Subscribe:

Ads 468x60px

Pages

Tuesday, January 28, 2014

உயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..!!!

 
"முத்தம்
சத்தமில்லாத இசை  
சந்தம் தழுவிய கவிதை"
                                       .......இப்படி முத்தத்தை பற்றிதான் எத்தனை எத்தனை கவிதைகள்..... உணர்ச்சிகளின் வெளிபாடாக ஒவ்வொரு உறவு நிலைக்கு தகுந்து முத்தம் மாறுபட்டாலும், காதலோடு கொடுக்கும் / பெறும் முத்தம் ...மட்டும் இரண்டு ஆன்மாக்கள் இணையும் தருணமாகிறது. இதை பற்றி ஆயிரமாயிரம் கவிதைகள் எழுதப்பட்டாலும், கவிதையாய் ஒரு ஓவியம் வரைந்திட நீண்ட நாள் ஆசைக்கொண்டிருந்தேன். அதற்கான ஒரு தருணம் வாய்திட, இதோ....முழுவதுமாக ஒன்பது மணி நேரத்தில் ஒரு முத்தச்சித்திரம் உருவானது. உண்மையிலே உயிர் திறக்கும் முத்தம்... ஒரு வித்தைதான், இல்லையா நண்பர்களே..!




Wednesday, January 15, 2014

நானே நல்ல மேய்ப்பன்...!

         
         ப்ரியமான பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவுகளிட்டு எனது வலைதளத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்கவே விரும்புகிறேன். ஆனால் பல சமயங்களில் அது முடியாமலே போகிறது. எழுதுவது குறைந்து போனாலும் வரைவது மட்டும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. அதிலும் பென்சிலால் வரைவதில் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதற்காக நிறைய நுணுக்கங்களை கற்றுகொள்வதில் ஆரம்பித்து சிறந்த ஆர்ட் மெட்டிரியல்களை தேடி தேடி பார்த்து வாங்கி கொண்டிருக்கிறேன். கடந்த வருடத்தில் வரைந்த சில‌ சித்திரங்களை இனி வரும் பதிவுகளில் உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன். அதில், நான் மிகவும் விரும்பி....பல காலமாக வரைய நினைத்ததுதான் இங்கு நீங்கள் காண்பது


பைபிள் கூறும் வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் இது
'நானே நல்ல மேய்ப்பன்'..... நீண்ட நாட்களாக இதற்கு ஏற்றபடி ஒரு படம் வரைய வேண்டும் என நினைத்திருந்தேன். விரும்பியபடியே ஒரு வாழ்த்து அட்டையில் இருந்த படம் என்னை கவர, அதை பார்த்து வரைந்திருக்கிறேன். இம்முறை A5 தாளில், HB, 2B-6B பென்சில்களை உபயோகித்து வரைந்தேன், வரைந்து முடித்தபோது மனது முழுவதும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.


Monday, August 5, 2013

முதல் ஸ்பரிசம்...!


              புகைப்படங்களை பார்த்து வரைவது என்பது எப்போதுமே சுவாரஸியமாகத்தான் இருக்கிறது. அதிலும் நம்மோட படத்தை பார்த்து நாமே வரையும் போது இன்னும் சுவாரஸியம் கூடுகிறது. என் நிச்சயத்தார்த்தத்தின் போது என்னவர் என் கைபிடித்து மோதிரம் போடும் புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.., அதுவே இம்முறை என்னை வரையத்தூண்டியது. பொதுவாக என்னை கவரும் எதையும் நான் நேசித்தே வரைகிறேன்.... அதேப்போல் இதையும் நான் மிகவும் ரசித்து நேசித்தே வரைந்திருக்கிறேன்.


வழக்கம் போல் A4 தாளில்....  HB - 6B பென்சிலால் வரைந்திருக்கிறேன். மொத்தமாக வரைந்து முடிக்க 5 மணி நேரம் ஆனது. முன்பே பதிவுகளில் சொல்லி இருப்பதை போல பெயிண்டிங்ஸை போல் அல்ல பென்சில் ஸ்கெட்ச், வரைவது மிக சுலபமாகவே இருக்கிறது. அதிக நேரம் கூட‌ தேவைப்படுவதில்லை.
 
