண்களுக்கு விருந்தளித்த காட்சியினை அனுபவித்து திரும்பினர்.
எதையும் அமைதியாகவே எதிர் நோக்கும் என்னை போலவே அங்கு ஒரு பறவை அமைதியாக தனிமைமையில் யார் வரவையோ எதிர்ப்பார்த்து காத்திருந்தது.
இத்தனை ரம்யமான தருணங்களை, தண்ணீரின் இனிமையினை மனிதர்களாகிய நம்மால் மட்டும்தான் உணரமுடியமா இல்லை இல்லை அனைத்து உயிரினங்களுக்குமே பொதுவானதுதான் என தோன்றியது அந்த பறவையினை பார்த்தபோது.
"நீரின்றி அமையாது உலகு"!!!!!