தேவைப்படுவது எல்லாம் ஒரு Paper, Pencil, Eraser ...  கொஞ்சம் பொறுமை மட்டுமே.




Sunday, July 7, 2013

கரையாத நினைவுகளோடு... !




சேமித்து வைக்கிறேன்...
காலங்கள் உருண்டோடியும்
கரையாத நினைவுகளோடு
உணர்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள‌
உன் பார்வை ஒவ்வொன்றையும்!

கடந்து சென்ற காலங்களில்
கண்களினால் கவிதை
எழுதியவன் நீ!

உன் முதல் பார்வையிலே
முழுவதுமாக என்னை சரித்தாய்....
ஆழமான பார்வையில்
அன்பாய் பேசுவாய்
ஆசையோடு பார்த்து
என் வெட்கத்தை சுவைப்பாய்.

நிஜமான உன் நேசத்தால்
நித்திரை பறித்து
பார்வையாலே பாவை இவளிடம்
காதல் புரிவாய்!

நீ கண் அசைத்தால்
நான் மனம் சாய்கிறேன்
உன் பார்வை பட்டதும்
என் சுயம் மறக்கிறேன்.

கண்ணியமான உன் பார்வையால்
இவளில் காதல் பிறக்கும்
காதலான உன் பார்வையால்
என்னில் ஆசைகள் சுரக்கும்

அழுத்தமான பார்வை ஸ்பரிசத்தால்
என் பெண்மை தவிக்கும்...
உன் உயிரில் இணைந்திட துடிக்கும்!

உன் பார்வையின் இன்னும் பல‌
உண்மைகளை அறிய ... தொடர்ந்து
சேமித்து வைக்கிறேன்
 ....... உன் பார்வை ஒவ்வொன்றையும்!

Wednesday, November 28, 2012

உறங்கும் அழகி...!

      
       எந்த ஒரு காட்சியையோ அல்லது ஒரு புகைப்படத்தையோ  பார்த்து உடனே வரைந்து பார்க்க தோன்றும்... அப்படி தோன்றிய உடனே அவற்றை இன்னும் கூர்ந்து கவனிப்பேன். ஒவ்வொரு அங்கமாக பார்த்து அதில் இருக்கும் அனைத்தையும் மனதில் உள்வாங்கிக்கொண்ட பிறகுதான் வரைய வேண்டும் என்ற முடிவுக்கு வருவேன். அப்படி பார்த்தவுடனே பிடித்து போனது தோழி ஒருவர் தந்த பெண் குழந்தையின் போட்டோ. கண்மூடி உறங்கும் அழகியாக தோன்றியது. அதிலும் அந்த குழந்தையின் தலைமுடி அவ்வளவு அழகாக இருந்தது. அதற்காகவே இதை வரைந்துப் பார்க்க வேண்டுமென நினைத்தேன். நினைத்த படி மூன்று மணி நேரத்தில் வரைந்ததுதான் இங்கே காணும் பென்சில் ஸ்கெட்ச்.

Sunday, November 11, 2012

மீண்டும் உங்களோடு.....

 

      "நான் இந்தியாவுக்கு போறேன்"... என தெரிந்தவர்களிடம் எல்லாம் சந்தோஷத்துடன் சொல்லிக்கொண்டிருந்த நான் அதே மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இந்த வருட தொடக்கத்திலே தாய் நாட்டிற்கு பயணமானேன். இதுவரை வெளியூர்களுக்கு தனியாக சென்றிராத நான் முதல்முறை அதுவும் தனியாக விமான பயணம் எனும்போது, விமானத்தில் நம் பக்கத்து சீட்டில் யார் வந்து அமர போகிறார்கள் என்பதில் ஆரம்பித்த சுவாரஸியம்... பயணம் முழுவதும் தொடர்ந்து, நொடிக்கொரு தரம் மாறும் காட்சிகளுடன், நிறைய புதுமுகங்களின் அறிமுகங்கள், வண்ணமயமான அனுபவங்கள் என எல்லாமே சேர்ந்து என்னை புதுப்பித்துக் கொடுத்தது.

ஐந்து வருடத்திற்கு பிறகு என்பதால் ஊரில் நிறைய மாற்றங்களை காண முடிந்தது. 'தானே'விற்கு பிறகு சற்று பொலிவு இழந்திருந்ததாலும் புதுச்சேரி தனக்கே உரிய அழகுடன் இருந்தது மனதிற்கு நிறைவை தந்தது. தேடிச்சென்று பார்த்துவிட்டு வந்த சொந்தங்களால் சந்தோஷம் என்றாலும் என்னை தேடி வந்த பார்த்த எனது நண்பர்களால் அளவில்லா சந்தோஷம் கொண்டேன். இழந்து போய்விட்டதாய் நான் நினைத்திருந்த சில நட்புகளை புதுப்பித்துகொள்ள முடிந்தது. குடும்பம் குழந்தை என வாழ்வில் கொண்ட மாற்றங்கள் எதுவுமே எங்களது நட்பினை மாற்றவில்லை எனும்போது...என்னசொல்வது, மனம் மகிழ்ந்தது!


 
(புதுச்சேரியின் அடையாளமாக வீற்றிருக்கும் காந்தி தாத்தாவை சுற்றி படத்தில் இருப்பது... எங்க வீட்டு தோட்டத்து மாங்காய்கள், நான் போட்ட கோலம், எங்க வீட்டு செல்ல புஜ்ஜி&குட்டிமா, அம்மாவின் கைமணத்தில் சில்லி சிக்கன், ஆசையாக பூ தொடுக்கும் நான், கடற்கரை மணலில் என்னவருக்காக‌ எழுதிய அன்பின் மொழி)

எனக்கே எனக்கான சின்ன சின்ன ஆசைகளை எல்லாமே சந்தோஷமுடன் நிறைவேற்றிக்கொண்டேன். காலையில் கண் விழிக்கும் முன்னே கேட்கும் காக்கா குருவிகளின் சத்தம், எந்நேரமும் கேட்டுக்கொண்டிருக்கும் வாகனங்களின் இரைச்சலும், எந்த பக்கம் திரும்பினாலும் கேட்கும் மனித பேச்சுக்கள்... என இவைகள் எல்லோமே... சுத்தமாக துடைத்து வைத்தாற்போல் அமைதியாக இருக்கும் இங்கே ஒருபோதும் கிடைப்பதில்லை. மாலையில் பைக்கில் செல்லும்போது தொட்டு செல்லும் தென்றலின் இனிமையும் அது தரும் சுகமும், நிச்சயமாக கண்ணாடி கதவை மூடிக்கொண்டு செல்லும் காரில் கிடைப்பதில்லை. எத்தனை உயர் தரமான ரெஸ்டாரன்டிலும் கிடைக்காத சுவை, அம்மாவின் கையால் சமைக்கும் போது மட்டும் கிடைக்க, அனுதினமும் சுவைத்து மகிழ்ந்தேன். உண்மையிலே நீ நல்லா சமைப்பியா என கேட்ட என் தம்பி தங்கையிடம் நான் அங்கு வரும் போது நிச்சயமாக நிருபிக்கிறேன் என சொல்லியிருந்தேன். ஆனால் சொன்ன படி அவர்களுக்கு எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை காரணம் என் அம்மாவின் கைமணத்தில் நான் உண்டு மகிழ்ந்து..... சமைப்பதையே மறந்தேன். அங்கிருந்த ஒவ்வோரு நாளும் என் தங்கையுடன் கழித்த நாட்கள் மிக இனிமையானவை. என்னுடைய தோழிகளை விட என் தம்பி தங்கையின் நண்பர்களுடன் கழித்த பொழுதுகளே அதிகம். அக்கா அக்காவென அன்புடன் அழைத்து என்னை சிரிக்க வைத்து அவர்கள் பொழிந்த பாச மழையில் சுகமாய் நான் நனைந்தேன்.

இனிமையாக நகர்ந்த சென்ற நாட்களில் மனதை மட்டுமல்ல உடலையும் ரனப்படுத்திய சாலை விபத்து மட்டும் தீராத அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. சிறிய ஊராகிய புதுச்சேரியில் அளவுக்கு அதிகமான ஜனத்தொகையால்... போக்குவரத்து மிக மோசமாகி வருவது வருந்தவைக்கிறது. விபத்தின் பயம் ஒரு பக்கம் இருந்தாலும் , நடந்த அடுத்த நொடியே முன்பின் அறியாத முகங்களானாலும் ஓடி வந்து உதவிய அந்த மனித அன்பிற்கு ஈடு இனை எதுவும் இல்லை என்றுதான் சொல்வேன். விபத்து என்பது இத்தனை பாதிப்புக்குள்ளாக்குமா என உணர வைத்து, உயிரின் மதிப்பை புரிய வைத்தது. உண்மையிலேயே கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு வரமாக நினைத்து வாழ கற்றுக்கொடுத்தது.

நிறைய புதுமுகங்கள் அதனால் கிடைத்த‌ அனுபவங்கள்... நான் ரசித்து, நேசித்த நிமிடங்கள், யோசிக்க வைத்த சம்பவங்கள், மனதை பாதித்தவைகள்... என‌ எனக்குள் சேமித்துக்கொண்டதை, சில சமயம் நேரமில்லாமலும் பல சமயம் ஆர்வம் இல்லாமலும் எழுத நினைத்தும் எழுதாமல் இருந்துவிட்டேன். ஆனாலும் தொடர்பில் இருந்த பதிவுலக நண்பர்களால் மீண்டும் எழுத தோன்றியது. இதோ பயணம் தந்த புத்துணர்வுடன் மீண்டும் தொடர்ந்து எழுத நினைத்திருக்கிறேன்.(இந்த இடைப்பட்ட நாட்களில் என்னுடைய முந்திய‌ பதிவுகளுக்கு பின்னூட்டம் அளித்த நண்பர்களுக்கு என் அன்பான நன்றிகள்).

ஒன்றல்ல இரண்டல்ல முழுவதுமாக எட்டு மாதங்கள் அங்கிருந்த ஒவ்வொரு நாளும் எனக்கே எனக்காக நான் வாழ்ந்த நாட்களது.



Thursday, January 5, 2012

காதலே கலை என்பதாலா.....

      சிலை முழுவதும் ப‌ரவி கிடக்கும் காதல்... சுற்றிலும் நிரம்பி வழியும் பார்வையாளர்கள்...க்ளிக் க்ளிக் என தொடர்ந்து எழும் சத்தத்தின் நடுவிலும் ஃப்ளாஷின் வெளிச்சத்திலும் மிக கம்பீரமாய் வீற்றிருக்கிறது - Psyche Revived By Cupid's Kiss எனும் பெயர்க்கொண்ட அச்சிலை!

அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்  அந்த சிலையின் உள்ளே ஒளிந்திருக்கும்  கதை மிக சுவாரஸியமானது. அழகான கதைக்கு உயிர் கொடுத்து கலையால் கல்லிலும் காதலை பேசவைத்த அற்புதமான ஐரோப்பிய கலைஞர்...Antonio Canova(1757‒1822). சில மாதங்களுக்கு முன்பு லூவர் மியூசியத்திற்கு (பாரிஸ், பிரான்ஸ்) சென்ற போது இந்த‌ சிலையின் அழகில் மனம் ஈர்க்கப்பட்டு புகைப்படம்  எடுத்துவந்தேன். அவற்றை பார்க்கும் போதெல்லாம் சுவாரஸியமாக தெரிய... இதையே பென்சிலில் வரைந்து பார்த்தால் என்ன என தோன்ற.. முழுவதுமாக 6 மணி நேரத்திற்கு பின் நான் விரும்பியபடியே வரைந்துமுடித்தேன்!


கலையின் மீதுள்ள காதலா அல்லது காதலே கலை என்பதாலா ..... எது என்னை வரைய தூண்டியது என தெரியவில்லை... ஆனால் நான் மிகவும் ரசித்து அனுபவித்து வரைந்தது இது!!!


உங்கள் ஒவ்வொருவரின் உற்சாகமான ஊக்கங்களால் இதுவரை தொடரும் எனது கலைப்பயணம் இனியும் தொடர ஃபேஸ் புக்கில் என் ஓவியங்களுக்கென Bp-Art-Gallery ஒரு இடத்தை ஏற்படுத்தி உள்ளேன். பதிவுகளுக்கு தொடர்ந்து பின்னூட்டம் அளித்துவரும் உங்கள் அனைவரது ஆதரவும் அங்கேயும் தொடர அன்புடன் வேண்டுகிறேன்.



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!